ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

இது கண்டிப்பாய்..."கண்டனத்துக்கு உரியது!!!"



     சமீபத்தில் "பள்ளி மேலாளர்" ஒருவர் தவறான-பார்வையோடு ஓர் மாணவியை கண்டித்தது அல்லாமல், அதன் தொடர்ச்சியாய் மாணவியின் தந்தையை அழைத்து வரச்சொல்லி இருக்கிறார். எங்கே, பள்ளிக்கு வந்தால், தன்-தந்தையை அந்த மேலாளர் அவமானப்படுத்தி விடுவாரோ?!; "தன் தந்தைக்கு எந்த அவப்பெயரும் வரக்கூடாதே" என்று நினைத்த அந்த இளம்-மகள் தற்கொலை செய்து கொண்டாளாம்! அந்த மகள் எழுதிய கடிதத்தை ஒருவர் "தமிழில் மொழி-பெயர்த்து" முக-நூலில் வெளியிட்டிருந்தார். விசயம் இதுதான்: அந்த மகள் ஓர்-ஆணுடன் எடுத்த புகைப்படம் "முக-நூலில்" வெளிவந்து இருந்ததாம்!! அதைப்பார்த்த மேலாளர் அது தம்-பள்ளிக்கு இழிபெயரை கொடுத்ததாயும், அந்த பெண் தவறானவள் என்பதாய் சித்தரித்ததன் விளைவுதான் மேற்கூறிய நிகழ்வு. எல்லோரும் பரிந்துரை செய்தது போல், அந்த மேலாளர் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை; இப்படிப்பட்ட ஓர் அறிவிலியை விதிப்படி கண்டித்திடுதல் அவசியம்.

           அந்த மகளின் மேல் எனக்கு ஆழ்ந்த அனுதாபம் எழுந்தது; அவள் ஆன்மா சாந்தியடையவேண்டும் என்ற கவலை பிறந்தது! அவள் தந்தைக்கு எழுதிய கடிதம் கண்முன் நின்றது; தன் தந்தையை எவ்வளவு நேசித்திருக்கிறாள் என்பது ஒவ்வொரு வரியிலும் தெரிந்தது. தந்தையுடன் இணைந்து எடுத்திருந்த புகைப்படம் கண்முன் வந்தது. இவை எல்லாவற்றையும் மீறி அவளால் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடிந்தது?! என்ற தார்மீக-கோபம் எழுந்தது! அவள் இல்லாமல் அவளப்பன் எத்தனை வேதனையடைவார் என்பது தெரிந்திருந்தும், ஏன் அந்த முடிவை எடுத்தாள்?! என்னப்பன் எனக்காய் எதையும் தாங்குவான் என்ற நம்பிக்கை ஏன் வரவில்லை??!! தயவுசெய்து உன்னை குறை-கூறுவதாய் எண்ணாதே, மகளே! இதுபோன்று இனி "எந்தவொரு மகளும்" எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது என்ற என்-ஆற்றாமையை உன்னால் உணர-முடியுமா?! என்று தெரியவில்லை! ஆனால், இதுபோல் இனி செய்ய நினைக்கும் ஒவ்வொரு மகளுக்கும்; நீ இல்லாமால், இனி...

தினம்-தினம் செத்துக்கொண்டிருக்கப்போகும் உன்னப்பனுக்கும் கண்டிப்பாய் புரியும்!!!     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக