சனி, ஜூலை 22, 2017

அதிகாரம் 072: அவையறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்

0711.  அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
           தொகையறிந்த தூய்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: சொல்லும் சொற்களின் வினைப்பொருளை அறிந்த, குழப்பமற்ற தூய
           அறிவுடையோர்; கூடியிருக்கும் அவையின் தன்மையை, ஆராய்ந்து பேச வேண்டும்.
(அது போல்...)
           கொள்ளும் உறவுகளின் வரையறையை உணர்ந்த, கள்ளமற்ற இனிய இல்லறத்தார்;
           சார்ந்திருக்கும் கலாச்சாரத்தின் அடிப்படையை, உணர்ந்து உறவாட வேண்டும்.
      
0712.  இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
           நடைதெரிந்த நன்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: சொற்களின் ஆழ்ந்தப் பொருளை அறிந்த, அறத் தன்மை
           கொண்டோர்; அவையின் மாண்பை அறிந்து, சொற்களை ஆராய்ந்து உள்வாங்கி
           பேசவேண்டும்.
(அது போல்...)
           உறவுகளின் அடிப்படைத் தேவையை உணர்ந்த, இல்லற இலக்கணம் பழகியோர்;
           சமுதாயத்தின் சிறப்பை உணர்ந்து, உறவுகளைத் தெளிந்து ஒருங்கிணைந்து
           வாழவேண்டும்.
           
0713.  அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
           வகையறியார் வல்லதூஉம் இல்

           விழியப்பன் விளக்கம்: அவையின் மாண்பை அறியாமல், உரை ஆற்ற முற்படுவோர்;
           சொற்களின் தரத்தை அறியமாட்டார்கள். அவர்களுக்கு, சொல் வன்மையும்
           இருப்பதில்லை!
(அது போல்...)
           மக்களின் தேவையை உணராமல், அரசியல் செய்ய முனைவோர்; ஆட்சியின் வலிமையை
           உணரமாட்டார்கள். அவர்களுக்கு, ஆட்சித் திறனும் இருப்பதில்லை!

0714.  ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
           வான்சுதை வண்ணங் கொளல்

           விழியப்பன் விளக்கம்: அவையறிதல் என்பது - சான்றோர் முன், சான்றோராய் இருத்தலும்;
           கற்போர் முன், "சேரும் நிறத்திற்கேற்ப நிறம்மாறும்" வெண் சுண்ணாம்பாய் இருத்தலும் -
           ஆகும்.
(அது போல்...)
           அரசியல் திறமென்பது - அதிகாரத்திற்கு முன், அதிகாரத்தை நிலைநாட்டுவதும்;
           சாமான்யர்கள் முன், "வார்க்கும் அச்சுக்கேற்ப உருமாறும்" உலோகக் குழம்பாய் மாறுதலும்
           - ஆகும்.

0715.  நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
           முந்து கிளவாச் செறிவு

           விழியப்பன் விளக்கம்: அவையறிதல் உணர்ந்து, அறிவு முதிர்ந்த சான்றோர்களை
           முந்திக்கொண்டு பேசாத அடக்கம்; நல்லவை என்பவை எல்லாவற்றிலும், தலையாய
           நல்லதாகும்.
(அது போல்...)
           சமுதாயக்கடன் அறிந்து, அனுபவம் வாய்ந்த மூதாதையரை ஒதுக்கிவைத்து வாழாத
           ஒழுக்கம்; செல்வம் என்பவை அனைத்திலும், சிறந்த செல்வமாகும்.

0716.  ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
           ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

           விழியப்பன் விளக்கம்: பல்வகை துறைகளில் கல்வி அறிவு உடையோர் முன், செய்யும்
           சொற்பிழை; வாழ்வியல் நெறிகளில் இருந்து தடம்புரண்டு வாழும் , ஒழுக்கமின்மைக்கு
           ஒப்பாகும்.
(அது போல்...)
           பல்வகை உறவுகளில் அனுபவ அறிவு கொண்ட வம்சத்தில், வளர்க்கும் உறவுப்பகை;
           சமூகக் கடமையில் இருந்து விலகி நிற்கும், பொறுப்பின்மைக்கு நிகராகும்.

0717.  கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
           சொல்தெரிதல் வல்லார் அகத்து

           விழியப்பன் விளக்கம்: சொற்களைப் பிழையின்றிப் பேசும், சொல்வன்மை நிறைந்த
           அவையினர் முன்  பேசும்போது; பல்வகை நூல்களைக் கற்றறிந்தோரின், கல்வித்திறம்
           எளிதில் விளங்கும்.
(அது போல்...)
           உணர்வுகளை மறைவின்றி உணர்த்தும், அறத்தன்மை மிகுந்த மக்களுடன் உறவு
           கொள்ளும்போது; பல்வேறு அறங்களை உணர்ந்தோரின், சகிப்புத்தன்மை எளிதில்
           விளங்கும்.

0718.  உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
           பாத்தியுள் நீர்சொரிந் தற்று

           விழியப்பன் விளக்கம்: பிறரின் பேச்சை உணர்ந்தறியும் திறமுடைய, சான்றோர் அவையில்
           பேசுவது; வளரும் நிலையிலுள்ள பயிர்கள் நிறைந்த பகுதியில், நீரைப் பாய்ச்சுவதற்கு
           ஒப்பாகும்.
(அது போல்...)
           பிறரின் உணர்வை மதிக்கும் குணமுடைய, உறவுகளின் பிணைப்பில் இருப்பது; வளரும்
           பருவமுள்ள இளைஞர்கள் நிறைந்த ஊரில், வளர்ச்சியைத் திட்டமிடுவதற்கு நிகராகும்.

0719.  புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
           நன்கு செலச்சொல்லு வார்

           விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த நல்லோர் அவையில், பிறரொப்ப நல்லவற்றை
           சொல்லும் திறமுடையோர்; அறமற்றோர் நிறைந்த அவையில், மறந்தும் பேசாமல் இருப்பது
           சிறந்தது.
(அது போல்...)
           கடமையுணர்ந்த தலைவர்கள் அணியில், மக்களொப்பச் சேவைகளைச் செய்யும்
           உறுப்பினர்கள்; ஊழலாளர்கள் நிறைந்த அணியில், தவறியும் சேராமல் இருப்பது
           உயர்ந்தது.

0720.  அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
           அல்லார்முன் கோட்டி கொளல்

           விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த பேச்சாளர்கள், தமக்கு நிகரற்றோர் நிறைந்த
           அவையில் பேசுதல்; தூய்மையில்லாத முற்றத்தில், சிந்திய அமிழ்தின் தன்மையைப்
           போன்றதாகும்.
(அது போல்...)
           சேவையறிந்த தலைவர்கள், தமக்கு ஈடற்றோர் சூழ்ந்த அணியில் இணைதல்; அறமில்லாத
           மனதில், விதைத்த சிந்தனையின் தன்மைக்கு ஒப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக