ஞாயிறு, மார்ச் 09, 2014

நண்பன் ""தண்டபாணி"யின் வீணடிக்கப்பட்ட திறமைகள்...

{திருப்பாலப்பந்தால் என்ற என்கிராமத்தில்; 
எங்கள்-வீட்டின் நேரெதிர் வீட்டிலிருக்கும் என்நண்பன்!

           இந்த வார தலையங்கம் - என் "பால்ய/பள்ளி" நண்பன் தண்டபாணியைப் பற்றியது! அவர்/இவர் என்பது சபை-நாகரீகமாய் இருக்கும் எனினும், இதுபோன்ற நண்பனைப் பற்றி எழுதும்போது அவன்/இவன் என்பதே உண்மையாய் இருக்கும். நான், இங்கே உண்மையாய் இருக்க ஆசைப்படுகிறேன்! இது, அவனின் புகழ் பாடும் விசயமல்ல; அவனின் வீணடிக்கப்பட்ட திறமைகளைப் பற்றியது! நான் சொல்லப்போகும் இத்திறமைகள் அவனுக்கே தெரிந்திருக்குமா என்பது அதிசயமே! ஆனால், நான் பலமுறை அவனின் அத்திறமைகள் பற்றி எண்ணி, வியந்து; பின் அவை வீனடிப்பட்டது கண்டு பொருமியிருக்கிறேன். என்ன செய்வது?! இதுபோன்று விதிவசத்தால்/சூழ்நிலையால் - திறமைகளை  வெளியுலகுக்கு காட்டமுடியாது வீணடிக்கப்பட்டவர்கள் பலர்; நாம் ஒவ்வொருவரும், இதுபோன்ற நபர்களை கடந்து வந்திருப்போம். இனிமேலாவது, இதுபோன்ற எவரேனும் ஒருவருக்கு நம் வாழ்நாளில் நம்மால் ஏதாவது செய்து உதவமுடியுமானால்?! எப்படி இருக்கும்? அதற்காய் தான் இத்தலையங்கம்.

           அவனின், திறமைகளை கூறும் முன் எங்களிடையே நடந்த ஓர்நகைச்சுவை சம்பவம்! "எங்கம்மா-அப்பா கல்யாணத்தப்போ; இருந்தண்டா"என்று நான் அவனுடன் அடிக்கடி வாதிடுவேன். அவனும் என்னென்னவோ?! சொல்லி புரிய வைப்பான்; நான் இல்லையென்று வாதிடுவேன். அவன் சொல்வது உண்மையென்று என்தாய், என்தமக்கை, என்தமையன் சொல்லிக்கூட நான் கேட்டதில்லை; ஏன், என்அம்மாவிடமே - நான் இருந்தேன் என்று வாதிட்டதுண்டு! மீண்டும் அவனுடன் அதே வாக்குவாதம் நடக்கும். என்னுடைய காரணம் இதுதான்: எங்க-வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது போட்டிருந்த பந்தலை பார்த்ததால், நான் திருமணத்தின் போது இருந்தததாய் வாதிடுவேன். என் அன்றைய - மனநிலையில் "திருமணம் என்பது; பந்தல் போடுவது"! என்னுடைய இந்த செயலுக்கு, என் அறியாமையே காரணம் என்பதை நான் ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில்; "அதே காலகட்டத்தில்" அவனுக்கிருந்த அந்த "முதிர்ச்சியை" பாராட்ட முயல்கிறேன்.

       அவனுடைய திறமைகளுள், முதலில் நான் கண்டு வியந்தது - அவனுடைய "சதுரங்கம்" ஆடும் திறமையைப் பார்த்து! இதிலென்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? எங்களுடைய கிராமத்தில் "முதல் பால்-குக்கர்" வாங்கிய சாதனை முதல் பல சாதனைகளை என்தந்தை (என்குடும்பம்) செய்துள்ளது. அதில் ஒன்று, முதன்முதலில் "சதுரங்க"பலகையை என்தமையன் வாங்கியது; என்தமையனுக்கு அதில் நல்ல ஆட்டத்திறமை உண்டு. என்நண்பனுக்கு அந்த ஆட்டம் பற்றி எதுவுமே தெரியாது; என்தமையனிடம் அதைக் கற்று 2 நாட்களில் அவரையே வென்ற அதிசயம் அவன். எனக்கு ஒருவெறி; அவனைத் தோற்கடிக்கவேண்டும் என்று! நானும், என்தமையனிடம் கற்றவன். சில ஆட்டங்களில் தோற்றாலும், அவனை சில ஆட்டங்களில் வென்றிருக்கிறேன். ஆனாலும், அவனுடம் தொடர்ந்து விளையாட எனக்கு பயம்; ஏனெனில், இன்னமும் கூட "சதுரங்க"ஆட்டத்தில் தோற்பதை விரும்பாதவன் நான்.  அந்த பயத்திலேயே அவனுடன் நான் சதுரங்கம் விளையாடுவதில்லை.

       சரியென்று, அவனுடன் "கேரம்-போர்டு" விளையாடத்  துவங்கினேன். எங்களூருக்கு அதுவும், முதல்முறையானது என்பதால்; நான் தான் அவனுக்கு கற்றுக்கொடுத்தேன். நான், அப்போது "கால்லூரி"அளவில் ஆடுவேன் என்பதால், எளிதில் அவனை வென்றுவிடுவேன். ஆயினும், கற்ற ஓரிரு நாட்களில் "என்னைத் திக்குமுக்காட" வைத்தவன் என்பதில் எனக்கு எந்த ஒளிவுமறைவும் இல்லை. கல்லூரி-அளவில் ஆடிய பயிற்சியால், அவனை பலமுறை வென்றுவிடுவேன்; அவன் "சதுரங்கம்" ஆடலாம் என்றழைப்பான். நான், பயத்தில் முடியாதென்பேன்; இருப்பினும், ஓரிரு முறை விளையாடுவேன்! அவன் அசாத்திய திறமைப் படைத்தவன். ஒவ்வொரு முறை நாங்கள் "சதுரங்கம்"ஆடும்போதும் மிகப்பெரிய யுத்தமாய் இருக்கும்; சிலநேரங்களில் நான் "அழுகாச்சி" ஆட்டம் ஆடுவேன்; வேறு வழியில்லை! அவன் திறமை அப்படி. "சீட்டு"விளையாட்டிலும் அப்படியே; "ஸ்கூட்" விட்டுவிட்டு அவன் ஆடுவதை பார்த்தல், அப்படியொரு பிரம்மிப்பாய் இருக்கும்.

       சாதாரணமானோர்க்கு 3-"கார்டில்" ஒன்றுவந்தால் வெற்றி என்றால், அவனிடம் குறைந்தது 5-கார்டில் ஒன்றுவந்தால் போதும் என்ற கணக்கு இருக்கும். ஆட்டம் முடிந்து எண்ணிக்கை சொல்வதிலும் அதே வேகம்/திறமை. மனதால், நான் வேகமாய்/சரியாய் கூட்டுவேன் என்று பலரும் என்னைப் பாராட்டுவர்; ஆனால், அவனின் வேகமும்/துல்லியமும் என்னையே ஆச்சர்யப்படுத்தும்! அவன் நடத்துனராய் பணிபுரிகிறான்; விழுப்புரம்-பாண்டி சாலையில். அந்த சாலையில், பயணிப்போருக்கு தெரியும்; பேருந்தில் எத்தனை கூட்டம் இருக்குமென்று! அதுவும், அவனுடைய பேருந்து பெரும்பாலும் "நெரிசல் நேரத்தில்" இருப்பது. அதிலேயே, அனாவசியமாய் "பயனச்சீட்டுகளை" வெகு-விரைவாய் கொடுத்து கணக்கை முடிப்பான். பலமுறை, அவனுடன் பயணம் செய்து அதை இரசித்திருக்கிறேன். இவைகளை எல்லாம் பார்க்கும்போது; அவைகளை நினைத்து பார்க்கும்போது - என்னுள், பின்வருவது தான் தோன்றும்! என் சிந்தனை முழுக்க, முழுக்க உண்மையானது!!

         இந்த பதிவை அவன் படிப்பானா? இல்லையா?? என்று எனக்கு தெரியாது! அவனுக்கு இணையம்/கணினி எல்லாம் பரிச்சயம் இல்லை என்று நினைக்கிறேன்; ஆனால், கற்றுக்கொடுத்தால் கண்டிப்பாய் ஒரே-நாளில் அசத்துவான். அவனின் மகன்தான் மேலிருக்கும் புகைப்படத்தை கூட அனுப்பினான்; ஒருவேளை, அவன் இதை என்நண்பனுக்கு காண்பிக்கக்கூடும்!  சரியான நேரத்தில், அவனுக்கு படிப்பை தொடர்ந்திட எவரேனும் உதவியிருப்பின், அவன் பல-சிகரங்களை தொட்டிருப்பான். விதிவசத்தால், இப்படி நடப்பதுண்டு! சரியான-திறமையும்/தகுதியும் இல்லாத பலருக்கு - எத்தனை வேண்டுமானாலும், செலவிட ஆட்கள் இருக்கும். இவனைப் போன்றோருக்கு எவருமில்லாது; படிப்பே கூட தடைபடும். அவனுக்கு மிகப்பெரிய தர்க்க-சிந்தனை (Logical Thinking) உண்டு! இம்மாதிரியான சிந்தனைதான் இன்று பலதுறைகளிலும் தேவைப்படுகிறது. கண்டிப்பாய், தண்டபாணி எனும் என்நண்பனுக்கு தக்க நேரத்தில்; எவரேனும் கைகொடுத்திருப்பின்...

சந்தேகம் ஏதுமின்றி; இன்று ஏதேனும் ஒர்துரையில் பெரிதாய் சாதித்திருப்பான்!!! 

பின்குறிப்பு: இது, என் நண்பனின் புகழ்பாடிட அல்ல! இவன் போன்ற பொக்கிஷங்கள் - சூழ்நிலை காரணமாய்; மேற்கொண்டு படிக்க முடியாமல் போகின்றன! இவர்களுக்கு அந்த சூழல் மட்டும் சரியான நேரத்தில் கிடைப்பின்; செயற்கரிய பல செயல்களை செய்வர்! அந்த நேரத்தில், அவனின் படிப்புக்கு உதவும் நிலையில் நானில்லை; இன்று என்னால் முடியும்!! ஆனால், அவனுக்கு அதே வாய்ப்பு கிடைக்குமா?! என்று தெரியவில்லை. இதேபோன்று வேறொரு நண்பனும் உண்டு; அவன் இன்று பெளதிக-ரீதியாய் இல்லை! ஆனால், நானுள்ளவரையில்; என்கிராமம் உள்ள வரையில்; அவன் என் நெஞ்சில் இருப்பான். அவனில்லாத என்கிராமத்தை; என்னால் இன்றும் கூட நினைத்து பார்க்கமுடியாது! அவனைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில்  எழுதுகிறேன். சூழ்நிலையால், இவர்கள் வீணானதை நேராய் கண்டுணர்ந்ததால் - நன்றாய் படிக்கும் பலருக்கும்; என்னால் இயன்ற உதவியை அவ்வப்போது செய்துகொண்டு வருகிறேன்! நீங்களும், இதுபோன்ற ஓரிருவருக்கு உதவிட முயலலாமே?!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக