ஞாயிறு, மார்ச் 16, 2014

நாளைய தலைமுறை யுவதிகளும்; அவர்களின் காதல் புரிதலும்...



              09.03.2014 தேதியில் வெளியான "நீயா? நானா??" நிகழ்ச்சியை பலரும் பார்த்திருக்கக்கூடும்! கண்டிப்பாய், நான் வெகுவாய் இரசித்த விவாதங்களில் ஒன்று. நாளைய பெண்களாய் ஆகவிருக்கும் இந்த தலைமுறையைச் சார்ந்த யுவதிகள் இரண்டு பிரிவுகளாய் பேசினர்: 1. ஒரு பிரிவினர் - காதலே/காதலனே சகலமும் என்போர்; 2. இரண்டாவது பிரிவினர் - காதலும்/காதலனும் எனக்கு முக்கியம்; ஆனால், அது மட்டுமே எல்லாமும் இல்லை என்போர். முதல் பிரிவினர் - முழுக்க, முழுக்க "உணர்வின் விளிம்பில்" நின்று பேசினர். இரண்டாவது பிரிவினர் - முழுக்க, முழுக்க "நடைமுறை சார்ந்த (Practical Oriented)" அடிப்படையில் பேசினர். இரண்டு எல்லைகளும் தவறு என்றாலும், இரண்டு பிரிவினர் பேசிய விதம்; அவர்களின் சிந்தனையும்/பேச்சும் என்னை வெகுவாய் கவர்ந்தது. பெரும்பான்மையில், அவர்களின் காதல் பற்றிய புரிதல் மற்றும் அறிவு-முதிர்ச்சி என்னை திகைப்படைய செய்தது. அதைப் பாராட்டி என்னுடைய பார்வையில் ஒரு தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது.

        இங்கே காதலனை என்ன நடந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்; அவனுக்காய் எதையும் செய்யவேண்டும் என்ற கூற்று தவறு எனினும், இந்த தலைமுறை யுவதிகள் அவ்விதம் பேசியது திகைக்க வைத்தது. திருமணமான பின், அவர்களின் எண்ணம் இதே அடிப்படையில் இருக்குமா என்பது கேள்விக்குறியே! இவர்கள் உணர்வின் விளிம்பில் இருப்பவர்கள்; அப்படி இருப்பவர்களிடம் உண்மையையும்/நடைமுறையையும் சொல்லி புரிய வைப்பது சாத்தியமல்ல! ஆனால், இந்த தலைமுறை யினர் சிறு-விசயங்களுக்கெல்லாம் பெரிய-பிரச்சனைகளை செய்துகொண்டிருக்கும் - அதே காலகட்டத்தில்; நாளைய தலைமுறை இப்படி சிந்திப்பது - ஆரோக்கியமாய் தோன்றியது! ஆனால், அதில் ஓர் பயம் இருக்கிறது/அதனால், பெரிய பிரச்சனையும் நேரக்கூடும். அதை பின்னே விளக்கியுள்ளேன். அதற்கு முன், அந்த பெண்கள் பேசிய விதம்; அவர்கள் காதலை அணுகும் விதம் இன்றைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது "வெகுவான"பாராட்டுதலுக்கு உரியது. 

              அதேபோல், நடைமுறை-சார்ந்த அறிவோடு பேசிய யுவதிகளும்; சற்றும் இளைத்தவர்கள் அல்ல.  அவர்களிடம், ஒரு அடிப்படை புரிதல் இருந்தது; ஆம்! அவன் என் காதலன் தான்; அதனால், அவன் சொல்வதற்கெல்லாம் நான் இனங்கவேண்டியதில்லை என்ற கூற்று பிடித்திருந்தது. அதுவும் "வெகுவான பாராட்டுதலுக்கு" உரியது. ஆனால், கொஞ்சமும் உணர்வு இல்லாதது போல் அவர்கள் பேசியது மிகவும் கவலை அளித்தது; அது பெரும் சிக்கலை உண்டாக்கக் கூடியது! குறைந்தது, இன்னும் 2 தலைமுறைகளுக்காவது "உன் காசு உன்னுடையது; என் காசு என்னுடையது!" என்பது போன்ற மனப்பான்மையில் நம் போன்ற சமூகம் இருப்பது சாத்தியம் இல்லை; மேலும், அது பெரிய-பின் விளைவுகளை ஏற்படுத்தும்! அதே நேரம், என் காதலனை விடவும் - என் குடும்பம் முக்கியம் என்ற அவர்களின் நிலைப்பாடு அதிசயிக்க வைத்தது! அதே-வயதில் உள்ள யுவதிகள் "எதிரே அமர்ந்து" உணர்வின் விளிம்பில் நின்று பேசும்போது; இவர்களால் எப்படி, இப்படி யோசிக்க முடிந்தது?

          நான் அடிக்கடி சொல்வது போல், இந்த தலைமுறையினர் - மிகப்பெரிய சமுதாய-மாற்றம் நிகழும் காலகட்டத்தில் இருப்பவர்கள். ஆணாதிக்கம் என்ற ஒரு அரக்கத்தனத்தின் விளைவாய் நம் மூதாதைய பெண்கள் பட்ட பாட்டை கேட்டு வளர்ந்த பெண்கள் இந்த தலைமுறையினர். ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வியலை சொல்லில்(மட்டுமே) கேட்டாலும்; அதன் தாக்கத்தை உணரமுடிகிறது. மேலும், பெரும்பான்மையில் நம் அம்மாக்கள் அந்த அரக்கத்தின்-கடைநிலையை அனுபவித்தவர்களே. ஆனால், இந்த தலைமுறைப் பெண்களுக்கு - மிகப்பெரிய சுதந்திரம் கிடைத்திருக்கிறது. முந்தைய தலைமுறைகள் பட்ட வன்கொடுமைகளை சொல்லால் கேட்டது மட்டுமல்ல; அதன் இறுதியை பார்த்தவர்களும் கூட! அல்லது அந்த கடைசிதலைமுறை பெண்களே கூறக் கேட்டவர்கள். அதனால், அவர்களுக்கு (நான் முன்பே சொன்னவாறு)இந்த சுதந்திரத்தை எப்படி கையாள்வது என்ற சான்றுகள் இல்லாததால்; முறைதவறி பயன்படுத்தப்படுகிறது.

         இதற்கு, இந்த தலைமுறை பெண்களை மட்டும் குறை கூறுதல் நியாயமன்று! மிகப்பெரிய சமுதாய மாற்றம் நடைபெறும்போது - இதுபோன்ற விளைவுகள் தவிர்க்க முடியாதது!! ஆனால், நான் அடிக்கடி சொல்வது போல் - அந்த கொடுமைகளுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத இந்த தலைமுறை ஆண்கள் பாதிக்கப்படுவது ஏற்கமுடியாதது! ஆனால், அதை சரிவர புரியவைப்பது சிரமம்; இதை கடந்து தான் ஆகவேண்டும். ஆணாதிக்கம் மட்டுமல்ல - இதுபோன்ற பல மாற்றங்களை "1970/80 - களில்" பிறந்த தலைமுறையினர் கடக்க வேண்டியிருக்கிறது. இதை "விதி-என்று சொல்லிவிட்டு கடப்பதே மேல்!" என்று தோன்றுகிறது. வரும் தலைமுறைகள் தான் "இவைகளுக்கு தீர்வாய் இருக்கும்!" என்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு! அதைத்தான் நான் இந்த தலைப்பில் வாதாடிய யுவதிகளிடம் பார்க்க முடிந்தது. கண்டிப்பாக, எதிர்வரும் தலைமுறை(கள்) ஆண்-பெண் (குறிப்பாய், கணவன்-மனைவி) உறவை மிகத்தெளிவாய் உணர்வர் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது எனக்கு! 

         முழுக்க முழுக்க உணர்வுபூர்வமாய் சிந்தித்து பேசியவர்களிடம் - நடைமுறை விசயங்கள் கொஞ்சம் கலக்கவேண்டும் என்பதற்கு ஒரு பெண்ணை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறேன். அது, தான் வரச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்தியதால் "காதலன் இறக்க நேர்ந்து" அதன் காரணமாய் திருமணமே செய்து கொள்வதில்லை என்ற முடிவோடு இருப்பதாய்; சொன்ன ஒரு பெண். அந்த பெண்ணுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை! அந்த பெண்ணின் உணர்வை மதிக்கும் அதே வேளையில் "இல்லை மகளே! உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும்!!" என்று கூறிடவே என் மனம் விரும்புகிறது! கண்டிப்பாய், காலம் அந்த பெண்ணை அதை நோக்கி இட்டுசெல்லும்; ஒருவரை காதலித்துவிட்டு, இன்னொருவரை திருமணம் செய்துகொள்வதில் உள்ள சிக்கலை "துணுக்குகள்" பகுதியில் சமீபத்தில் சுருக்கமாய் சொல்லியிருந்தேன். அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கும் தான்! ஆனால், வாழ்க்கை இதையெல்லாம் கடந்து தான் செல்லவேண்டும் மகளே!

          எதிர்பிரிவில், மேலுள்ள படத்தில் இருக்கும் பெண்ணை உதாரணமாய் எடுத்துக்கொள்கிறேன். அருமையான பேச்சு, அருமையான வார்த்தை பிரயோகம், அருமையான புரிதல். இந்த வயதில், பெரியாரையும்/காமராஜரையும் - அருமையாய் உதாரணமிட்டு பேசிய அந்த அறிவுடன் "ஒரு குழப்பம்" இருப்பது தெளிவாய் தெரிந்தது. நான் இங்கே சொல்லியிருப்பது, எப்படியாவது அந்த பெண்ணை சென்று சேரவேண்டும்! பெரியார் சிந்தனைகளில் பலதும் - இந்த காலகட்டத்திற்கு தேவையில்லாதது மகளே! பெரியாரே இன்றிருந்தால், அவரின் கொள்கைகளில் பலதை மாற்றி சொல்லி இருப்பார். அன்றிருந்த மன-நிலையில் இன்றைய ஆண்கள் இல்லை! அந்த ஆதிக்கத்தின் பிடியில் இன்று பெண்களும் இல்லை!! இங்கே, பலதும் மாறிவிட்டது; அதற்கேற்றாற்போல் உன்சிந்தனையும் மாறவேண்டும் மகளே! இல்லையெனில், வாழ்க்கை சிக்கலாய் ஆகிவிடும்; உன்னுடைய தெளிந்த அறிவினூடே இருக்கும் "இந்த சிறு-குழப்பம்" தீரவேண்டும் மகளே!!

நாளைய தலைமுறை "யுவனாய்" பிறந்திருக்கக்கூடாதா?! என்ற ஏக்கம் வருகிறது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக