செவ்வாய், அக்டோபர் 25, 2016

குறள் எண்: 0450 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0450}

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

விழியப்பன் விளக்கம்: நல்லறம் போதிக்கும் பெரியவர் ஒருவரின், உறவைக் கைவிடுதல்; பலரின் பகையைக் கொள்வதை விட, பன்மடங்கு அதீத தீமையை விளைவிக்கும்.
(அது போல்...)
நல்லாட்சி அளிக்கும் தலைவர் ஒருவரை, ஆதரிக்க மறுத்தல்; பல்வகை ஊழல்கள் செய்வதை விட, பன்மடங்கு அதிக ஒழுங்கீனத்தை உருவாக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், அக்டோபர் 24, 2016

குறள் எண்: 0449 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0449}

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை

விழியப்பன் விளக்கம்: முதலீடு செய்யாதவர்க்கு, நிரந்தர வருமானமில்லை! அதுபோல், முட்டுத்தூண் போன்ற பெரியோரின் ஆதரவற்றோர்; நிலைத்திருப்பது சாத்தியமில்லை!
(அது போல்...)
அடித்தளமற்ற கட்டிடத்திற்கு, நீடித்த ஆயுளில்லை! அதுபோல், வடிகால் போன்ற உறவுகளின் துணையில்லாதோர்; மகிழ்ந்திருப்பது சாத்தியமில்லை!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, அக்டோபர் 23, 2016

குறள் எண்: 0448 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0448}

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

விழியப்பன் விளக்கம்: குறைகளை இடித்துரைக்கும் பெரியோரின் துணையற்ற அரசாள்வோர்; கெடுப்பதற்கு எவரும் இல்லையெனினும், இயல்பாகவே கெட்டழிவர்.
(அது போல்...)
அறமற்றவற்றைக் களையெடுக்கும் பெற்றோரைக் கொண்டிராத பிள்ளைகள்; தவறானப் பழக்கங்கள் இல்லாதபோதும், வாழ்வியலில் தோற்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, அக்டோபர் 22, 2016

குறள் எண்: 0447 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0447}

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

விழியப்பன் விளக்கம்: தவறுகளை இடித்துரைக்கும் பெரியோரின் துணையுடைய அரசாள்பவரை; கெடுக்கும் திறனுடையவர், எவரிருக்க முடியும்?
(அது போல்...)
குறைகளைக் களையெடுக்கும் சிந்தனையின் வலிமையை அறிந்தவர்களை; அழிக்கும் சிற்றின்பம், ஏதிருக்க முடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, அக்டோபர் 21, 2016

குறள் எண்: 0446 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0446}

தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்

விழியப்பன் விளக்கம்: தகுதியுடையப் பெரியோர்களின் வட்டத்தில், தன்னை இணைக்கவல்ல வல்லவர்களை; அழிப்பதற்கு, பகைவர்களுக்கு ஒன்றுமில்லை.
(அது போல்...)
சக்திவாய்ந்த தலைவர்களின் கழகத்தில், தம்மை ஈடுபடுத்தும் இளைஞர்களை; தடம்புரட்ட, கேளிக்கைகளுக்கு இடமில்லை.

வியாழன், அக்டோபர் 20, 2016

குறள் எண்: 0445 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0445}

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாரைத் தன் கண்ணாகக் கொண்டு பயணிப்பதால்; அரசாள்பவர் -  சூழ்ந்து கொள்ளவேண்டிய, பெரியோரைச் சூழ்ந்துகொள்ள வேண்டும்.
(அது போல்...)
பெற்றோரைத் தம் உயிர்மூச்சாய்க் கொண்டு வளர்வதால்; பிள்ளைகள் - பேணிப் பாதுகாக்கவேண்டிய, பெற்றோரைப் பேணுதல் வேண்டும்.

புதன், அக்டோபர் 19, 2016

குறள் எண்: 0444 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0444}

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாந் தலை

விழியப்பன் விளக்கம்: தம்மைவிட அறிவார்ந்தப் பெரியோரைத், தமக்கு நெருக்கமாக்கிக் கொள்ளுதல்; வலிமையானவை எல்லாவற்றிலும் முதன்மையாகும்.
(அது போல்...)
நம்மைவிட வைராக்கியம் உள்ளவரை, நமக்கு குருவாய் தொடருதல்; தேடல்கள் அனைத்துக்கும் வழிவகுக்கும்.

செவ்வாய், அக்டோபர் 18, 2016

குறள் எண்: 0443 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0443}

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

விழியப்பன் விளக்கம்: அனுபவமுடையப் பெரியோரைப், பேணித் தமக்கு நெருக்கமாய் கொள்வது; பெறமுடிந்த அரிதானப் பேறுகள் அனைத்திலும் அரிதானதாகும்.
(அது போல்...)
நேர்மையானத் தலைவர்களை, அறிந்து நமக்கு வழிகாட்டியாய் தொடர்வது; சாத்தியமான சிறந்த பிறவிப்பயன்கள் அனைத்திலும் சிறந்ததாகும்.

திங்கள், அக்டோபர் 17, 2016

குறள் எண்: 0442 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0442}

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

விழியப்பன் விளக்கம்: நேர்ந்த துன்பத்தை மாற்றி, நேரவிருக்கும் துன்பத்தை முன்பே தடுக்கும்; அனுபவம் உடையவரைப் பேணி, அவரின் துணையைப் பெறவேண்டும்.
(அது போல்...)
நிகழ்ந்த அனைத்தையும் மறந்து, நிகழவிருக்கும் செயல்களில் மனதைச் செலுத்தும்; வைராக்கியம் உள்ளவரைக் கண்டு, அவரைத் தொடருதல் வேண்டும்.

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

குறள் எண்: 0441 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0441}

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 
திறனறிந்து தேர்ந்து கொளல்

விழியப்பன் விளக்கம்: அறநெறிகளை உணர்ந்து, அனுபவ அறிவுபெற்ற மூத்தவர்கள் நட்பை; அதன் சிறப்பை உணர்ந்து, ஆராய்ந்து அடையவேண்டும்.
(அது போல்...)
வாழ்வியலை வகுத்து, தலைமுறையை வளர்த்த மூதாதையர் வரலாறை; அதன் மாண்பை உணர்ந்து, முயன்று அறியவேண்டும்.

சனி, அக்டோபர் 15, 2016

அதிகாரம் 044: குற்றங்கடிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 - குற்றங்கடிதல்

0431.  செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
           பெருக்கம் பெருமித நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: 
குற்றச்செயல்களை விதைக்கும், "ஆணவம்/சினம்/சிறுமைத்தனம்" 
           போன்ற காரணிகளை நீக்கிய ஆட்சியாளரின் வளர்ச்சி; பெரும் போற்றுதலுக்கு 
           உரியதாகும்.
(அது போல்...)
           சிற்றின்பங்களைப் பெருக்கும், "மது/மாது/சூது" போன்ற போதைகளைத் தவிர்த்த 
           படைப்பாளியின் படைப்புகள்; உயரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
        
0432.  இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
           உவகையும் ஏதம் இறைக்கு

           விழியப்பன் விளக்கம்: 
கொடையளிக்காத குணம், நன்மையற்ற சுயம் மற்றும் நியாயமற்ற 
           மகிழ்ச்சி - இம்மூன்றும், அரசாள்வோரின் குற்றங்களாகக் கருதப்படும்.
(அது போல்...)
           திருப்தியில்லாத வரவேற்பு, உண்மையற்ற நம்பிக்கை மற்றும் தேவையற்ற துரோகம் - 
           இம்மூன்றும், இல்லத்தலைமையின் பாவங்களாக உணரப்படும்.
           
0433.  தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
           கொள்வர் பழிநாணு வார்

           விழியப்பன் விளக்கம்: 
பழிக்கு அஞ்சுவோர், தினையளவு குற்றம் விளைவிக்கும் செயலையும்; 
           பனையளவாய் நினைத்து, குற்றங்களைக் களைவர்.
(அது போல்...)
           மக்களை மதிப்போர், துளியளவு ஊழல் நடக்கும் துறையையும்; கடலளவாய் எண்ணி, 
           காரணிகளை அலசுவர்.

0434.  குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
           அற்றந் தரூஉம் பகை

           விழியப்பன் விளக்கம்: 
குற்றமே அழிவுக்கு வித்திடும் பகை என்பதால்; குற்றச்செயல்களில் 
           இருந்து தற்காத்துக் கொள்வதை, கடமையாகக் கருதவேண்டும்.
(அது போல்...)
           சிற்றின்பமே பிறவிப்பயனை அழிக்கும் நஞ்சு என்பதால்; சிற்றின்பங்களில் இருந்து விலகி 
           இருப்பதை, வைராக்கியமாய் பழகவேண்டும்.

0435.  வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
           வைத்தூறு போலக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: 
குற்றம் நிகழும் முன்பே, அதைப் பகுத்தறியும் சிந்தனையுடன் 
           தடுக்காதோர் வாழ்க்கை; பெருநெருப்புக்கு அருகிலிருக்கும், வைக்கோற்போர் போல் 
           அழியும்.
(அது போல்...)
           உறவைப் பிரியும் முன்பே, அதை அன்பெனும் கருவியுடன் தவிர்க்காதோர் நிலைமை; 
           சூறாவளியில் அகப்பட்ட, பொருட்கள் போல் தடம்புரளும்.

0436.  தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
           என்குற்ற மாகும் இறைக்கு

           விழியப்பன் விளக்கம்: 
நிகழ்வதற்கு முன்பாகவே, தன் குற்றத்தைக் களைந்து; பிறர் 
           குற்றத்தையும் களையும் வல்லமையான தலைவனுக்கு, எது குற்றமாக ஆகமுடியும்?
(அது போல்...)
           அனுபவிப்பதற்கு முன்பாகவே, தன் சிற்றின்பத்தைத் தவிர்த்து; பிறர் சிற்றின்பத்தைத் 
           தவிர்க்கும் திறமையான நட்புக்கு, எது சிற்றின்பமாக அமையும்?

0437.  செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
           உயற்பாலது இன்றிக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய செலவுகளைச் செய்யாமல்; சொத்துகளைச் 

           சேர்ப்போரின் செல்வம், இருக்கக்கூடிய தன்மையில்லாமல் அழியும்.
(அது போல்...)
           சிந்திக்கவேண்டிய விடயங்களைச் சிந்திக்காமல்; இலக்கின்றி வாழ்வோரின் நேரம், 
           பயனளிக்கும் திறனின்றி விரயமாகும்.

0438.  பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
           எண்ணப் படுவதொன் றன்று

           விழியப்பன் விளக்கம்: பேராசையால், செலவிட வேண்டியதற்கு செலவிடாத தன்மை; 

           இருக்கும் குற்றங்களில், ஒன்றாக கணக்கிட முடியாத தனிக்குற்றமாகும்.
(அது போல்...)
           அகந்தையால், நியாயமான உரிமையை மறுக்கும் குரூரம்; இருக்கும் தீவிரவாதங்களில், 
           ஒன்றென பட்டியலிட முடியாத தனித்தீவிரமாகும்.


0439.  வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
           நன்றி பயவா வினை

           விழியப்பன் விளக்கம்: எந்த நிலையிலும், தன்னை உயர்வாய் எண்ணி வியக்கக்கூடாது;

           அதுபோல், நல்வினை அளிக்காத செயல்களை விரும்பக்கூடாது.
(அது போல்...)
           எந்த நோக்கத்திலும், நம்மைப் பொய்யாய் சித்தரித்துச் சொல்லக்கூடாது; அதுபோல்,
           நமக்குத் தகுதியற்ற ஒன்றை வாங்கக்கூடாது.

0440.  காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
           ஏதில ஏதிலார் நூல்

           விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த செயல்களை, ஆசை வெளியே தெரியாமல்

           செய்பவரை; பகையுணர்வு கொண்ட, பகைவர்களின் எண்ணம் சிதைக்காது.
(அது போல்...)
           எதிர்க்க வேண்டிய விடயங்களில், எதிர்ப்பை மையப்படுத்தாமல் கருத்தை
           முன்வைப்பவரை; விமர்சிக்கும் எண்ணமுள்ள, எவரின் விமர்சனமும் பாதிக்காது.