ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

"சென்று சேருமிடம்" பொறுத்தே சிறப்பு!!!



       சமீபத்தில் எங்கள் "நிறுவன-தேநீர் அறையில்" பணி புரியும் ஒருவர்; என்னிடம் கடனாய் ஒரு தொகை கேட்டார். பெரிதாய், ஒன்றுமில்லை - நம் மதிப்பில் 8,500 உரூபாய். ஒரு குறிப்பிட்ட தேதியில் தருவதாய் சொன்னார்; நான் அன்று ஊரில் இருக்கமாட்டேன் என்பது எனக்கு தெரியும். என்மகளின் பிறந்த நாளை கொண்டாட முன்பே பயணச்சீட்டு எல்லாம் வாங்கியாகி விட்டது. நான், அதை சொல்லவில்லை; அவர் கேட்ட ஒரு மணி-நேரத்தில் கொடுத்துவிட்டேன். அவர் மலையாளம் பேசும் அன்பர்; அவன் என்னிடம் மலையாளத்தில் தான் பேசுவார் - நான் பதிலுக்கு தமிழில் பேசுவேன். இருவரும், முடிந்த அளவிற்கு புரிந்து கொள்வோம் - இப்படித்தான் நாங்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாய் உரையாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவரின் தேவை மிக-முக்கியம் என்பது அவரின் குரலில் தெரிந்தது; பணம் வாங்கிய பின் அவரின் முக-மலர்ச்சியில் தெரிந்தது - மொழிக்கு அங்கே வேலையே இல்லை! மனிதனும், மனிதமும் மேலோங்கி நின்ற தருணம் அது.

       கண்டிப்பாய், அந்த பணம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல; ஆனால், அதே தொகை ஒருவருக்கு எந்த அளவிற்கு பெரிதாய் இருக்கிறது என்று நினைத்து பெருத்த ஆச்சர்யம்! அப்போது தான், பணம் மட்டுமல்ல; எந்த பொருளானாலும்/உறவானாலும் சென்று சேருமிடம் பொறுத்தே - அது கையாளப்படுவதும்/ சிறப்பு பெறுவதும் உள்ளது என்று தோன்றியது. அவர் செய்யும் "சுவை-நீர்" மிகவும் நன்றாய் இருக்கும்; ஆரம்ப காலத்தில் எனக்கும் செய்து கொடுப்பார். பின்னர், வேலைப்பளுவால் - நான் சில முறை கேட்டும் "கொறைச்சி பிசி! சேட்டன் உண்டாக்கி கொள்ளும்!!" என்று புன்னகையுடன் கூறுவார். அதன் பின், அவர் செய்வது போலவே நானும் முயற்சி செய்து ஓரளவிற்கு பழகி கொண்டேன். அவர் என்னிடம் பணம் வாங்கிய அன்றிலிருந்து; என்னிடம் "செய்து கொடுக்கட்டுமா?!" என்று கேட்க வருவார்; எனக்கும் தெளிவாய் புரியும். ஆனால், நான் எந்த சூழலிலும் அதை கவனித்ததாய் காட்டிக்கொண்டதில்லை. கேவலம்! சிறிய பணத்திற்க்காய்...

அவரின் சுயத்தை; அவர் இழப்பதில் எனக்கு எந்த நாட்டமும் இல்லை!!!

பின்குறிப்பு: அவர் சொன்ன தேதியும் கடந்து - இன்று மேலும் ஒரு மாதம் கூட ஆகிவிட்டது. நான் இன்னமும், அவரிடம் பணம் பற்றி கேட்கவில்லை! இந்த பதிவின் முதல்-பிரதி எழுதும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கூட அவரை சந்தித்தேன். எப்போதும் போல், பேசிவிட்டு வந்துவிட்டேன். கண்டிப்பாய், கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கும்; மேலும், அந்த தொகை எனக்கு நெருக்கடியாய் மாறும் சூழல் இன்னமும் வரவில்லை. பின்னர் ஏன், நான் அவரை கேட்கவேண்டும்?!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக