ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

பாவேந்தர் பார்த்ததா? பார்க்க விரும்பியதா??



       முதன்முதலாய் - சென்ற வாரம்தான் தலையங்கம் எழுதாமல் என் பதிப்புகளை வெளியிட்டிருந்தேன். முழுமுதற்காரணம் - நேரமின்மை; மேலும், இது என்னுடைய 50-ஆவது தலையங்கம் என்பதால் - ஓர் அருமையான களமாய் இருந்திட வேண்டும் என்று எண்ணினேன்! பல மாதங்களாய் - படிக்க வேண்டும் என்று எண்ணி தள்ளிக்கொண்டே சென்ற "பாவேந்தரின், குடும்ப விளக்கு" படைப்பை கடந்த வாரம் தான் நிறைவேற்ற முடிந்தது! என்ன ஓர் அருமையான படைப்பு? குடும்பத்தின் பெருமையையும் - அதற்கு ஆதியாய் இருப்பது ஓர் பெண்தான் எனவும் - அதிலும், அந்த வீட்டிற்கு விளக்கேற்ற வரும் பெண் (மருமகள்) என்பதை(முன்னிறுத்தி) ஆணித்தரமாய் உணர்த்தி இருக்கிறார்!! அதாவது, ஓர் குடும்பத்தின் விளக்கு - அந்த வீட்டு மருமகள் என்று பொருள் கொள்ளலாம்!!!  உடனே, அவரும் பெண்ணை அடிமை எண்ணத்துடன் பார்த்ததாய் தவறாய் எண்ணாதீர்கள்; அவருடைய பார்வை -  பெண்ணும், பெண்ணின் தன்மையும் சார்ந்த பார்வை. மேலும், ஆண்கள் எவ்வாறு இல்லத்தரசிகளுக்கு உதவியாய் இருக்கவேண்டும் என்பதையும் - "சாற்றையடியாய்" சொல்லிட மறக்கவில்லை. ஓர் வீட்டின் விளக்காய் விளங்கும் "மருமகளின்" பலபரிமாணங்களை தனக்கே உரிய பாணியில் எளிதான "விருத்தப்பாக்களால்"விளக்கி இருக்கிறார்! அதுமட்டுமா? 3 தலைமுறையினரை காட்டிடுகிறார்!! வேறு எவரும் - இத்தனை இயல்பாய், இத்தனை எளிதாய், புரட்சி என்பது போன்ற போர்வை இல்லாது ஓர் பெரிய/கூட்டு குடும்பத்தை - விளக்கி இருக்கின்றனரா என்று எனக்கு தெரியவில்லை. 

      குடும்ப விளக்கை - முழுதாய் படித்தவுடன் எனக்குள் எழுந்த கேள்வி! இந்த விளக்கை ஏற்ற காரணமாய் இருந்தது "பாவேந்தர் பார்த்ததா? பார்க்க விரும்பியதா??" என்பது தான். அதாவது, பாவேந்தர் அவர் வீட்டிற்கு வந்த மருமகள் அப்படி இருந்ததை பார்த்து எழுந்ததா அல்லது அவர் வீட்டுப்பெண் வேறொருவர் வீட்டில் அப்படியொரு "மருமகளாய்" வாழ்ந்ததை பார்த்து விளைந்ததா?? இல்லையெனில், அவர் தன் மனதில் ஓர் மருமகள் எப்படி இருக்கவேண்டும் என்று கற்பனை செய்ததன் விளைவா??? வெகு-நிச்சயமாய், இது வேறொரு வீட்டு மருமகளை பார்த்து வந்திருக்காது! ஏனெனில், குடும்ப-விளக்கில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது; ஓர் உண்மை இருக்கிறது; கண்டிப்பாய், அவர் அருகிருந்து கண்டிருக்கவேண்டும்! அல்லது, அவ்வாறு காணவேண்டும் என்றவர் "கனவுகண்டு" இருக்கவேண்டும். இதுமாதிரி, எவரும் ஓர் பட்டிமன்றம் நடத்தி இருக்கின்றனறா என்று தெரியவில்லை; இல்லை எனில், அப்படி ஒன்றை இனியாவது நடத்துங்கள்: முடிந்தால், என்னையும் அழையுங்கள்! பாவேந்தரின் நேரடி-உறவு இல்லை எனினும், ஏதோ ஓர் வகையில் அவர் தலைமுறையோடு உறவு இருப்பதால், எனக்கு ஓர் கடமையும் இருக்கிறது - இதை சார்ந்து பேச!! பட்டிமன்றத்தின் தீர்ப்பு கண்டிப்பாய்; பார்க்க விரும்பியது என்பதாய் தான் இருக்கமுடியும். அதை என்னால் இயன்ற அளவில் சுருக்கமாய் எழுதி இருக்கிறேன். அதற்கு முன், அவரது படைப்பில் என்னைக் கவர்ந்திட்ட சில விசயங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்; நான் குறிப்பிட்டிருப்பவை நூற்றில் ஓர் பங்கு கூட இல்லை!!

         குடும்ப விளக்கின் முதற்பகுதி - முழுதும், ஓர் மருமகளின் திறமையையும், அவளின் சாதுர்யத்தையும் பறைசாற்றுவதே! அப்பப்பா... எத்தனை, எத்தனை வேலைகள் அந்த பெண்மணி செய்வது; அதிகாலை எழுவது முதல் பின்னிரவு தூங்க செல்வது வரை! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவனுக்கு பணிவிடை செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, முதியோர்களை (குறிப்பாய் மரு-தந்தை மற்றும் மரு-தாய் இருவருக்கும் சிறு-மனத்துயரமும், மனக்குறையும் இன்றி) பேணுவது, பின்னர் பிள்ளைகளை மாலையில் வரவேற்று அவர்களுக்கு தேவையானது செய்து அவர்களுக்கு கல்வி புகட்டுவது என்று எத்தனை, எத்தனை!! இடையில், உணவருந்தி அமரும் கணவனுக்கு "வெற்றிலை" கொடுப்பது; அங்கே அழகிய காதல் சடு-குடு வையும் வைக்கிறார், பாவலுக்கு-அரசர்! ஆம்; "கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை வாயிற் கொடுத்திடு மங்கையே" என்கிறான் கணவன்!! ஆங்கே கொடுக்கவரும் சநிகழ்வை - அழகியதொரு உவமை தந்து - அவளின் தளிர்க்கைக்கு  முத்தம் கொடுத்து வாங்கியதாய் சொல்கிறார் அவர்!!! புரிந்திடுவீர் யாவரும்; இது சாதரணமான விளக்கு அல்ல! அழகிய, அதிசய, அபூர்வ-குடும்ப விளக்கு. அதுமட்டுமல்ல; கணவன் சிறிது அயர்ந்திருக்க எண்ணினால், அவள் கடை-சென்று சாமர்த்தியமாய் வியாபாரம் செய்வாள் என்கிறார். இதுதான், பாவேந்தரின் பகுத்தறிவு; அவள், வீட்டு வேலை(க்கு) மட்டுமல்ல - ஆண் செய்யும் வேலையை, ஆணை-விட சிறப்பாகவும் செய்வாள் என்பதை சொல்கிறார். அதனால் தான், முன்பே சொன்னேன் - அவசரப்படாதீர் என்று!!!

         பெற்றவர் தன மருமகளை - தம்மகளாய் எண்ணி, அவளின் பெருமையை - தம் மகனிடம் சொல்லி, உன்னால் மட்டுமல்ல - உன் மனைவியாலும் நாங்கள் கவலை கொள்ள ஏதுமில்லை என்கிறார்கள். அந்த அபூர்வ மருமகள் - பொதுநலம் வேண்டும் என்று தன் கணவனையே தூண்டுகிறாள்; அதை அவன் செய்யவில்லை என்று துடிக்கிறாள்; பின் அவனின் பொதுநலத் தொண்டு கேட்டு மகிழ்கிறாள்! ம்ம்ம்ம்ம் இப்போதைய பெண்கள்... சரி, அதைப்பற்றி இப்போது எதற்கு என்கிறீர்களா? அதுவும் சரிதான். சம்பந்தியையே சட்டை செய்யாத சனங்கள் இருக்கும் இந்த காலத்தில் "பரிசாய் சம்பந்தி தந்த பாதாளச் சுரடு, தேங்காய்" என்று கூறி "சம்பந்தி-உறவையும்" குறிப்பிட மறக்கவில்லை அரசர்! இரவின்-இனிமையை விளக்கும் விருத்தப்பாவை இனிதாய் "தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை; துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்" என்று துவங்குகிறார். வெளிக்கதவின் தாழ் அடைக்கும் சத்தம் கேட்டு - அவன் பிள்ளைகள் கேட்காவண்ணம் - நான் இன்னமும் தூங்கவில்லை என்று துணைவிக்கு விளக்குகிறான்! ஆகா...என்ன ஒரு கற்பனை?! கவனம் கொள்ளுங்கள் - "காணொளி" ஏதுமின்றி தன் எழுத்து மூலம் மட்டும் இந்த அழகியலை விளக்குகிறார். இப்படி எத்தனை, எத்தனை - நான் வியந்த விசயங்கள்?? அதனால் தான், அரசரவர் இந்த இளவரசனையும்(இளங்கோ) விருத்தப்பா எழுத தூண்டிவிட்டார்! இந்த அற்புத விளக்கை - என்னப்பன் செதுக்கிய என்னறிவு கொண்டு - என்னுடைய "கன்னி விருத்தப்பா"வாய் எழுதியருக்கிறேன்!

       தமிழ்ப்பற்றுள்ள ஓர் பொதுவனாய் மட்டுமல்ல; மேற்கூறிய வண்ணம் - பாவலரசரின் குடும்பத்தில் எனக்குள்ள ஓர் உறவின் மூலமும், நான் கண்டவரையில் - கண்டிப்பாக, பாவேந்தரவர் தான் பார்த்ததை "விளக்காய்" ஏற்றவில்லை என்றே தோன்றுகிறது. தான் காண விரும்பியதை எல்லாம் - தம் கண்ணில் காட்சிகளாய் நிறுத்தி, அதற்கு "அவர் மட்டுமே சாட்சியாய்" நின்று எழுதி இருக்கவேண்டும். ஏனெனில், இப்போதிருக்கும் பாவேந்தர் உறவுகள் இடையே அவர் விவரித்திருக்கும் அளவில் "உறவு-வலிமை" இல்லை! அங்கே, பாவேந்தர் படைத்திட்ட "குடும்ப விளக்கு" தரவேண்டிய "ஒளி-வீச்சின்" அடர்த்தி இல்லை என்றே நான் கருதுகிறேன். உண்மையில், அப்படியோர் ஒளி-வீச்சை அவர் கண்டிருந்தால்; அவரின் 3-ஆவது தலைமுறை தான் இப்போது நடக்கிறது (4 வது தலைமுறை அனைத்தும் சிறு-பிள்ளைகள்) - அதற்குள் அந்த ஒளி-வீச்சின் அடர்த்தி குறைந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே தான் சொல்கிறேன்; இது கண்டிப்பாய், பாவேந்தர் நிசத்தில் பெரிய அளவில் - ஒளிவீச ஆசைப்பட்டு, ஏற்றிட்ட "கற்பனை விளக்கு" என்று! "குடும்ப விளக்கு" முழுதும் படித்தவுடன் எனக்கு தோன்றியது "இப்படி ஓர் குடும்பம் - அதுவும் 3 தலைமுறை தொடர்ந்து அதே அன்புடனும், காதலுடனும் இருப்பது எத்தனை அசாத்தியம்?" என்பதுதான். உடனே, என்னுள் நானே - "பாவேந்தரின் குடும்ப விளக்கு - அவர் பார்த்ததா? அல்லது பார்க்க விரும்பியதா??" என்று பட்டிமன்றம் நடத்தி; நானே பேச்சாளர்களாயும், நடுவராயும் இருந்து விவாதித்தேன். என்னுடைய தீர்ப்பு இது தான்...

பாவேந்தரின் குடும்ப விளக்கு - அவர் பார்க்க விரும்பியதே; பார்க்க விரும்பியதே!!!

பின்குறிப்பு: அருள்கூர்ந்து, இது ஏனோ "பாவலரசரின், (சொந்த)குடும்ப விளக்கு" என்று தவறாய் உணர்ந்து விடாதீர்கள்! அவர் ஏற்றிவைக்க எண்ணியது - எல்லா குடும்பத்திலும் தான்; அப்படி ஓர் மருமகள் ஒவ்வொரு வீட்டிற்கும் வேண்டும் என்பது தான் அவரது ஆசை!! அதனால்தான், என்னுடைய "கன்னி விருத்தப்பா"வில் பாவேந்தரின் விளக்கு "ஆர்க்கும் பொதுவாம்" என்றேன்!!!          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக