ஞாயிறு, பிப்ரவரி 23, 2014

என்போன்றோரின் சுயம்!!!



           என்போன்றோரின் சுயத்தை பற்றி பேசுவதற்காய் இத்தலையங்கம்! என்னுடைய சில நட்புகளும்/ உறவுகளும்; திருமணத்திற்கு-முன் நான் சம்பாதித்ததை (எனக்காய்)சேமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை என்மீது எப்போதும் சுமத்துவதுண்டு! ஆம்! எனக்கென எதையும் சேமிக்காது - எல்லாவற்றையும் என்குடும்பதிற்காய் (முக்கியமாய்; பெற்றோருக்காய்) செலவிட்டவன்; இதுபோல் பலர் இருக்கின்றனர்!!  இம்மாதிரியானவர்களை பலரும் புரிந்து கொள்வதில்லை! முக்கியமாய், வாழ்நாள் முழுதும் இணைந்து பயணிக்க வேண்டிய உறவுகளும்/நட்புகளும். எனவே, இம்மாதிரியானோரின் சுயத்தை பற்றி ஓர்-தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த நிமிடம் வரை; நான் என்குடும்பத்திற்காய் செலவிட்டதை எண்ணி ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை! என்மகளை  பிரிந்திருக்க வேண்டிய இந்த சூழலுக்கு அதுவும் ஓர்காரணம் எனினும், என்னுடைய அந்த செயலுக்காய் நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை.

     நான் இன்றிருக்கும் நிலையை எட்ட எனக்கு ஏணியாய் இருந்து ஏற்றிவிட்டு; இன்று கீழே நின்றுகொண்டிருக்கும் அவர்களுக்காய் நான் எதுவும் செய்யவில்லை என்றால், என்னவிதமான மனிதனாய் இருக்கமுடியும்?! இதன் ஒரு-சாராம்சம் தான் சென்ற வாரம் என்மருதமையன் என்று நான் எழுதிட்ட தலையங்கம்! என்னை வளர்த்த/நான் வளர்வதற்கு வித்திட்ட அவர்களை நான் கண்டுகொள்ளாமல் போவது எப்படி சாத்தியம்?! அவர்கள் செய்தது கடமை எனில், நான் நல்ல நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு உதவுவது என் கடமையல்லவா?! திருமண உறவுக்கென சிறிதாவது சேர்த்து வைத்திருக்கலாம் என்று சிலர் சொல்வது ஏற்புடையதே!! சம்பள-உரையை அப்படியே கொடுத்த என்னப்பனின் செயலை அவ்வப்போது குறிப்பிடுகிறேன். அப்படிப்பட்டவரிடம், திடீரென்று ஒரு பிரச்சனை எனும்போது - பணம் வைத்துக்கொண்டே; இல்லையென்று! என்னால் எப்படி சொல்ல முடியும்? அப்படி சொல்வதுதான் முறையா??

        எனக்கு பணம் தேவையானபோது தன்னிடம் இல்லாதிருந்தால், என்தமக்கையின் நகையை (எனக்கு தெரியாமல்)அடமானம் வைத்தும் கொடுத்த என்மருதமையனுக்கு ஏதேனும் செய்யாமல் எப்படி இருக்கமுடியும்? அவர் கேட்கவில்லை எனினும் நான் செய்யவேண்டும் அல்லவா?! சமீபத்தில் கூட தன்பிள்ளைகளுடன் பேருந்தில் செல்லும் என்தமையன்; நான் அப்படி போகக்கூடாது என்று - என்சூழல் உணர்ந்து "வாடகை-மகிழ்வுந்து" ஏற்பாடு செய்த என்தமையனுக்கு ஓர்அத்தியாவசியம் எனில், என்னால் முடிந்ததை செய்யாமல் எப்படி இருக்கமுடியும்?! அப்படி பணம் வைத்துக்கொண்டு என்னால் சந்தோசமாய் இருக்கமுடியுமா?? அதற்காய், திருமணமான பின்னும் அப்படியே இருக்கவேண்டும் என்பதில்லை; அது தவறு! ஆனால், திருமணமே ஆகாத சூழலில் "முகம் கூட தெரியாமல், பின்னால் வரப்போகும்" ஓர்உறவுக்காய் என்று எப்படி பொருள்-சேர்த்து வைக்கமுடியும்?! அப்படி நினைத்து சம-காலத்தில் இருந்துகொண்டிருக்கும் உறவை எப்படி புறந்தள்ள முடியும்?

          ஆனால், திருமணமான பின் அந்த எண்ணம் வரவேண்டும்; வரும்! அதுவும் என்போன்றோருக்கு இயல்பாய்/அதிகமாகவே வரும்; இதைப்பலரும் புரிந்துகொள்ளாமல் போவதுதான் வேதனை! அதிலும், மேற்கூறியபடி வாழ்நாள் முழுதும்-இணைந்து பயணிக்க வேண்டிய உறவு (/நட்பு) அப்படி புரியாமல் போகும்போது ஆறாத-இரணமாய் ஆகும்!! என்மகள் பிறந்த 3-ஆம் மாதம் அவளுக்கென்று ஓர்வங்கி கணக்கு ஆரம்பித்து இன்றுவரை சிறுக-சிறுக (RD மூலம்) சேர்த்து கொண்டு வருகிறேன். இதுவரை எந்த  சூழலிலும், ஒருமாதம் கூட தவறியதில்லை; என்சம்பளம் அதிகமான போது, அவளுக்கான சேமிப்பையும் அதிகப்படுத்தி உள்ளேன். என்னவள்/என்மகள் கேட்டதை - இதுவரை இல்லை என்று சொல்லியதில்லை! உண்மையில், அவர்கள் கேட்காமலேயே செய்வதே என் வழக்கம். என்மகள் பிறந்ததுமுதல் இன்றுவரை - என்மகளுக்காய் எவரும் கொடுத்த 1-உரூபாயை கூட நான் இன்றுவரை செலவிட்டதில்லை! அவள் வங்கிக்கணக்கில் சேர்த்துவிடுவேன்

        சிலசமயங்களில் என்னவள் சேர்ந்த பணத்தை மட்டும் கூறுவாள்; சிறிதும் கடிந்துகொள்ளாமல், அதற்கு நிகரான பணத்தை என்மகளின் வங்கி-கணக்கில் செலுத்திவிடுவேன். சென்றமுறை என்தாய் கொடுத்த 1500-உரூபாயை கூட அப்படியே செலுத்திவிட்டேன். நாணயங்கள் சேமிக்கும் வழக்கத்தில் சேர்ந்ததை; கடந்த 2-முறைகளாய்  என்மகள் கணக்கில்தான் சேர்த்துள்ளேன்; அதிகமாய் பணம் புழங்கும் காலத்தில் - அவள் கணக்கில் மேலும் சில சேமிப்பை செலுத்துவதுண்டு! இன்றைய நிலையில் (எங்களுக்காய் என்ற சேமிப்பை தவிர்த்து) என்வங்கி-கணக்கை விட என்மகளின்-கணக்கு அதிகம். எந்த சூழலிலும், அதிலிருந்து 1-உரூபாய் கூட எடுக்கமாட்டேன்; இது எனக்கு-நானே செய்து கொண்ட சத்தியம் - அது அவள் பணம்! என்னவளிடம் "என்றோ ஓர்காலத்தில்" சொன்னது போல் - இன்னுமோர் குழந்தை எனக்கு வாய்க்குமாயின்; அதன் பெயரில் வங்கி-கணக்கு துவங்கும் போது - அன்றைய தேதியில் என்மகளின் கணக்கில் இருக்கும் அளவிற்கு நிகரான பணத்தை தவறாது-செலுத்துவேன்

         இதுதான் என்போன்றோரின் சுயம்! தன் பெற்றோருக்கும் உடன்பிறந்த உறவுகளுக்கும் எல்லாமும் செய்திட்ட/செய்ய நினைக்கும் ஒருவனால், தனக்கென உருவாகும் ஓர்குடும்பத்திற்காய் எப்படி செய்யாதிருக்க முடியும்?  உண்மையில், அதை விட "பலமடங்கு அதிகமாகவே!" செய்வான். இது புரியவேண்டிய உறவுக்கு புரியாமல் போவது, துரதிஷ்டமே! இத்தலையங்கம் ஒரேயொரு உறவுக்கு இதை புரிய-வைத்தால் போதுமானது. நான் என்னப்பனுக்கு எத்தனை செய்து இருந்தாலும் - இறுதியில் எனக்கென "5-ஏக்கர்" நிலத்தை கொடுத்து அவரே "உயர்ந்து நிற்கிறார்!".  அந்த நிலத்தில் பல-வளங்களை சேர்த்து "நிலத்தின் மதிப்பை"மென்மேலும் உயர்த்தி "பெரிதும் உயர்ந்து நிற்கிறார்!!". அதுபோன்ற ஒருவருக்கு என்னிடம் இருக்கும்போது; இல்லையென்று சொல்லிட எப்படி மனது வரும்??!! உண்மையில், அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் - மீண்டும் அவருக்கு மகனாய் பிறந்து இன்னமும் செய்யவேண்டும் என்றல்லாவா?! மனது துடிக்கும்??...

என்போன்ற சுயம் கொண்ட அனைவரின் வளத்திற்காய் இதை சமர்ப்பிக்கிறேன்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக