ஞாயிறு, ஜூலை 12, 2015

இளங்கோவும் இஃப்தாரும்...   தலைப்பை பார்த்தவுடனே ஓரளவுக்கு தலையங்கத்தின் மைய்யக்கரு புரிந்திருக்கும். "அம்மாவாசைக்கும்; அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?" என்ற சொற்றொடரை பலரும் கேட்டிருக்கக்கூடும். அதையே தவறென்பவன் நான்; ஆம்! அம்மாவாசை என்பது ஒருவரின் "அம்மா/அப்பா"-வின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம்; அவர்களுக்கு பிடித்ததை சமைத்து வழிபடும் ஒரு நாள் என்று பொருள்படும். அப்படி எனில் ஏன் அம்மாவாசைக்கும், அப்துல் காதருக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது?! அப்துல் காதருக்கும் அம்மாவும்/அப்பாவும் உண்டுதானே?! என்று பார்ப்பவன் நான். அப்படிப்பட்ட சிந்தனை தான்; இந்த ஆண்டு இரமலான்-நோன்பு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது. ஆம்! இந்த கணம் வரை 3 வாரங்களையும் கடந்து இரமலான்-நோன்பு இருந்து வருகிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு, என்மகளின் பிறந்த நாளுக்காய் இந்தியா சென்றபோது கூட நோன்பை நிறுத்தவில்லை.

         என்மகளின் பிறந்த நாளன்று கூட அது தொடர்ந்தது. இக்கணம்வரை எந்த சிரமமும் இன்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது; அதனால் தான் "இளங்கோவும் இஃப்தாரும்" என்று தலைப்பிட்டேன். நோன்பு இருக்க முடிவு செய்ததும் ஷார்ஜாவில் இருக்கும் என் நண்பன் காதரை தொடர்பு கொண்டு அது பற்றி விவாதித்தேன். நோன்பிற்கான விதிமுறைகளை எளிதாய் விளக்கி, என் "நோன்பு-குருவாய்" ஆனவன். அத்தோடு நிற்காமல், 2-ஆம் நாள் நோன்புக்கான "இஃப்தார்" முடிக்க அவன் வீட்டிற்கு அழைத்தான்; அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களே மேலே உள்ளவை! இஃப்தார் எப்படி இருக்கவேண்டும்; அன்றைய நோன்பை எப்படி முடிக்கவேண்டும் என்பதை அவனும்; அவன் அன்பு-குடும்பமும் அன்போடு விளக்கியது. அவர்களுக்கு "அல்லா" வேண்டிய அருளை வழங்கட்டும்; முன்பே அவன் இல்லத்தில் உணவருந்தி இருக்கிறேன் (என்மகளுடன் கூட) எனினும், கண்டிப்பாக இஃப்தார் விருந்து வித்தியாசமான அனுபவம்.

          முதல் நாள் நோன்பன்று; முதலில் என் அம்மாவிடம் சொன்னேன் - நோன்பிருக்கிறேன் என்று. மிகுந்த கடவுள் பக்தி கொண்ட அவர் எந்த மறுப்பும் சொல்லாது; புன்னகையுடன் அதை ஆமோதித்தார். என் தமக்கைக்கு அத்தனை ஏற்புடையதாய் இல்லை; எதிர்த்து கேட்டால், நான் ஏதாவது சொல்லிவிடுவேன் என்ற தயக்கம் - அதனால், எதுவும் சொல்லவில்லை. என் தமையன் சிறிது தயக்கமாய் "நீ ஏன் நோன்பு இருக்கிறாய்?" என்றார்; ஏன், இருந்தால் என்ன? என்று கேட்டேன்; அதன் பின் அவர் ஏதும் பேசவில்லை. கடவுள் நம்பிக்கையே இல்லாத என்னவள், அது பற்றி பெரிதாய் ஏதும் சொல்லாது "சரி" என்றாள். ஆனால், தமிழ் படித்த/மனிதம் படித்த என்னப்பன்; எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்ட அவர் அதை வரவேற்று "அல்லா, உனக்கு நல்வழி காட்டி துணை இருக்கட்டும்!" என்று வாழ்த்தினார். என்னப்பனின் இந்த உயரிய குணத்தை என்போல் எவரும் இதுவரை உணரவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு.

        இப்படியாய், நோன்பை இன்று வரை நன்முறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்போது நான் நோன்பிருக்கும் போது; விரதம் இருக்கும் முறை பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். அதனால், ஒருவேளை உணவருந்துவது எனக்கு பெரிய விசயமில்லை. காலையில் உணவருந்தி நோன்பை ஆரம்பிக்கும் வழக்கம் இன்று வரை எனக்கு கைகூடவில்லை; எச்சில் விழுங்காத ஒழுக்கமும் இன்னும் சரிவர கைகூடவில்லை!. ஓரிரு நாட்கள் பழரசம்/பன் போன்று சிறுபண்டங்கள் உண்டேன்; மற்றபடி, காலையில் உணவருந்தும் வழக்கத்தை என்னால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், அதிகாலை 3 மணிக்கு எழுந்து 1.5 லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு (25 ஆண்டுகளாய் காலையில் தண்ணீர் குடிப்பதால்) பின்னர் 30/40 நிமிடங்கள் உறங்கிவிட்டு; பின்னர் "சேஹர்" ஆரம்பிக்கும் முன் எழுந்து, (சாப்பிடும் எண்ணமிருப்பின் ஏதாவது சாப்பிட்டுவிட்டு)  மீண்டும் 1.5 லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு என் நோன்பை ஆரம்பித்து விடுவேன்.

     இந்த 3 வாரங்களிலேயே நல்ல பலன்; உடல் பழைய ஆரோக்கியத்தை நோக்கி திரும்ப ஆரம்பித்திருக்கிறது; மனதும் பழையவாறு ஒருமுகப்பட பழகி வருகிறது. மசூதிக்கு சென்று தொழவேண்டும் என்று தோன்றவில்லை! கண்டிப்பாய், இது வேறு கடவுள் என்பதால் அல்ல. நான் வணங்கும் கடவுளையே, வீட்டில் உருவகமாய் வைத்து வணங்குவதில்லை; உருவிலா வழிபாடு என்னுள்-தானே எழுந்திருக்கிறது என்று முன்பே எழுதியுள்ளேன். அதனால், வழிபாடு என்பது நான் தினமும் வழக்கமாய் செய்யும் வண்ணம் தொடர்கிறது. இரமலான்-நோன்பை வேற்று மதத்தவர் கடைபிடிக்கக்கூடாது என்று "இசுலாமிய மார்க்கம்" சொல்லி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. வேறெந்த மதமும் கூட, நோன்பு/விரதம் மேற்கொள்ளும் விதத்தில் மதத்தை போதிப்பதாய் எனக்கு தெரியவில்லை. எல்லா மதமும் "மனிதம்" ஒன்றை மட்டும் தான் போதிக்கிறது. எனவே, என்னுடைய பார்வையில்; அம்மாவாசைக்கும், அப்துல் காதருக்கு மட்டுமல்ல...

"இளங்கோவுக்கும் இஃப்தாருக்கும்" கூட சம்பந்தம் உண்டு என்றே தோன்றுகிறது!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக