ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

என்மருதமையன்...



         என்மருதமையனின் (தமக்கையின் கணவர்) பொருளுதவி "சரியான நேரத்தில்" கிடைத்திராது போயிருந்தால் என் வாழ்க்கை பெருமளவு (தடு)மாற்றம் கண்டிருக்கும்! என்னப்பனால் மாதாந்திர செலவுக்கு பணம்-கொடுக்க இயலாத சூழலில்; அவர் ஓர்-அப்பனாய், எனக்கு இருந்து செய்திருக்கிறார். "பண-உதவி" மட்டுமல்ல; எனக்கு இன்றுவரை மனதாலும் மிகப்பெரிய பலமாய் இருந்து கொண்டிருக்கிறார். எனக்கு மட்டுமல்ல; என்மகளுக்கும்! மேலே, இடது-புகைப்படம் அதைத்தான் காட்டுகிறது!! அதை மனமார-இரசிக்கும் என்னை படமெடுக்கவும் என்மருதமையனின்-மகன் தவறவில்லை (வலது-புகைப்படம்). "உதவித்தொகை" இல்லாமல் ஆராய்ச்சி படிப்பு (Ph. D.) படிப்பது எத்தனை சிரமம் என்று; என்னை மாதிரி அப்படிப்பை மேற்கொண்டோருக்கு தெரியும். இப்போதாவது பரவாய் இல்லை! சிறு-கல்லூரிகளில் கூட ஆராய்ச்சி-செய்வதற்கான பல வசதிகள் உள்ளன. ஆனால், 2000-இன் ஆரம்பத்தில் "எல்லா இடங்களிலும்" இத்தனை வசதிகள் இல்லை. 

  என்னுடைய ஆராய்ச்சி-மேற்பார்வையாளர் (Research Supervisor) ஆராய்ச்சிக்கு தேவையானவைகளை கொடுத்ததோடு அவ்வப்போது "பண-உதவி"யையும் செய்திருக்கிறார்; அவருக்கு  இன்றுவரை நன்றியுள்ளவனாய் இருந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய தங்கும் செலவு/ உணவுச் செலவு போன்றவற்றிற்காய் என்னப்பனால் - உதவிட சிரமமானபோது - எந்த தயக்கமும் இன்றி தானாய் முன்வந்து அதை தொடர்ந்திட்டவர் என்மருதமையன்! சத்தமாய்/அவசரப்பட்டு பேசுவார்; ஆனால் சாந்தமான/அன்புநிறைந்த தன்மையுடையவர் அவர்! என்னைப்போன்றே அவரைப் புரிந்து அவரிடம் உறவுகொள்ள தெரிந்த பாக்கியசாலிகள் - மிகச்சிலரே! என் மிக-நெருங்கிய நட்பு வட்டம் - இப்போது அவரின் மிக, மிக-நெருங்கிய நட்பு-வட்டம்! மிகப்பெரிய பணப்புழக்கம் இருந்தபோது அதை சரியான-விதத்தில் சேமிக்க தெரியாமல்; எல்லோருக்கும்/ எல்லாமும் செய்துவிட்டு இன்று அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்.

       அவரிடம் இப்போது பணம்-குறைவாய் இருக்கலாம்; ஆனால் "இன்றும்; அவர் மனதளவில் வள்ளல்!". எத்தனை பேரிடம் அத்தகைய குனம் இருந்திட முடியும்? கண்டிப்பாய், அவரின் உதவியில்லாது போயிருந்தால் வெறும் "M. Phil." பட்டத்தோடு ஏதேனும் ஓர்-தனியார் கல்லூரி/பள்ளியில் வேலையில் சேர்ந்து என்-வாழ்க்கை திசை-மாறி இருந்திருக்கும்! இப்படி நான் செழித்திட எனக்காய் எல்லாமும் செய்த அவருக்கு என்னால் "பெரிதாய்-உதவிட"முடியாது போனது?! என்னுடைய துரதிஷ்டமே! என்னுடைய பல உறவுகளும்/நட்புகளும் - நான்தான் அவருக்கு எல்லாமும் செய்கின்றேன் என்ற தவறான பார்வையை கொண்டுள்ளன. என்னப்பனுக்கு செய்யவேண்டிய கடனை செய்யவே எனக்கு போதும், போதும் என்றாகிவிட்டது.  இந்த நிலையில் - என்மருதமையனுக்கு எப்படி என்னால் எல்லாமும் செய்யமுடியும்? அப்படி நான் செய்திருந்து - அந்த உறவுகளும்/நட்புகளும் பேசுமேயானால்; என்னால் சந்தோசமாய்-பொறுத்துக் கொள்ளமுடியும்!

          எந்த சூழலிலும் இன்றுவரை என்னிடம் (பரிகாரமாய் கூட) அவர் எதுவும் கேட்டதேயில்லை! மிக-முக்கியமாய், என் திருமணத்திற்கு பின் "எந்த சூழலிலும் என்னிடம் கேட்கக்கூடாது!" என்ற பிடிவாதத்துடன் இருப்பவர்! முதன்முதலில் வெளிநாடு சென்ற நாள்-முதல் இன்றுவரை; ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர் என்னை விமான நிலையம் வந்து வழியனுப்பவும்/வரவேற்கவும் தவறியதே இல்லை! வயோதிகம் காரணமாய் என் பெற்றோர்களை நானே வர-வேண்டாம் என சொல்லிவிட்டேன். மற்ற உறவெதுவும் எனக்காய் அப்படி வந்து காத்திருப்பதில்லை; 4-வயதே ஆன என்மகள் வருவதும் சாத்தியமில்லை! இம்மாதிரி உறவுகள் கிடைப்பது மிக-அபூர்வம்!! அவரின் பிள்ளைகளுக்காவது என்னால் முடிந்ததை செய்யவேண்டும்; ஓரளவிற்கேனும் செய்திருக்கிறேன் எனினும் - இன்னும் பலதும் செய்யவேண்டும். என் மனதிற்கு தெரியும் - என்மருதமையன் செய்தது எத்தனை பேருதவி என்று! அதை எல்லோரும் புரிந்துகொள்வது சிரமம்தான்; எவர் எப்படி/எது சொன்னாலும்...

என்னளவில்; என்மருதமையன் - எனக்கு இன்னுமோர் "அப்பன்"!!!

பின்குறிப்பு: சென்றமுறை இந்தியா-பயணத்தின் போது, என்தமக்கை "அவர் மகனிடம்; அவன் சம்பாரிக்க ஆரம்பிச்சதும், "மாமா(நான்)" எது கேட்டாலும் செய்யணும்" என்று சொல்லியிருப்பதாய் கூறினார். சொல்லவில்லை என்றாலும் செய்யக்கூடிய மகன் அவன்! ஆனால் நான்; "நீ எனக்கு எதுவும் செய்யவேண்டாம்டா! ஒங்க அம்மாவுக்கும்/அப்பாவுக்கும் எல்லாத்தையும் செய்யி; அதுக்கப்புறமா உனக்குன்னு எல்லாத்தையும் செஞ்சுக்க!! என்றேன் (என்னால் செய்யமுடியாதததை/ நான் செய்ய வேண்டியதை; அவனாவது செய்யவேண்டும் என்ற ஓர் சுயமும் அதில் உண்டு!). தொடர்ந்து "ஒருவேளை நான் இல்லாது போய்விட்டால், என்மகளுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் - தவறாமல் செய்யடா! என்றேன்). இதுதான் உறவு என்பது; அது, இப்படித்தான் ஓர்-நீண்ட சங்கிலியின் இணைப்பை போல தொடரும்; தொடர வேண்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக