திங்கள், ஜூலை 27, 2015

75-இலும் தசை ஆடும்!!!        மே-மாதம் என்னப்பனும், என்மகளும் என்னுடன் தனியே இங்கே தங்கியிருந்த போது; ஒரு நாள் கீழ்வரும் சம்பவம் நடந்தது. என்மகளுக்கு சிறு-பண்டத்தை "சக்கர-நாற்காலியில்" அமர்ந்து ஊட்டிக் கொண்டிருந்தபோது - விளையாடும் ஆர்வத்தில் நான் சொல்ல, சொல்ல கேளாமால் நகர்ந்து சென்றுகொண்டே இருந்தாள். நானும் எட்டி, எட்டி ஊட்டிக்கொண்டிருந்த போது சமநிலை-தவறி நாற்காலி சாய்ந்துவிட்டது; நானும் கீழே விழுந்துவிட்டேன். பெருத்த-அடி ஏதுமில்லை; நான் அடித்துவிடுவோனோ?! என்ற பயத்தால், விழித்துக் கொண்டிருக்கும் என்மகளை அந்த நிலையிலும் நான் கவனிக்க தவறவில்லை! ஆனால், இன்னொன்றை அந்த கணம் கவனித்து/உணரவில்லை. 
   
    ஆம்! நான் விழுந்த  அடுத்த கணம் என்னப்பன் என்னருகே வந்துவிட்டார். பெரிதாய் ஒன்றுமில்லை ஒரு 2 மீட்டர் இடைவெளி தான்; ஆனால், கடுமையான-மூட்டு வலி கொண்ட என்னப்பனுக்கு அது மிகப்பெரிய தூரம். கட்டிலில் இருந்து எழும்போது "முருகா! முருகா!" என்று சொல்லிக்கொண்டே முதல்-அடியை எடுத்து வைத்து தடுமாறித்தான் அடுத்த அடியை எடுத்து வைப்பார். ஆனால், மறுகணமே எப்படி எவரால் என்னை அணுக முடிந்தது? "என்னப்பா! என்னைப் பார்த்து உட்காரென சொல்லிவிட்டு; நீ இப்படி கவனக்குறைவா இருக்கலாமா?!" என்று வினவிக்கொண்டே எனக்கு கைகொடுத்து தூக்கியும் விட்டார். அந்தக்கணம் நான் அந்த நிகழ்வை உடனே உணர்ந்து பார்க்கவில்லை; பின்னர் யோசிக்கும் போதுதான் அந்த வியப்பு என்னுள் பரவியது. அப்போது, ஒன்று புரிந்தது...

ஆம்! 75-இலும் தசை ஆடும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக