புதன், நவம்பர் 29, 2017

வாழ்க்கை இவ்விதமே...!


     மகள்மேல் கோபம் வருமா? அதிலும், 8 வயது மகள்மேல் கோபம் வருமா?? அப்படி வந்தால், நானெப்படி அப்பனாக இருக்கமுடியும்?! ஆனால், ஆற்றாமை வரும்! வரலாம்...

      ஆமடி மகளே! உங்களுக்காக/உங்களைவிட்டுப் பிரிந்து தனித்திருக்கும் நான், அலைபேசியில் அழைக்கும்போது; 1 நிமிடம் கூட பேசமுடியாமல், நீ "பிசி"யாக இருப்பதைக் காணும்போது; உன்மேல் ஆற்றாமை எழுகிறதடி! "பள்ளி/படிப்பு/வீட்டுப்பாடம்/விளையாட்டு/பொழுதுபோக்கு/ஓய்வு" என; என்னைவிடவும், நீ அதிகம் பிசியாக இருப்பது நிச்சயமாய் புரிகிறது மகளே! இருப்பினும், அந்த 1 நிமிடம்...

     எனக்கு மட்டுமல்ல! ஊரிலிருக்கும் உன் "அப்பத்தாவும்/அப்பப்பாவும்" அழைக்கும் போது கூட, உனக்கு அந்த 1 நிமிடம் கிடைக்காதது கவலையே! நாளை நீ வளர்ந்த பின்பு, பேச ஆசைப்படும் போது; எங்களில் எவரெவர் உயிரோடிருப்போம் என்பதை எவர் அறிவர்?

    சரி...! 8 வயது மகள், இந்தப் பதிவைப்  படிப்பாளா? இல்லை, நிச்சயமாக படிக்கமாட்டாள், வாய்ப்பில்லை! படித்தாலும், புரியுமா?... புரியாது! பின்னெதற்கு, இதை எழுதவேண்டும்?! அவள் நாளை வளர்ந்து ஆளான பின், நிச்சயம் படிப்பாள்! சரி, அப்போது படிப்பதால்; எவருக்கென்ன பயன்?...

  இருக்கிறது! மிகப்பெரிய பயனிருக்கிறது! அவளின், மகளுக்கு/மகனுக்கு இதை அவள் கற்பிப்பாள்! அவளின் மகள்/மகனின், அப்பனுக்கு இந்த வாய்ப்பும்/வரமும் கிடைக்கும்! அதுவரை உயிரோடிருப்பின் "அம்மப்பனாய்" எனக்கும் அந்த வாய்ப்பும்/வரமும் கிடைக்கும்!

 வாழ்க்கை இவ்விதமே! "நாளையும்/நாளைய தலைமுறையும் நலமடையும்" என்னும் நம்பிக்கையில் தான்; பலரின் வாழ்வும் நகர்ந்து கொண்டிருக்கிறது! "தேவர் மகன்" படத்தில் சொல்லப்படுவது போல் "இந்த விதை நான் போட்டது!" என்ற நிறைவு இது! ஆம்...

வாழ்க்கை இவ்விதமே...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக