ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

கடன் அடைத்தான் - நெஞ்சம் போல்!!!



       "கடன் பட்டான் நெஞ்சம் போல், கலங்கினான் இலங்கை வேந்தன்" என்ற சொற்றொடரை பலரும் கேட்டிருப்பீர். கடன்பட்டவர்களின் மனநிலையே - ஒருவர் அடையும் மிக-அதிகமான துயரம் என்று(ம்) அர்த்தம் கொள்ளலாம். சென்ற வாரம், நானே-எனக்காய் "வட்டிக்கு" வாங்கிய பணத்தை முழுதும் அடைத்தேன்;  கடந்த 4 ஆண்டுகளாய் என்னைத் (துரத்தி/துன்புறுத்தி)வந்த சில காரணிகளுள் - ஒன்றை முழுதுமாய் அழித்துவிட்டேன் என்பதில் எனக்கு பரம-திருப்தி. உண்மையில், நாம் கடினப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை எவருக்கோ வட்டியாய் விரயம் செய்வது - மிகக்கொடுமையான விசயம். இந்த சந்தோசமான சூழலில், எனக்கு நினைவுக்கு வந்தது - மேற்கூறிய சொற்றொடர் தான்!! உடனே, எனக்கு கடன்பட்டவரின் நிலையை இப்படி ஆழ விளக்கியது போல் - கடனடைத்தவரின் மனநிலையை எவரும் விளக்கி இருக்கின்றனரா என்று எண்ணி பார்த்தேன்; என்னறிவுக்கு எதுவும் எட்டவில்லை! எவரேனும், அப்படி ஓர் விளக்கத்தை கண்டிருப்பின், எனக்கு பின்னூட்டம் அனுப்பவும். 

    என் தந்தையின் கடனை எல்லாம் - முழு(மன)தாய் அடைத்துவிட்டேன் என்று முன்பே கூறி இருக்கிறேன். அவரின் இறுதிப்பகுதி கடனை அடைக்க ஒருவரின் "பெரிய-மனத்தால்" வங்கிக்கடன் பெற்று அடைத்தேன் - நான் வாங்கிய முதல் கடன்! ஓர்சூழலில், அந்த கடன் நெருக்கடி தர - இரண்டாமவரிடம் "வட்டிக்கு" பணம் வாங்கி சரிசெய்தேன். அந்த கடன் முழுதும் தீர்ந்து போகவிருந்த நிலையில் - இந்த பணிமாற்றத்திற்கு இடையில் வேலையில்லாது இருந்தபோது, மேலும் இரண்டாமவரிடமே கடன் வாங்கும் நிலைவந்துவிட்டது. இப்படியாய், 4 ஆண்டு காலமாய் என்னை உருத்திக்கொண்டிருந்த கடனிலிருந்து வெளிவந்துவிட்டேன். 4 ஆண்டுகளுக்கே இப்படி எனில், சிலர் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என வீடு அல்லது வீடு/வீட்டு-மனை வாங்குவதற்காய் கடன் பெருகின்றனரே??!! அவரின் மனநிலையெல்லாம் எப்படி இருக்கும்? யப்ப்ப்ப்பா...! யோசிக்கவே பயங்கரமா இருக்கு!! எப்படியெனினும், என்னுடைய இப்போதைய மனநிலையில்...

"கடன் அடைத்தான் நெஞ்சம் போல் - மகிழ்கிறான் இந்த இளங்கோ"           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக