சனி, அக்டோபர் 07, 2017

யார் தமிழர்???

{இவரின் சிந்தனையோடு, என் எண்ணமும் ஒத்திருப்பதைப் பின்னர் அறிந்தேன்}

     சில அமைப்புகள்/நபர்கள், தமிழகத்தில் இருக்கும் அண்டை மாநில மக்களை; அரசியல் ஆதாயத்திற்காக "தமிழர் அல்லாதோர்!" என்று விமர்சிப்பது பெருகி வருகிறது. அப்போதெல்லாம் "யார் தமிழர்?" எனும் கேள்வி எழும்! "தமிழைப் பேசும் இயல்டையவரே, தமிழர்!" என்ற வரையறை பதிலாய் கிடைத்தது. இதற்கு, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைத் தேவையில்லை; இதுவும் ஒரு பிரிவினையே! என்னளவில் "ஒரு குறிப்பிட்ட மதத்தவரை, வேற்று நாட்டவர்!" என சித்தரித்து வெளியேற சொல்வதற்கும்; "தமிழகத்தில் பிறக்காத காரணத்திற்காய், தமிழகத்தில் வளர்ந்து, தமிழை/தமிழரை நேசிக்கும் ஒருவரை" தமிழரல்ல என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை! நாம் கொண்டாடும் பல தலைவர்கள், தமிழர்கள் அல்லர் என்பதை அறியாதவரா நாம்? தமிழர் என்போர், தமிழக எல்லையில் இருந்து; தமிழ் மொழியைப் பேசும்/நேசிக்கும் ஒரு இனத்தினர்; இங்கே பிறந்திருக்க வேண்டுமென்பது நியாயமில்லை!

       அப்படியெனில், அதே அமைப்புகள்/நபர்கள், தமிழகத்தைப் பார்த்தே இராமல், வேறெங்கோ இருப்போரை "தமிழர்" என்ற அடிப்படைக்குள் கொண்டு வருவதும் தவறாகும்! பின், தமிழ்(தனி) ஈழம் கேட்பது கூட முறையல்ல! "தமிழ்(தனி)-ஈழம்" கனவு, இனியும் வேண்டுமா??? என்ற தலையங்கத்தில் சொல்லியது போல்; உண்மையில், அதுவும் இப்போது தேவையில்லை! எனவே, தமிழர் என்ற வரையறைக்குள் வருவதற்கு, தமிழறிந்து தமிழ்நாட்டில் இருந்தாலே போதுமானது; அதாவது, தமிழகம் எனும் நிலவரையறைக்கு உட்பட்டு இருந்தாலே போதுமானது! தாய்மொழி தமிழாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை தேவையற்றது! அப்படியெனில், நம்மில் பலருக்கும் "4/5 முந்தைய தலைமுறையினர் எதைத் தாய்மொழியாய் கொண்ட வம்சாவழியினர்" என்பதை ஆராய்ந்தால், சிக்கல் எழும்! ஒற்றுமை கோரும் வகையில் "நாம் தமிழர்!" என்பதில் எந்த தவறும் இல்லை; ஆனால், பிரிவினை எண்ணத்தில் "நாம் தமிழர்" என்று மார்தட்டிக் கொள்வதில்...

      எந்த நியதியும் இல்லை! இந்தியாவில் இருக்கும் வேற்றுமை, நிலத்தை அடிப்படையாகக் கொண்டது; மற்றபடி, இன்னமும் ஓர் நாடாய் தான் இருக்கிறோம்! எனவே, இந்த "வெற்றுக் கூற்றை" அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தைத் தனித்துப் பிரித்து துண்டாக்குவோம்! என சிலர் பிரிவினைப் பேசுவது "மிகப்பெரிய தீவிரவாதத்துக்கு" வித்திடும். இந்த "முரட்டுத்தனமான" பிரிவினை எண்ணத்தினால் தான்; பிறவகையில் நல்ல சிந்தனை இருந்தும், சிலரை ஆதரிக்க முடிவதில்லை! வேறெங்கோ பிறந்து, தமிழகத்தில் தஞ்சமடைந்து வாழ்வியல் நடத்துவோரும் தமிழர் எனும் வரையறைக்குள்ளேயே வருவர்! அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லையென்றோ அல்லது அவர்கள் வெளியேற வேண்டுமென்றோ வாதிடுவது மிகத் தவறானது! அப்படியெனில், அகதிகளாய் இங்கு வந்து சேர்ந்திருக்கும் பிறநாட்டு தமிழர்களையும், இவர்கள் எதிர்ப்பார்களா? வேற்று நாட்டு குடியுரிமையைப் பெற்றபின்னும் "தமிழ் பேசும் ஒரே காரணத்தால்"...

         தமிழர்கள் என ஏற்கும் எண்ணம் ஒருபுறம் இருக்கும்போது; இதே நாட்டின் குடியுரிமையோடு, வேற்று மாநிலத்தில் பிறந்தும்; தமிழைப் பேசக்கற்று இங்கேயே வாழும் அவர்களை "தமிழர் அல்லர்!" என வாதிடுவது எப்படி முறையாகும்? இந்தியா எனும் தேசம், ஒற்றை தேசமாக இருக்கும் வரை; இவ்வகையானப் பிரிவினை மிகப்பெரிய தீவிரவாதத்துக்கே அடிப்படையாக அமையும். "பிற மாநிலத்தவரால் அல்லது மத்திய அரசால் பிரச்சனைகள் இருக்கின்றன!" என்பதில் எனக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! இது கூட்டுக் குடும்பத்தின் பிரச்னையைப் போன்றது; எனவே, பிரச்சனையைக் காரணம் காட்டி, தனிக்குடித்தனம் அமைப்பது சற்றும் முறையல்ல! தனிக்குடித்தன போக்கால் உருவான, குடும்ப அமைப்பின் சிதைவே - நம் கண்முன்னே இருக்கும் படிப்பினை! பிரச்சனைகளைச் சமாளிக்க முனைவதே, மனிதமுள்ள தமிழர்களுக்கு அழகு! மத்திய அரசுதான், அண்டை மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை எனில்...

       மாநில அரசில் நம்மில் இருந்து ஒருவரை மிகப்பெரிய ஆளுமையோடு அமர்த்தும்  முனைப்பு வேண்டும்; அதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். அரசியலில் இருக்கும் போட்டி, தேர்தல் நேரத்தில் "மட்டும்" இருக்கவேண்டும்! தேர்தல் முடிந்ததும், மக்கள் பணியாற்றும் நோக்கில் அனைவரோடும் கைகோர்க்கும் பக்குவம் வேண்டும். மத்திய அரசில் பங்கு வேண்டுமென, மாநிலத்தில் இருக்கும் ஒற்றுமையின்மையை அங்கு வரை கொண்டு செல்கிறார்கள். சிறுவயதில் படித்த "மாடு/சிங்கம்" கதையாய் இப்போது பிரிந்துபட்டு அனுபவிக்கிறோம்! இந்நிலையில், தமிழகத்தைத் தனிமைப்படுத்தி, எதைச் சாதிக்கப் போகிறோம்? தமிழகத்தில் தொடரப்போகும் கட்சி/சாதி/மதம் போன்ற பிரச்சனைகளுக்காகவும் பிரிவினை கேட்போமா? மாவட்டங்களுக்குள் பிரச்னை எழும்போது; "என் மாவட்டத்தைப் பிரித்துக் கொடு!" எனப் போராடுவோமா? பின், பிரிவினையோடு மட்டுமே போராடிக் கொண்டிருப்போம்!

     கூட்டுக் குடும்பத்தைத்தான் சிதைத்துவிட்டோம்! அதன் பலனை உணர்ந்தும்...
"கூட்டு நாட்டையும்" சிதைக்கும் எண்ணம் வேண்டுமா?
சிந்திப்போம்... சேர்ந்து பயணிப்போம்!!!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு 
07.10.2017
www.vizhiyappan.blogspot.com

{பின்குறிப்பு: இந்த தலையங்கத்துக்கான கருத்துப்படத்தைத் தேடுகையில், திரு. கா.சு. பிள்ளை அவர்களின் புகைப்படத்தையும், அவர் வகுத்த வரையறையையும் காண நேர்ந்தது. அவரின் வரையரையை இவ்விணைப்பில்: http://www.vikatan.com/news/miscellaneous/71449-kasupillai-birthday-special-article.html}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக