ஞாயிறு, மார்ச் 30, 2014

விஜயகாந்த் எனும் அரசியல்வாதி...



        சமீபத்தில் முகநூல்-நட்பு ஒருவர் விஜயகாந்த்தைப் பற்றி என் "மானசீக குரு"திரு. பாலகுமாரன் அவர்கள் சொன்னதாய் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்! அது எத்தனை உண்மையான தகவல் என்பது எனக்கு தெரியாது! எனினும், அந்த புகைப்படத்தை வெளியிட்டு நானும் ஒரு பதிவிட்டிருந்தேன்; அதை இங்கே துணுக்குகள் பகுதியிலும் வெளியிட்டு இருக்கிறேன். வழக்கமான, திரு. பாலகுமாரனின், எழுத்தாதிக்கம் அதிலும் இருந்து. நான் முன்பே "என்ன விதமான அரசியல் இது???" என்ற தலையங்கத்தில் விஜயகாந்த் பற்றி பலரும் "தவறாய்"விமர்சிப்பவற்றை சுட்டி காட்டியிருக்கிறேன். அங்கே, விஜயகாந்தின் செயலை கண்டித்ததோடு - அந்த நிகழ்வு சார்ந்த என் பார்வையை பதிந்திருந்தேன். நான் வெளிப்படையாய் சொன்னதில்லை எனினும், விஜயகாந்த் மீது எப்போதும் ஒரு சிறு-அபிமானம் உண்டு. என்னுடைய பதிவை பார்த்துவிட்டு என்னுடைய நட்புகள் இருவர் - விஜயகாந்தின் செய்கைகள் பற்றி என்னுடன் முகநூலில் விவாதித்தனர்.

          என்னுடைய பதிவையும், எங்கள் விவாதங்களையும் இந்த இணைப்பில் காணலாம்!  ஒரு நண்பர் அவர் குடித்துவிட்டு வருகிறார் என்று கூறினார்! நான் "அவரு, குடிச்சுட்டு வர்றாருங்கறதே ஒரு "அரசியல் குற்றச்சாட்டு"! உனக்கும் எனக்கும் உண்மை தெரிய வாய்ப்பில்லைன்னு"  சொன்னேன். அப்படியே, ஒருமுறை நடந்திருந்தாலும் - எப்போதும் அப்படி வரும் அளவுக்கு மோசமான ஆளா எனக்கு தெரியல! கண்ணு-செவப்பா இருக்குங்கறதுக்காக ஒருத்தர குடிகாரன்னு சொல்ட்றது நியாயமில்லை! என்றேன். அதுபோன்றே, அவர் தன்  மனைவி/மச்சான் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதான குற்றச்சாட்டு! நான் "பலரும்; தன் பிள்ளைகள்? மருமகன்கள்? மருமகன்களின் பிள்ளைகள்?..." என்று முக்கியத்துவம் கொடுப்பதை சுட்டிக்காட்டினேன்.  மேலும், "என்னால, உனக்கு ஏதாவது ஒரு வேலை/பதவி வாங்கித்தர முடியும்னா நான் கண்டிப்பா செய்வேன்! அப்படித்தான் நீயும்..." நமக்கு நட்பு அடிப்படைன்னா?! அவர்களுக்கு உறவுகள் அடிப்படை... என்றேன்!

          இன்னுமொரு நட்பு, தலைவர் என்பவர் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார்! உண்மை தான்; அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! ஆனால், விமர்சனம் என்பது "தனி நபர்" சார்ந்தோ; பொய்யாகவோ இருக்கக்கூடாது!! அப்படிப்பட்ட விமர்சனங்களைப் பொருத்துக்கொள்ளும் தலைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் - எல்லா வரலாற்றையும் சேர்த்தே! எனவே, திரு. விஜயகாந்த் என்னவோ "ஒற்றை ஆள்" என்பதாய் பிரதிபலிக்கவேண்டாம் என்பதே என் கருத்து! அதே போல், தருமபுரி சம்பவம் எனக்கும் சிறிது அதிர்ச்சி தான்! ஆனால், அங்கே 2 விசயங்கள் உள்ளன: 1. (எனக்கு தெரிந்து)அந்த வேட்பாளர் அந்த நிகழ்ச்சியை பெரிது-படுத்தி பேசவில்லை: 2. பின் ஏன் இந்த ஊடகங்கள் அதை அத்தனை பெரிதுபடுத்தின?! - இது ஒரு அரசியல்! விஜயகாந்த் போன்ற ஒருவர் எந்த முன்னனுபவும், எந்த அடிப்படையும் இல்லாது ஒரு புதுக்கட்சியை ஆரம்பித்து நடத்தும்போது "தருமபுரி சம்பவம்" போன்று நடப்பவை தவிர்க்க முடியாதவை!

      ஆனால், அது ஆரம்ப காலம்; அவரிடம் படிப்படையான மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன!  இங்கே இருக்கும் 2 "பாரம்பரியமான"கட்சிகள்  - இதை விட கேவலமான விசயங்கள் எல்லாம் செய்தவர்கள்/ செய்து வருபவர்கள்! ஒரு முன்னாள்-முதலமைச்சரை "பெண்மணி என்றும் "பாராமல் இத்தனை ஜோடி செருப்புகள்"வைத்திருந்தார் என்பதை "மீண்டும், மீண்டும்"வீடியோவாய் காண்பித்தது எத்தனை "தரம்-தாழ்ந்த விமர்சனம்"?! நான் பலரிடமும், இப்படித்தான் விளக்கம் கொடுப்பேன்: என்மகளுக்கு 8-மாத வயதிருந்தபோது (நடக்க கூட தெரியாத அவளுக்கு) 18-ஜோடிக்கும் மேல் செருப்புகள் இருந்தன! என்னைப்போன்ற சாதாரணமான ஒருவனே அத்தனை ஜோடி-செருப்புகள் வாங்கும்போது; முதலமைச்சராய் இருந்த பெண்மணியிடம் இருந்ததில் என்ன ஆச்சர்யம்?! அதே போல் அந்த பெண்மணி மீண்டும் முதலமைச்சராய் வந்தபோது, பதிலுக்கு அந்த முன்னாள்-முதல்வரை நள்ளிரவில் கைது-செய்த அநாகரிகம்!

         அந்த அநாகரிக செயலையும்; "கொல்றாங்க! கொல்றாங்க!!" என்று டப்பிங் கொடுத்து நடந்த நாடகம் அதை-விட-அநாகரிகம்! இவையெல்லாம், பொதுவாழ்வில் இருக்கும் அந்த பாரம்பரிய-தலைவர்களின் பொறுமையின்மையை காட்டவில்லையா?! விஜயகாந்த் மிகவும் நல்லவர் என்பது என் வாதம் அல்ல; நான் இங்கே அவருக்காய் பிரச்சாரமும் செய்யவில்லை! நேற்று முகநூலில் "விஜயகாந்தின் காமெடி கலாட்டா! பாகம்-2" என்ற காணொளியை பார்க்க நேர்ந்தது; இந்த தலையங்கத்திற்காய் எனக்கேதும் உருப்படியான தகவல் கிடைக்கும் என்று பார்த்தேன். ஆனால், அந்த அசிங்கத்தை என்னால் பாதி கூட பார்க்கமுடியவில்லை! அதில், விஜயகாந்தின் செய்கைகளை மட்டும் காண்பித்து; அதற்கு அவரை சென்ற தேர்தலில் எதிர்த்த அந்த நகைச்சுவை-நடிகரின் "திரைப்பட டையலாக்கை" வைத்துள்ளனர்! இதில் என்ன காமெடி இருக்கிறது? உண்மையாய் அவர் என்ன பேசினார் என்பதை காண்பிப்பது தானே நியாயம்?!

        இன்னொரு காட்சியில், திரு. வைகோ அவர்களின் பக்கத்தில் அமர்ந்து விஜயகாந்த் ஏதோ அவரின் கட்சிக்காரரிடம் பேசும் செய்கையை மட்டும் காண்பித்து மீண்டும் அந்த நகைச்சுவை நடிகரின் டையலாக்கை தவறான விதத்தில் சித்தரித்துள்ளனர். திரு. வைகோ அவர்களின் முகபாவனையில்; அவர் விஜயகாந்த் பேசியதை வெகுவாய் இரசிப்பது அப்பட்டமாய் தெரிகிறது! பின், ஏன் அம்மாதிரி தவறாய் சித்தரிக்க வேண்டும்?! என்ன பேசினார் என்பதை அப்படியே காண்பிப்பது தானே நியாயம்?! பெரும்பான்மையில், இதுபோன்ற தவறான விமர்சனங்கள் தான் விஜயகாந்த் பற்றி இருக்கிறது என்பதே என் எண்ணம்! அதைத்தான், மேற்கூறிய திரு. பாலகுமாரன் அவர்களின் விளக்கமும் உணர்த்துகிறது! இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நன்கு படித்தவர்கள் தான் இப்படிப்பட்ட தவறான-விமர்சனங்களை உருவாக்குகின்றனர்! அதை, பகிர்பவர்களும் நன்கு படித்தவர்களே!! இதைத்தான் என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை!!

           திரு. பாலகுமாரன் அவர்கள் சொல்லி இருப்பது போல், விஜயகாந்தின் கோபத்தில் ஒரு உண்மை இருக்கிறது. தவறென்றால், என் கட்சிக்காரர் செய்தாலும், உடனே கண்டிப்பேன் என்ற நியதி இருக்கிறது! ஓட்டுக்காய் எதையும் பொறுத்துக்கொள்ளும் "மற்ற தலைவர்களின்" நாடகத்தன்மையும்/ நடிப்பும் அவரிடம் இல்லை! அதனால் தான், அவரின் செயல்களில் உண்மையான/ நியாயமான கோபம் நிதர்சனமாய் தெரிகிறது!! இவர்களைப் போன்றோர்களை "நாம் தலை மீது வைத்து கொண்டாடவில்லை எனினும்; தவறுதலாய்-தலையில் கொட்டாமலாவது" இருக்கலாமே?!" கூட்டணியில் இருந்துகொண்டே, நியாயமான எதிர்க்கட்சி தலைவராய்; அதிலும், அந்த வீரப்பென்மணியை எதிர்த்து செயல்படும் அவரின் பயமின்மையை நாம் கண்டுகொள்ள தவறக்கூடாது. மீண்டும் சொல்கிறேன்... இது விஜயகாந்துக்கு ஆதரவானதும் அல்ல; நான் இங்கே ஓட்டும் சேகரிக்கவில்லை! ஆனால், நான் ஓட்டளித்தால்...

அது "விஜயகாந்திற்கே" என்பதில் என்ற மாற்றமும் இல்லை!!!

பின்குறிப்பு: எடுத்துக்கொண்ட தலைப்பின் காரணமாய்/அதை தெளிவாய் விளக்கவேண்டிய கட்டாயத்தால்; வெகுநாட்களுக்கு பிறகு நீளமான-தலையங்கம் எழுத நேர்ந்துவிட்டது! முடிந்த அளவில்; அதை மென்மேலும் படித்துபார்த்து சுருக்கி இருக்கிறேன். எனினும், நீளமாய் எழுத நேர்ந்ததற்கு பொறுத்தருளவும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக