ஞாயிறு, மார்ச் 23, 2014

பென்சில்/இரப்பர் தொலைப்பது(/திருடுவது)...




       பெரும்பாலான குழந்தைகள் "பென்சிலையும்/இரப்பைரையும்" தொலைத்துவிட்டு அடிக்கடி வீட்டில் திட்டுவாங்குவது அல்லது அடிவாங்குவதை பலரும் பார்த்திருக்கக்கூடும். என்மகள் அப்படி அடிக்கடி தொலைத்துவிட்டு; என்னவளிடம் திட்டு வாங்குவாள்! "ஒருநாளைக்காவது; கொண்டு போறப் பொருளை"சரியா எடுத்துக்கிட்டு வர்றியா?! என்று என்னவள் அடிக்கடி என்மகளை கண்டிப்பாள்! "உங்க அப்பாவுக்கு வசதி இருக்குதுன்னு உனக்கு தேவைக்கு அதிகமா வாங்கிக் கொடுக்கறார், இல்ல?! நீ அப்படித்தான் பண்ணுவ!" என்று எனக்கும் கொஞ்சம் கிடைக்கும். "அவ கேக்கறதெல்லாம் வாங்கிக் கொடுக்காதீங்க; அவளுக்கு பொறுப்பே வராது!" என்று என்னவள் சொல்வாள். நான் அதைப்பற்றி எல்லாம் பெரிதாய் கவலைப்பட்டதில்லை! அதற்கு என்மகள் மேலிருக்கும் "பாசம்; மட்டுமே!" காரணம் அல்ல!! இதற்கு பின்னால் இருக்கும் நானறிந்த உண்மையே அதற்கு முக்கிய காரணம். அதை பலருக்கும் பயன்பட(வே) இங்கே பகிர்ந்துள்ளேன்.

    ஒரு குழந்தை பென்சிலையோ/இரப்பரையோ தொலைத்துவிட்டு வந்தால்; அதற்கு அந்த குழந்தையின் பொறுப்பின்மை(மட்டுமே) காரணமல்ல! அதை, அதே வயதில் இருக்கும் ஒரு குழந்தை "சாமர்த்தியமாய்??!!" திருடுகிறது என்பதையும் நாம் உணரவேண்டும்!! வேண்டுமென்றே எந்த குழந்தையும் தொலைத்துவிட்டு வருவதில்லை! அதை ஒரு குழந்தை திருடுவதால் தான் அப்படியொரு நிகழ்வு நடக்கிறது. அப்படி "திருடும் ஒரு குழந்தையாய்"தான் என் இளம்வயதில் இருந்திருக்கிறேன். நடிகர் வடிவேல் சொல்வது போல் "என்னுடைய திருட்டு; ஒரு நூதன-திருட்டாய்!" இருக்கும். அதாவது, அந்த 4/5 வயதில் ஒரு "கிரிமினல்"எண்ணத்தோடு செயல்பட்டிருக்கிறேன். என்னுடன் பயிலும் சக-குழந்தையின் பென்சில்/இரப்பர் எனக்கு பிடித்துவிட்டது என்றால், அந்த குழந்தையிடம் "எங்க வாங்கின?!" என்பது போன்ற தகவலை கேட்பேன். அதற்கு அடுத்த நாள் "எங்கப்பாவும்; எனக்கு அதே மாதிரி பென்சில்/இரப்பர் வாங்கித்தரன்னு சொல்லி இருக்கார்" என்பேன்.

          அடுத்த நாள் தான், அந்த பென்சில்/இரப்பரை திருடுவேன்! அதற்கடுத்த நாள், ரொம்ப தைரியமாக அதே பென்சில்/இரப்பரை வகுப்புக்கு எடுத்து செல்வதோடு மட்டுமல்லாமல், அதே குழந்தையிடம் காட்டி "பாத்தியா?! எங்கப்பா அதே மாதிரி வாங்கி கொடுத்தார்!" என்பேன். முன்பே, அந்த குழந்தையிடம் இப்படியொன்று நடக்கப்போகிறது என்று சொல்லி இருந்ததால், அந்த குழந்தை என் மேல் எந்த சந்தேகமும் இல்லாமல் "என் பென்சில்/இரப்பர் தொலைஞ்சிடுச்சு!" என்று பரிதாபமாய் சொல்லும். நானும், அப்படியா?! என்று கேட்பேன். இப்படி நான் பென்சில்களையும்/இரப்பர்களையும் திருடி இருக்கிறேன். என்னப்பன் நான்(/நாங்கள்) கேட்டு எதையும் இல்லையென்று சொன்னதில்லை; உண்மையில், நாங்கள் கேட்காமலேயே அவர் வாங்கிக் கொடுப்பதே வழக்கம். அது என்னவென்று தெரியவில்லை! அந்த வயதில் அப்படியொரு சந்தோசம்; அந்த திருட்டு-பழக்கத்தில்!! நான் 3-ஆவது படிக்கும் வரை அப்படி செய்திருக்கிறேன்.

           அதற்கு பின் "எனக்கு தமிழ் வரவில்லை!" என்ற காரணத்திற்காய் என்னை, என்னப்பன் எங்கள் கிராமத்து பள்ளியில் சேர்த்துவிட்டார். அதன் பின், எந்த குழந்தையிடமும் எனக்கு பிடித்தவண்ணம் பென்சிலோ/இரப்பரோ பார்த்ததில்லை! என்னப்பனும்/எங்கள் குடும்பமும் பல பொருட்களை எங்கள் கிராமத்திற்கு அறிமுகம் செய்ததை சமீபத்தில் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனால், என்னைவிட சிறப்பானதாய் எவரிடமும் நான் பார்த்ததில்லை; எல்லா பென்சில்களையும்/இரப்பர்களையும் நான் திருடுவதில்லை! எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அப்படி "நூதனமாய்" திருடுவேன்; அப்படியொரு நியாயமான-கொள்கை??!! எனக்கு. என்னவளிடம் இதை சொல்லி "என்னை மாதிரி ஏதாவது ஒரு குழந்தை திருடி இருக்கும்! ரொம்ப திட்டாத அவளை!" என்பேன். என்மகளுக்கு எண்ணற்ற பென்சில்கள்/இரப்பர்கள் வாங்கி கொடுத்திருக்கிறேன்; அதுவும், எல்லாம் இங்கே வெளிநாடுகளில் வாங்கிய/தரமான பொருட்கள்!

        அதனால், என்னைப்போல் ஏதாவது ஒரு குழந்தை/பல குழந்தைகளை  கவர்ந்திருக்கக் கூடும்! என்மகள் போன்ற குழந்தைகளை கடிந்து கொள்வதில் எந்த நியாயமும் இல்லை! எப்படி கவனமாய் இருந்தாலும், அது களவாடப்படும்! என்மகளிடம் ஓர் உயரிய குணம் உண்டு; அவளுக்கு எவர் எடுத்தது என்பது தெரிந்திருந்தும்; "அவள் என் ஃபிரண்டுப்பா!" என்பாள். அதை கேட்கும்போதெல்லாம் என்னிடம் களவு-கொடுத்தவர்களும்; நான் அவர்களின் ஃபிரண்ட் என்பதால்தான் காட்டிக்கொடுக்காமல் இருந்திருப்பரோ?! என்று என்னுள் எழுவதுண்டு. நான் செய்த தவறுக்காய், என்மகள் இன்று பதிலுக்கு தொலைக்கிறாள் என்று தோன்றும்!! அதுவும், பென்சில்/இரப்பர் மட்டுமில்லாமல் "வாட்டர் பாட்டில், ஸ்கேல்,... என்று" பலதும் தொலைப்பாள். இது என்மகளின் தவறு என்பதைக் காட்டிலும், நான் செய்ததற்கான வினை என்றே நான் எண்ணுவேன். எனவே, உங்களின் குழந்தை ஒரு பொருளை தொலைத்துவிட்டால், அதை கோபத்தோடு அணுகாமல்; அருள்கூர்ந்து, அது உங்கள்...

குழந்தையின் தவறல்ல! மாறாய் என்போன்ற குழந்தைகளின் தவறென்று உணருங்கள்!!!

பின்குறிப்பு: குழந்தைப்பருவம் தாண்டியபின்; 12-ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு நண்பனின் "பேனாவை"அதே போல் சொல்லி திருடியிருக்கிறேன். இப்போதும் கூட "கான்ஃபரன்ஸ்" செல்லும் போது; கம்பெனிகள் வைத்திருக்கும் "அன்பளிப்பு" பொருட்களை எடுப்பதில் "அப்படியொரு" ஆனந்தம்! இது, திருட்டு இல்லையெனினும் அங்கே சென்று; தேவையில்லாமல் "சிரிப்பென்ற பெயரில் ஒரு வழி-வழிந்துவிட்டு" எடுப்பது "திருட்டு போலவே!" தோன்றும். கண்டிப்பாய், இதை பலரும் செய்திருப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமாய் தெரியும்!! நான் என்னுடைய உயரதிகாரிகள் அப்படி செய்வதைக்கூட பார்த்திருக்கிறேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக