"அது-இது-எது" நிகழ்ச்சியின் "சிரிச்சா, போச்சு!" பிரிவை பார்ப்பவர்களுக்கு அமுதவாணன் எனும் கலைஞனை தெரிந்திருக்கும். எனக்கு மிகவும் பிடித்த சின்னத்திரை கலைஞர்களில் ஒருவர்; தொடர்ந்து "சிரிச்சா, போச்சு!" பிரிவில் வரும் நகைச்சுவைகளை பார்த்ததால் மட்டும் அவரை வெகுவாய் இரசிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரின் ஒவ்வொரு ஒப்பனையும், அவரின் மாறுபட்ட நடிப்புத்திறனும், அவரின் "டைமிங்"சென்சும் என்னை வெகுவாய் கவர ஆரம்பித்துவிட்டது. ஒரு நாள் அவர் வேறேதேனும் நிகழ்ச்சிகள் செய்கிறாரா?! என்று தேட ஆரம்பித்தபோது "காமெடியில் கலக்குவது எப்படி?" என்ற நிகழ்ச்சி கண்ணில் பட்டது. பின்னர், அந்த நிகழ்ச்சிகள் பலதையும் அவருக்காகவே பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின்னர், அவரின் "ஜலபுல ஜங்"டீம் செய்யும் நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன். இப்படியாய், அவரின் நிகழ்ச்சிகள் பலதையும் பார்த்துக்கொண்டிருந்த போது அவரின் தொகுப்புகள் என்று தனியே "யூ-டியூபில்" இருப்பதை பார்த்தேன்.
அவரின் அந்த தொகுப்புகளை பார்க்க ஆரம்பித்தபோது தான், அவர் நகைச்சுவை மட்டுமல்ல; நடனம் மற்றும் பல மாறுபட்ட நடிப்பு பரிமாணங்களிலும் அருமையாய் செய்திருப்பது தெரியவந்தது! அதன் பின்னர் தான், அவர் பல ஆண்டுகள் சின்னத்திரையில் இருந்துகொண்டிருப்பது தெரிய வந்தது! எனக்கு தெரிந்து அவர் எந்த திரைப்படத்திலும் நடித்திருப்பதாய் தெரியவில்லை; அதை உணர்ந்ததும், ஏன் அவருக்கு இன்னும் அப்படி வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது! ஒருவேளை, சிவகார்த்திகேயன் போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காததால் பெரிதாய் கவனிக்கப் படவில்லையா?! என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இணையதளங்களில் அவரின் தொகுப்புகளை பார்க்கும் போது பெரிதாய் பிரபலம் அடைந்திருப்பதாய்-தான் தோன்றுகிறது! என்னவோ, அந்த கலைஞனுக்கு வெள்ளித்திரையிலும் பல-வாய்ப்புகள் கிடைத்து; அவரின் திறமைகள் இன்னும் மென்மேலும் வளர்ந்து பலரையும் சென்று சேரவேண்டும் என்ற ஆசை வருகிறது.
என்னுடைய மனமுவந்த வாழ்த்துக்கள்... அமுதவாணன்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக