வார-இறுதியில் நான் பெரும்பாலும் வீட்டிலேயே அடைந்திருப்பது வழக்கம்! அதிலும், சென்ற 2/3 வாரங்களாய் "ஷாப்பிங்"செய்யக் கூட வெளியில் செல்வதில்லை. வியாழக்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்தபின், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை-தான் வீட்டை விட்டு வெளியே செல்வேன் (வெள்ளி/சனி தான் எனக்கு வார-இறுதி!); இன்றும் அப்படியே! வாயிற்கதவை கூட திறப்பதில்லை (ஃபிளாட் சிஸ்டம்); என்நண்பன் கூட அடிக்கடி திட்டுவான்! எங்கயாவது போடா!! ஏண்டா, இப்படி வீட்டிலேயே அடைஞ்சி கெடக்கற?! என்று கேட்பான். நல்ல நட்புகள் என்று இப்போது பெரிதாய் இல்லை; உண்மையில், முன்போல் "பரஸ்பரம் புரிந்த" நட்புகள் அமைவதில்லை! என்-வயதும் கூட அதற்கோர் காரணமாய் இருக்கலாம். எப்போதாவது, எவருடனாவது எங்கேனும் வெளியே செல்வதுண்டு; என் தமக்கை-மகன் இங்கிருந்த வரை அவன்-வீட்டுக்காவது அவ்வப்போது செல்வது வழக்கம். இப்போதெல்லாம், எதுவும் இல்லை; ஏதாவது செய்துகொண்டு வீட்டிலேயே இருப்பேன்!
போர்ச்சுக்கல்லில் இருந்தபோது - எனக்கும்; என் மகளுக்கும் "சனி/ஞாயிறே" வார-இறுதியாய் இருந்தது. எங்களுக்குள் குறைந்தது நான்கரை-மணி நேரம் வித்தியாசம் என்பதால்; அவளுடன் "ஸ்கைப்" செய்வது பொருத்தமாய் இருந்தது. இப்போது, எங்களுக்குள் இருக்கும் ஒரே-பொதுவான வார-இறுதி "சனிக்கிழமை"தான்; அதுவும், ஒன்றரை-மணி நேரம் தான் வித்தியாசம். அதனாலேயே, வெள்ளி/சனி இரண்டு நாட்களிலும் இந்திய-நேரப்படி அவளுடன் 19:00 மணியளவில் "ஸ்கைப்" செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கும் அடுத்த நாள் அவளுக்கு விடுமுறை என்பதால்; எந்த பிரச்சனையும் இல்லை; எனக்கு அப்போது, 17:30 மணியாகும் என்பதால், என்னால் வெளியில் எங்கும் செல்வது (அப்படியே, போயிட்டாலும்!) இயலாது போகிறது! காலையில், வீடு சுத்தம் செய்வது/ துணி துவைப்பது/ சமையல் செய்வது போன்ற ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டது செய்வது வழக்கம். மேலும், என்குடும்பத்தார் அனைவருக்கும் தொலை-பேசுவது வழக்கம். இப்படியாய்...
வார-இறுதியில் வீட்டில் அடைந்திருப்பதே என் வாடிக்கை!!!
பின்குறிப்பு: என்னவளும்/என்மகளும் இல்லாதது பெரிய காரணம் எனினும், அவர்கள் என்னுடன் இருந்தபோது கூட; என்மகள் சிறு-குழந்தை என்பதால் பெரும்பாலும் வெளியில் அதிகமாய் செல்வதில்லை! அப்படியே ஏதாவது முயற்சி செய்தாலும்; ஒன்று, நான் உறங்கிவிடுவேன்! அல்லது என்னவள் நேரமாயிடுச்சி; பாப்பாவை வச்சுக்கிட்டு கஷ்டம் என்றிடுவாள்!! மேலும், என்னவளுக்கும்/ என்மகளுக்கும் கூட பெரிதாய்-வெளியே செல்லவேண்டும் என்ற ஆர்வமில்லை. என்னவள் "அப்பாவும்/பொண்ணும் வீட்டிலேயே முட்டை-இட்டுக்கிட்டு இருங்க!" என்று கிண்டலாய் சொல்வாள். ஆம்! எங்கள் மூவருக்கும் "வீட்டிலேயே முட்டை-இடுவதில்" அப்படியோர் பொருத்தம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக