ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

இரங்கல் வருத்தம்...



         என் முக-நூல் நண்பர் திரு. ராமச்சந்திரன் புதுமனப்பள்ளி அவர்களின் தந்தை சமீபத்தில் இயற்கை எய்தினார். அவ்வப்போது பிரிவின் துயரை பதிவுகளாய் பகிர்ந்து கொண்டிருக்கிறார்; அவர் கடைசியாய் இட்டிருந்த பதிவு என்னை மிகவும் பாத்தித்துவிட்டது; பலரும் அப்படியே கருத்திட்டிருந்தனர். அவரின் பதிவுகளின் மூலம்-மட்டுமே; அவர்களின் குடும்பம் எத்தனை "உறவு-வலிமை" மிகுந்த ஒன்று என்பதை யூகிக்க முடிகிறது. அவருக்கு ஆறுதலாய், சரியான முறையில் என் மன-அழுத்தத்தை வெளிப்படுத்தும் விதமாய் சொல்லவேண்டும் என்று மிகவும் முயன்றேன்; பலதும் எழுதி பின் "டெலிட்"செய்து விட்டேன். பின், வெறுமனே ஒரு "லைக்" மட்டும் இட்டேன். அப்போது தான் ஒரு கேள்வி எழுந்தது என்னுள்! இதுபோல், பலரும் பல சமயங்களில் கண்டிப்பாய் நினைத்திருத்தல் கூடும். என்னுள் எழுந்த அந்த கேள்வி: ஏன் நம்மால் உடனடியாய் (spontaneously) ஒரு "இரங்கல் வருத்தம்" தெரிவிக்க முடிவதில்லை?! என்பதே.

        எத்தனையோ விதமான சந்தோசமான-நிகழ்வுகளின் போது நம்மால் வெகு-இயல்பாய்/பல-விதமாய் 
மற்றவர்களின் "சந்தோசமான உணர்வுகளோடு/நிகழ்வுகளோடு" கலக்க-முடிகிறது! ஆனால், நமக்கு தெரிந்தவரின் உறவின் மரணத்தின்போது - உடனடியாய் ஒரு இரங்கல்-வருத்தம் தருவது (குறிப்பாய், எழுத்து மூலம்) அசாத்தியமான காரியமாய்தான் இருக்கிறது. இறந்தவரோடு நமக்கு ஓரளவிற்காவது பரிச்சயம் இருப்பின், இந்த காரியம் கொஞ்சம் எளிதாகும்! இறந்தவர்-சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சொல்லி சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளோடு சிறிது பங்குகொள்ள முடியும்! அப்படி எந்த பரிச்சியமும் இல்லை எனில், அந்த காரியம் இன்னமும் சிரமாமாய் போகிறது. மேலும், ஓர் ஒப்பிடுதலின் அடிப்படையில், சோகமான நிகழ்வுகளுக்கு "மரணம்" மட்டுமே பிரதான ஒன்றாய் இருக்கிறது; ஆனால், சந்தோசமான நிகழ்வுக்கு பல காரணிகள் இருக்கின்றன. அதனால், நமக்கு பெருமளவில் வாய்ப்பு கிட்டாதது கூட - இந்த இயலாமைக்கு காரணமாய் இருக்கலாம். இம்மனதங்கத்தை...

நண்பரின் தந்தைக்கு "ஆழ்ந்த இரங்கலோடு" அர்ப்பணிக்கிறேன்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக