செவ்வாய், டிசம்பர் 19, 2017

அதிகாரம் 087: பகைமாட்சி (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி

0861.  வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
           மெலியார்மேல் மேக பகை

           விழியப்பன் விளக்கம்: வலிமையான எதிரிகளுக்கு எதிரான பகையை, தவிர்க்க வேண்டும்! 
           வலிமையற்ற எதிரிகளை பகைக்க, தவறாமல் விருப்பம் கொள்ள வேண்டும்!
(அது போல்...)
           அராஜகமான ஆட்சியை சீராக்கப் போராடுவதை, கைவிட வேண்டும்! அரஜாக்கமற்ற 
           ஆட்சியை சீராக்க, மறவாமல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்!
      
0862.  அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
           என்பரியும் ஏதிலான் துப்பு

           விழியப்பன் விளக்கம்: சுற்றத்திடம் அன்பின்றி/வலிமையான துணையின்றி/தானும் 
           வலிமையின்றி - இருக்கும் ஒருவன்; எதிர்த்து வரும் பகைவரின் வலிமையை, எவ்வாறு    
           எதிர்கொள்வான்?
(அது போல்...)
           சிந்தனையில் நாட்டமின்றி/பகுத்தறியும் குருவின்றி/தானும் பகுத்தறிவின்றி - இருக்கும் 
           ஒருவன்; வாழ்வில் வரும் சவால்களின் பாதிப்பை, எப்படி சமாளிப்பான்?
           
0863.  அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
           தஞ்சம் எளியன் பகைக்கு

           விழியப்பன் விளக்கம்: அனைத்திலும் அச்சமும்/எதிலும் அறியாமையும்/எல்லோரிடமும் 
           முரணும்/எதையும் ஈயாமலும் - இருக்கும் ஒருவன்; பகைவர்கள் வெல்வதற்கு, எளியவனாய் 
           இருப்பான்!
(அது போல்...)
           அனைவரையும் ஜாதியால்/எதையும் இலவசத்தால்/எவற்றையும் ஊழலால்/யாதையும் 
           வன்முறையால் - சிதைக்கும் தலைவன்; மக்களாட்சி தோற்பதற்கு, காரணமாய் அமைவான்!

0864.  நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
           யாங்கணும் யார்க்கும் எளிது

           விழியப்பன் விளக்கம்: “கோபத்தை ஒழிக்காமல்/நிறைவான தன்மையின்றி” இருக்கும் 
           ஒருவனை வெல்வது; எந்நாளும்/எவ்விடத்திலும்/எவருக்கும் எளிதானது ஆகும்!
(அது போல்...)
           “ஊழலை ஒழிக்காமல்/பொதுமையான எண்ணமின்றி” இருக்கும் தலைவனை ஆதரிப்பது; 
           எக்காலமும்/எவ்வகையிலும்/எந்நாட்டுக்கும் தீமையானது ஆகும்!

0865.  வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
           பண்பிலன் பற்றார்க்கு இனிது

           விழியப்பன் விளக்கம்: "அறவழியை ஆராயாத/வாய்ப்புகளைப் பயன்படுத்தாத/படுபழியை 
           ஆராயாத/பண்பும் இல்லாத" ஒருவன்; பகைவர்களுக்கு இனிமையான எதிரியாய் இருப்பான்!
(அது போல்...)
           "நற்கூட்டணியை நாடாத/மக்களைப் பேணாத/ஊழல்பழியை அழிக்காத/அரசியல் 
           அறமில்லாத" கட்சி; மக்களுக்குக் கொடியத் தண்டனையாய் இருக்கும்!

0866.  காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
           பேணாமை பேணப் படும்

           விழியப்பன் விளக்கம்: ஆராய்ந்து அறியாத சினமும்/எப்போதும் குறையாத பேராசை - 
           இவற்றைக் கொண்டவனின் பகைமை, பகைவரால் விரும்பிப் பேணப்படும்!
(அது போல்...)
           ஆழ்ந்து உணராத கூட்டணி/எவற்றிலும் நீங்காத ஊழல் - இவற்றை செய்வோரின் எதிர்ப்பு, 
           எதிர்க்கட்சியால் போற்றி ஏற்கப்படும்!

0867.  கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
           மாணாத செய்வான் பகை

           விழியப்பன் விளக்கம்: நம்முடன் இருந்துகொண்டே, நாம் செய்யும் செயல்களுக்கு; 
           எதிர்வினை ஆற்றுவோரின் பகையை, எதுவொன்றையும் விலையாகக் கொடுத்தும் 
           பெறவேண்டும்!
(அது போல்...)
           மக்களுடன் இருந்துகொண்டே, மக்கள் விரும்பும் மாற்றத்திற்கு; எதிராகச் 
           செயல்படுவோரின் தோல்வியை; எதையும் இழப்பீடாகக் கொடுத்தும் நிர்ணயிக்கவேண்டும்!

0868.  குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
           இனனிலனாம் ஏமாப் புடைத்து

           விழியப்பன் விளக்கம்: நற்குணம் ஏதுமின்றி/பல்வேறு குற்றங்களைச் செய்யும் ஒருவன், 
           அனைத்து துணைகளையும் இழப்பான்; அதுவே, பகைவர்களின் வெற்றிக்கு துணை புரியும்!
(அது போல்...)
           நீர்ப்பாசனம் ஏதுமின்றி/பல்வகைக் குறைகளுடன் இருக்கும் நிலம், எல்லா வளங்களையும் 
           அழிக்கும்; அதுவே,  தொழிற்சாலைகளைப் பெருக்கி விவசாயத்தை அழிக்கும்!

0869.  செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
           அஞ்சும் பகைவர்ப் பெறின்

            விழியப்பன் விளக்கம்: அறம்சார் அறிவின்றி, அனைத்துக்கும் அச்சப்படும் பகைவர்கள் 
            வாய்ப்பின்; அவர்களை எதிர்ப்போர்க்கு, எல்லாவகை இன்பங்களும் விலகாமல்
            நிலைத்திருக்கும்!
(அது போல்...)
            தேர்தல் நெறியின்றி, அனைவருக்கும் பணமளிக்கும் வேட்பாளர்கள் இருப்பின்; தேர்தலை 
            நடத்துவோர்க்கு, அனைத்து குழப்பங்களும் தொடர்ந்து நிறைந்திருக்கும்!

0870.  கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
           ஒல்லானை ஒல்லா தொளி

           விழியப்பன் விளக்கம்: கல்லாதவனாய்/கோபமுடையவனாய்/முயற்சியின்றி பொருள் 
           சேர்ப்பவனாய்/எந்நாளும் பகையுணர்வு உடையவனாய் - இருக்கும் ஒருவனை, புகழ் 
           சேர்ந்திடாது!
(அது போல்...)
           திறமற்றதாய்/அராஜகமாய்/அன்பின்றி மக்களை வதைப்பதாய்/எல்லாவற்றிலும் ஊழல் 
           உடையதாய் - இருக்கும் ஓர்க்கட்சி, வரலாற்றில் நிலைத்திடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக