ஞாயிறு, மார்ச் 30, 2014

விஜயகாந்த் எனும் அரசியல்வாதி...



        சமீபத்தில் முகநூல்-நட்பு ஒருவர் விஜயகாந்த்தைப் பற்றி என் "மானசீக குரு"திரு. பாலகுமாரன் அவர்கள் சொன்னதாய் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்! அது எத்தனை உண்மையான தகவல் என்பது எனக்கு தெரியாது! எனினும், அந்த புகைப்படத்தை வெளியிட்டு நானும் ஒரு பதிவிட்டிருந்தேன்; அதை இங்கே துணுக்குகள் பகுதியிலும் வெளியிட்டு இருக்கிறேன். வழக்கமான, திரு. பாலகுமாரனின், எழுத்தாதிக்கம் அதிலும் இருந்து. நான் முன்பே "என்ன விதமான அரசியல் இது???" என்ற தலையங்கத்தில் விஜயகாந்த் பற்றி பலரும் "தவறாய்"விமர்சிப்பவற்றை சுட்டி காட்டியிருக்கிறேன். அங்கே, விஜயகாந்தின் செயலை கண்டித்ததோடு - அந்த நிகழ்வு சார்ந்த என் பார்வையை பதிந்திருந்தேன். நான் வெளிப்படையாய் சொன்னதில்லை எனினும், விஜயகாந்த் மீது எப்போதும் ஒரு சிறு-அபிமானம் உண்டு. என்னுடைய பதிவை பார்த்துவிட்டு என்னுடைய நட்புகள் இருவர் - விஜயகாந்தின் செய்கைகள் பற்றி என்னுடன் முகநூலில் விவாதித்தனர்.

          என்னுடைய பதிவையும், எங்கள் விவாதங்களையும் இந்த இணைப்பில் காணலாம்!  ஒரு நண்பர் அவர் குடித்துவிட்டு வருகிறார் என்று கூறினார்! நான் "அவரு, குடிச்சுட்டு வர்றாருங்கறதே ஒரு "அரசியல் குற்றச்சாட்டு"! உனக்கும் எனக்கும் உண்மை தெரிய வாய்ப்பில்லைன்னு"  சொன்னேன். அப்படியே, ஒருமுறை நடந்திருந்தாலும் - எப்போதும் அப்படி வரும் அளவுக்கு மோசமான ஆளா எனக்கு தெரியல! கண்ணு-செவப்பா இருக்குங்கறதுக்காக ஒருத்தர குடிகாரன்னு சொல்ட்றது நியாயமில்லை! என்றேன். அதுபோன்றே, அவர் தன்  மனைவி/மச்சான் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதான குற்றச்சாட்டு! நான் "பலரும்; தன் பிள்ளைகள்? மருமகன்கள்? மருமகன்களின் பிள்ளைகள்?..." என்று முக்கியத்துவம் கொடுப்பதை சுட்டிக்காட்டினேன்.  மேலும், "என்னால, உனக்கு ஏதாவது ஒரு வேலை/பதவி வாங்கித்தர முடியும்னா நான் கண்டிப்பா செய்வேன்! அப்படித்தான் நீயும்..." நமக்கு நட்பு அடிப்படைன்னா?! அவர்களுக்கு உறவுகள் அடிப்படை... என்றேன்!

          இன்னுமொரு நட்பு, தலைவர் என்பவர் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார்! உண்மை தான்; அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! ஆனால், விமர்சனம் என்பது "தனி நபர்" சார்ந்தோ; பொய்யாகவோ இருக்கக்கூடாது!! அப்படிப்பட்ட விமர்சனங்களைப் பொருத்துக்கொள்ளும் தலைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் - எல்லா வரலாற்றையும் சேர்த்தே! எனவே, திரு. விஜயகாந்த் என்னவோ "ஒற்றை ஆள்" என்பதாய் பிரதிபலிக்கவேண்டாம் என்பதே என் கருத்து! அதே போல், தருமபுரி சம்பவம் எனக்கும் சிறிது அதிர்ச்சி தான்! ஆனால், அங்கே 2 விசயங்கள் உள்ளன: 1. (எனக்கு தெரிந்து)அந்த வேட்பாளர் அந்த நிகழ்ச்சியை பெரிது-படுத்தி பேசவில்லை: 2. பின் ஏன் இந்த ஊடகங்கள் அதை அத்தனை பெரிதுபடுத்தின?! - இது ஒரு அரசியல்! விஜயகாந்த் போன்ற ஒருவர் எந்த முன்னனுபவும், எந்த அடிப்படையும் இல்லாது ஒரு புதுக்கட்சியை ஆரம்பித்து நடத்தும்போது "தருமபுரி சம்பவம்" போன்று நடப்பவை தவிர்க்க முடியாதவை!

      ஆனால், அது ஆரம்ப காலம்; அவரிடம் படிப்படையான மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன!  இங்கே இருக்கும் 2 "பாரம்பரியமான"கட்சிகள்  - இதை விட கேவலமான விசயங்கள் எல்லாம் செய்தவர்கள்/ செய்து வருபவர்கள்! ஒரு முன்னாள்-முதலமைச்சரை "பெண்மணி என்றும் "பாராமல் இத்தனை ஜோடி செருப்புகள்"வைத்திருந்தார் என்பதை "மீண்டும், மீண்டும்"வீடியோவாய் காண்பித்தது எத்தனை "தரம்-தாழ்ந்த விமர்சனம்"?! நான் பலரிடமும், இப்படித்தான் விளக்கம் கொடுப்பேன்: என்மகளுக்கு 8-மாத வயதிருந்தபோது (நடக்க கூட தெரியாத அவளுக்கு) 18-ஜோடிக்கும் மேல் செருப்புகள் இருந்தன! என்னைப்போன்ற சாதாரணமான ஒருவனே அத்தனை ஜோடி-செருப்புகள் வாங்கும்போது; முதலமைச்சராய் இருந்த பெண்மணியிடம் இருந்ததில் என்ன ஆச்சர்யம்?! அதே போல் அந்த பெண்மணி மீண்டும் முதலமைச்சராய் வந்தபோது, பதிலுக்கு அந்த முன்னாள்-முதல்வரை நள்ளிரவில் கைது-செய்த அநாகரிகம்!

         அந்த அநாகரிக செயலையும்; "கொல்றாங்க! கொல்றாங்க!!" என்று டப்பிங் கொடுத்து நடந்த நாடகம் அதை-விட-அநாகரிகம்! இவையெல்லாம், பொதுவாழ்வில் இருக்கும் அந்த பாரம்பரிய-தலைவர்களின் பொறுமையின்மையை காட்டவில்லையா?! விஜயகாந்த் மிகவும் நல்லவர் என்பது என் வாதம் அல்ல; நான் இங்கே அவருக்காய் பிரச்சாரமும் செய்யவில்லை! நேற்று முகநூலில் "விஜயகாந்தின் காமெடி கலாட்டா! பாகம்-2" என்ற காணொளியை பார்க்க நேர்ந்தது; இந்த தலையங்கத்திற்காய் எனக்கேதும் உருப்படியான தகவல் கிடைக்கும் என்று பார்த்தேன். ஆனால், அந்த அசிங்கத்தை என்னால் பாதி கூட பார்க்கமுடியவில்லை! அதில், விஜயகாந்தின் செய்கைகளை மட்டும் காண்பித்து; அதற்கு அவரை சென்ற தேர்தலில் எதிர்த்த அந்த நகைச்சுவை-நடிகரின் "திரைப்பட டையலாக்கை" வைத்துள்ளனர்! இதில் என்ன காமெடி இருக்கிறது? உண்மையாய் அவர் என்ன பேசினார் என்பதை காண்பிப்பது தானே நியாயம்?!

        இன்னொரு காட்சியில், திரு. வைகோ அவர்களின் பக்கத்தில் அமர்ந்து விஜயகாந்த் ஏதோ அவரின் கட்சிக்காரரிடம் பேசும் செய்கையை மட்டும் காண்பித்து மீண்டும் அந்த நகைச்சுவை நடிகரின் டையலாக்கை தவறான விதத்தில் சித்தரித்துள்ளனர். திரு. வைகோ அவர்களின் முகபாவனையில்; அவர் விஜயகாந்த் பேசியதை வெகுவாய் இரசிப்பது அப்பட்டமாய் தெரிகிறது! பின், ஏன் அம்மாதிரி தவறாய் சித்தரிக்க வேண்டும்?! என்ன பேசினார் என்பதை அப்படியே காண்பிப்பது தானே நியாயம்?! பெரும்பான்மையில், இதுபோன்ற தவறான விமர்சனங்கள் தான் விஜயகாந்த் பற்றி இருக்கிறது என்பதே என் எண்ணம்! அதைத்தான், மேற்கூறிய திரு. பாலகுமாரன் அவர்களின் விளக்கமும் உணர்த்துகிறது! இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நன்கு படித்தவர்கள் தான் இப்படிப்பட்ட தவறான-விமர்சனங்களை உருவாக்குகின்றனர்! அதை, பகிர்பவர்களும் நன்கு படித்தவர்களே!! இதைத்தான் என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை!!

           திரு. பாலகுமாரன் அவர்கள் சொல்லி இருப்பது போல், விஜயகாந்தின் கோபத்தில் ஒரு உண்மை இருக்கிறது. தவறென்றால், என் கட்சிக்காரர் செய்தாலும், உடனே கண்டிப்பேன் என்ற நியதி இருக்கிறது! ஓட்டுக்காய் எதையும் பொறுத்துக்கொள்ளும் "மற்ற தலைவர்களின்" நாடகத்தன்மையும்/ நடிப்பும் அவரிடம் இல்லை! அதனால் தான், அவரின் செயல்களில் உண்மையான/ நியாயமான கோபம் நிதர்சனமாய் தெரிகிறது!! இவர்களைப் போன்றோர்களை "நாம் தலை மீது வைத்து கொண்டாடவில்லை எனினும்; தவறுதலாய்-தலையில் கொட்டாமலாவது" இருக்கலாமே?!" கூட்டணியில் இருந்துகொண்டே, நியாயமான எதிர்க்கட்சி தலைவராய்; அதிலும், அந்த வீரப்பென்மணியை எதிர்த்து செயல்படும் அவரின் பயமின்மையை நாம் கண்டுகொள்ள தவறக்கூடாது. மீண்டும் சொல்கிறேன்... இது விஜயகாந்துக்கு ஆதரவானதும் அல்ல; நான் இங்கே ஓட்டும் சேகரிக்கவில்லை! ஆனால், நான் ஓட்டளித்தால்...

அது "விஜயகாந்திற்கே" என்பதில் என்ற மாற்றமும் இல்லை!!!

பின்குறிப்பு: எடுத்துக்கொண்ட தலைப்பின் காரணமாய்/அதை தெளிவாய் விளக்கவேண்டிய கட்டாயத்தால்; வெகுநாட்களுக்கு பிறகு நீளமான-தலையங்கம் எழுத நேர்ந்துவிட்டது! முடிந்த அளவில்; அதை மென்மேலும் படித்துபார்த்து சுருக்கி இருக்கிறேன். எனினும், நீளமாய் எழுத நேர்ந்ததற்கு பொறுத்தருளவும்!!

"சபர்ணா" எனும் அழகி...



       முந்தைய மனதங்கத்தில் அமுதவாணன் பற்றி எழுதியிருந்ததை பலரும் படித்திருக்கக்கூடும்! அப்படி "ஜலபுல ஜங்"நிகழ்ச்சிகளை பார்க்கும்போது தான் "சபர்ணா எனும் நடிகையை" பார்க்க நேர்ந்தது. ஆரம்பத்தில் பெரிதாய் அவர் மேல் கவனம் ஏதும் இல்லை எனினும், நாட்கள் செல்ல செல்ல அவர் மிகவும் வசீகரமாய் தெரிய ஆரம்பித்தார். ஆம், எந்த வகையான உடை எனினும்; அவருக்கு கன-கச்சிதமாய் பொருந்துகிறது. தாவணியில் ஆரம்பித்து - லெக்கின்ஸ் வரை எந்த உடையானாலும், அவருக்கு மிகப்பொருத்தமாய் தோன்றுகிறது. உண்மையில் அவர் ஒரு அழகி...அதனால் தான் "சபர்ணா எனும் அழகி" என்று தலைப்பிட்டேன். அதேபோன்று, எந்த பாத்திரத்தில் நடித்தாலும்; அதிக ஆர்ப்பாட்டமில்லாத அளவனான நடிப்பு! எந்தவிதமான அலட்டலும் இல்லை; அவரின் சிரிப்பும் அழகு! இவர் போன்றோரின் திறமைகள் பல்கிபெருகி பலரையும் சென்று சேரவேண்டும் என்று தோன்றுகிறது. ஏன் இவரைப் போன்றோர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை?! என்று யோசித்தேன். 

    அமுதவாணன் போன்றே; சபர்ணாவும் எந்த திரைப்படத்திலும் நடித்திருப்பதாய் எனக்கு தெரியவில்லை! அழகும், நடிப்புத்திறமையும் இல்லாமல் "வெறும் கவர்ச்சி"என்ற ஒன்றிற்காய் பல நடிகைகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள்; சபர்ணா போன்ற நடிகைகளுக்கு ஏன் கிடைப்பதில்லை?! என்ற ஆதங்கம் எழுந்தது. எவரேனும் சபர்ணா, அமுதவாணன் போன்றவர்களுக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கொடுக்கவேண்டும் என்று தோன்றியது. எனக்கு, திரைப்படத்துறையில் சில ஆண்டுகள் கழித்து எப்படியேனும் நுழைந்து ஏதேனும் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது எந்த அளவுக்கு சாத்தியமாகப்போகிறது என்று தெரியவில்லை! எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பின்; இவர்கள் போன்றவர்களை கண்டிப்பாய் தேர்ந்தெடுத்து வாய்ப்புகள் கொடுப்பேன். ஆனால், அதற்கு முன் இவர்கள் வெள்ளித்திரையில் நுழைந்து சாதிக்கவேண்டும். தமிழ் பேசும் நடிகைகள் கிடைப்பதில்லை என்று சில இயக்குனர்கள் சொல்வது வியப்பாய்?! இருக்கிறது. கண்டிப்பாய்....

"சபர்ணா" போன்ற அழகிகள் வெள்ளித்திரையில் பிராகாசிக்கவேண்டும்!!!

"அமுதவாணன்" எனும் கலைஞன்...



         "அது-இது-எது" நிகழ்ச்சியின் "சிரிச்சா, போச்சு!" பிரிவை பார்ப்பவர்களுக்கு அமுதவாணன் எனும் கலைஞனை தெரிந்திருக்கும். எனக்கு மிகவும் பிடித்த சின்னத்திரை கலைஞர்களில் ஒருவர்; தொடர்ந்து "சிரிச்சா, போச்சு!" பிரிவில் வரும் நகைச்சுவைகளை பார்த்ததால் மட்டும் அவரை வெகுவாய் இரசிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரின் ஒவ்வொரு ஒப்பனையும், அவரின் மாறுபட்ட நடிப்புத்திறனும், அவரின் "டைமிங்"சென்சும் என்னை வெகுவாய் கவர ஆரம்பித்துவிட்டது. ஒரு நாள் அவர் வேறேதேனும் நிகழ்ச்சிகள் செய்கிறாரா?! என்று தேட ஆரம்பித்தபோது "காமெடியில் கலக்குவது எப்படி?" என்ற நிகழ்ச்சி கண்ணில் பட்டது. பின்னர், அந்த நிகழ்ச்சிகள் பலதையும் அவருக்காகவே பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின்னர், அவரின் "ஜலபுல ஜங்"டீம் செய்யும் நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன். இப்படியாய், அவரின் நிகழ்ச்சிகள் பலதையும் பார்த்துக்கொண்டிருந்த போது அவரின் தொகுப்புகள் என்று தனியே "யூ-டியூபில்" இருப்பதை பார்த்தேன். 

       அவரின் அந்த தொகுப்புகளை பார்க்க ஆரம்பித்தபோது தான், அவர் நகைச்சுவை மட்டுமல்ல; நடனம் மற்றும் பல மாறுபட்ட நடிப்பு பரிமாணங்களிலும் அருமையாய் செய்திருப்பது தெரியவந்தது! அதன் பின்னர் தான், அவர் பல ஆண்டுகள் சின்னத்திரையில் இருந்துகொண்டிருப்பது தெரிய வந்தது! எனக்கு தெரிந்து அவர் எந்த திரைப்படத்திலும் நடித்திருப்பதாய் தெரியவில்லை; அதை உணர்ந்ததும், ஏன் அவருக்கு இன்னும் அப்படி வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது! ஒருவேளை, சிவகார்த்திகேயன் போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காததால் பெரிதாய் கவனிக்கப் படவில்லையா?! என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இணையதளங்களில் அவரின் தொகுப்புகளை பார்க்கும் போது பெரிதாய் பிரபலம் அடைந்திருப்பதாய்-தான் தோன்றுகிறது! என்னவோ, அந்த கலைஞனுக்கு வெள்ளித்திரையிலும் பல-வாய்ப்புகள் கிடைத்து; அவரின் திறமைகள் இன்னும் மென்மேலும் வளர்ந்து பலரையும் சென்று சேரவேண்டும் என்ற ஆசை வருகிறது. 

என்னுடைய மனமுவந்த வாழ்த்துக்கள்... அமுதவாணன்!!!    

"பிலிப்ஸ்" ஷேவிங் செட்...



       சென்ற வாரம் என்னுடைய நீண்ட-நாள் கனவான; மின்னியங்கி "சவரம் செய்யும் கருவி"யை வாங்கினேன். மிக புதுமையானது இல்லையெனினும், நல்ல தரமான ஒன்று! இத்தனை காலம் அவ்வளவு தொகையை, எனக்காய் செலவு செய்வதில் ஒருதயக்கம் இருந்தது. என் குடும்பத்திற்கு தேவையான பணத்தை சேர்த்திருப்பதால், இப்போது எனக்காகவும் செலவு செய்யத் துவங்கி இருக்கிறேன். 

          இது என்னுடைய முதல் கருவி என்பதால், இணையத்தில் பல காணொளிகளைப் பார்த்து பின்னர் தான், முதலில் உபயோகித்தேன். அப்படியிருந்தும், என் விருப்பப்படி அல்லாமல் தாடியை மிகவும் குறுகியதாய் நறுக்கி விட்டேன். அடுத்தமுறை, சரியான முறையில் உபயோகிப்பேன் என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது! 

          நான் எதிர்பார்த்ததை விட அக்கருவியை உபயோகிப்பது மிகவும்-பாதுக்காப்பாய் உணர்தேன்!!!

விஜயகாந்த் பற்றி திரு. பாலகுமாரன்...




என் மரியாதைக்குரிய; என் தியான பயிற்சியின்-குரு, திரு. பாலகுமாரன் அவர்கள் கூறியதாய் இதை பார்க்க நேர்ந்தது!

அருமையான விளக்கம் - தனக்கே உரித்தான பாணியில்!! 

மேகம் கொட்டட்டும்! மின்னல் வெட்டட்டும்!!



விழியப்பன் நினைப்பது (27032014):

"மேகம் கொட்டட்டும்; ஆட்டம் உண்டு!...மின்னல் வெட்டட்டும்; பாட்டும் உண்டு!!" என்ற பாடல் எப்போதும்-கவர்ந்தவை "என்ற பெயரிட்ட என் கணினி ஃபோல்டரில்" இருக்கும் "முன்னூற்று சொச்சம்"பாடல்களில் ஒன்று!  எந்த மன-நிலையில் இருப்பினும், அந்த பாட்டை கேட்கும்போது என்னையறியாமல் நான் குதூகலம் ஆகிவிடுவேன்.

சென்றவாரம் ஓர்மாலை - இங்கே அபுதாபியில் என் வீட்டில் அந்த பாடல் ஒலித்தது! உடனே, குதூகலமாகி மிகுந்த சத்தத்துடன் பாடிக்கொண்டே/ஆடவும் செய்தேன்!! எப்போதும் போல் மீண்டும், மீண்டும் அந்த பாடலை கேட்டேன். "ஹோம்-தியேட்டரின்"சத்தம் வெளியில் எவருக்கும் கேட்டிருக்குமா?! பற்றி என்ற எந்த கவலையும் இல்லை!!

நேற்று மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், அந்த பாடல் ஒலிக்கும்போது; இங்கே  அபுதாபியில் "மேகம்"கொட்டியதுடன் அல்லாது "மின்னல்"வெட்டவும் செய்தது!!! 

ஞாயிறு, மார்ச் 23, 2014

பென்சில்/இரப்பர் தொலைப்பது(/திருடுவது)...




       பெரும்பாலான குழந்தைகள் "பென்சிலையும்/இரப்பைரையும்" தொலைத்துவிட்டு அடிக்கடி வீட்டில் திட்டுவாங்குவது அல்லது அடிவாங்குவதை பலரும் பார்த்திருக்கக்கூடும். என்மகள் அப்படி அடிக்கடி தொலைத்துவிட்டு; என்னவளிடம் திட்டு வாங்குவாள்! "ஒருநாளைக்காவது; கொண்டு போறப் பொருளை"சரியா எடுத்துக்கிட்டு வர்றியா?! என்று என்னவள் அடிக்கடி என்மகளை கண்டிப்பாள்! "உங்க அப்பாவுக்கு வசதி இருக்குதுன்னு உனக்கு தேவைக்கு அதிகமா வாங்கிக் கொடுக்கறார், இல்ல?! நீ அப்படித்தான் பண்ணுவ!" என்று எனக்கும் கொஞ்சம் கிடைக்கும். "அவ கேக்கறதெல்லாம் வாங்கிக் கொடுக்காதீங்க; அவளுக்கு பொறுப்பே வராது!" என்று என்னவள் சொல்வாள். நான் அதைப்பற்றி எல்லாம் பெரிதாய் கவலைப்பட்டதில்லை! அதற்கு என்மகள் மேலிருக்கும் "பாசம்; மட்டுமே!" காரணம் அல்ல!! இதற்கு பின்னால் இருக்கும் நானறிந்த உண்மையே அதற்கு முக்கிய காரணம். அதை பலருக்கும் பயன்பட(வே) இங்கே பகிர்ந்துள்ளேன்.

    ஒரு குழந்தை பென்சிலையோ/இரப்பரையோ தொலைத்துவிட்டு வந்தால்; அதற்கு அந்த குழந்தையின் பொறுப்பின்மை(மட்டுமே) காரணமல்ல! அதை, அதே வயதில் இருக்கும் ஒரு குழந்தை "சாமர்த்தியமாய்??!!" திருடுகிறது என்பதையும் நாம் உணரவேண்டும்!! வேண்டுமென்றே எந்த குழந்தையும் தொலைத்துவிட்டு வருவதில்லை! அதை ஒரு குழந்தை திருடுவதால் தான் அப்படியொரு நிகழ்வு நடக்கிறது. அப்படி "திருடும் ஒரு குழந்தையாய்"தான் என் இளம்வயதில் இருந்திருக்கிறேன். நடிகர் வடிவேல் சொல்வது போல் "என்னுடைய திருட்டு; ஒரு நூதன-திருட்டாய்!" இருக்கும். அதாவது, அந்த 4/5 வயதில் ஒரு "கிரிமினல்"எண்ணத்தோடு செயல்பட்டிருக்கிறேன். என்னுடன் பயிலும் சக-குழந்தையின் பென்சில்/இரப்பர் எனக்கு பிடித்துவிட்டது என்றால், அந்த குழந்தையிடம் "எங்க வாங்கின?!" என்பது போன்ற தகவலை கேட்பேன். அதற்கு அடுத்த நாள் "எங்கப்பாவும்; எனக்கு அதே மாதிரி பென்சில்/இரப்பர் வாங்கித்தரன்னு சொல்லி இருக்கார்" என்பேன்.

          அடுத்த நாள் தான், அந்த பென்சில்/இரப்பரை திருடுவேன்! அதற்கடுத்த நாள், ரொம்ப தைரியமாக அதே பென்சில்/இரப்பரை வகுப்புக்கு எடுத்து செல்வதோடு மட்டுமல்லாமல், அதே குழந்தையிடம் காட்டி "பாத்தியா?! எங்கப்பா அதே மாதிரி வாங்கி கொடுத்தார்!" என்பேன். முன்பே, அந்த குழந்தையிடம் இப்படியொன்று நடக்கப்போகிறது என்று சொல்லி இருந்ததால், அந்த குழந்தை என் மேல் எந்த சந்தேகமும் இல்லாமல் "என் பென்சில்/இரப்பர் தொலைஞ்சிடுச்சு!" என்று பரிதாபமாய் சொல்லும். நானும், அப்படியா?! என்று கேட்பேன். இப்படி நான் பென்சில்களையும்/இரப்பர்களையும் திருடி இருக்கிறேன். என்னப்பன் நான்(/நாங்கள்) கேட்டு எதையும் இல்லையென்று சொன்னதில்லை; உண்மையில், நாங்கள் கேட்காமலேயே அவர் வாங்கிக் கொடுப்பதே வழக்கம். அது என்னவென்று தெரியவில்லை! அந்த வயதில் அப்படியொரு சந்தோசம்; அந்த திருட்டு-பழக்கத்தில்!! நான் 3-ஆவது படிக்கும் வரை அப்படி செய்திருக்கிறேன்.

           அதற்கு பின் "எனக்கு தமிழ் வரவில்லை!" என்ற காரணத்திற்காய் என்னை, என்னப்பன் எங்கள் கிராமத்து பள்ளியில் சேர்த்துவிட்டார். அதன் பின், எந்த குழந்தையிடமும் எனக்கு பிடித்தவண்ணம் பென்சிலோ/இரப்பரோ பார்த்ததில்லை! என்னப்பனும்/எங்கள் குடும்பமும் பல பொருட்களை எங்கள் கிராமத்திற்கு அறிமுகம் செய்ததை சமீபத்தில் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனால், என்னைவிட சிறப்பானதாய் எவரிடமும் நான் பார்த்ததில்லை; எல்லா பென்சில்களையும்/இரப்பர்களையும் நான் திருடுவதில்லை! எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அப்படி "நூதனமாய்" திருடுவேன்; அப்படியொரு நியாயமான-கொள்கை??!! எனக்கு. என்னவளிடம் இதை சொல்லி "என்னை மாதிரி ஏதாவது ஒரு குழந்தை திருடி இருக்கும்! ரொம்ப திட்டாத அவளை!" என்பேன். என்மகளுக்கு எண்ணற்ற பென்சில்கள்/இரப்பர்கள் வாங்கி கொடுத்திருக்கிறேன்; அதுவும், எல்லாம் இங்கே வெளிநாடுகளில் வாங்கிய/தரமான பொருட்கள்!

        அதனால், என்னைப்போல் ஏதாவது ஒரு குழந்தை/பல குழந்தைகளை  கவர்ந்திருக்கக் கூடும்! என்மகள் போன்ற குழந்தைகளை கடிந்து கொள்வதில் எந்த நியாயமும் இல்லை! எப்படி கவனமாய் இருந்தாலும், அது களவாடப்படும்! என்மகளிடம் ஓர் உயரிய குணம் உண்டு; அவளுக்கு எவர் எடுத்தது என்பது தெரிந்திருந்தும்; "அவள் என் ஃபிரண்டுப்பா!" என்பாள். அதை கேட்கும்போதெல்லாம் என்னிடம் களவு-கொடுத்தவர்களும்; நான் அவர்களின் ஃபிரண்ட் என்பதால்தான் காட்டிக்கொடுக்காமல் இருந்திருப்பரோ?! என்று என்னுள் எழுவதுண்டு. நான் செய்த தவறுக்காய், என்மகள் இன்று பதிலுக்கு தொலைக்கிறாள் என்று தோன்றும்!! அதுவும், பென்சில்/இரப்பர் மட்டுமில்லாமல் "வாட்டர் பாட்டில், ஸ்கேல்,... என்று" பலதும் தொலைப்பாள். இது என்மகளின் தவறு என்பதைக் காட்டிலும், நான் செய்ததற்கான வினை என்றே நான் எண்ணுவேன். எனவே, உங்களின் குழந்தை ஒரு பொருளை தொலைத்துவிட்டால், அதை கோபத்தோடு அணுகாமல்; அருள்கூர்ந்து, அது உங்கள்...

குழந்தையின் தவறல்ல! மாறாய் என்போன்ற குழந்தைகளின் தவறென்று உணருங்கள்!!!

பின்குறிப்பு: குழந்தைப்பருவம் தாண்டியபின்; 12-ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு நண்பனின் "பேனாவை"அதே போல் சொல்லி திருடியிருக்கிறேன். இப்போதும் கூட "கான்ஃபரன்ஸ்" செல்லும் போது; கம்பெனிகள் வைத்திருக்கும் "அன்பளிப்பு" பொருட்களை எடுப்பதில் "அப்படியொரு" ஆனந்தம்! இது, திருட்டு இல்லையெனினும் அங்கே சென்று; தேவையில்லாமல் "சிரிப்பென்ற பெயரில் ஒரு வழி-வழிந்துவிட்டு" எடுப்பது "திருட்டு போலவே!" தோன்றும். கண்டிப்பாய், இதை பலரும் செய்திருப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமாய் தெரியும்!! நான் என்னுடைய உயரதிகாரிகள் அப்படி செய்வதைக்கூட பார்த்திருக்கிறேன்.  

ஃபர்ஸ்ட் அடிச்ச "பியர்"...




      கண்டிப்பா எல்லாருக்கும் மொத, மொத "தண்ணி அடிச்சது" நியாபகம் இருக்கும்! எனக்கு ரொம்ப-தெளிவா நியாபகத்துல இருக்குது!! 1991-ல B. Sc., செகண்ட்-இயர் படிக்கும்போது நான் மொத "பியர" அடிச்சேன். நான் தண்ணி அடிக்க ஆரம்பிச்ச கதை ரொம்ப வித்தியாசமானது! இதுமாதிரி, யாருக்காவது நடந்திருமாங்கறது சந்தேகம் தான்... ஆனா, எனக்கு அப்படித்தான் நடந்தது.

      நானும், என் ஃபிரண்டும் "கார்ட்ஸ்"ஆடிக்கிட்டு இருந்தோம்! கார்ட்ஸ்-ஆடும்போது "பெட்" இல்லாம ஆடறது நெறைய பேருக்கு புடிக்காது! எனக்கு கண்டிப்பா புடிக்காது; அதனால, "அது-இது"ன்னு யோசிச்சப்போ என் ஃபிரண்ட் "எது"ன்னு சொன்னான்; அவன் சொன்ன பெட் "பியர்"!  அதாவது, தோக்கறவங்க; ஜெயிக்கரவங்களுக்கு "பியர்"வாங்கிக் கொடுக்கனம்னு முடிவானது. எனக்கு,  அந்த பழக்கம் இல்லைன்னாலும்; சரின்னு ஒத்துக்கிட்டேன். அப்புறம், ஒரு வழியா ஆடி கேம்-முடியும்போது பார்த்தா "நான் தோத்துட்டேன்!". நான், என் ஃபிரண்டுக்கு பியர் வாங்கி கொடுக்கணும்.

       சரின்னு "மெட்ராஸ்-டிரிப்லிகேன்ல" அப்போ இருந்த ஒரு "ஒயின் ஷாப்"புக்கு போனோம்! கடைக்குள்ள போனதும் "ஒரு திருட்டு யோசனை?!" வந்துச்சு... சரி, அவனுக்கு மட்டும் ஏன் வாங்கி கொடுக்கணும்?! நாமளும் ஒன்னு வாங்கி அடிச்சா என்னனு தோனுச்சு! சரின்னு, மச்சி "ரெண்டா வாங்கலாம்டா!"; நானும் அடிக்கப்போறேன்னு சொன்னேன். அவன், சரி மச்சி! ஆனா, முடியலைன்னா ஏதும் அசிங்க பண்ணிடாதடா! என்கிட்ட கொடுத்துடுன்னான்; சரி, மச்சி! என்னால முடியலன்னா ஒனக்கு கொடுத்துடறேன்னு சொல்லி 2-பியர் வாங்கிக்கிட்டு உள்ளே போனோம்!

         நான், அன்னைய தேதிக்கு சுமார் 1-வருஷத்துக்கு மேல காலைல எழுந்ததும் 1 அல்லது 1.5 லிட்டர் தண்ணி குடிக்கற பழக்கத்த வச்சிருந்தேன்! இன்னைக்கு வரைக்கும் காலைல எழுந்ததும், மொதல்ல செய்யற வேலை அது தான்! அதனாலேயே என்னவோ, அந்த பியரை (வெறும் 650 மில்லி லிட்டர் தானே??!!​) ரெண்டு மொடக்குல குடிச்சுட்டேன். நல்ல எதமான-கூலிங்ல இருந்ததாலையோ என்னவோ?! எனக்கு ஒண்ணுமே தடங்களா இல்லை! அவன் சரியான காண்டாயிட்டான்... அவன் இன்னும் அரை-பியர் கூட குடிச்சி முடிக்கல! அவன் மெட்ராசுக்கே உரிய அந்த வார்த்தைய சொல்லி..."நெஜமா இதுக்கு முன்னாடி" தண்ணி அடிச்சதுல்ல?! அப்படின்னு கொஞ்சம் கூட நம்பாம கேக்கறான்! இல்லடா... ஒனக்கு தான் தெரியுமே! நான் எப்படா, குடிச்சிருக்கேன்?!-ன்னு கேட்டேன்! அவனுக்கு, இன்னும் ஒரு-அரை பியராவது கிடைக்கும்னு நெனைச்சு ஏமாந்த காண்டு வேற! இல்லடா, நான் தான் காலைல எழுந்ததும் தண்ணி குடிப்பன் இல்ல?! அதனால தான் குடிச்சுட்டன் போல?!ன்னேன்! அவனுக்கு அது "பிரஸ்டிஜ்"இஷ்ஷுவா வேற போயிடுச்சு! அவனைவிட சீக்கிரமா வேற குடிச்சுட்டன் இல்ல?! அப்பறம், ஒரு வழியா ஹாஸ்டலுக்கு போயி சேர்ந்துட்டோம். ஆனாலும், அவனால, தாங்க முடியல; எல்லார்க்கிட்டயும் மீண்டும் அந்த மெட்ராஸ்-ஸ்பெஷல் வார்த்தைய சொல்லி நடந்ததை சொல்லி அவன் மனச தேத்திக்கிட்டான்!

            நான் மொதல்ல அடிச்ச அந்த பியர் "ப்ளாக் & நைட்" வேற! அது, ஸ்ட்ராங்கான பியர் வேறயாம்! அவனுக்கு அந்த காண்டு வேற! ஆனா, அதுக்கப்பறம் நம்ம ஃபேவரைட் "கோல்டன் ஈகிள்"ங்கறது வேற விசயம்!

        அப்படி ஆரம்பிச்ச அந்த "கருமம் பிடிச்ச!!??" பழக்கத்தை இன்னைக்கு வரைக்கும் சுத்தமா-நிறுத்த முடியல! எவ்வளவோ கொறைஞ்சுடுச்சுன்னாலும், இன்னமும் சுத்தமா நிறுத்த முடியல!! கூடிய சீக்கிரம் நிறுத்திடுவேன்; நிறுத்திடனும்! "தம்மடிக்கற" பழக்கத்த நிறுத்தறது தான் ரொம்ப கஷ்ட்டம்னு எல்லாருக்கும் தெரியும்! அதையே, சுத்தமா நிறுத்தி 3.5 வருஷம் ஆவுது! இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை. என்னதான் 3 மாதம், 4 மாதம்-னு அடிக்காம இருந்தாலும், என்னைக்காவது ஒரு-நாளு திரும்ப ஏதாவது பார்ட்டி, அது-இதுன்னு ஏதாவது வந்துடுது! ஏம்-பொண்ணு கூட இல்லைங்கறது கூட காரணமா இருக்கலாம்! தம்மையே-அவளால நிறுத்தியாச்சு!! ஆனா, இத அவ இல்லாதப்பவே சுத்தமா நிறுத்திடம்னு "ட்ரை" பண்ணிக்கிட்டு இருக்கேன்; பார்ப்போம்...

என்ன இருந்தாலும்; அந்த ஃபர்ஸ்ட் பியர் மறக்கமுடியாத அனுபவம்!!!        

"குஞ்சு"க்கோழிகள்...

{இப்புதுக்கவிதைக்கு கரு-கொடுத்த; என்மகளின் செயலை 
ஓர் மனதங்கமாய் எழுதியிருக்கிறேன்!}

(சில)குஞ்சுகளும்!
கோழிகளை;
பாதுகாப்பதுண்டு!!!

என்னைப் பாதுகாத்த என்மகள்...



   சென்ற முறை இந்தியா சென்றிருந்தபோது என்மகள் செய்த விசயம் ஒன்று என்னை ஆச்சர்யபடுத்தியது! இதுபோல், பலரின் குழந்தைகளும் செய்திருக்கக்கூடும். ஆனால், என்மகள் அப்படி செய்ததை பார்த்ததும்; என்னுள் தோன்றியது "குஞ்சுகளும்; இங்கே கோழிகளை காக்கும்!" என்பதே! ஆம்; நம் குழந்தைகளும் நம்மை "குஞ்சுகளை; காக்கும் கோழிகள்"போல பாத்துகாக்கும், இது போன்ற செயல்கள் நடக்கும். நிகழ்வு இதுதான்: என்னுடைய உறவு ஒருவர், அவரின் வருத்தமான நிகழ்வு ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தார். எங்கள் ஊர்-பக்கம் இம்மாதிரி நிகழ்வுகளை கூறும்போது நம்மை கேள்வி கேட்பது போல் பலரும் கேட்பர்! அவர் அப்படித்தான் ஒரு கேள்வியாய் என்னிடம் "...என்ன தான் நடந்திருக்கட்டுமேப்பா! நீ என்னை ஒரு வார்த்தை கேட்கக்கூடாதா?!..." என்றார்! அவரின் பேச்சு ஆற்றாமையாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது! எங்கோ விளையாடிக்கொண்டிருந்த என்மகள் அவர் அப்படி என்னை-கேட்டதை கேட்டுவிட்டு ஓடோடி வந்தாள்.

         ஓடி வந்தவள், எங்கள் இருவருக்கும் இடையில் நின்று என்னை "கோழி அடைகாப்பது போல்" மறைத்துக்கொண்டு நின்றுகொண்டாள்! அவர் என்னை திட்டுவதாய் நினைத்துவிட்டாள் அவள்; அவளின் புரிதல் அவ்வாறு! முகத்தை கோபமாய் வைத்துக்கொண்டு "எங்கப்பா பாவம்! அவர என் திட்டறீங்க?!..." என்று கிட்டத்திட்ட அவரிடம் சண்டை போடுகிறாள். எனக்கு பெரிய-சிரிப்பு வருகிறது; அவரோ அப்படி ஆழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்! சிரித்தால், நன்றாக இருக்காது என்று நினைத்து என்மகளிடம் "இல்லடி! அப்பாவை திட்டடலடி!!..." என்று என்ன-சொல்லியும் என்மகள் கேட்கவில்லை! எனக்கு சிரிப்பு வரும் அதே வேலையில், அவளின் செய்கை எனக்கு ஆச்சர்யத்தையும் கொடுத்தது! அப்போதுதான், மேற்கூறியவண்ணம் என்மகள் போல் கோழிகளை பாதுக்காக்கும் பல "குஞ்சுக்"கோழிகளும் இங்கே உண்டு! என்று தோன்றியது. அதை "குஞ்சுக்" கோழிகள் என்று ஒரு புதுக்கவிதையாயும்  எழுதியிருக்கிறேன். இதுபோல் நம்...

குழந்தைகள்; நம்மை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருப்பர்!!!

பின்குறிப்பு: இன்றைய மன-நிலையில்/வயதில் என்மகள் இப்படி தவறாய் புரிந்துகொண்டு; மற்றவரிடம் வாதிடுவதை(வேண்டுமானால்) பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கே "பல குழந்தைகள் வளர்ந்து; பெரியவர்கள் ஆன பின்னும்" இப்படிப்பட்ட தவறான புரிதலோடு பிறரிடம் சண்டைகள் போடுவதுண்டு. எனவே என்மகள் வளர்ந்தபின், இப்படி நடந்துகொள்ளாமால் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற உண்மை(யும்) புரிந்தது!!!   

காதலியும்/மனைவியும்...






விழியப்பன் நினைப்பது (23032014):

காதலி (அல்லது) நிச்சயிக்கப்பட்ட பெண் - திருமணத்திற்கு முன் "தன்னுடன் பேசிக்கொண்டே; மற்ற வேலைகளையும் செய்யும்" ஆணிடம் "நீங்க பெரிய திறமைசாலி! எப்படி பல-வேலைகளையும்; ஒரே நேரத்தில் செய்கிறீர்கள்?!" என்று அதிசயித்து கேட்பாள்!

அதே பெண், திருமணமான பின் அதே-ஆணிடம்; "உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?! நான் சொல்றதை கொஞ்சமாவது காது-கொடுத்து கேக்கறீங்களா??!! ஏதாவது ஒரு வேலைய உருப்படியா செய்ங்க" என்று சொல்வாள்!!

- இவையிரண்டில் எது உண்மையான நிலைப்பாடு??!! 

ஆண்/பெண் நட்பு விழைதலும்/ஏற்றலும்...



விழியப்பன் நினைப்பது (22032014):

ஃபேஸ்புக் போன்ற இடங்களில் ஒரு பெண்; ஆணுக்கு நட்பு-ஏற்பு விழைதல் அனுப்ப விரும்பினால், தயங்குவதில்லை! அதை பெரும்பாலும், ஆண்கள் உடனே ஏற்றுவிடுவதுண்டு!! அப்படியே, ஏற்கவில்லை எனினும்...பெண்கள், அதை பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை!!!

ஆனால் ஒரு ஆண் அவ்விதம் செய்திட பலவித தயக்கங்கள் இருக்கும்! என்னதான் பெண்களின் பாதுகாப்பும்,  அதை சார்ந்த விசயங்களும் புரிந்தாலும்; அவர்கள் தவறாய் நினைப்பரோ என்ற தயக்கமும், விழைதலை ஏற்கவில்லை எனும்போது உருவாகும் படபடப்பும் - தவிர்க்க முடியாதவை!!!

{பெண்களைப் பற்றி உயர்வாய் குறிப்பிட "இது போன்ற"உண்மையான காரணங்கள் எவ்வளவோ உள்ளன!}

ஞாயிறு, மார்ச் 16, 2014

நாளைய தலைமுறை யுவதிகளும்; அவர்களின் காதல் புரிதலும்...



              09.03.2014 தேதியில் வெளியான "நீயா? நானா??" நிகழ்ச்சியை பலரும் பார்த்திருக்கக்கூடும்! கண்டிப்பாய், நான் வெகுவாய் இரசித்த விவாதங்களில் ஒன்று. நாளைய பெண்களாய் ஆகவிருக்கும் இந்த தலைமுறையைச் சார்ந்த யுவதிகள் இரண்டு பிரிவுகளாய் பேசினர்: 1. ஒரு பிரிவினர் - காதலே/காதலனே சகலமும் என்போர்; 2. இரண்டாவது பிரிவினர் - காதலும்/காதலனும் எனக்கு முக்கியம்; ஆனால், அது மட்டுமே எல்லாமும் இல்லை என்போர். முதல் பிரிவினர் - முழுக்க, முழுக்க "உணர்வின் விளிம்பில்" நின்று பேசினர். இரண்டாவது பிரிவினர் - முழுக்க, முழுக்க "நடைமுறை சார்ந்த (Practical Oriented)" அடிப்படையில் பேசினர். இரண்டு எல்லைகளும் தவறு என்றாலும், இரண்டு பிரிவினர் பேசிய விதம்; அவர்களின் சிந்தனையும்/பேச்சும் என்னை வெகுவாய் கவர்ந்தது. பெரும்பான்மையில், அவர்களின் காதல் பற்றிய புரிதல் மற்றும் அறிவு-முதிர்ச்சி என்னை திகைப்படைய செய்தது. அதைப் பாராட்டி என்னுடைய பார்வையில் ஒரு தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது.

        இங்கே காதலனை என்ன நடந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்; அவனுக்காய் எதையும் செய்யவேண்டும் என்ற கூற்று தவறு எனினும், இந்த தலைமுறை யுவதிகள் அவ்விதம் பேசியது திகைக்க வைத்தது. திருமணமான பின், அவர்களின் எண்ணம் இதே அடிப்படையில் இருக்குமா என்பது கேள்விக்குறியே! இவர்கள் உணர்வின் விளிம்பில் இருப்பவர்கள்; அப்படி இருப்பவர்களிடம் உண்மையையும்/நடைமுறையையும் சொல்லி புரிய வைப்பது சாத்தியமல்ல! ஆனால், இந்த தலைமுறை யினர் சிறு-விசயங்களுக்கெல்லாம் பெரிய-பிரச்சனைகளை செய்துகொண்டிருக்கும் - அதே காலகட்டத்தில்; நாளைய தலைமுறை இப்படி சிந்திப்பது - ஆரோக்கியமாய் தோன்றியது! ஆனால், அதில் ஓர் பயம் இருக்கிறது/அதனால், பெரிய பிரச்சனையும் நேரக்கூடும். அதை பின்னே விளக்கியுள்ளேன். அதற்கு முன், அந்த பெண்கள் பேசிய விதம்; அவர்கள் காதலை அணுகும் விதம் இன்றைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது "வெகுவான"பாராட்டுதலுக்கு உரியது. 

              அதேபோல், நடைமுறை-சார்ந்த அறிவோடு பேசிய யுவதிகளும்; சற்றும் இளைத்தவர்கள் அல்ல.  அவர்களிடம், ஒரு அடிப்படை புரிதல் இருந்தது; ஆம்! அவன் என் காதலன் தான்; அதனால், அவன் சொல்வதற்கெல்லாம் நான் இனங்கவேண்டியதில்லை என்ற கூற்று பிடித்திருந்தது. அதுவும் "வெகுவான பாராட்டுதலுக்கு" உரியது. ஆனால், கொஞ்சமும் உணர்வு இல்லாதது போல் அவர்கள் பேசியது மிகவும் கவலை அளித்தது; அது பெரும் சிக்கலை உண்டாக்கக் கூடியது! குறைந்தது, இன்னும் 2 தலைமுறைகளுக்காவது "உன் காசு உன்னுடையது; என் காசு என்னுடையது!" என்பது போன்ற மனப்பான்மையில் நம் போன்ற சமூகம் இருப்பது சாத்தியம் இல்லை; மேலும், அது பெரிய-பின் விளைவுகளை ஏற்படுத்தும்! அதே நேரம், என் காதலனை விடவும் - என் குடும்பம் முக்கியம் என்ற அவர்களின் நிலைப்பாடு அதிசயிக்க வைத்தது! அதே-வயதில் உள்ள யுவதிகள் "எதிரே அமர்ந்து" உணர்வின் விளிம்பில் நின்று பேசும்போது; இவர்களால் எப்படி, இப்படி யோசிக்க முடிந்தது?

          நான் அடிக்கடி சொல்வது போல், இந்த தலைமுறையினர் - மிகப்பெரிய சமுதாய-மாற்றம் நிகழும் காலகட்டத்தில் இருப்பவர்கள். ஆணாதிக்கம் என்ற ஒரு அரக்கத்தனத்தின் விளைவாய் நம் மூதாதைய பெண்கள் பட்ட பாட்டை கேட்டு வளர்ந்த பெண்கள் இந்த தலைமுறையினர். ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வியலை சொல்லில்(மட்டுமே) கேட்டாலும்; அதன் தாக்கத்தை உணரமுடிகிறது. மேலும், பெரும்பான்மையில் நம் அம்மாக்கள் அந்த அரக்கத்தின்-கடைநிலையை அனுபவித்தவர்களே. ஆனால், இந்த தலைமுறைப் பெண்களுக்கு - மிகப்பெரிய சுதந்திரம் கிடைத்திருக்கிறது. முந்தைய தலைமுறைகள் பட்ட வன்கொடுமைகளை சொல்லால் கேட்டது மட்டுமல்ல; அதன் இறுதியை பார்த்தவர்களும் கூட! அல்லது அந்த கடைசிதலைமுறை பெண்களே கூறக் கேட்டவர்கள். அதனால், அவர்களுக்கு (நான் முன்பே சொன்னவாறு)இந்த சுதந்திரத்தை எப்படி கையாள்வது என்ற சான்றுகள் இல்லாததால்; முறைதவறி பயன்படுத்தப்படுகிறது.

         இதற்கு, இந்த தலைமுறை பெண்களை மட்டும் குறை கூறுதல் நியாயமன்று! மிகப்பெரிய சமுதாய மாற்றம் நடைபெறும்போது - இதுபோன்ற விளைவுகள் தவிர்க்க முடியாதது!! ஆனால், நான் அடிக்கடி சொல்வது போல் - அந்த கொடுமைகளுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத இந்த தலைமுறை ஆண்கள் பாதிக்கப்படுவது ஏற்கமுடியாதது! ஆனால், அதை சரிவர புரியவைப்பது சிரமம்; இதை கடந்து தான் ஆகவேண்டும். ஆணாதிக்கம் மட்டுமல்ல - இதுபோன்ற பல மாற்றங்களை "1970/80 - களில்" பிறந்த தலைமுறையினர் கடக்க வேண்டியிருக்கிறது. இதை "விதி-என்று சொல்லிவிட்டு கடப்பதே மேல்!" என்று தோன்றுகிறது. வரும் தலைமுறைகள் தான் "இவைகளுக்கு தீர்வாய் இருக்கும்!" என்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு! அதைத்தான் நான் இந்த தலைப்பில் வாதாடிய யுவதிகளிடம் பார்க்க முடிந்தது. கண்டிப்பாக, எதிர்வரும் தலைமுறை(கள்) ஆண்-பெண் (குறிப்பாய், கணவன்-மனைவி) உறவை மிகத்தெளிவாய் உணர்வர் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது எனக்கு! 

         முழுக்க முழுக்க உணர்வுபூர்வமாய் சிந்தித்து பேசியவர்களிடம் - நடைமுறை விசயங்கள் கொஞ்சம் கலக்கவேண்டும் என்பதற்கு ஒரு பெண்ணை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறேன். அது, தான் வரச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்தியதால் "காதலன் இறக்க நேர்ந்து" அதன் காரணமாய் திருமணமே செய்து கொள்வதில்லை என்ற முடிவோடு இருப்பதாய்; சொன்ன ஒரு பெண். அந்த பெண்ணுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை! அந்த பெண்ணின் உணர்வை மதிக்கும் அதே வேளையில் "இல்லை மகளே! உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும்!!" என்று கூறிடவே என் மனம் விரும்புகிறது! கண்டிப்பாய், காலம் அந்த பெண்ணை அதை நோக்கி இட்டுசெல்லும்; ஒருவரை காதலித்துவிட்டு, இன்னொருவரை திருமணம் செய்துகொள்வதில் உள்ள சிக்கலை "துணுக்குகள்" பகுதியில் சமீபத்தில் சுருக்கமாய் சொல்லியிருந்தேன். அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கும் தான்! ஆனால், வாழ்க்கை இதையெல்லாம் கடந்து தான் செல்லவேண்டும் மகளே!

          எதிர்பிரிவில், மேலுள்ள படத்தில் இருக்கும் பெண்ணை உதாரணமாய் எடுத்துக்கொள்கிறேன். அருமையான பேச்சு, அருமையான வார்த்தை பிரயோகம், அருமையான புரிதல். இந்த வயதில், பெரியாரையும்/காமராஜரையும் - அருமையாய் உதாரணமிட்டு பேசிய அந்த அறிவுடன் "ஒரு குழப்பம்" இருப்பது தெளிவாய் தெரிந்தது. நான் இங்கே சொல்லியிருப்பது, எப்படியாவது அந்த பெண்ணை சென்று சேரவேண்டும்! பெரியார் சிந்தனைகளில் பலதும் - இந்த காலகட்டத்திற்கு தேவையில்லாதது மகளே! பெரியாரே இன்றிருந்தால், அவரின் கொள்கைகளில் பலதை மாற்றி சொல்லி இருப்பார். அன்றிருந்த மன-நிலையில் இன்றைய ஆண்கள் இல்லை! அந்த ஆதிக்கத்தின் பிடியில் இன்று பெண்களும் இல்லை!! இங்கே, பலதும் மாறிவிட்டது; அதற்கேற்றாற்போல் உன்சிந்தனையும் மாறவேண்டும் மகளே! இல்லையெனில், வாழ்க்கை சிக்கலாய் ஆகிவிடும்; உன்னுடைய தெளிந்த அறிவினூடே இருக்கும் "இந்த சிறு-குழப்பம்" தீரவேண்டும் மகளே!!

நாளைய தலைமுறை "யுவனாய்" பிறந்திருக்கக்கூடாதா?! என்ற ஏக்கம் வருகிறது!!!

பிரேக்-கத்தான் "ண்ணா" தேடிக்கிட்டிருந்தேன்...




          எங்க கேங்கை சேர்ந்த அந்த குட்டிப்பைய்யன் தான் இந்த செக்க்ஷனை ஓபன் பண்ண ஐடியா கொடுத்தான்னு போனவாரம் "இன்ட்ரொடக்க்ஷன்"-ல சொன்னது நியாபகம் இருக்குதுங்களா?!. என்னது நியாபகம் இல்லையா?! அட... என்னங்க நீங்க? முதல்ல அத நல்லா படிச்சு எல்லாரையும் நியாபகத்துல வச்சுக்குங்க... "எங்க வரலாறை கரெக்ட்டா தெரிஞ்சுக்கிட; எல்லா இன்சிடென்ட்ஸ்-களையும் செமையா ரசிக்க... அந்த இன்ட்ரொடக்க்ஷன், ரொம்ப முக்கியம்" மக்களே! போங்க...ப்ளீஸ்...அத தெளிவா படிச்சு வச்சுக்கோங்க!! அப்பத்தான் எங்கள நேர்ல பார்த்தவங்க ரசிக்கற மாதிரி; யாரப்பத்தியும் கவலைப்படாம சிரிக்கலாம். தேங்க்ஸ்-ங்க மக்களே!

     ஒருதடவ, அந்த குட்டிப்பைய்யன் என்ன பைக்-ஓட்ட கூப்பிட்டான்! ஆங்...எங்கிட்ட பைக் இல்லைங்கறது ஒங்களுக்கே தெரியுமே!! அதனால, நம்மளோட முதல் "கெஸ்ட் அப்பியரன்ஸ்" இந்த ஃபர்ஸ்ட் ஆர்டிக்கல்லையே வரப்போறாரு! அதுவும், என் "மாமூ"வே முதல் ஆளா வர்றது எனக்கு ரொம்ப சந்தோசம். ஆமாங்க...என் மாமூ; அவருக்கு நான் மாமூ! சிலபேர பார்த்தவுடனே பிடிக்கும்பாங்கல?! அப்படி மொத தடவையா பாத்ததுமே, எனக்கு என் "மாமூ"வையும்; என் "மாமூ"வுக்கு என்னையும் ஸ்ட்ராங்-ஆ புடிச்சு போச்சு! எனக்கு, என் "மாமூ"வைப் புடிக்கும்; ரொம்ப புடிக்கும் அவ்வளோதான். சரி, இப்போதைக்கு என் மாமூ புராணம் போதும்னு நெனைக்கறேன்! ஆனா, அப்பாலைக்கு என் மாமூ - ஒரு சிங்கிள் ஆர்டிக்கல்ல "சிங்கிளா" வருவாப்ல!!

           ஆங்...இங்க என் மாமூ ஏன் வந்தாப்புலன்னா?! பைக் என்னோட மாமுவோடது - SUZUKI MAX 100R! நான், முதல்ல பைக் ஓட்டக்கத்துக்கிட்டது எங்க பஞ்சகல்யாணி-லனாலும்; நான் அதிகமா ஓட்டனது என் "மாமூ"வோட வண்டிதான்! காரணம், ரொம்ப சிம்பிள்: அதான் இன்ட்ரொடக்க்ஷன்-லையே சொன்னனே! எங்க பஞ்சகல்யாணி பெரிய குடிகாரன்னு! அதுக்கு "ஊத்தி" நமக்கு கட்டுபடி ஆகாதுங்கறதால அத-ரொம்ப எடுக்கறதில்ல!! அப்படி ஒருநாள், எல்லாரும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தாங்க. இந்த குட்டிப்பைய்யன் செமையா கிரிக்கெட் ஆடுவான். காமெடி-பீசு நானே ஆடலாம்னு நெனைச்சுக்கிட்டு இருக்க, குட்டிப்பைய்யன் "ண்ணா! (ஆமாம், அவரு அண்ணாவை 'ண்ணா'ன்னு தான் ஸ்டைல்-ஆ கூப்பிடுவாரு)!" பைக் ஓட்டலாம் வாங்கனான்னான்! அன்னைக்கு என் மாமூ பைக் என்கிட்டே இருந்துச்சு.

   இந்தப்பய அப்படி கேட்டதும், நான் மொதல்ல கேட்டது "முன்னபின்ன; பைக் ஒட்டியிருக்கியாடா?!"ங்கறது தான்! ஏன்னா, எனக்கே அப்ப அரை-கொறையா தான் ஓட்டத் தெரியும்! கொஞ்சம் கூட யோசிக்காம, "ண்ணா! நான் பஞ்சகல்யாணியே" ஓட்டியிருக்கண்ணா-ன்னு சொன்னான்! எங்க பஞ்சகல்யாணி "பெரிய குடிகாரன்னாலும்" செம வண்டி!! பெரிய வண்டி; அதை ஓட்டறது அவ்வளவு சுலபம் இல்ல!!! ஆனா, பழகிட்டா ச்சும்மா...கொழந்த கணக்கா போகும். சரி, பஞ்சகல்யாணியை ஓட்டியிருந்தா சரிதான்னு! அவன ஓட்ட சொல்லி நான் பின்னால ஒக்காந்து கிட்டேன். அப்படியே எல்லா டிபார்டுமெண்டு வழியாவும் ஒரு ரவுண்டு போனான்! அப்புறம், திரும்பி வந்து "அட்மினிஸ்ட்ரேஷன் ப்ளாக்" பக்கமா போனான்! அந்த  பெண்டுல திரும்பி "லைப்ரரி"க்கு எதிரா போயிக்கினே இருந்தவன், திடீர்னு ரோட்ட-விட்டு சைடுல போக ஆரம்பிச்சான்! டே...டே... பிரேக்க போடுடா....போடுடான்னு கத்துறேன்! கத்துறேன்!! கத்திக்கிட்டே இருக்கேன்!!!

          பய, லைப்ரரிக்கு எதுத்தாப்புல இருக்கற சின்ன-சிமெண்ட் கட்டமேல இடிச்சு ஏத்தி அங்க இருந்த செடில எல்லாம் ஏத்தி கிட்டத்திட்ட லைப்ரரி வாசல்ல கிட்ட-போயி வண்டிய படுக்க வச்சுட்டான்! எனக்கா செம டென்ஷன்... என்-மாமூ;  வண்டிய வேற  யாருக்கிட்டயும் கொடுக்காதன்னு சொல்லிட்டு போயிருந்தான்! ஏண்டா?! பிரேக்க போடு, போடுன்னு கத்தினனே ஏண்டா?! போடலைங்கறேன்?! பயபுள்ள! கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம "ண்ணா! பிரேக்கத்தான் தேடிக்கிட்டு இருந்தேங்கறான்!!". அவ்வளவு கோவத்துலயும் எனக்கு சிரிப்பே வந்துடுச்சு!! பயபுள்ள! வண்டி ஓட்டத்தெரியும்னு ஏங்கிட்ட புளுவிட்டு..."கீழ குனிஞ்சு" பிரேக்க தேடிக்கிட்டு இருந்திருக்கு! 

            பெட்ரோல் டேங்குல "ஒரு டொக்கு" விழுந்துடுச்சு! நல்ல வேலை, ஓட்டை எதுவும் விழலை!! சரி, என்னடா பண்றதுன்னு பக்கத்துல இருந்த வொர்க்-ஷாப்ல போயி விசாரிச்சா, அதை சரிபன்னனும்னா மெட்ராசுக்கு டேங்கை கழட்டி அனுப்பனும்னு சொல்லிட்டாய்ங்க! சரின்னு, ஒருவழியா ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தா என் மாமூ வண்டிக்காக காத்திட்டிருக்கான்! அவன் வழக்கமா கோபப்படறதே எனக்கு சிரிப்பா வரும்;  அன்னைக்கும் அப்படியே கோபமா; "மாமூ! சொன்னன் இல்ல மாமூ! இவ்வளவு லேட்டா வர்ற"ங்கறான்! அடப்பாவி...லேட்டானதுக்கே இப்படின்னா; டேங்குக்கு எப்படின்னு... பொறுமையா அவன்கிட்ட இப்படி ஆயிடுச்சி மாமுன்னேன்! அவன், சரி விடு மாமூ! பாத்துக்கலாம்னு அசால்ட்டா சொல்லிட்டு போயிட்டான். 

     இதெல்லாம் விட பெரிய தமாசு...இன்னொரு நாளு, நம்ம பயபுள்ள... "ண்ணா!" வாங்க! பஞ்சகல்யாணில ஒரு-ரவுண்டு போயிட்டு வரலாம்னான் பாருங்க!!  அவனும், என்னென்னவோ சொல்லி பாத்தான். நானா?! சிக்குவேன்? அதுவும், பஞ்சகல்யாணிய போட்டுக்கிட்டு விழுந்தா எப்படி இருக்கும்?!

யெப்பா, சாமி! ஆள-விடுடான்னு நான் எஸ்கேப்!!!  

அவங்க பிட்ட; அவங்ககிட்டயே போடறது!!!

 

விழியப்பன் நினைப்பது (16032014):

"Give a taste of own medicine"-ங்கறத தமிழில் "அவங்க பிட்ட; அவங்கக்கிட்டயே போடறது"ன்னு சொல்லலாமா? 

{குறிப்பு: ஹி...ஹி...ஹி... 2 நாட்களுக்கு முன், மீண்டும் ஒருமுறை இந்த "காமெடி"யைப் பார்த்தப்போ தோனுச்சு!!!}

லேடிஸ்-பேண்டும்; "ஜிப்பும்...


விழியப்பன் நினைப்பது (15032014):

லேடிஸ்-பேண்டிலும் "ஜிப்"இருந்தால் தான் அணிந்து/களைய "எளிதாய்" இருக்கும் என்பது புரிகிறது! ஆனால், ஆண்கள்-பேண்டில் இருப்பது போல் ஏன் "முன்பக்க-மையத்திலேயே" இருக்கிறது?! வலது/இடது புறம் (பாவாடை நாடா போன்று) இருந்தால் அவர்களுக்கும் வசதியாய் இருக்குமே??!!

{குறிப்பு: குறைந்தபட்சம்; கடைகளில் - சிலநேரங்களில், எந்த பாலினத்திற்கு உரிய பேண்ட் என்ற குழப்பத்தை தவிர்க்கும்!!!}

"லொள்"...



விழியப்பன் நினைப்பது (14022014):

ஒருவரின் பதிவில் "லொள்" என்று கமென்ட்டியிருந்தேன்! அதுக்கு அவர்(தமாஷா...) "இதுக்கு ஏங்க?" அந்த நன்றியுள்ள ஜீவன் மாதிரி செய்யறீங்க?! என்கிறார்!! 

அடப்பாவிகளா! தமிழை "அப்படியே; ஆங்கிலத்தில்" அடிக்கறேன்னு எப்படி பாடாய்-படுத்தறீங்க?! LOL-ங்கற ஒன்னை "லொள்"ன்னு தமிழ்ல அடிச்சதுக்கு "இத்தனை லொள்ளா?!"-யா???

ஒருமித்த காமெண்டுகள்!!!



விழியப்பன் நினைப்பது (13032014):

முக-நூலில்; சில நேரங்களில் ஒரு பதிவை படித்துவிட்டு ஒரு "நல்ல" காமெண்ட்டை போடலாம் என்று எண்ணி தட்டச்சு செய்யும்போது; ஒருவர் முன்பே அதையே சொல்லி இருப்பதை பார்த்து "ச்சே...!" என்று ஒரு ஃபீலிங் வரும் பாருங்க!! அதை அனுபவிச்சாதான் புரியும்!!!

சில நேரங்களில், நாம் தட்டச்சு செய்யும்போதே; வேறொவர் அதை "காமெண்ட்டி"விடுவதும் உண்டு! அது, இன்னமும் ஃபீலிங்கானது!!

பெரும்பாலும் - இது பற்றி "ஏதும் தாழ்வாய்" நினைப்பதில்லை! என்னுடைய காமெண்ட்டையும் சொல்லிவிட்டு; ஒருமித்த காமெண்ட்டுகளுக்கு ஒரு ""லைக்"கும் போட்டுவிடுவேன்!

"சாமான்யர்"களுக்கு மட்டும்தானா???




*****
செய்தி: \\\அந்த பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் 2 பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இதேபோல் மேலும் 2 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளனர்.///
*****

- அடப்பாவிகளா! எல்லாம்-வச்சுருக்கற அப்பாவிங்க கிட்ட "ஷூவை கழட்டு/ பெல்ட்ட கழட்டு/ தாலியை-ச்செயினை கழட்டு"ன்னு அதிகாரம் பன்னிட்டு கடைசியில "பாஸ்போர்ட்"ல கோட்டை விட்டுடறீங்களா???

{குறிப்பு: விமான-நிலைய அதிகாரிகளின் அலுவல் புரியாதவன் அல்ல நான்! ஆனால், சில சமயங்களில் இவர்கள் சாமான்யர்களிடம் நடந்து கொள்ளும் விதம் "கண்டிக்கத்தக்கதாய்" இருக்கிறது!!!}

இந்த-உறவுகளிடம் எச்சரிக்கை இருக்கட்டும்!!!



விழியப்பன் நினைப்பது (11032014):

சூழல்-காரணமாய் "ATM" அல்லது "E-mail" போன்றவற்றின் "கடவுச்சொல்லை (Password)" உங்களின் "கணவர்/மனைவி (அல்லது நெருங்கியவர்)" இடம் கொடுக்கநேர்ந்து; அவர்கள் உங்களின் கடந்த-கால பரிமாற்றங்கள்/தொடர்புகள் உள்ளிட்டவைகளை "வேலை மெனக்கெட்டு" படித்துவிட்டு; (அதையும் உங்களிடம்; உடனே கேட்காமல்) வேறொரு நிகழ்வின்போது "திடீரென்று"கேட்டு உங்களைக் காயப்படுத்தினால்...

"அவர்களின் உறவு" மிகவும் ஆபத்தானது! என்ற எச்சரிக்கை எப்போதும் இருக்கட்டும்!!!

*****

{குறிப்பு: "நம்-உறவுதானே?!" என்று நீங்கள் நினைக்கும் "அதே - நினைப்பும்/கண்ணியமும்!!" அவர்களிடமும் இருக்கும்/இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது "நம் முட்டாள்தனம்"!!!}

ஞாயிறு, மார்ச் 09, 2014

நண்பன் ""தண்டபாணி"யின் வீணடிக்கப்பட்ட திறமைகள்...

{திருப்பாலப்பந்தால் என்ற என்கிராமத்தில்; 
எங்கள்-வீட்டின் நேரெதிர் வீட்டிலிருக்கும் என்நண்பன்!

           இந்த வார தலையங்கம் - என் "பால்ய/பள்ளி" நண்பன் தண்டபாணியைப் பற்றியது! அவர்/இவர் என்பது சபை-நாகரீகமாய் இருக்கும் எனினும், இதுபோன்ற நண்பனைப் பற்றி எழுதும்போது அவன்/இவன் என்பதே உண்மையாய் இருக்கும். நான், இங்கே உண்மையாய் இருக்க ஆசைப்படுகிறேன்! இது, அவனின் புகழ் பாடும் விசயமல்ல; அவனின் வீணடிக்கப்பட்ட திறமைகளைப் பற்றியது! நான் சொல்லப்போகும் இத்திறமைகள் அவனுக்கே தெரிந்திருக்குமா என்பது அதிசயமே! ஆனால், நான் பலமுறை அவனின் அத்திறமைகள் பற்றி எண்ணி, வியந்து; பின் அவை வீனடிப்பட்டது கண்டு பொருமியிருக்கிறேன். என்ன செய்வது?! இதுபோன்று விதிவசத்தால்/சூழ்நிலையால் - திறமைகளை  வெளியுலகுக்கு காட்டமுடியாது வீணடிக்கப்பட்டவர்கள் பலர்; நாம் ஒவ்வொருவரும், இதுபோன்ற நபர்களை கடந்து வந்திருப்போம். இனிமேலாவது, இதுபோன்ற எவரேனும் ஒருவருக்கு நம் வாழ்நாளில் நம்மால் ஏதாவது செய்து உதவமுடியுமானால்?! எப்படி இருக்கும்? அதற்காய் தான் இத்தலையங்கம்.

           அவனின், திறமைகளை கூறும் முன் எங்களிடையே நடந்த ஓர்நகைச்சுவை சம்பவம்! "எங்கம்மா-அப்பா கல்யாணத்தப்போ; இருந்தண்டா"என்று நான் அவனுடன் அடிக்கடி வாதிடுவேன். அவனும் என்னென்னவோ?! சொல்லி புரிய வைப்பான்; நான் இல்லையென்று வாதிடுவேன். அவன் சொல்வது உண்மையென்று என்தாய், என்தமக்கை, என்தமையன் சொல்லிக்கூட நான் கேட்டதில்லை; ஏன், என்அம்மாவிடமே - நான் இருந்தேன் என்று வாதிட்டதுண்டு! மீண்டும் அவனுடன் அதே வாக்குவாதம் நடக்கும். என்னுடைய காரணம் இதுதான்: எங்க-வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது போட்டிருந்த பந்தலை பார்த்ததால், நான் திருமணத்தின் போது இருந்தததாய் வாதிடுவேன். என் அன்றைய - மனநிலையில் "திருமணம் என்பது; பந்தல் போடுவது"! என்னுடைய இந்த செயலுக்கு, என் அறியாமையே காரணம் என்பதை நான் ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில்; "அதே காலகட்டத்தில்" அவனுக்கிருந்த அந்த "முதிர்ச்சியை" பாராட்ட முயல்கிறேன்.

       அவனுடைய திறமைகளுள், முதலில் நான் கண்டு வியந்தது - அவனுடைய "சதுரங்கம்" ஆடும் திறமையைப் பார்த்து! இதிலென்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? எங்களுடைய கிராமத்தில் "முதல் பால்-குக்கர்" வாங்கிய சாதனை முதல் பல சாதனைகளை என்தந்தை (என்குடும்பம்) செய்துள்ளது. அதில் ஒன்று, முதன்முதலில் "சதுரங்க"பலகையை என்தமையன் வாங்கியது; என்தமையனுக்கு அதில் நல்ல ஆட்டத்திறமை உண்டு. என்நண்பனுக்கு அந்த ஆட்டம் பற்றி எதுவுமே தெரியாது; என்தமையனிடம் அதைக் கற்று 2 நாட்களில் அவரையே வென்ற அதிசயம் அவன். எனக்கு ஒருவெறி; அவனைத் தோற்கடிக்கவேண்டும் என்று! நானும், என்தமையனிடம் கற்றவன். சில ஆட்டங்களில் தோற்றாலும், அவனை சில ஆட்டங்களில் வென்றிருக்கிறேன். ஆனாலும், அவனுடம் தொடர்ந்து விளையாட எனக்கு பயம்; ஏனெனில், இன்னமும் கூட "சதுரங்க"ஆட்டத்தில் தோற்பதை விரும்பாதவன் நான்.  அந்த பயத்திலேயே அவனுடன் நான் சதுரங்கம் விளையாடுவதில்லை.

       சரியென்று, அவனுடன் "கேரம்-போர்டு" விளையாடத்  துவங்கினேன். எங்களூருக்கு அதுவும், முதல்முறையானது என்பதால்; நான் தான் அவனுக்கு கற்றுக்கொடுத்தேன். நான், அப்போது "கால்லூரி"அளவில் ஆடுவேன் என்பதால், எளிதில் அவனை வென்றுவிடுவேன். ஆயினும், கற்ற ஓரிரு நாட்களில் "என்னைத் திக்குமுக்காட" வைத்தவன் என்பதில் எனக்கு எந்த ஒளிவுமறைவும் இல்லை. கல்லூரி-அளவில் ஆடிய பயிற்சியால், அவனை பலமுறை வென்றுவிடுவேன்; அவன் "சதுரங்கம்" ஆடலாம் என்றழைப்பான். நான், பயத்தில் முடியாதென்பேன்; இருப்பினும், ஓரிரு முறை விளையாடுவேன்! அவன் அசாத்திய திறமைப் படைத்தவன். ஒவ்வொரு முறை நாங்கள் "சதுரங்கம்"ஆடும்போதும் மிகப்பெரிய யுத்தமாய் இருக்கும்; சிலநேரங்களில் நான் "அழுகாச்சி" ஆட்டம் ஆடுவேன்; வேறு வழியில்லை! அவன் திறமை அப்படி. "சீட்டு"விளையாட்டிலும் அப்படியே; "ஸ்கூட்" விட்டுவிட்டு அவன் ஆடுவதை பார்த்தல், அப்படியொரு பிரம்மிப்பாய் இருக்கும்.

       சாதாரணமானோர்க்கு 3-"கார்டில்" ஒன்றுவந்தால் வெற்றி என்றால், அவனிடம் குறைந்தது 5-கார்டில் ஒன்றுவந்தால் போதும் என்ற கணக்கு இருக்கும். ஆட்டம் முடிந்து எண்ணிக்கை சொல்வதிலும் அதே வேகம்/திறமை. மனதால், நான் வேகமாய்/சரியாய் கூட்டுவேன் என்று பலரும் என்னைப் பாராட்டுவர்; ஆனால், அவனின் வேகமும்/துல்லியமும் என்னையே ஆச்சர்யப்படுத்தும்! அவன் நடத்துனராய் பணிபுரிகிறான்; விழுப்புரம்-பாண்டி சாலையில். அந்த சாலையில், பயணிப்போருக்கு தெரியும்; பேருந்தில் எத்தனை கூட்டம் இருக்குமென்று! அதுவும், அவனுடைய பேருந்து பெரும்பாலும் "நெரிசல் நேரத்தில்" இருப்பது. அதிலேயே, அனாவசியமாய் "பயனச்சீட்டுகளை" வெகு-விரைவாய் கொடுத்து கணக்கை முடிப்பான். பலமுறை, அவனுடன் பயணம் செய்து அதை இரசித்திருக்கிறேன். இவைகளை எல்லாம் பார்க்கும்போது; அவைகளை நினைத்து பார்க்கும்போது - என்னுள், பின்வருவது தான் தோன்றும்! என் சிந்தனை முழுக்க, முழுக்க உண்மையானது!!

         இந்த பதிவை அவன் படிப்பானா? இல்லையா?? என்று எனக்கு தெரியாது! அவனுக்கு இணையம்/கணினி எல்லாம் பரிச்சயம் இல்லை என்று நினைக்கிறேன்; ஆனால், கற்றுக்கொடுத்தால் கண்டிப்பாய் ஒரே-நாளில் அசத்துவான். அவனின் மகன்தான் மேலிருக்கும் புகைப்படத்தை கூட அனுப்பினான்; ஒருவேளை, அவன் இதை என்நண்பனுக்கு காண்பிக்கக்கூடும்!  சரியான நேரத்தில், அவனுக்கு படிப்பை தொடர்ந்திட எவரேனும் உதவியிருப்பின், அவன் பல-சிகரங்களை தொட்டிருப்பான். விதிவசத்தால், இப்படி நடப்பதுண்டு! சரியான-திறமையும்/தகுதியும் இல்லாத பலருக்கு - எத்தனை வேண்டுமானாலும், செலவிட ஆட்கள் இருக்கும். இவனைப் போன்றோருக்கு எவருமில்லாது; படிப்பே கூட தடைபடும். அவனுக்கு மிகப்பெரிய தர்க்க-சிந்தனை (Logical Thinking) உண்டு! இம்மாதிரியான சிந்தனைதான் இன்று பலதுறைகளிலும் தேவைப்படுகிறது. கண்டிப்பாய், தண்டபாணி எனும் என்நண்பனுக்கு தக்க நேரத்தில்; எவரேனும் கைகொடுத்திருப்பின்...

சந்தேகம் ஏதுமின்றி; இன்று ஏதேனும் ஒர்துரையில் பெரிதாய் சாதித்திருப்பான்!!! 

பின்குறிப்பு: இது, என் நண்பனின் புகழ்பாடிட அல்ல! இவன் போன்ற பொக்கிஷங்கள் - சூழ்நிலை காரணமாய்; மேற்கொண்டு படிக்க முடியாமல் போகின்றன! இவர்களுக்கு அந்த சூழல் மட்டும் சரியான நேரத்தில் கிடைப்பின்; செயற்கரிய பல செயல்களை செய்வர்! அந்த நேரத்தில், அவனின் படிப்புக்கு உதவும் நிலையில் நானில்லை; இன்று என்னால் முடியும்!! ஆனால், அவனுக்கு அதே வாய்ப்பு கிடைக்குமா?! என்று தெரியவில்லை. இதேபோன்று வேறொரு நண்பனும் உண்டு; அவன் இன்று பெளதிக-ரீதியாய் இல்லை! ஆனால், நானுள்ளவரையில்; என்கிராமம் உள்ள வரையில்; அவன் என் நெஞ்சில் இருப்பான். அவனில்லாத என்கிராமத்தை; என்னால் இன்றும் கூட நினைத்து பார்க்கமுடியாது! அவனைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில்  எழுதுகிறேன். சூழ்நிலையால், இவர்கள் வீணானதை நேராய் கண்டுணர்ந்ததால் - நன்றாய் படிக்கும் பலருக்கும்; என்னால் இயன்ற உதவியை அவ்வப்போது செய்துகொண்டு வருகிறேன்! நீங்களும், இதுபோன்ற ஓரிருவருக்கு உதவிட முயலலாமே?!  

முன்னுரை (ச்சும்மா; தமாஷா...)



          நம்ம எல்லார்க்கும்,  நம்ம  "க்ளோஸ் சர்க்ககிள்" கூட அடிச்ச கூத்தெல்லாம் அடிக்கடி நியாபகம் வரும். அது நல்லதா/கெட்டதா; சரியா/தப்பா - ன்னு எதைப்பத்தியும் கவலைப்படாம செஞ்சிருப்போம். அது நியாபகத்துக்கு வர்றப்ப; பக்கத்துல இருக்கறவங்கள பத்தி அலட்டிக்காம நாம பாட்டுக்கு சிரிக்கவும் செய்வோம்! அதுலயும், கூட இருந்த ஒருத்தன் சிக்கி - அவன்கூட அந்த நியாபகத்தையெல்லாம் நெனைச்சு பாக்கறப்போ; நமக்குள்ள ஒரு சிலிர்ப்பு வரும். பயங்கரமா சிரிப்போம்; அப்படி ஒருநாளு சிரிச்சுக்கிட்டிருந்தப்போ; ஃபிரண்ட் ஒருத்தன் "அண்ணா! அதையெல்லாம்; சும்மா ஜாலியா" எழுதுங்க; சூப்பரா இருக்கும்னு சொன்னான்! எனக்கும் பட்டுச்சு; இருத்தாலும், ஒரு தயக்கம். இப்படி, நல்ல தமிழ்ல எழுதிட்டு திடீர்னு சாதாரணமா-பேசறா மாதிரி எழுதுறதுக்கு கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு! அப்பறம்; நாம சிரிக்கரம்ல? படிக்கறவங்களும் சிரிப்பாங்கதானே?! அதுல என்ன இருக்குன்னு ஒரு கேள்வி வந்துச்சு!

      சரி "ச்சும்மா; தமாஷா..." எழுதலாம்னு முடிவு பண்ணதும் அதையே இந்த செக்க்ஷனுக்கு "டைட்டிலா" வச்சுட்டேன்! சரி, எதப்பத்தி முதல்ல எழுத ஆரம்பிக்கலாம்னு கேள்வி வந்துச்சு; சரி, இந்த ஐடியா கொடுத்த நண்பன் கூடவிருந்த "Ph. D.," லைஃப்-ல; அந்த ஹாஸ்டல் க்ரூப்போட பண்ணின அட்டகாசத்துல இருந்தே ஆரம்பிக்கலாம்னு தோனுச்சு. அதுதான், கரெக்டாவும் இருக்கும்; ஏன்னா, என் வாழ்க்கைல பல திருப்பங்கள் நடந்தது - அந்த ஸ்டேஜ்லதான்! அப்போ - படிக்கறது போக மீதி நேரத்துல பணனதுலாம்; "அராத்துலையும்; அராத்து! சரி! அதை எழுதலாம்னா, பலபேரோட "உண்மை"கதைகள் எல்லாம் வெளில வரும்; என் பொண்டாட்டி முதல் எங்க வீட்டுல, எல்லாருக்கும் நான் தண்ணி-அடிக்கறது தெரியும்! தம்மு-அடிச்சது தெரியும்; இப்போ 3 வருஷத்துக்கு மேல அடிக்கறதில்லைன்னும் தெரியும்! ஏன், என்னுடைய தம்மு-கதை உங்களுக்கே நல்லா தெரியும்!! ஆனா, மத்தவங்களுக்கு இது தர்ம-சங்கடமா ஆவும்; என்ன பண்றதுன்னு யோசிச்சேன். 

            இதுமாதிரி எல்லா கேங்குலயும் கண்டிப்பா; எல்லாருக்கும் பட்டபெயர்னு ஒன்னு இருக்கும்! சரி, "செல்லப்பெயர்னு" வச்சுக்கோங்களேன்! அதனால, பட்டப்பெயர் வச்சே எழுதிடலாம்னு தோணிச்சு! சரின்னு, அதை; இந்த ஐடியா கொடுத்தவன்கிட்ட சொன்னேன்; அவனும் சரின்னு சொன்னான்! அதுல பார்த்தா, அவனுக்குன்னு ஒரு பட்டப்பெயர் இல்லை; அவனை "அவன் பேர்" சொல்லியே கூப்பிடுவோம்; சரின்னு, அவனை எப்பவாவது "கூப்பிடற"ஒன்னை முடிவு செஞ்சுட்டேன். சிலபேரை "ஜாதியும்/மதமும்" சொல்லி கூப்பிடுவோம்; அது நண்பர்களுக்குள்ள ஓக்கேன்னாலும், இங்கே அப்படி எழுத என்னால் முடியாது. மேலும், நான் அப்படி அவங்க யாரையும் கூப்பிட்டதில்லை; ஆனா, மத்தவங்க கூப்பிடுவாங்க! அதனால, அவங்களுக்கு வேறொரு பெயர் இப்போது வைப்பதுன்னு முடிவு செஞ்சேன். அதையும், அந்த நண்பன் கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணேன்! அதுவும் ஓக்கே செய்யப்பட்டது. சரி, இப்போ இந்த ஐடியாவுக்கு ஒரு "இன்ட்ரொடக்க்ஷன்" குடுக்கணும்.

        ஆங்ங்ங்...அதான், இப்ப நீங்க படிச்சிக்கினு இருக்கறது! சரி, எங்க கேங்கில் "2 க்ரூப்";  அதாவது, ஒன்னு "சீனியர்"செக்க்ஷன்; இன்னொன்னு "ஜூனியர்"செக்க்ஷன்! சீனியர்/ஜூனியர் - லாம் டிபார்ட்மெண்டோட சரி. ஹாஸ்டலுக்கு வந்துட்டா "தண்ணி அடிக்கறதுல" தொடங்கி எந்த "நல்ல காரியத்துலையும்" எங்களுக்குள்ள எந்த டிஃபரன்சும் இருக்காது; ஒரே, சோஷலிசம் தான்! அதுவும், "குட்டிப்"பைய்யனெல்லாம் சமயத்துல எங்க எல்லாரையும் சரியா கலாய்ப்பான்!! அப்படியொரு, சோஷலிசம்! சரி இப்போ, இன்ட்ரொடக்க்ஷன்...

*****

மக்கள பத்தி சொல்றதுக்கு முன்னால; எங்க பஞ்சகல்யாணி!: (சீனியர் செக்க்ஷனோட)லீடர்-ங்கறதுக்கு ஏத்தாப்புல அவர்கிட்ட மட்டும்தான் "பைக்" இருந்துச்சு! (ம்ம்ம்...யேன் பைக் கதைய போன வாரம்தான சொன்னேன்?!) அதுக்கு பேர்தான் "பஞ்சகல்யாணி"; கண்டுபிடிச்சுட்டீங்களே?! சபாஷு! அப்படியொரு வேகமாய் போகும்???!!! ஆனா, எப்படியாவது எங்கள கொண்டாந்து கரை சேர்த்திடும்! "எங்கள?!" அப்படிங்கறத யோசிக்கறீங்களா? அதுல கொறைஞ்சது 4-பேர் போவோம்! அப்படி ஒரு "டிராபிக் சென்ஸ்" எங்களுக்கு!!

ஆனா, பஞ்சகல்யாணி கிட்ட எனக்கு பிடிக்காத ஒரு கெட்டபழக்கம் உண்டு! நான், அப்பப்போ இப்படித்தான் அதைப்பத்தி சொல்வேன்: "அது நம்மள விட பெரிய குடிகாரண்டா" என்று! ஆமாங்க...! "பெட்ரோலை" அநியாயத்துக்கு குடிக்கும்!  

*****   

சரி, இப்போ மக்கள்!

சீனியர் கேங்:
  1. முதல்ல, கேங்-லீடர்! அவரு நல்லா ஒயரமா இருப்பாரு! லீடர்ங்கறதுக்கு ஏத்தாப்பல, அப்படியொரு சகல-கலா வல்லவன்! ஒருத்தன, அழவைக்கனம்னு "மவன்" முடிவு பண்ணிட்டா; விடவே மாட்டாப்ல! நான் நிறைய சென்சிடிவ்-ங்கறதால அடிக்கடி மாட்டறது நானாத்தான் இருக்கும்! அப்படியே அவன கொல்ட்ற அளவுக்கு கோபம் வரும்; ஆனாலும், எதுவும் செய்யமாட்டேன். ஏன்னா?! அவன் எனக்கு பலவருஷத்துக்கு முன்னாடியே "நன்பேண்டா...!!!" 
  2. ரெண்டாவது ஸ்தானம் எனக்குன்னு சொல்ட்றாங்க! நானும், சரின்னுட்டேன்; நம்மள பத்தி நாமளே சொன்னா நல்லா இருக்காது; அவனுங்ககிட்ட கேளுங்க! "நல்லா; நார்ற"மாதிரி சொல்லுவானுங்க! ஆனா, டைமிங் சென்ஸ்-ல நாமதான் பிஸ்த்து!! என்னது... ஜோக்கர் மாதிரியா?! சரி... அப்படியே வச்சுக்குங்க!!!
  3. அப்புறம், நம்ம மாப்ளேய் (அவன் பட்டப்பெயர் மாற்றப்பட்டுள்ளது); அவன் ராகமாய் எங்களை "மாப்ளேய்" என்று இழுத்து கூப்பிடுவான்! அதனால, அவன் இங்கே/இனிமே; "மாப்ளேய்"! மகா-பொறுமைசாலி; எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பான்! ஆனா, எங்களுக்கு ஒண்ணுன்னா ஒரு கோவம் வரும் பாருங்க! வேணாம், வேணாம்...பாத்துடாதீங்க; தாங்கமாடீங்க!!
  4. அப்புறம், காளி! ரொம்ப சாதுவா இருப்பாப்ல!! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் (ஏன்னா, இவைங்க கேங்-ல நான் லேட்டா தான் சேர்ந்தேன்!); இவனுக்கு எதுக்கு "காளி"ன்னு பேர் வச்சாய்ங்க? ரொம்ப சாதுவா இருக்கானேன்னு! பயபுள்ள; சபரி-மலை போயிருந்தப்போ என்னை ஒரு-தடவ முறைச்சான் பாருங்க! அன்னைக்கு புரிஞ்சது; அவனுக்கு ஏன் "காளி"ன்னு பேர் வந்துச்சுன்னு!! அப்பால, அவன்...இல்லையில்லை; அவரு மேல கொஞ்சம் மரியாதை வந்துடுச்சு!
  5. கடசியா, கட்டபைய்யன்! ஆனா, எனக்கு இவர்தான் முதல்-ஆள்! ஆமாங்க, இவரு தான் "ஆள் புடிச்சு விடற" மாதிரி "எங்க; லீடர்கிட்ட" சேத்துவிட்டவரு... ச்சேச்சே... என்ன ரௌடிங்க மாதிரி சொல்ட்றேன்?... "இன்ட்ரடியுசு" பண்ணி வச்சவரு!! இவரு, வெளில லாட்ஜ்-ல தங்கி இருக்கறதால, லிஸ்ட்-ல கடைசில வந்துட்டாரு! நானும், அந்த லாட்ஜ்-ல தங்கி இருந்தபோது தான் இந்த கேங்-குல சேத்துவிட்டாரு!!
{குறிப்பு: இது, மெயின் கேங்-மெம்பர்ஸ் லிஸ்ட் தான்! (அதாவது மத்தவைங்கல்லாம் கெட்ட பசங்க; எங்களை மாதிரி இல்லாம; "ஒரு தம்மு" கூட அடிக்கத் தெரியாதவைங்க!). கெஸ்ட்-ரோல் மாதிரி அப்பப்போ சில பேர் வருவாங்க! அவங்களுக்கு அப்போ இன்ட்ரொடக்க்ஷன் இருக்கும்!}

ஜூனியர் கேங்:
  1. இந்த கேங்-குக்கு லீடர் பேரு "செவத்தவன்" (பட்டபெயர் மாற்றப்பட்டுள்ளது)! சீனியர்-கேங் லீடர் போலவே, ஒருத்தன அழவைக்கரதுல மன்னன்! அதுவும், "சீனியர்" ரொம்பல்ல்லாம் மெனக்கெட மாட்டரு! ரெண்டு, மூணு வார்த்தைதான் வெளில வரும்; மத்ததுல்லாம் "பாடி லாங்க்வேஜ்" தான்! பயபுள்ள, ஒருத்தர விடமாட்டன்! அதுவும், எங்க கேங்குக்கு வெளிலைன்னா; அவனுங்க செத்தானுங்க! (எங்களுக்கு, கொஞ்சம் கன்செஷன்!... அப்பப்ப "சேம்ப்பில்" மட்டும்தான்). ஆனா, சீக்கிரமா; கோர்ஸ்-முடிஞ்சு எங்கள விட்டு போயிட்டான்!
  2. இதுக்கு என்னைமாதிரி அடுத்த-லெவல் லீடர் பேரு "தம்பு"! பேருதான், தம்பு; செய்யருதுல்லாம் ஒரே "அழும்பா" இருக்கும்!! மூஞ்சை-வச்சு சைகை பண்ணியே, நம்மளை மண்ட காய விட்டுடுவான். காட்டுலயே (ஏற்காடு) வளந்த பயங்கறதால, எதுக்கும் பயப்பட மாட்டான்; எவனுக்கும் பயப்பட மாட்டான்! ஆனா, பாசக்காரப்பய!! பாசத்தை பங்கு-போடவும் விடமாட்டான். ஒரிஜினல் லீடர் (மேலே உள்ளவரு) சீக்கிரம் வெளில போயிட்டதால "இவரே! அன்னபோஸ்ட்டா" லீடர் ஆயிட்டாரு!
  3. அப்புறம், ஒரு குட்டிப்பைய்யன்! அவருதான், இந்த செக்க்ஷனை ஓப்பன் பண்ண சொல்லி "சஜெஷன்"குடுத்து ரெக்கமெண்ட் பண்ணவரு!! நல்லா டேன்ஸ் ஆடுவாரு! சமயத்துல அவனுடைய அறிவை பார்த்து நாங்களே மெரண்டுடுவோம்!! ஒருதடவ "பொண்டாட்டிக்கு; பொண்டாட்டின்னு" ஏன் பேர் வந்துச்சுன்னு "அறிவா கண்டுபிடிச்சு சொன்னான் பாருங்க!"; சென்சார் காரணமாய் அதை இங்க சொல்லமுடியாது! ஆனா, இதை படிக்கற எங்க கேங் எல்லாரும் "குபுக்குன்னு" சிரிச்சுடுவாங்க! என் போர்ச்சுக்கல் ஃபிரண்டுகளுக்கு கூட சொல்லி இருக்கேன்; அவங்க படிச்சாக் கூட ச்சும்மா... விழுந்து விழுந்து... சிரிப்பாய்ங்க! 
{குறிப்பு: இங்கயும், சில கெஸ்ட்-ரோல் அப்பப்போ வருவாங்க! அப்போ இன்ட்ரொடக்ஷன் இருக்கும்!}

காட் ஃபாதர்: 

இப்படி ஒவ்வொருத்தனும் ஒரு "கோளாறா" இருக்கற 2 கேங் இருந்தா; அங்கே ஒரு "காட் ஃபாதர் இருக்கணும்தானே? எங்களுக்கும் அப்படி ஒருத்தர் இருந்தாரு/இருக்காரு! அவர் எங்க எல்லாருக்கும் அண்ணன்! "சரக்க-சரியா ஊத்தறதுல" இருந்து; "நியாயமா/நாட்டமையா இருந்து; எங்களுக்குள்ள" நடக்கற கசமுசாக்களுக்கு தீர்ப்பு சொல்வாரு! அவருக்கு "தலைவலியா" இருக்கறது நானும்; எங்க கேங் லீடராத் தான் இருப்போம்! ஏன்னா, நானும் எங்க கேங் லீடரும் எந்த அளவுக்கு கொழைஞ்சுக்கரமோ?! அந்த அளவுக்கு அடிச்சிப்போம்!! இதுல, என்ன பிரச்சனைன்னா "காட் ஃபாதார" மண்ட-காயவிட்டுட்டு நாங்க கொஞ்ச நேரத்துல "ச்சியர்ஸ்"பண்ணிக்கிட்டு இருப்போம்; அவுரு காண்டாயிடுவாப்ள! அவரு "உங்க சங்காத்தமே; வேண்டாம்டா!" அப்படின்னுவாரு. ஆனா, தங்கமான அண்ணன்; மனுஷன்! எங்க கேங்-லீடருக்கெல்லாம் அவரு பல-வருஷமா பழக்கம்; நான் லேட்டா அதுல சேந்திருந்தாக்கூட, அவருகிட்ட அந்த பாகுபாடெல்லாம் இருக்காது!

*****

இந்த செக்க்ஷனை தொடர்ந்து படிக்கப்போறவங்களுக்கு இந்த இன்ட்ரொடக்க்ஷன் வரலாறு போன்றது! ஏன்னா "வரலாறு, முக்கியம் - மக்களே!". அதனால, கவனமா படிச்சுக்குங்க! ஏன்னா, இந்த செக்ஷன்ல வரப்போற எல்லா போஸ்ட்லயும் - இனிமே, வெறும் பட்டப்பெயர் மட்டுமே வரும்! பேரைப்படிச்சவுடனே, இதுல்லாம் நியாபகம் வந்தா - படிக்கறதை நீங்க நல்லா என்ஜாய் பண்ணலாம்!! அப்பால, உங்க இஷ்ட்டம்!!! 

முதல்ல, என்னுடைய இந்த-ஹாஸ்டல் லைஃப் சர்க்கிள் பத்தி எழுதப்போறேன்! போகப்போக, மத்த எல்லா சர்க்கிள்-ல நடந்த சமாச்சாரங்களும்; இதே மாதிரி "ச்சும்மா; தமாஷா..." வரும்.

எதப்பத்தியும் கவலைப்படாம; ச்சுமா தமாஷா சிரிச்சுட்டு போங்க மக்களே!!!

காகங்களும் - தம்பியர் மக்களும்...


{என்-உறவு ஒருவர் கடற்கரைக்கு சென்றபோது அங்கே 3-காகங்களை கண்டதையும்; 
அதை அவரின் தம்பியர் பிள்ளைகளோடு ஒப்பிட்டு எழுதுமாறும் கேட்டார்! 
அதனால் (சில மாதங்களுக்கு)முன் எழுதியதிது!!}


கடற்கரை சென்றேன் மகளுடன்;
       கண்டேன்! மைந்தர் மூவராய்,
கடுங்கரு காகம் மூன்றை!
       கரியதோர் புள்ளியை விவேகமாய் 
கடந்து வெள்ளை காகிதம் 
       கண்டுணர் "சான்றோர்" போலே!!
"கூடிவாழ் தல்"எனும் உயர்குணம்
       "காகத் தார்"கொளல் உணர்ந்தேன்!!!

இம்மாதிரியானவர்களை என்ன செய்வது???



       சமீபத்தில் முக-நூலில் ஒரு பதிவைக் கண்டேன்; அதைப்பார்த்த மாத்திரத்தில் கடுஞ்சினம் எழுந்தது! உடனே, அது எத்தனை தவறான தகவல் என்பதை "மிகவும் நாசூக்காய்" சொல்லி; அவ்வாறு பதிவதை தவிருங்கள் என்று கேட்டிருந்தேன். அடுத்த சில நாட்களில், என் நட்பு ஒருவர் அதை "லைக்கியதாய்" என் முக-நூல் முகப்பில் மீண்டும் அந்த பதிவை பார்க்க நேர்ந்தது. உடனே, இமாதிரி பதிவுகளை ஆதரிக்கவேண்டாம் என்று சொல்ல எத்தனித்து பின் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஆனால், அதே நட்பு மீண்டும் அதே-அடிப்படையில் வேறொரு புகைப்படத்தையும் கருத்தையும் பகிர்ந்திருந்தபோது நேரடியாய் சொல்லிவிட்டேன். மேலும், அதை இம்மாதிரி ஓர்-மனதங்கமாய் எழுதுவதுதான் சரி என்று தோன்றியது. பதிவு(கள்) இதுதான்: மேலுள்ள புகைப்படத்தை வெளியிட்டு செய்தி கொடுக்கப்பட்டு இருந்தது! இது என்னவிதமான மனநிலை என்றே தெரியவில்லை. அன்னையரை புகழ எத்தனையோ "உண்மையான/நிதர்சனமான" காரணங்கள் உள்ளன.

         அதை விடுத்து, ஏன் இப்படி ஒரு "பொய்யான/அநியாயமான" காரணத்தை கூறி "தந்தையரை" இழிவுபடுத்தி "அன்னையரை" உயர்த்த முயலவேண்டும்?! இதை "லைக்கும்/ஆமோதித்து கமெண்ட்டும்" இடும் எவரிடமாவது சென்று "உங்கள் அப்பா" இப்படி செயதாரா?! என்று கேளுங்கள்! அவர்களுக்கு மகா-கோபம் வரும்; அதிலும் பெண்கள் என்றார் "கேட்டவர்; அடி-கூட வாங்க" நேரிடலாம். அப்போது, எவரின் அப்பா?! இப்படி செய்திருப்பார் என்று இவர்கள் "லைக்கும்/கமெண்ட்டும்" போடுகிறார்கள்! கேட்டால், விளையாட்டு என்பார்கள்; எது விளையாட்டு?! அப்போது, உங்கள் அப்பா என்று வரும்போது மட்டும் ஏன் கோபம் வருகிறது?! உங்கள் கோபம் நியாயமானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், உங்கள் அப்பா இதைப் பார்க்க நேர்ந்தால் - வருத்தப்படுவார் என்று ஏன் தோன்றுவதில்லை. அதே, தார்மீக வருத்தம் தான் "என்னை; ஓர் அப்பனாய்" இந்த தலையங்கத்தை எழுத வைத்துள்ளது. போலித்தனமான புகைப்படத்தையும், செய்திகளையும்...

வெளியிடும்; இம்மாதிரியானவர்களை என்ன செய்வது???   

மிகைப்படுத்தப்பட்ட மெய்...



"பொய்மையும் வாய்மையிடத்த" 
என்பதுபோல்... 
"மிகைப்படுத்தப்பட்ட மெய்யும்";
பொய்யே!!!

அன்பும், எச்சரிக்கையும்...



விழியப்பன் நினைப்பது (08032014):

அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருவர்; உடனடியாய், வேற்று-பாலினத்தவரை "அண்ணன்/ தங்கை" (தம்பி/ தமக்கை என்பதை விடவும்!) - என்றழைப்பதில் "அன்பை விடவும்; எச்சரிக்கை உணர்வு" மேலூன்றி இருப்பதாய் தோன்றுகிறது!

{குறிப்பு: இம்மாதிரி உறவு-அழைப்புகள் "சிறிய பரிச்சயத்திற்கு" பின் வருவது நல்லது!}

பெண்ணும்; வேலையும்...



விழியப்பன் நினைப்பது (09032014):

"குழந்தை முதல் 2-வருஷம் ஸ்கூல் முடிக்கட்டும்னு காத்திருக்கிறேன்!" என்று  இந்தகாலத்து-பெண் சொன்னால்; இன்னும் (சரியான)வேலை கிடைக்கவில்லை என்று அர்த்தம்!!

{கொசுறு: அதை ஆமோதித்து/அனுசரணையாய்; அப்பெண்ணின் கணவனும் சொன்னால், "டபுள் கன்ஃபார்ம்" என்று அர்த்தம்!!!}

ஞாயிறு, மார்ச் 02, 2014

குழந்தைகளின் விருப்பமும், தேவையும்...



      குழந்தைகள் எல்லாவற்றையும் கேட்கும் இயல்புடையவர்கள்! அவர்களுக்கு அது தேவையா (NEED)? இல்லை வெறும்-வேண்டலா (WANT)?? என்ற வித்தியாசம் தெரிவதில்லை. "எதைப் பார்த்தாலும்; கேட்கக்கூடாது!" என்ற கண்டிப்போடு வளர்பவர்கள்! தனக்கு தோன்றியது மட்டுமல்ல; எவர் என்ன சொன்னாலும் "எனக்கு வேண்டும்" என்று கேட்கும் தன்மை கொண்டவை குழந்தைகள். இதுபற்றி ஒருவர்-கூறிய அறிவுரையை துணுக்குகள் பகுதியில் வெளியிட்டிருக்கிறேன்; அதன் மூலம், நான் சந்தித்த நிகழ்வுகளில் - வந்த புரிதலை; என்னுடைய பார்வையில் பகிர்வதே இத்தலையங்கத்தின் நோக்கம்! குழந்தைகள் மட்டுமல்ல; பெரியவர்களுக்கும் இது பொருந்தும். என்மகள் "எப்பப்பா?! வருவீங்க??!!" என்று கேட்பதை முன்பே தலையங்கம் மற்றும் புதுக்கவிதையில் சொல்லி இருக்கிறேன்! வெகு-சமீபமாய் "அவள் நீங்கள்; இங்கேயே வந்து இருங்கப்பா!" என்று சொல்ல ஆரம்பித்தாள்! எனக்கு சுருக்கென்றது; சரியென்று, வழக்கம்போல் சமாளித்து வந்தேன்.

      பின் ஒரு நாள் "இங்கேயே வந்து இருங்கப்பா! செலவுக்கு தாத்தாவிடம் பணம் வாங்கிக் கொள்ளுங்கள்!!" என்றாள். என் மனது கனக்க ஆரம்பித்தது; இது அவளின் சுய-சிந்தனை அல்ல! என்பதால் யார் சொன்னது? என்றேன்; "இன்னாரென்று" சொன்னாள். இது பலகுடும்பங்களில் சாதரணமாய் நடக்கும் விசயம் தான்; ஆனால், அதிலிருக்கும் ஆபத்தைத்தான் இங்கே விளக்க முயற்சித்திருக்கிறேன். நிறைய குடும்பங்களில் "கணவனும்/மனைவியும்" தத்தம் தேவைகளை குழந்தைகள் மூலமாய் கேட்பது வழக்கம்; இது(வே) தவறென்றாலும், (ஓரளவிற்கு)ஏற்புடையதே! ஆனால், அது குழந்தைகளின் தேவை என்பதாய்; குழந்தைகளை(யே) கேட்க வைக்கும் போது - மிகவும் ஆபத்தானதாய் ஆகிறது! குடும்பத்தினரும் - குழந்தையின் பெற்றோர்களிடம் சொல்லவேண்டியதை - குழந்தைகள் மூலமாய், சொல்ல முயற்சிப்பர்! சமுதாயமும் அப்படி செய்யும்!! அது "பல சிக்கல்களை" குழந்தைகளின் மனதில் தீய-எண்ணங்களை விதைப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவதில்லை!!!

         மற்றவர்களிடம் பணம்-வாங்கி வாழ்வது "தன்னப்பனுக்கு; எத்தனை அவமானமானது?!" என்பது புரியும் வயதிருந்திருப்பின், என்மகளே பதிலளித்திருப்பாள்! எனவே, அவளிடம் "விழி-பாப்பாவுக்கு தேவையானதெல்லாம் செய்ய அப்பாவுக்கு நிறைய-பணம் வேண்டும்மா! அதற்குதான் இங்கே இருக்கிறேன்!" என்று பொறுமையாய் சொன்னேன்.  பின் ஓரிரு வாரங்கள் கழித்து "அப்பா! வீடு வாங்குங்கப்பா!" என்றாள்! அவள் மனதில் தவறான எண்ணம்/தவறான விதத்தில் விதைக்கப்படுகிறது என்பது புரிந்தது. "அப்பாக்கிட்ட பணம் இருக்கும்மா! அம்மா தான்; இருக்கற பணத்தை எல்லாம் போட்டு, இப்போதைக்கு வீடு வாங்கவேண்டாம்! என்றாள்" என்றேன். "அப்படியாம்மா?! என்று" என்னவளிடம் உறுதிசெய்து கொண்டாள். ஆயினும் "இனம் புரியாத ஆசையில்", மீண்டும் "எப்பப்பா வீடு வாங்குவீங்க!" என்றாள். "வீடு வாங்கினால்; நீ அங்க போயி தனியா இருப்பியா?!"ம்மா என்று நான் கேட்க; "எப்படி தனியாய் அங்கே போயி இருப்பேன்?!" என்று அவள்; சொன்னவரிடம் கேட்டாள்!

       என்மகளின் கேள்விகளில்; அவளின் தேவை இல்லை! அவளின் விருப்பமும் இல்லை!! மேலே குறிப்பிட்டபடி "அவள் ஒரு தொடர்பு-கருவி (Communication Tool)"; அவ்வளவே!!!  இவைகளுக்கு பின்னால் இருக்கும் "நடைமுறை சிக்கல்களை" புரிந்துகொள்ள; என்மகளுக்கு "வயசும் இல்லை; அது அவளுக்கு அவசியமும் இல்லை!" ஆனால், இது அவளுக்கு ஏமாற்றத்தை கொடுக்கக்கூடும்! இதுபோல், பல"முள்மரங்கள்(தீய-எண்ணங்கள்) பல-விதங்களில்;  பல-குழந்தைகளுக்குள் (நிலத்தில்) விதைக்கப் படுகிறது. "இயலாமை காரணமாய்" தான் உறவுகளும்/சமுதாயமும் அப்படி செய்கின்றன என்பது புரிகிறது! பிஞ்சு-உள்ளங்களில் "முள் மரங்களாய்" அத்தீய-எண்ணங்கள் வேரூன்றுவது(ம்) அவர்களுக்கு தெரிவதில்லை!! தெரிந்தால், செய்யமாட்டார்கள்!!!  வள்ளுவனின் "இளைதாக முள்மரம் கொல்க" நினைவில் வந்தது! இந்த முள்மரங்கள் பிள்ளைகளில்(நிலத்தில்) இருந்து அகற்றப்பட்டே ஆகவேண்டும்; ஆனால், நிலத்திற்கு தீங்கேதும் நேரக்கூடாது. அணுகுமுறையில் மிகப்பெரிய பொறுமை வேண்டும்!

         உலகம் மிகவும் சூட்சுமமானது: இவைகளின் காரணத்தை ஆராய்ந்தால்; "(எனக்/எங்களுக்)கேதும் தெரியாதே; உன்பிள்ளை பொய் சொல்கிறது!" என்று சொல்லும். நல்ல பெற்றோர்களுக்கு "பிள்ளைகளின் பொய்; உடனடியாய் தெரியும்! நான் மிக-நல்ல அப்பன்!!" பிள்ளைகள் விளை(யவேண்டிய)நிலங்கள்; பயிரினூடே(நன்னடத்தை) "முள்மரங்களும்/களைகளும்(தீய-எண்ணங்கள்)" இருக்கவே கூடாதென்றால்; "நிலங்கள் தரிசாய்(பயனற்று)"தான் இருக்கும்!! களையெடுத்து தான் பயிர் வளர்க்கமுடியும்! அதற்கு, நிலமும்/பயிரும் "சிறிது காய்ச்சலை(பெற்றோரின் பிரிவு)" தாங்கும் வலிவு பெறவேண்டும். என்நிலம்(என்மகள்) என் உயிர்! அதைப் பற்றிய அக்கறை; எனக்கு அதிகமாய் இருக்கவேண்டும்! பிள்ளைகள் கேட்டவுடனே அவைகளை-செய்துவிட்டு; நாளை, ஏதேனும் தவறு நேர்ந்தால் "குழந்தை சொன்னால், உனக்கு எங்கே போச்சு புத்தி?!" என்றும் இந்த உலகம் கேட்கும்! எனவே, குழந்தைகளின் விருப்பம் எதுவாய் இருப்பினும்; அவர்களின் "தேவை" என்னவென்பதில்...


"நமக்கு" தெளிவிருப்பின்... முள்மரமும் வேரறுக்கப்பட்டு; நிலமும் தழைத்தோங்கும்!!!

என்மகளின் ஒப்பீடு!!!



நாளை...
"என்மகளும்" ஒப்பிடுவாளே?!
என்ற "பயத்தில்";

இன்றே...
உறதி-பூண்டேன்; எல்லாவற்றிலும்
"என்மருமகனை" காட்டிலும்;
தரம்-தாழ்ந்திருக்க!!!

"டூ-வீலர்" கனவு...


     90-களின் இறுதியில், டூ-வீலர் வாங்க வேண்டுமென்பது என் வாழ்நாள் இலட்சியம்! அதுவும், "ஹோண்டா-ஸ்பிளென்டர்" என்னுடைய முதல்-விருப்பமாய் இருந்தது; அதிலும், இடது-புகைப்படத்தில் உள்ள அதே "மாடல்" மற்றும் நிறத்தில் வேண்டுமென்ற ஆசை. அந்த வயதும் (26/27) அதற்கு பெரிதும்-பொருத்தமாய் இருந்த காலம்!! எப்படியோ என்னப்பனை நச்சரித்ததன் விளைவாய், மிகுந்த பிரச்சனைக்கு இடையிலும், அவர் 20,000 உரூபாய் கொடுத்தார். அதை வைத்துக்கொண்டு திருச்சியில் ஒவ்வொரு "டீலராய்" சென்று விசாரிக்க; விலை பகீரென்றது! என்னதான், என்னப்பன் "லோனில்"ஆவது வாங்கிக்கொள்ளப்பா! என்று சொன்னாலும்; என்மனது அதற்கு சம்மதிக்கவில்லை! சரியென்று என் அடுத்த விருப்பமான "யமஹா RX100" ஒன்றை இரண்டாவது-கையாய் (Second-Hand) வாங்க - விலை எல்லாம் பேசி "ட்ரையல்" பார்க்கும்போது - வண்டியில் ஏதோ குறையிருப்பதாய் பட்டதால், வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

      பின்னர், நண்பனொருவன் "புல்லெட்"வண்டி (வலது புகைப்படம்) வாங்கலாம் என்று சொல்ல - யோசிக்க ஆரம்பித்தேன். எனக்கு அந்த வண்டியும் மிகவும்-பிடிக்கும் எனினும், விலை காரணமாய் தான் அதை தவிர்த்து வந்தேன். சரியென்று, திருச்சி-ஐயப்பன் கோவில் பின்புறம் இருந்த(இருக்கும்?!) "டீலரிடம்" சென்று விசாரிக்க "மயக்கமே" வந்துவிட்டது! பின், நண்பன் "இரண்டாவது-கையாய்" வாங்கலாம் என்று  "ஐடியா" கொடுத்தான்; சரியென்று, அதற்கான முயற்சியில் இறங்கியபோது - நண்பனுக்கு அவசரமென்று ஒருபகுதி பணத்தை கொடுக்கவேண்டியதாயிற்று! அப்படியே, இருந்த பணம் முழுதும் கொடுத்துவிட்டேன். ஒருவாறாய், அவன் ஒருவர் மூலம் பணத்தை திருப்பி கொடுத்தனுப்பிய போது, அதை வாங்க உடன் வந்த நண்பருக்காய் - அந்த பணத்தை மீண்டும் கொடுக்கவேண்டியதாயிற்று! இப்படியாய், இன்றுவரை எனக்கென்று ஒரு "டூ-வீலர்" கூட வாங்கமுடியாது போயிற்று! அப்படி என்னதான்...

"எனக்கும் டூ-வீலருக்கும்" இருக்கும் இராசியோ? தெரியவில்லை!!! 

பின்குறிப்பு: 2012-ல் என்னவள் "டூ-வீலர்" வேண்டுமென்றபோது உடனே "முழுப்பனததையும்" செலுத்தி வாங்கிக் கொடுத்தேன். என்னதான், போர்ச்சுக்கல் நாட்டில் இருந்தபோதும்; இங்கே அபு-தாபியிலும் "Honda Accord" மகிழ்வுந்து வாங்கி இருப்பினும் - இன்னமும் கூட என் "டூ-வீலர்" கனவு நிறைவேறவே இல்லை! இன்று நினைத்தால் கூட என்னால் - இப்போதைய என் விருப்பமான "Royal Enfield" வாங்கமுடியும்; ஆனால், வாங்கி எங்கே நிறுத்திவிட்டு/எவரிடம் பொறுப்பு கொடுத்து வருவது என்ற குழப்பத்தில் - எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை!!!

ஐபேடும்; என்மகளும்...



    சென்றமுறை என்மகள் அபு-தாபி வந்திருந்தபோது - அவளுக்கு "Lenova Tab" ஒன்று வாங்கிக்கொடுத்தேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது! அதை, அவளும் ஒழுங்காய் பாதுகாத்து வருகிறாள். என்னுடைய "iPad Mini"யை அவ்வப்போது அவள் கேட்பது வழக்கம்; நானும், எந்த மறுப்பின்றி கொடுப்பேன். அவளும், அதை ஜாக்கிரதையாய் கையாண்டு திரும்பக் கொடுத்து விடுவாள். என்தமக்கை கூட; என்மகள் அதை கையாளும்-விதத்தை பார்த்துவிட்டு "விழியை விட வயசான பசங்க கூட, அதை லொட்டு-லொட்டுன்னு தட்டி-தாண்டா விளையாடுதுங்க! ஆனா, விழி அதை அவ்வளவு மென்மையாய் செய்யுதுடா!" என்று புகழாகரம் சூட்டினார். ஆனால், என் மனதுள் "பின்ன?! என்னவள் எனக்கு வாங்கிக்கொடுத்த Samsung Omina-IIவை; Stylus-ஐ வச்சு குத்தி-குத்தியே வீனடித்தவல் அல்லவா??!!" என்று  ஓடியது. ஒவ்வொரு முறையும், அவளை கண்டித்து சொல்லிக்கொடுத்த விசயம் எனக்கல்லவா தெரியும்?! என்று எண்ணினேன். ஆனாலும், என்தமக்கையிடம் அதை கூறவில்லை!

      ஓர்நாள் என்தமக்கை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தபோது "iPad Mini"ஐ கீழே போட்டுவிட்டாள்! அருகிலேயே இருந்ததால், உடனே கவனித்து விட்டேன்; நான் பார்த்துவிட்டேன் என்று தெரிந்ததும் "உடனே! அழ ஆரம்பித்துவிட்டாள்; வழக்கத்திற்கு மாறாய் கண்ணில்-கண்ணீர் வேறு!!" நான் ஒன்றுமே சொல்லவில்லை; சிறிதாய் அதட்டக்கூட வில்லை! சரிம்மா! பரவாயில்லை விடு என்றேன். அவள் "ஸாரி ப்பா!" என்றாள்; அவளை இறுகி-அணைத்துகொண்டு பரவாயில்லை விடும்மா என்றேன். இப்போது என் மனதுள் இப்படி தோன்றியது: "உன்னைவிடவாடி?! 20,000 உரூபாய் பொருள் எனக்கு பெரிது; விடுடி குட்டி!" என்று சொல்லவேண்டும் போல் தோன்றியது; ஆனால், என்மகளிடம் அப்படி சொல்லவில்லை. "தன்னப்பன் - ஒரு பொருளை வீணடித்தால் அடிப்பான்!" என்ற எண்ணம் போதும்; அவளை தண்டிக்கவேண்டிய அவசியம் இல்லை! மேலும் அவள் வெண்டுமென்று அப்படி செய்யவில்லை. நாம்... தெரிந்தே கோபத்தில் பல பொருட்களை போட்டுடைக்கும்போது...

நம் மழலைகள் தெரியாமல் சில-பொருட்களை உடைப்பதில் எந்த தவறுமில்லை!!!