ஞாயிறு, ஜூலை 26, 2015

பகுத்தறிவு எப்போது உருவானது???          "இறை-நம்பிக்கையில் ஓர் பகுத்தறிவு" என்ற இந்த வார தலையங்கத்தை படித்திருப்பீர்கள். அந்த விவாதத்தின் போது என் நட்புகளிடம் "எனக்கும் இறை-நம்பிக்கை உள்ளது; ஆனால், அந்த நம்பிக்கையையும் நான் பகுத்தறிய விரும்புகிறேன்" என்றேன். அவர்கள் நான் கடவுள்-மறுப்பாளன் என்ற ரீதியில் அடிக்கடி; கடவுள் இருக்கிறார் - தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்பன போன்ற பொது-விவாதங்களை வைக்க ஆரம்பித்தனர். அவர்கள் இறை-நம்பிக்கையில் பகுத்தறிவது தவறு என்ற அடிப்படையில் பேசியதாய் தோன்றியது. அப்போது, நட்பொன்று என்னைப் பார்த்து "பகுத்தறிவு எப்போது உருவானது?!" என்றொரு கேள்வியை கேட்டது. நான் சற்றும் யோசிக்கவில்லை! இப்படி பதிலளித்தேன்: ஆதாம் - ஏவாள் என்பவர்களை கடவுள் படைத்தார் என்பதில் பெரும்பான்மையில் எல்லா மதங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. அப்படியெனில், ஏவாள் ஆப்பிளை உண்டபோதே பகுத்தறிவு உருவாகிவிட்டது என்றேன். 

       ஆம்! கடவுள் அந்த பழத்தை உண்ணவேண்டாம் என்று கூறியும், அதை ஏவாள் உண்டாள் என்றால்... அங்கே "ஏன்? உண்டால் என்ன?" என்றொரு கேள்வி எழுந்திருக்கிறது. அந்த கேள்விதான் பகுத்தறிவின் பிறப்பிடம் என்று நான் பார்க்கிறேன். இங்கு இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்; கடவுள் நேரடியாக "இந்த ஆப்பிளை உண்!" என்று கட்டளை இட்டிருக்க முடியும். ஆனால், அப்படி செய்யாது "உண்ண வேண்டாம்" என்றார்; அப்படி எனில், பகுத்தறிவை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதைக் கடவுளே, மனிதனிடமே விட்டு விட்டதாய் தெரிகிறது. மனிதன் தானாகவே "பகுத்தறிய வேண்டும்" என்பதே கடவுளின் விருப்பமாய் இருந்திருக்க வேண்டும்; உனக்கு பகுத்தறிவை கொடுத்ததோடு என் கடன் முடிந்துவிட்டது. இனி, உன் பகுத்தறிவை உண்மையாய்/உரிமையாய் உபயோகிப்பது உன் கடமையடா மனிதா! என்று அவர் விட்டிருக்கவேண்டும். எனவே, என்னளவில் - பகுத்தறிவு என்பது...

ஏன் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது? - என்ற கேள்வியில் பிறந்திருக்கவேண்டும்!!!      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக