ஞாயிறு, மார்ச் 02, 2014

குழந்தைகளின் விருப்பமும், தேவையும்...



      குழந்தைகள் எல்லாவற்றையும் கேட்கும் இயல்புடையவர்கள்! அவர்களுக்கு அது தேவையா (NEED)? இல்லை வெறும்-வேண்டலா (WANT)?? என்ற வித்தியாசம் தெரிவதில்லை. "எதைப் பார்த்தாலும்; கேட்கக்கூடாது!" என்ற கண்டிப்போடு வளர்பவர்கள்! தனக்கு தோன்றியது மட்டுமல்ல; எவர் என்ன சொன்னாலும் "எனக்கு வேண்டும்" என்று கேட்கும் தன்மை கொண்டவை குழந்தைகள். இதுபற்றி ஒருவர்-கூறிய அறிவுரையை துணுக்குகள் பகுதியில் வெளியிட்டிருக்கிறேன்; அதன் மூலம், நான் சந்தித்த நிகழ்வுகளில் - வந்த புரிதலை; என்னுடைய பார்வையில் பகிர்வதே இத்தலையங்கத்தின் நோக்கம்! குழந்தைகள் மட்டுமல்ல; பெரியவர்களுக்கும் இது பொருந்தும். என்மகள் "எப்பப்பா?! வருவீங்க??!!" என்று கேட்பதை முன்பே தலையங்கம் மற்றும் புதுக்கவிதையில் சொல்லி இருக்கிறேன்! வெகு-சமீபமாய் "அவள் நீங்கள்; இங்கேயே வந்து இருங்கப்பா!" என்று சொல்ல ஆரம்பித்தாள்! எனக்கு சுருக்கென்றது; சரியென்று, வழக்கம்போல் சமாளித்து வந்தேன்.

      பின் ஒரு நாள் "இங்கேயே வந்து இருங்கப்பா! செலவுக்கு தாத்தாவிடம் பணம் வாங்கிக் கொள்ளுங்கள்!!" என்றாள். என் மனது கனக்க ஆரம்பித்தது; இது அவளின் சுய-சிந்தனை அல்ல! என்பதால் யார் சொன்னது? என்றேன்; "இன்னாரென்று" சொன்னாள். இது பலகுடும்பங்களில் சாதரணமாய் நடக்கும் விசயம் தான்; ஆனால், அதிலிருக்கும் ஆபத்தைத்தான் இங்கே விளக்க முயற்சித்திருக்கிறேன். நிறைய குடும்பங்களில் "கணவனும்/மனைவியும்" தத்தம் தேவைகளை குழந்தைகள் மூலமாய் கேட்பது வழக்கம்; இது(வே) தவறென்றாலும், (ஓரளவிற்கு)ஏற்புடையதே! ஆனால், அது குழந்தைகளின் தேவை என்பதாய்; குழந்தைகளை(யே) கேட்க வைக்கும் போது - மிகவும் ஆபத்தானதாய் ஆகிறது! குடும்பத்தினரும் - குழந்தையின் பெற்றோர்களிடம் சொல்லவேண்டியதை - குழந்தைகள் மூலமாய், சொல்ல முயற்சிப்பர்! சமுதாயமும் அப்படி செய்யும்!! அது "பல சிக்கல்களை" குழந்தைகளின் மனதில் தீய-எண்ணங்களை விதைப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவதில்லை!!!

         மற்றவர்களிடம் பணம்-வாங்கி வாழ்வது "தன்னப்பனுக்கு; எத்தனை அவமானமானது?!" என்பது புரியும் வயதிருந்திருப்பின், என்மகளே பதிலளித்திருப்பாள்! எனவே, அவளிடம் "விழி-பாப்பாவுக்கு தேவையானதெல்லாம் செய்ய அப்பாவுக்கு நிறைய-பணம் வேண்டும்மா! அதற்குதான் இங்கே இருக்கிறேன்!" என்று பொறுமையாய் சொன்னேன்.  பின் ஓரிரு வாரங்கள் கழித்து "அப்பா! வீடு வாங்குங்கப்பா!" என்றாள்! அவள் மனதில் தவறான எண்ணம்/தவறான விதத்தில் விதைக்கப்படுகிறது என்பது புரிந்தது. "அப்பாக்கிட்ட பணம் இருக்கும்மா! அம்மா தான்; இருக்கற பணத்தை எல்லாம் போட்டு, இப்போதைக்கு வீடு வாங்கவேண்டாம்! என்றாள்" என்றேன். "அப்படியாம்மா?! என்று" என்னவளிடம் உறுதிசெய்து கொண்டாள். ஆயினும் "இனம் புரியாத ஆசையில்", மீண்டும் "எப்பப்பா வீடு வாங்குவீங்க!" என்றாள். "வீடு வாங்கினால்; நீ அங்க போயி தனியா இருப்பியா?!"ம்மா என்று நான் கேட்க; "எப்படி தனியாய் அங்கே போயி இருப்பேன்?!" என்று அவள்; சொன்னவரிடம் கேட்டாள்!

       என்மகளின் கேள்விகளில்; அவளின் தேவை இல்லை! அவளின் விருப்பமும் இல்லை!! மேலே குறிப்பிட்டபடி "அவள் ஒரு தொடர்பு-கருவி (Communication Tool)"; அவ்வளவே!!!  இவைகளுக்கு பின்னால் இருக்கும் "நடைமுறை சிக்கல்களை" புரிந்துகொள்ள; என்மகளுக்கு "வயசும் இல்லை; அது அவளுக்கு அவசியமும் இல்லை!" ஆனால், இது அவளுக்கு ஏமாற்றத்தை கொடுக்கக்கூடும்! இதுபோல், பல"முள்மரங்கள்(தீய-எண்ணங்கள்) பல-விதங்களில்;  பல-குழந்தைகளுக்குள் (நிலத்தில்) விதைக்கப் படுகிறது. "இயலாமை காரணமாய்" தான் உறவுகளும்/சமுதாயமும் அப்படி செய்கின்றன என்பது புரிகிறது! பிஞ்சு-உள்ளங்களில் "முள் மரங்களாய்" அத்தீய-எண்ணங்கள் வேரூன்றுவது(ம்) அவர்களுக்கு தெரிவதில்லை!! தெரிந்தால், செய்யமாட்டார்கள்!!!  வள்ளுவனின் "இளைதாக முள்மரம் கொல்க" நினைவில் வந்தது! இந்த முள்மரங்கள் பிள்ளைகளில்(நிலத்தில்) இருந்து அகற்றப்பட்டே ஆகவேண்டும்; ஆனால், நிலத்திற்கு தீங்கேதும் நேரக்கூடாது. அணுகுமுறையில் மிகப்பெரிய பொறுமை வேண்டும்!

         உலகம் மிகவும் சூட்சுமமானது: இவைகளின் காரணத்தை ஆராய்ந்தால்; "(எனக்/எங்களுக்)கேதும் தெரியாதே; உன்பிள்ளை பொய் சொல்கிறது!" என்று சொல்லும். நல்ல பெற்றோர்களுக்கு "பிள்ளைகளின் பொய்; உடனடியாய் தெரியும்! நான் மிக-நல்ல அப்பன்!!" பிள்ளைகள் விளை(யவேண்டிய)நிலங்கள்; பயிரினூடே(நன்னடத்தை) "முள்மரங்களும்/களைகளும்(தீய-எண்ணங்கள்)" இருக்கவே கூடாதென்றால்; "நிலங்கள் தரிசாய்(பயனற்று)"தான் இருக்கும்!! களையெடுத்து தான் பயிர் வளர்க்கமுடியும்! அதற்கு, நிலமும்/பயிரும் "சிறிது காய்ச்சலை(பெற்றோரின் பிரிவு)" தாங்கும் வலிவு பெறவேண்டும். என்நிலம்(என்மகள்) என் உயிர்! அதைப் பற்றிய அக்கறை; எனக்கு அதிகமாய் இருக்கவேண்டும்! பிள்ளைகள் கேட்டவுடனே அவைகளை-செய்துவிட்டு; நாளை, ஏதேனும் தவறு நேர்ந்தால் "குழந்தை சொன்னால், உனக்கு எங்கே போச்சு புத்தி?!" என்றும் இந்த உலகம் கேட்கும்! எனவே, குழந்தைகளின் விருப்பம் எதுவாய் இருப்பினும்; அவர்களின் "தேவை" என்னவென்பதில்...


"நமக்கு" தெளிவிருப்பின்... முள்மரமும் வேரறுக்கப்பட்டு; நிலமும் தழைத்தோங்கும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக