ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

உறவுகளின் பலம்...



   
         சென்றமுறை இந்தியா சென்றபோது ஓர் நிகழ்வு நடந்தது! என்மகளுக்காய் என் உறவுகளில் ஒன்று செய்த விசயம்! அந்த செயல் திரும்ப-திரும்ப நடைபெற்றதன் விளைவாய்; ஓர் பெரிய-நன்றி என்னுள் ஊற்றெடுத்தது. எப்போதும் உறவுகளின்பால் பெருமதிப்பு கொண்ட என்னுள்; அச்செயல் உறவுகளின்-பலம் பற்றிய எண்ணத்தை பன்மடங்கு உயர்த்தியது. அதை இப்படியொரு தலையங்கமாய் எழுதி என்நன்றியை மீண்டும் ஓர்முறை மிக-திண்மையாய் தெரிவிக்கவேண்டும் என்று தோன்றியது; அது என்கடமையும் கூட! செய்தி இதுதான்: கடந்த விடுமுறையில் என்மகளுடன் என்தமக்கை வீட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது என்மகளுக்கு; என்மருதமையனின் தம்பி-மனைவி பல-வேளைகள் சோறு-ஊட்டினார். அவர் வாழ்க்கைப்பட்டிருக்கும் விதத்தில் மட்டுமல்ல; உறவிலும் - அவர் என் சித்தப்பா-மகள்; எனக்கு தங்கை. அந்த சோறு-ஊட்டிய நிகழ்வு தான் என்னை அப்படி நெகிழ வைத்தது! அதற்காய் தான் இந்த நன்றி-தெரிவிக்கும் செயல்.

      இதில் என்ன பெரிய-விசயம் என்று பலரும் வினவலாம்? பல உறவுகளும் இப்படித்தான் செய்யும் என்று எதிர்-வாதம் செய்யலாம். ஒரு தாய் செய்யாததா?! எனலாம்; ஓர்தாய் தன் குழந்தைக்கு செய்வது கடமை ஆகிறது. அது செய்யவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் விளைவது! அதற்காய், தாயின் செயலை நான் குறைத்து மதிப்பிடுவதாய் அர்த்தமன்று! தாயும், தந்தையும் செய்வது கடமை; அதில் மற்ற பெற்றோர்களைக் காட்டிலும் அதிகம் செய்கிறோம் என்று சிலருக்கு ஆனந்தம் இருக்கலாம்! ஆனாலும், அது அவர்களின் கடமை; என்தமக்கை அப்படி பலமுறை என்மகளுக்கு செய்திருக்கிறார். அது என்தமக்கையின் கடமை எனப்பொருள் கொள்ளலாம்; என் சிறுவயதில், என்தாயைப் போல் எனக்கு அதிகம்/பலதும் செய்தவர், என்தமக்கை! அதே அன்புதான் அவர் என்மகளிடம் காட்டுவதும்; அந்த செயலும் நன்றி சொல்லுதலுக்கு உரியதே! ஆனாலும், அப்படி சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றியதில்லை! மாறாய், அது அவசியமில்லை என்று தோன்றும்.

      18-மாத குழந்தையாய் என்மகளை நான் தனியாய் 13-மணி நேரம் விமானப்பயணம் செய்து  இந்தியா கொண்டுசென்றேன் என்பதை முன்பே கூறியுள்ளேன். அவள் "லிஸ்பன் விமான நிலையத்தில்" இருந்து நாங்கள் கிளம்பும் முன்-வரை "தாய்ப்பால்" அருந்தியவள் என்பதையும் அங்கே குறிப்பிட்டிருந்தேன். முதல் ஒருவாரம், என்மகள் "மாற்றுப்பாலை" குடிக்க பட்ட-பாடிருக்கிறதே! இன்னும் எனக்கு அந்த நிகழ்வுகள் பசுமையாய் நினைவிருக்கிறது. அந்த நாட்களில் - எனக்கு பலமுறை "எந்த நெருடலும்" இன்றி ஓர்-தாயை போன்ற அன்புடனே எனக்கும் சமைத்து/பல நாட்களில் என்நண்பர்களுக்கும் சமைத்து கொடுத்த என் மருதமக்கை(அண்ணி) - என்மகளுக்காய் செய்த செயல்கள் மேலும்-பசுமையாய் நினைவில் இருக்கிறது. என்மகளுக்கும் ஓர்தாயாய் இருந்து என் மருதமக்கை - அவளை பால்-குடிக்க பழகச்செய்ய செய்திட்ட செயல்களை நான் வாழ்நாளில் என்றும் மறத்தல் சாத்தியம் அன்று.

        என் மருதமக்கைக்கு கூட நான் அப்படி நன்றி சொன்னதில்லை! அது தேவையற்றது என்று எனக்கு தோன்ரம்; அதை அவர் தன் கடமையாய் செய்தார். என்னதான், நான் மேற்கூறிய என்தங்கை அதே-போன்ற அன்புடனும்/அடிப்படையுடனும் செய்திடினும் நான் அங்கிருத்து கிளம்பும்போது "ரொம்ப த்தேங்க்ஸ்"மா! என்று முழுமனதாய் சொன்னேன்; "அட! இதில் என்னண்ணா? இருக்கு??" என்று அன்புடன் கேட்டார். ஆனால், சிறுகண்கலங்களோடு "இல்லைமா! நீ செய்த செயல் அப்படி என்றேன்!" ஆம்! அவர் சோறூட்டும்போது அதில் மிகப்பெரிய நேர்த்தி இருந்தது {இந்த வரியை நெகிழ்வோடு தட்டச்சு செய்யும்போது ஓர்-நண்பர் "விழியமுதினிக்கு எனது ஆசீர்வாதங்கள்" என்று "வாட்ஸ்-ஆப்"பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் (மேலே, வலது படம்)! ஆம், என்மகள் ஆசிர்வதிக்கப்பட்டவள்!!}; எந்த விரக்தியோ/வெறுப்போ இல்லாமல் செய்தார்! இதை-முழுதும் உணர்ந்தவளாய் என்மகள் "கவிதா அத்தை!" என்று மிக-அன்போடு அழைப்பாள்! "என்மகளின் நன்றியாய்" அதைப் பார்க்கிறேன்.

      இந்த உறவுகள்தான் மிகப்பெரிய பலம் கொண்டு நம் வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றன! உண்மையில், என் மருதமையனும் அவரின் 4 சகோதரர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்!! அவர்கள் வீட்டிற்கு வாய்த்த 5-மருமகள்களும் அப்படியோர் குணம் படைத்தவர்கள்; அவர்களின் குடும்பத்தை பற்றி முன்பே ஓர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். விசேச-நாட்களில் ஒன்றுகூடி அவர்கள் மகிழும் அந்த வாழ்க்கையை பார்க்கும்போது "அவர்களை விட கொடுத்து வைத்தவர்கள் எவரும் இருக்கமுடியாது!" என்று தோன்றும். அந்த அன்பு-இல்லத்தின் சாராம்சமே மேற்கூறிய நிகழ்வு. இப்படிப்பட்ட உறவுமுறைகள் கிடைப்பதற்கு நானும், என்மகளும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். ஆனால், என்மகள் தனியாய் வளரும் அந்த சூழல் எனக்கு மிகுந்த பாரத்தை அளிக்கிறது! அவளுக்காவது என்தமையன்/என்தமக்கை மூலம் உறவுகள் கிடைக்கும்; நாளை, அவளுக்கும் ஒரேயொரு குழந்தை பிறந்தால் இந்த உறவுகளின் பலம் எப்படி புரிபடும்? என்னைப்பொருத்த அளவில்...

 உறவுகளின் பலம் இல்லாதோர் எத்தனை இருந்தும் பலகீனமானவர்களே!!!            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக