வெள்ளி, அக்டோபர் 06, 2017

கடவுளும் கர்ப்பப்பையும்...


     10 ஆண்டுகளாய், 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை சென்ற அனுபவமும் இருப்பினும்; தற்போது, கடவுளைப் பற்றிய என் புரிதல் பண்பட்டு இருக்கிறது. கடவுளை மறுக்கும் எண்ணம் இதுவரை இல்லை; இனியும் அவ்வெண்ணம் எழ வாய்ப்பில்லை! ஏனெனில், கடவுள் என்பது “மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஓர் உயர்சக்தி" என்பதில் அதி நம்பிக்கையும்/புரிதலும் இருக்கிறது. அந்த உயர்சக்தி, பிரபஞ்சம் எனும் இவ்வுலகை உருவாக்கிவிட்டு; சக்தியெனும் சொல்லுக்குரிய வண்ணம், எந்த சலனமும்/அசைவும்/உயிர்ப்பும் இல்லாமல் - சக்தி வடிவில் மட்டுமே இருக்கிறது. உருவ மற்றும் உருவிலா பற்றிய என் புரிதலை முன்பே பதிந்திருக்கிறேன். "கடவுளுக்கு உருவம் இல்லையெனில், உயிரும் இருக்கமுடியாது"; அதற்கு, உருவமும்/பெயரும் கொடுத்தது மனிதர்களே. இது கடவுள் மறுப்பல்ல; மாறாய், கடவுளெனும் சக்தி "உலகை உருவாக்கும்" தன் கடமையைச் செய்துவிட்டு, எவ்வித வினையும்/எதிர்வினையும் இன்றி அமைதியாய் இருக்கிறது என்ற புரிதல்.

    அதாவது, ஒரு தாயின் கர்ப்பப்பை போல! ஆம், கடவுளைக் கர்ப்பப்பையோடு தொடர்பு படுத்தலாம். கர்ப்பப்பையும், ஒரு மனிதனை உயிர்ப்பிக்கும் "கடவுளுக்கு நிகரான" சக்தியே! ஒரு மனிதவுயிரை உருவாக்கி/காத்து வெளியுலகுக்கு அனுப்பும், அந்த தருணத்தோடு; கர்ப்பப்பையுடன் ஆன உறவு முடிகிறது; கர்ப்பப்பையின் சக்தி, அந்த எல்லையில் நிறைவடைகிறது! அதுபோலவே, கடவுளும்; உலகை உயிர்ப்பித்த தருணத்தோடு, கடவுளின் பணி நிறைவடைந்து, கடவுள் சக்தியும், அந்த வரையறையோடு நிற்கிறது. அதன் பின்னர், கருவறையில் இருந்து வெளிவந்த மனிதர்களைப் போல், உலகியல் அதனதன் வழியில் இயங்குகிறது. உலகில் நடக்கும் எல்லாவற்றையும் (கடவுளால் உருவாக்கப்பட்ட)இயற்கையே நிர்ணயிக்கிறது! இயற்கையைச் சிதைக்காமல் இருக்கும் வரை, உலகியல் சரியாய் இயங்கும்! இதையொத்து தாமதமாக ஆவது நாம் உணர்ந்திருக்கும், சில உதாரணங்கள் கீழுள்ள பட்டியிலில்:
  • நீர் நிறையும் இடங்களை அழித்து, குடியிருப்புகளை நிறுவினால், பெருவெள்ளம் சூழ்ந்து வாழ்வியலைச் சிதைக்கும்!
  • காடுகளை அழித்து, குடியிருப்புகளை நிறுவினால், விலங்குகள் அவற்றின் இருப்பிடத்தைத் தேடிவந்து, வாழ்வியலைச் சிதைக்கும்! 
  • விவசாய நிலங்களை அழித்து, குடியிருப்புகளை நிறுவினால்; உணவுப் பஞ்சம் உருவாகி, வாழ்வியலை சிதைக்கும்!
  • மனிதத்தின் இயற்கையைச் சிதைத்து, மிருகக்குணத்தை நிறுவினால்; பலவகைக் குற்றங்களும் பெருகி, வாழ்வியலைச் சிதைக்கும்!
      இவை போன்ற இயற்கை அழிவுகள் தான், இன்று நம்மை பாதித்துக் கொண்டிருக்கின்றன! இவற்றோடு, கடவுளுக்கு எத்தொடர்பும் இல்லை! நாம் செய்த தீவினைகள், எதிர்வினைகளாய் நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆம், எல்லாமும் "நியூட்டனின் மூன்றாம் விதியே!". கடவுள் தண்டிப்பார் எனில்; தீய மனிதர்கள் "குறைந்தது 5 ஆண்டுகள் கழித்தாவது (அதாவது நின்று!)" தண்டிக்கப்பட்டு இருப்பர்; ஆனால், இனியும் அப்படித் தண்டிக்கப்படப் போவதில்லை! எனவே, இவ்வுலகில் நிகழும் அனைத்துக்கும் “நாமே காரணம்!”. கடவுள் எனும் உருவற்ற/உயிரற்ற சக்தி, எதிர்வினை ஏதுமின்றியே இருக்கும். நம்மை உருவாக்கி, நம்மிலிருந்து விலகிவிட்ட கர்ப்பப்பை போல; கடவுளெனும் சக்தியும் விலகியே நிற்கும்! கடவுள் எனும் சக்தி தண்டிக்குமெனில்; கடவுள் எனும் பெயரில் "சாதி/மதம்" போன்ற பிரிவினைகள் வகுப்போரை, இந்நேரம் தண்டித்திருக்க வேண்டும். மாறாய், கர்ப்பப்பையைத் தாங்கிய தாய், நம் கண்ணெதிரே இருக்கும் நிதர்சனம்!

         அத்தாயை வணங்குவதே, கடவுளை வணங்கும் செயலாகும்! ஆனால், பெருகிவரும் முதியோர் இல்லங்கள், பலரும் அப்படிச் செய்யத் தவறியதை உணர்த்துகிறது! நம் கண்முன்னே இருக்கும் "நம்மால் பார்க்கமுடிந்த" கடவுளான தாயை வணங்காமல், எங்கு சென்று எவ்வகை வழிபாடு செய்தும்; என்ன பயன்?! ஒவ்வொரு மனிதனும், தாயெனும் கடவுளால் உருவாக்கப்பட்டோரே! அவர்களை எல்லாம் "சாதி/மதம்" என்ற பிரிவினைகளால் ஒதுக்கிவிட்டு; கடவுளை எதற்கு வழிபடுவது? இதுவரை "சாதி/மதம்" போன்ற காரணிகளை, அரசியல்வாதிகள் தான் கருவியாக்கி; நம்மைப் பிரித்தனர். இப்போது, சமூக முன்னேற்றத்துக்கான கருவியான வலைத்தளங்களை(யே), பிரிவினையை வளர்க்கும் ஆயுதமாக்கி; சாமான்யர் நாமும் "சாதி/மதம்" என்ற பிரிவினை கொண்டு, வாதம் எனும் பெயரில் அசிங்கங்களைப் பகிர்கிறோம்! இந்தப் பிரிவினைகள் எல்லாம், கடவுளை நாம் சரியாய் புரிந்து கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகின்றன! 

    நமக்கு உயிரளித்த கர்ப்பப்பையைத் தாங்கிய தாயில், கடவுளைத் தேடத் துவங்குவோம்! கர்ப்பப்பைக்கு, (தாயின்)கருவறை என்றோர் சொல்லையும் நாம் வழக்கில் கொண்டிருக்கிறோம். கடவுளெனும் சக்தியை வழிபடும் அந்த இடத்தையும் "கருவறை" என்றே சொல்கிறோம். "தாயை, கடவுளாய் வழிபடுங்கள்!" என்பதை உணர்த்தத் தான், இரண்டுக்கும் கருவறை என குறிப்பிடப் பட்டதோ?! கர்ப்பப்பையைச் சுமந்த ஒவ்வொரு தாயையும் மதித்து; சக மனிதர்களை மனிதத்தோடு அணுகுவோம்! ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டுமல்ல; அவர்களுக்கான கடவுளையும், ஊரை விட்டு விலக்கி வைத்திருக்கும் அவலத்தைப் போக்குவோம்! "சாதி/மதம்" என்பவை; நாம் பிறந்தவுடன் கழுவிய கழுவலில், நழுவிய பிறவிக்கறைகள்! இப்பிறவி அக்கறைகளைக் கழுவிடவே; நம் மனதில் இருந்து கழுவிட முடியவில்லை எனினும், தேவையின்றி அவற்றை வெளிப்படுத்தி நம் குறைகளைப் பெருக்கிப் பிரிவினைகளை வளர்க்காமல் இருப்போம்!


கடவுளைப் பின்னிருத்தி, நமக்கு உயிரளித்தக் கர்ப்பப்பையை முன்னிறுத்தி...
சாதி/மதம் தாண்டி - சக மனிதர்களை நேசிப்போம்!!!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு 
06102016
www.vizhiyappan.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக