திங்கள், ஜூலை 27, 2015

உறவும் உடைசலும்...




       சென்ற சூலை-16 ஆம் தேதியன்று இரவு மேலுள்ள படத்தில் உள்ள சிறு-தட்டு உடைந்து விட்டது. 2 ஆண்டுகளுக்கும் மேலாய்... என்னுடன் இருந்தது! எனக்கு, என்னவளுக்கு, என்மகளுக்கு என்று - மூன்று, மூன்றாய் வாங்கிய பொருட்களுள் ஒன்று. அன்றே மூன்று முறை தவறியது; கீழே விழாமல் பிடித்துவிட்டேன். ஆனால், நான்காவது முறை தவறிவிட்டது. சரி... அதற்கென்ன?! என்கிறீர்களா; இதோ, வருகிறேன்:
  • நாம் ஒவ்வொருவரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறவுகளை இப்படி உடைந்து/விரிசல் விடுவதை கடந்து வந்திருப்போம். ஆனால், எத்தனை முறை அப்படி உடையக்கூடாது  என்ற கவனத்துடன் செயல்பட்டிருப்போம்?! ஒருமுறை? இரண்டுமுறை??
  • மேற்சொன்னது போல் அன்றே முதல் மூன்று முறை நான் கவனமாய்; உடைந்து விடுமோ?! என்ற ஐயத்தால்; உடைந்து விடக்கூடாதே! என்ற ஆதங்கத்துடன் இருந்ததால் - அதை தடுத்து காப்பாற்றி/பத்திரப்படுத்த முடிந்தது.
  • ஆனால், நான்காவது முறை எனக்கு அந்த ஐயமும்/ஆதங்கமும் இல்லை; அல்லது... அதுபற்றிய கவனம் இல்லை. ஒரு அலட்சியம்  இருந்திருக்கிறது; அதனால், அந்த பொருளை பத்திரப்படுத்த  முடியாமல் போய்விட்டது. 
  • அதுபோலவே, நாம் ஒவ்வொரு உறவும் உடையும் நிலை வரும்போதெல்லாம் சில/பல நேரங்களில் "கவனமாய்"தடுத்திருப்பினும்; ஏதோவொரு ஒருமுறை கவனக்குறைவால் தவறவிட்டு அந்த உறவை உடைத்து விட்டிருப்போம்.
  • சரி... உடைந்ததை (மேலுள்ள தட்டு போல்) ஒட்டவைப்பது சாத்தியம் அன்றுதான்! ஆனால் "தவற விட்ட தவறை" எண்ணி; அதற்காய் வருந்த வேண்டும்! கண்டிப்பாக பழையவாறே அந்த உறவை(தட்டை) மீட்டிடுதல் சாத்தியமில்லை. ஆனால் "சிறு-தழும்புடன்" அதை பழைய-நிலைக்கு மிக-அண்மையான நிலைக்கு மீட்டிடுதல் சாத்தியமே!
  • குறைந்தபட்சம் - அதற்கான முயற்சியையாவது நாம் செய்யவேண்டும்! அந்த முயற்சி கூட செய்யவில்லை எனில் "தவற விட்ட தவறு";  பின் குற்றமாகிவிடுகிறது! குற்றம் என்று தெரிந்தபின் வரும் அந்த குற்ற-உணர்வு பெருவலி கொண்டது. எனவே, உடைந்த உறவுகளை சரிசெய்திட... 
சிறு-முயற்சியாவது செய்வோம்! குற்ற-உணர்வின்றி இருப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக