ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014

இறைவன் இருக்கிறாரா? இல்லையா?? (பாகம் - 2)...




        கடந்த சில மாதங்களாகவே "இறைவன் இருக்கிறாரா? இல்லையா??" என்ற தலையங்கத்தின் இரண்டாம் பாகம் எழுத யோசித்தும்; என்ன காரணத்தினாலோ தள்ளிக்கொண்டே சென்றது. சில தினங்களுக்கு முன், முகநூலில் ஒருவர் "இப்படியொரு விபத்து, அப்படியொரு கற்பழிப்பு, சின்னஞ்சிறு குழந்தைகள் என்ன செய்தது, இன்னும் பிற..." காரணங்களைக் கூறிவிட்டு; பிறகு என்ன "...."க்கு நீ கடவுள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். உண்மையில், அவர் கேட்டிருந்த கேள்விகள் என்னையும் பாதித்திருக்கிறது எனினும், என்னுடைய பார்வை வேறு மாதிரியாய் இருக்கிறது. என்ன "...."க்கு என்ற கேள்வி என்னை வியப்படையச் செய்ததுடன்; வெறுப்படையவும் செய்தது. உடனே, மேற்குறிப்பிட்ட தலையங்கத்தின் இரண்டாம் பாகம் எழுதவேண்டிய தருணம் வந்துவிட்டதாய் தோன்றியது; அதுதான் இத்தலையங்கம். என்னுடைய காமெண்ட்டாய் கொடுத்த பதில்களை இங்கே சுருங்க சொல்லி இருக்கிறேன். இங்கே இருப்பது என்போன்றோர் நம்பிக்கை என்பதை நினைவில் கொள்க. 

        நன் முதலில் கேட்டது இதுதான்: இவையெல்லாம் நடக்கும்போதே "இறைவன்" அல்லது "உயர் சக்தி" என்ற ஒன்றின் மேல் நம்பிக்கை வரவில்லையே?!...அது ஏன்? தவறுகள் நடக்கக்கூடாது என்பதால் தான் மனிதனுக்கு "ஆறாம் அறிவு"கொடுக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும்... என்ன "-----"க்கு சட்டமும்/நீதிமன்றங்களும்?... எதற்கு சிறைச்சாலையும்/காவல் துறையும்?? இதுபோல் இன்னும் பலவும்! மிக முக்கியமாய் "முதியோர் இல்லங்கள்"பெருகியதற்கு எவர்/என்ன காரணம்? என்றேன். அவர் கேள்விகளுக்கான நேரடியான பதில்களாய் நான் அங்கே கொடுத்தவை கீழே: 
  1. பாலியல் தொல்லைகள்: "காமம்" என்பது என்னவென்று ஒரு பாடமாய் கற்பிக்கப்படும் வரை இம்மாதிரியான கயவர்கள் "அந்த இழிசெயலை" செய்யத்தான் நினைப்பார். இது தனி-மனித ஒழுக்கமின்மை. 
  2. விபத்து: இத்தனை ஆர்.டி.ஓ அலுவலகங்கள் இருந்தும்; முறையான-ஓட்டுனர் உரிமமின்றி; ஒரு-சிறிய சாலை விதி கூட தெரியாமல்/ஒரு-சிறிய விதியை கூட மதிக்காமல்; மது அருந்திவிட்டு ஓட்டுவது யார்? தூக்கம் வந்தால், தூங்கி-எழுந்து ஓட்டவேண்டும் என்ற உணர்வில்லாதது எவர் தவறு?
  3. உணவில்லாது போனது: எல்லா விளை-நிலங்களையும் அழித்து; "பிளாட்"போட ஆரம்பித்தது யார்? முன்பெல்லாம் "கூழ்/கஞ்சி" என்று இருந்தாலும், அனைவருக்கும் எளிதாய் கிடைத்த உணவு இன்று கிடைக்காமல் போனதற்கு யார் காரணம்? எவரின் பேராசை காரணம்? ஓசோன்-ஓட்டை விழுந்து நீர்-குறைந்து விவசாயம் அழிந்ததற்கு யார் காரணம்?
  4. பாதுகாப்பின்மை: தீயவர்களை எதிர்க்க துணியாத; எதற்கெடுத்தாலும் "நமக்கென்ன" என்று நம்-போன்றே எல்லோரும் இருப்பதற்கு என்ன/எவர் காரணம்?
  5. மரணம் அறியாத சிறார்களின் மரணம்: மரணத்தை என்னவென்று நன்கறிந்த "பெற்றோர்களை"தனியே தவிக்கவிட்டு; இறக்கவைபப்து - எவர் செய்வது???
            நீதிமன்றங்கள்/நீதிபதிகள் இருந்தும்; பல குற்றவாளிகள் சுதந்திரமாய் திரிவதைப் பார்த்து என்ன "----"க்கு நீதிமன்றங்கள் என்று நாம் கொதித்தேழுவதே இல்லை! இன்னமும் நம்புகிறோம்... இறைவன் இருக்கிறார் என்பது(ம்) அம்மாதிரியான "வெறும்-நம்பிக்கையாய்" இருக்கவேண்டும். எல்லாமும் "கடவும் பார்த்துப்பார்" என்பதும்; எல்லாவற்றையும் கடவும் ஏன் பார்த்துக்கொள்ளவில்லை? என்று கேட்பதும் - தவறான எண்ணம். நாம் கடவுள்/ஒரு-உறவின் மேல் நம்பிக்கை வைக்கிறோம் என்றால்; அது வெறும்-நம்பிக்கையாய், எந்த பிரதிபலனும் இல்லாத நம்பிக்கையாய் இருக்கவேண்டும். அதுதான் நம்பிக்கை; பிரதிபலன் கிடைத்தால் ஏற்றுக்கொள்ளவும்; இல்லையெனில் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். வயாதான பின்னும் "நம் பெற்றோர்களால்"இன்னமும் ஆதாயம் இருந்தால், அவர்களை நன்றாய் கவனித்துக் கொள்வது; இல்லையெனில் அவர்களை அனாதையாய் விட்டுவிடுவது - போன்றே "இறைவனையும்"நாம் பார்ப்பது - ஆறாம்-அறிவுள்ளோருக்கு அழகன்று.

         நான் அங்கே இதையும் சொன்னேன்: மனிதனும்/மனிதமும் முழுமைப் பெற்றுவிட்டால் - இறைவன் என்ற நம்பிக்கை(கூட) அறுந்துபோகும். அதை நோக்கி நம்மை இட்டுசெல்வதற்காய் கூட இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கலாம். என்ன...?! அதை நாம் ஒவ்வொருவரும்; ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயல் மூலமும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். இது மாத்திரம் சாத்தியம் ஆயின், இறைவன் என்ற சொல்லே மறைந்துவிடும். பின் எங்கே அப்படியொருவர் இருக்கிறாரா? இல்லையா?? என்ற வாதம் வருவது என்றேன். அவர் \\\குற்றங்களை தடுக்க நீதி மன்றங்கள் நிறைய இருக்குதான், ஆனா உண்மைல தடுக்குதா.. ஒரு நாள் கோர்ட்டுக்கு போய் பார்த்தா தெரிஞ்சுடும்... நிதி இருந்தா நீதி கிடைக்கும் நிலைதான் இருக்கு இங்க. உண்மைல கடவுள் சக்தின்னு ஒன்னு இருந்தா தப்பு பண்ண அனைவரையும் தண்டிக்க வேண்டாம், நூறு பேர் நூறே பேர் ஊரறிய தண்டிக்கப்பட்டாவே போதும்.. நீதிமன்றங்களின் தேவையே இருக்காதே...//// என்றோர் கேள்வியை கேட்டார். 

      என் பதில்: இது என்னங்க நியாயம்? "கரெண்டு"வரைக்கும் கண்டுபிடிச்சாச்சே?!... பின்ன ஏன் "ஸ்விட்ச்" போட்டா தான் அனைத்தும் வேலை செய்யவேண்டும்? அது பாட்டுக்கும் வேலை செய்துவிட்டு; அதுபாட்டுக்கும் "ஆஃப்" ஆகவேண்டியது தானே?!-ங்கறது போல இருக்கு! உங்கள் கூற்று என்றேன். இதுபோல், வேறு சில வாதங்களும் எங்களுக்குள் நிகழ்ந்தது. அதை மேற்கொடுத்துள்ள இணைப்பில் காணலாம். நான் இறுதியாய் "சவுதி, அரபு மற்றும் அது போன்ற" நாடுகள் நம்மை விட "அதீத-இறைபக்தி" கொண்டுள்ளன. அந்த நாடுகளில் அந்த பதிவர் கேட்டிருந்தது போல அனைத்து குற்றங்களும் மிக-மிக குறைந்த அளவிற்கு (இல்லை என்றும் சொல்லும் அளவில் கூட!) இருக்கிறதே; அதற்கு என்ன காரணம்?! என்றேன். அதற்கு நீங்கள் சொல்லும் பதிலே; உங்கள் கேள்விகளுக்கான விடைகள் என்றேன். ஏனோ, மீண்டும் ஓர்முறை நினைவு படுத்தியும் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. சரி... அதை இந்த பதிவில் விளக்கிவிடலாம் என்று நானும் விட்டுவிட்டேன்.

        நம் நாட்டில் இம்மாதிரியான செயல்களுக்கு; இறைவன் தன் கடமையை செய்யாதது தான் காரணம் எனின் - இந்த நாடுகளில் குற்றங்கள் மிகப்பெருமளவில் குறைந்திருப்பது "அவர்களின் அதீத-பக்தி"தான் காரணம் என்று கூறுவதே நியாயம். அதாவது, அந்த அதீதத்தால் இறைவன் அனைத்தும் செய்கிறார்! கண்டிப்பாய்... அவர்கள் அப்படி சொல்லப்போவதில்லை; அப்படி சொல்லிவிட்டால் "கடவுள் இருக்கிறார்" என்று ஒப்புக்கொண்டதாகிவிடும்; நாம் அனைவரும் பக்தியுடன் இல்லை என்பதே காரணம் என்றாகி விடும். இன்னொரு காரணம் (நியாயமான காரணம் கூட!) - இந்த நாடுகளில் இருக்கும் "தனி-மனித"ஒழுக்கம். கடவுள் இருக்கிறார் என்ற ஒழுக்கத்தைப் போலவே; இது தவறு - இதை செய்யக்கூடாது என்றால் செய்யமாட்டார்கள். அப்படி செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் - தண்டிக்கப்பட்டே ஆவார்கள். அதை செய்யவேண்டிய அலுவலர்களும் தனி-மனித ஒழுங்குடனே இருப்பர். தண்டனை கடுமையானது மட்டுமல்ல; விரைவிலும் நிறைவேற்றப்படும். 

           நம் நாட்டில் கடவுள் நம்பிக்கையும் "உண்மையாய்" இல்லை. மனிதனும்/மனிதமும், உண்மையாய் இல்லை. சாமி-கண்ணைக் குத்திவிடும் என்றால்; ஓ! நமக்கு மேல் ஒரு உயர்-சக்தி உள்ளது - அது தண்டிக்கும் என்று நம்பவேண்டும்; அப்படி நம்பினால் உண்மை அதிகமாகும் என்பதுதான் அடிப்படை. நம் கடனை சரியாய் செய்யாது; நம் தவறை பிறரின்-தவறாய் எளிதாய் சுட்டிக்காட்டிவிட்டு தப்பிவிடும் "நம் எதார்த்த இயல்பை" போலவே - "இதெல்லாம்; கடவுள் செய்ய தவறியதால்"விளைந்தது; அதனால், கடவுள் இல்லை; பின் என்ன "----"நீ கடவுள் என்று கேட்கிறோம். நம் தவறை - நாம் உணராமலேயே தொடர்ந்து பயனப்பட்டதன் விளைவு. மூன்றவதாய் - மேற்குறிப்பிட்ட நாடுகளில் மன்னராட்சி உள்ளது; அதனால் தான் - அவை எல்லாம் சாத்தியம் என்றும் ஒரு வாதம் வரும். ஆனால், அப்படி மன்னராட்சி வேண்டாம் என்று போரிட்டு மனித-உரிமையை கோரியதும் நாம் தானே?! ஒரு-குடும்ப அரசியலையே நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை; பின் எங்கே மன்னராட்சியை அனுமதிப்போம்?!...

        இவையனைத்தையும் பார்த்துணர்ந்து தான் இறைவனை நம்புவோர் "அரசன் அன்றே கொல்வான்! தெய்வம் நின்று கொல்வான்!!" என்றனர். அரசன் என்னவென்பதை நாம் உணர்ந்து/அனுபவித்து விட்டோம்; அது வேண்டாம் என்று ஒழித்தும் விட்டோம். சரி... அப்படியே உடனடியாய் தண்டிக்காமல் இருக்கட்டும் என்றால், நின்று-கொல்லும் தெய்வமும் வேண்டாம் என்கிறோம். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்து "தண்டிக்க வேண்டிய; நீதி/காவல் துறைகளையும்" அவர்களின் கடனை செய்யமுடியாமல்; "கையூட்டால்" கை-கட்டி போட்டு விடுகிறோம். பின், என்ன தான்யா வேண்டும்?!... அரசனோ/அரசோ/இறைவனோ - எது வேண்டும்; எது நம் நம்பிக்கை - என்பதெல்லாம் இருக்கட்டும். முதலில், நாம் ஏதாவது ஒன்றுக்கு கட்டுப்படும் மனத்தை பழக வேண்டும்! அது மனிதனையும்/மனிதத்தையும் மேம்படுத்தும். பின்னர் தான், நாம் எதன் மீதும் (அல்லது) ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொண்டு; நம் செயல்களை நாமே நெறிப்படுத்துதல் சாத்தியமாகும். அதுவரை...


என்போன்றோர் நம்பிக்கையில்; இறைவன் இருக்கிறார்!!!

பின்குறிப்பு: அறிவும்/அறிவியலும் - இதுவரை உள்ளவற்றை(மட்டும்) கண்டுபிடித்து; அதை அறியும் முயற்சியில் மட்டுமே இருக்கிறது. ஆனால், இவை எல்லாமே இந்த வையகத்தில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் இருந்து வருபவை. இன்றைய காலகத்தில், மிக வேகமாய் வளர்ந்து வரும் அறிவியல்-தொழில்நுட்பம் பலதையும் வேகமாய் கண்டுபிடிக்கிறது எனினும் - அது, இன்னமும் எதையும் உருவாக்கவில்லை! இந்த பிரபஞ்சத்திற்கு இணையான; இன்னுமோர் பிரபஞ்சத்தை - மனிதன் உருவாக்கும் வரை; நமக்கும் மேலான உயர்-சக்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. உங்கள் அகராதியில் எப்படியோ?!... என்னுடைய அகராதியில் அதற்கு பெயர் "இறைவன்". இந்த தலைப்பில் மேலும் சில பாகங்கள் தொடரும்...   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக