செவ்வாய், அக்டோபர் 10, 2017

அதிகாரம் 080: நட்பு ஆராய்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்

0791.  நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்
           வீடில்லை நட்பாள் பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: ஆராயாமல் நட்பு கொள்வதை விட, கேடானது வேறில்லை! அந்த 
           வகையில் நண்பர்களை அடைந்த பின், நட்பிலிருந்து பிரிவதற்கு வழியில்லை!
(அது போல்...)
           சிந்திக்காமல் அரசியலில் நுழைவதை விட, சவாலானது வேறில்லை! அந்த வகையில் 
           அரசியலில் நுழைந்த பின், அரசியலிருந்து விலகிட வழியில்லை!
      
0792.  ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
           தான்சாம் துயரம் தரும்

           விழியப்பன் விளக்கம்: மீண்டும் மீண்டும் ஆராயமல், ஒருவர் கொள்ளும் நட்பு; இறுதியில், 
           அவருக்கு மரணத்தை ஒத்த துயரத்தை அளிக்கும்!
(அது போல்...)
           மீண்டும் மீண்டும் களையெடுக்காமல், ஒருவர் செய்யும் விவசாயம்; முடிவில், அவருக்கு பண-
           மதிப்பிழப்பை ஒத்த நட்டத்தை அளிக்கும்!
           
0793.  குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
           இனனும் அறிந்துயாக்க நட்பு

           விழியப்பன் விளக்கம்: சிறப்பான குணம்/மனிதம் நிறைந்த குடும்பம்/குற்றமற்ற அறம்/
           குறையாத சுற்றம் - இந்த காரணிகளை, நன்கு ஆராய்ந்து; பின்னர் நட்பைக் 
           கொள்ளவேண்டும்!
(அது போல்...)
           இயல்பான ஒப்புரவு/பொதுமை மிகுந்த சிந்தனை/பிழையற்ற கடமை/ஊழலற்ற சொத்து - 
           இந்த போன்ற காரணிகளை, ஆழ்ந்து ஆராய்ந்து; பின்னர் தலைமையை ஏற்கவேண்டும்!

0794.  குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
           கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு

           விழியப்பன் விளக்கம்: மனிதம் மிகுந்த குடும்பத்தில் பிறந்து, தன் மேலெழும் பழிக்கு 
           அஞ்சுவோரின் நட்பை; கிடைக்கற்கரிய எதுவொன்றைக் கொடுத்தும், கொளல் வேண்டும்!
(அது போல்...)
           பொதுமை விதைத்த கட்சியை நிறுவி, தன் கட்சியினரின் ஊழலை அழிப்போரின் 
           வெற்றியை; பிறரளிக்கும் சன்மானங்களை மறுத்தும், நிர்ணயிக்க வேண்டும்!

0795.  அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
           வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்

           விழியப்பன் விளக்கம்: அறமல்லவைச் செய்தால், அழும் வண்ணம் அல்லது புரியும் வண்ணம் 
           இடித்து உரைக்கும்; வாழ்வியல் வழக்கமறிந்த வல்லவரை, ஆராய்ந்து நட்பு 
           கொள்ளவேண்டும்!
(அது போல்...)
           மனிதமல்லவைச் செய்தால், உணர்வு மூலம் அல்லது சிந்தனை மூலம் பயிற்சி தரும்
           உளவியல் திறமறிந்த குருவை, மதித்து உறவு கொள்ளவேண்டும்!

0796.  கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
           நீட்டி அளப்பதோர் கோல்

           விழியப்பன் விளக்கம்: நமக்கு நிகழும் கேட்டிலும், ஓர் நன்மையுண்டு! அக்கேடு, நட்பில் 
           இருப்போரை; துல்லியமாய் அளவிடும் அளவுகோல் ஆகும்!
(அது போல்...)
           ஆட்சியில் நிகழும் பதவிப்போரிலும், ஓர் வெற்றியுண்டு! அப்போர், அரசியல் தீயசக்திகளை, 
           முழுமையாய் அழிக்கும் களைக்கொல்லி ஆகும்!

0797.  ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
           கேண்மை ஒரீஇ விடல்

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் ஆகச்சிறந்த ஊதியம் என்பது; பகுத்தறிவு அற்றோரின் 
           நட்பை, முழுவதும் கைவிடுதல் ஆகும்!
(அது போல்...)
           மக்களாட்சியின் மிகச்சிறந்த ஆதாரம் என்பது; பொதுநலம் இல்லாதோரின் கட்சியை, 
           முற்றிலும் அழித்திடுதல் ஆகும்!

0798.  உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
           அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

           விழியப்பன் விளக்கம்: மனதை வருத்தும் விடயங்களை நினைக்காதீர்! அதுபோல், துன்பம் 
           நேரும்போது கைவிடுவோரின் நட்பைக் கொள்ளாதீர்!
(அது போல்...)
           மனிதத்தை அழிக்கும் பிரிவினைகளை உருவாக்காதீர்! அதுபோல், அதிகாரம் உள்ளபோது 
           அத்துமீறுவோரின் தலைமையை ஏற்காதீர்!

0799.  கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
           உள்ளினும் உள்ளஞ் சுடும்

           விழியப்பன் விளக்கம்: கெடுதல் நிகழும் போது கைவிடுவோரின் நட்பை; மரணிக்கும் போது 
           நினைத்தாலும், உள்ளத்தை வருத்தும்!
(அது போல்...)
           இயற்கையை அழிக்கும் போது தடுக்காதவரின் ஆட்சியை; ஆட்சிக்காலம் முடியும் 
           நிலையிலும், ஆற்றாமை தரும்!

0800.  மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும்
           ஒருவுக ஒப்பிலார் நட்பு

           விழியப்பன் விளக்கம்: சிந்தனையில் கறை இல்லாதோரின் நட்பை, எதை இழந்தும் 
           பெறுக! நல்ல அறத்தில் ஒப்பு இல்லாதவரின் நட்பை, எதைக் கொடுத்தும் கைவிடுக!
(அது போல்...)
           ஊழலில் நாட்டம் இல்லாதோரின் தலைமையை, இலவசத்தை மறுத்து ஏற்க! மக்கள் 
           ஆட்சியில் விருப்பம் இல்லாதோரின் தலைமையை, நன்கொடை அளித்தும் நிராகரிக்க!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக