வெள்ளி, டிசம்பர் 16, 2011

சாலை (வீ/வி)திகள்...*******

   நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று,  சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது! இதைக் காணும்போது, எனக்கு கடுங்கோபம் வரும். என்ன இது! என்னவோ அவர்கள் வீடுகள் இருக்கும் "வீதியில்" நடப்பது போன்று எவர் பற்றியும் அக்கறையும்  இல்லாமல் நடக்கிறார்களே என்று தோன்றும்; அதனால் தான் இந்த தலைப்பு. மேற்கத்திய நாட்டில் இருப்பது போல், நம் நாட்டிலும் அனைத்து "சாலை விதிகளும்" உள்ளன. அப்படி இருக்கையில், சாலை விதிகளை மதிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் ஏன் மிகக் குறைந்த அளவில் உள்ளது? ஆரம்ப காலத்தில் நம் நாட்டில் மிக, மிக குறைந்த அளவில் வாகனங்கள் இருந்தது ஒரு காரணமாய் இருக்கலாம்; சாலையில், வாகனங்களே குறைவு எனும்போது அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது நிலமை வேறு; மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு வாகனங்கள் பெருகி விட்டன. ஆனால், சாலை விதி பற்றிய ஞானம் மட்டும் அப்படியே உள்ளது. இதுமாதிரியான ஒழுக்கக்கேடுகள் பல்வேறு விசயத்தில் இருப்பினும், இந்த சாலை விதிகளை மீறுவது சார்ந்த ஒழுங்கீனம் என்னை மிகவும் பாதிக்கக்கூடியவைகளில் ஒன்று. எதெதெற்கோ (நமக்கு சற்றும் ஒவ்வாத - உணவு, உடை போன்ற தட்பவெப்பநிலை சார்ந்த விசயத்தில் கூட) மேலை நாட்டு மோகம் கொண்டு செயல்படும் நாம் இது போன்ற ஆக்கபூர்வமான செயல்களிலும் அவர்களைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கமுடியும்?

     நம் நாட்டில் சர்வசாதாரணமாய், வாகனம் ஓட்டும் "உரிமம்" எந்தவித கடின சோதனையும் இல்லாமல் கிடைத்து விடுகிறது. இதில் வேதனையான விசயம் "பணம்" கொடுத்தால் எதுவும் செய்யாமலே கூட உரிமம் கிடைக்கக் கூடிய வழிமுறைகள் உள்ளது தான். மேலை நாட்டில் இருப்பது போல் நம் நாட்டிலும் "எழுத்துமுறை" மற்றும் "செய்முறை" தேர்வுகள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலும், அவை ஒரு கண்துடைப்பு போலவே உள்ளன; இதில் அந்த துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பலரின் பங்கு உள்ளது. அப்படி இருக்கையில், அந்த மாதிரி உரிமம் பெற்றவருக்கு எப்படி சாலை விதிகள் பற்றிய அக்கறை/ ஞானம் இருக்கும்? மேலும், சாலை விதி மீறியதற்காய் உண்டான தண்டனையை அனுபவிக்க (அ) அபராதம் செலுத்த நாம் தயாராக இல்லை. மேலை நாடுகளில் முறையான  தேர்வுகள் செய்து பயிற்சி பெறாத வரை, ஓட்டுனர் உரிமம் பெறுவது சாத்தியமே இல்லை; அதுவும், என் போல் ஆங்கிலம் நடைமுறையில் இல்லாத நாட்டில் வாங்குவது கிட்டத்திட்ட சாத்தியமே இல்லை. நான், என்னுடைய இந்திய ஓட்டுனர் உரிமையை இங்கே முறையான விதிப்படி "மாற்றம்" செய்து என் உரிமத்தை பெற்றேன். உரிமம் பெரும் முன் என் விருப்பத்தின் பால் "ஓட்டுனர் பயிற்சி பள்ளியில்" சில நாட்கள் பழகிக்கொண்டேன்.  எனினும், இப்போது தான் ஓரளவு எளிதாய் ஓட்ட பழகி இருக்கிறேன். இங்கே, சாலை விதிகள் மீறப்பட்டால் தண்டனை மிகக் கடினமாய் இருக்கும்; அதனால் தான் இங்கே சாலை விதிகள் கடைபிடிப்பது ஓர் ஒழுக்கமாய் செய்யப்படுகிறது.

       என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாத விதி மீறல், விவசாயிகள் சாலையில் "களப்"பணிகள் செய்வது; நெற்பயிர் போன்றவற்றை சாலையில் போட்டு தங்கள் பனி மேற்கொள்வது. சரியாக ஓட்டத் தெரியாத ஒருவர் "இரு சக்கர" வாகனத்தில் செல்வது மிகக்கடினம் - வாகனம் சறுக்கிக்கொண்டு செல்லும்; சாலையை விட்டு கீழே இறங்கினால் எங்கு பள்ளம் இருக்கும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. பிறகு, எப்படி வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்வர்? சமீபத்தில், மிகப் பிரபலமான தொலைகாட்சி தொடர் ஒன்றின் "நடுவராய்" இருப்பவர் இதை நியாயப்படுத்தி (சற்று கோபமாயும்) பேசியதை கண்டு எனக்கு பெரும் அதிர்ச்சி! "களம் இல்லையென்றால்" விவசாயி எங்கே செல்வான்? என்பது தான் அவர் கேள்வி. நான், விவசாயிக்கு எதிராய் பேசவில்லை; "களம்" இல்லையென்றால் அதற்காய் போராடவேண்டிய "தளம்" வேறு. பின் எதற்கு, வாகன ஓட்டிகள் "சாலை வரி" கட்டவேண்டும்? சமீபத்தில் "தேசிய நெடுஞ்சாலையில்" இங்கே உள்ளது போல், வாகனம் பழுதுபார்ப்பதற்காய் "சேவை சாலை" அமைக்கப்பட்டுள்ளது கண்டு பேரானந்தம் அடைந்தேன். ஆனால், அதில் பெரும்பானவை "களப்பணி" செய்யவும், அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர் "வீட்டு விலங்கினங்களை" அங்கே கட்டவும் மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்துவதை கண்டு ஆராத்துயர் அடைந்தேன். இவர்களை யார், எப்படி திருத்துவது? மேலும், என் போன்றவர்கள், இந்த மாதிரி செயல்களைக் கண்டு அடையும், "கோபத்தை" குறைக்கவேண்டும் என்பதும் தெளிவாய் தெரிகிறது.

            இரண்டாவதாய், என்னை மிகவும் சங்கடப்படுத்துவது, எந்த ஒரு "சமிக்ஞை"யும் இல்லாமல், நம் முன்னே செல்பவரும், பின்னால் வருபவரும் சாலையை கடப்பது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் உண்டு; நான் திருமணத்திற்கு பின் தான் முறையாய் "நான்கு சக்கர வாகனம்" ஓட்ட கற்றுக்கொண்டு ஓட்டுனர் உரிமம் பெற்றேன். உரிமம் பெற்ற புதிதில், நான் என்னுடைய மனைவியுடன் வாகனம் ஓட்டி சென்று கொண்டிருந்தேன்; அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் திடீரென என்னைத் தாண்டி குறுக்கே வந்துவிட்டார். எனக்கே அதிக பயிற்சி இல்லாத பயத்தில், அருகில் புது-மனைவி உட்கார்ந்திருக்கும் ஒரு வறட்டு-கௌரவத்தில் உரக்க "ஏய்" என்று கத்திவிட்டேன். அவருக்கு, ஐம்பது வயதிருக்கும்; அவர் உடனே, நிறுத்திவிட்டு கோபமாய் என்னவென்று கேட்டார்; நானும், ஒருமையில் "எதற்கு எந்த சமிக்ஞையும் இல்லாமல்" குறுக்கே வந்தாய்? என்றேன்; அவர் நிதானமாய், என் மனைவியை பார்த்துவிட்டு அதற்கு என்ன? தவறுதான், அதற்காய் "ஏய்" என்பாயா! என்றார். என் தவறு உணர்ந்து வெட்கப்பட்டாலும், சரியாக மன்னிப்பு கூட கோராமல், அந்த சூழ்நிலையை சமாளித்து கடந்துவிட்டேன். நான், கோபப்பட்டது  தவறு என்று தீர்க்கமாய் உணர்ந்தேன்; நானும், நிதானமாய் வண்டியின் வேகத்தை குறைத்து "பார்த்து போகக் கூடாதா? ஐயா!" என்று வினவியிருந்தால், அவர் தவறு உணர்ந்து வேறு விதமாய் பேசி இருப்பார்; என் குற்ற உணர்வு அவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

            இது போல் நிறைய தவறுகள் சாலை விதிகளை மீறுவதால் உண்டு எனினும், இறுதியாய் ஒன்று மட்டும் சொல்லி முடிக்க எண்ணுகிறேன். அது, வாகனங்களில் செல்பவர்களில் பெரும்பாலோனோருக்கு  நடந்து செல்பவர்களுக்கு என சந்திப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடு பற்றி தெரியாதது; அது வரி-வரியாய் பட்டையாய் "வெள்ளை" வர்ணம் தீட்டப்பட்டிருக்கும் (அதன் தமிழாக்கம் சரியாய் தெரியவில்லை); நான் இப்போது கூர்ந்து கவனிக்கும் போது சிறிய நகரங்களில் கூட அந்த "சமிக்ஞை" இருப்பது தெரிகிறது. அவ்வாறு இருப்பின், அங்கு சாலையை கடக்க எவராயினும் நின்றிருப்பின் கண்டிப்பாய் வாகன ஓட்டிகள், வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு வழி விடவேண்டும் என்பது பொருள். ஒருமுறை, நான் புதுச்சேரியில் வாகனம் ஓட்டும்போது, ஒரு முக்கிய சாலையில் வாகனத்தை நிறுத்தி "ஒரு தாய் மற்றும் சேய்க்கு" வழி கொடுத்து காத்திருந்தேன். பின்னால் வந்த ஒரு "இரு சக்கர" ஓட்டுனர் என்னை அசிங்கமாய் பார்த்தது மட்டும் அல்லாமல், என்னை ஏதோ திட்டிக்கொண்டே சென்றார்; நான் தொடர்ந்து அது போன்று செய்து கொண்டு தானிருக்கிறேன்; இங்கு ஓட்டும்போது கடைபிடிக்கும் அத்துனை விதிகளையும் கடைப்பிடித்து தான் ஓட்டுகிறேன். இதில் எனக்கு, எந்த சிரமும் இல்லை! ஆனால், நம் நாட்டில் வாகனங்கள் ஓட்டுபவர்களை எப்படி திருத்துவது என்ற என் கவலை மட்டும் குறையவே இல்லை. எப்போது குறையும் என்றும் தெரியவில்லை. இத்தலையங்கம் ஒரு சிலரையாவது பண்படுத்தி ஒரு சில விதிமீறல்களையாவது திருத்திக்கொண்டால் அதுவே இந்த முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாய்க் கருதுவேன்.

சாலை விதிகளை மதிப்போம்! போக்குவரத்து நெரிசலை குறைப்போம்!!            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக