சனி, டிசம்பர் 09, 2017

அதிகாரம் 086: இகல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்

0851.  இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
           பண்பின்மை பாரிக்கும் நோய்

           விழியப்பன் விளக்கம்: அனைத்து விதமான உயிரினங்கள் இடையே இருக்கும், பிரிவினை 
           என்பது; இணையாமை என்னும் பண்பற்ற எண்ணத்தை வளர்க்கும், நோயே ஆகும்!
(அது போல்...)
           எல்லா வகையான கட்சிகளும் இறுதியில் அடையும், சாபம் என்பது; பொதுமை என்னும் 
           மக்களாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும், விரோதமே ஆகும்!
      
0852.  பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
           இன்னாசெய் யாமை தலை

           விழியப்பன் விளக்கம்: இணையாமையை முன்னிறுத்தி, ஒருவர் பற்றற்ற செயல்களைச் 
           செய்தாலும்; பிரிவினையை முன்னிறுத்தி, தீமையானவற்றை செய்யாமல் இருப்பது 
           சிறந்ததாகும்!
(அது போல்...)
           சுயத்தை முன்னிறுத்தி, ஓர்கட்சி முறையற்ற செல்வங்களைச் சேர்த்தாலும்; குடும்பத்தை 
           முன்னிறுத்தி, பதவிகளைப் பங்கிடாமல் இருப்பது நன்மையாகும்!
           
0853.  இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
           தாவில் விளக்கம் தரும்

           விழியப்பன் விளக்கம்: பிரிவினை என்னும் இன்னலளிக்கும் நோயை நீக்கினால்; அது, 
           என்றுமழியாத நிலைத்த புகழை அளிக்கும்.
(அது போல்...)
           போதை எனும் செயலழிக்கும் நஞ்சைக் களைந்தால்; அது, எந்நிலையிலும் சிதையாத 
           அமைதியை அளிக்கும்.

0854.  இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
           துன்பத்துள் துன்பங் கெடின்

           விழியப்பன் விளக்கம்: துன்பங்கள் அனைத்திலும் கொடிய துன்பமான, பிரிவினை எண்ணம் 
           அழிந்து விட்டால்; இன்பங்கள் அனைத்திலும், இனிமையான இன்பத்தை அளிக்கும்!
(அது போல்...)
           ஊழல்கள் அனைத்திலும் பயங்கர ஊழலான, "கல்வி ஊழலை" அழித்து விட்டால்; 
           வளர்ச்சிகள் அனைத்திலும், வீரியமான வளர்ச்சிக்கு வித்திடும்!

0855.  இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
           மிகலூக்கும் தன்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: பிரிவினை எனும் எண்ணத்திற்கு எதிராக, எதிர்த்து பயணிக்கும் 
           வல்லவரை; வெல்ல நினைக்கும் இயல்புடையவர் எவர் இருக்கமுடியும்?
(அது போல்...)
           ஊழ்வினை எனும் விளைவிற்கு மாற்றாக, மாற்றை உருவாக்கும் மதியுடையோரை; அழிக்க 
           முயலும் விதியென்று யாது இருக்கமுடியும்?

0856.  இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
           தவலும் கெடலும் நணித்து

           விழியப்பன் விளக்கம்: பிரிவினையை முன்னிறுத்திப் பிறரை வெல்வது, இனிமையானது 
           என்பவரது வாழ்க்கை; நிலைப்பதும் குறுகிய காலமே! கெட்டழிவதற்குத் தேவையும் 
           குறுகிய காலமே!
(அது போல்...)
           பணத்தைக் கொடுத்து தேர்தலை வெல்வது, எளிதானது என்போரது அரசியல்; மக்களைச் 
           சேர்வதும் துரிதமே! மக்களால் ஒதுக்கி அழிக்கப்படுவதும் துரிதமே!

0857.  மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
           இன்னா அறிவி னவர்

           விழியப்பன் விளக்கம்: பிரிவினையைத் தழுவும், தீமையான அறிவை உடையவர்; 
           வெற்றியைத் தழுவும், அறம்சார் அறிவுடைமையை அறியமாட்டார்கள்.
(அது போல்...)
           போதையை அளிக்கும், தவறானப் பழக்கம் உடையோர்; பேரின்பத்தை அளிக்கும், 
           சிந்தனைசார் செயல்களை விரும்பமாட்டார்கள்.

0858.  இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
           மிகலூக்கின் ஊக்குமாம் கேடு

           விழியப்பன் விளக்கம்: பிரிவினை எண்ணத்திற்கு எதிராகச் செயலைச் செலுத்துவது, 
           செல்வத்தைச் சேர்க்கும்! பிரிவினையை வெற்றிக்கான காரணமாய் வளர்த்தால், கெடுதல் 
           வளரும்!
(அது போல்...)
           ஊழல் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது, மக்களாட்சியை நிலைநாட்டும்! ஊழலை 
           இலவசத்துக்கான மூலமாய் மாற்றினால், வாழ்வியல் மாறும்!

0859.  இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
           மிகல்காணும் கேடு தரற்கு

           விழியப்பன் விளக்கம்: செல்வத்தைச் சேர்க்கும் விடயங்களில், பிரிவினையை ஆராயதோர்; 
           கேடு விளைவிக்கும் விடயங்களில் மட்டும், பிரிவினையை மிகைப்படுத்தி ஆராய்வர்!
(அது போல்...)
           ஊழலை ஒழிக்கும் போராட்டத்தில், மக்களுடன் இணையாதோர்; ஊழல் தண்டனை 
           அடைந்தால் மட்டும், மக்களைத் தஞ்சமடைந்து முறையிடுவர்!

0860.  இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
           நன்னயம் என்னும் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: பிரிவினை என்னும் தீயெண்ணம், துன்பங்கள் அனைத்தையும் 
           அளிக்கும்! நல்லிணக்கம் என்னும் நல்லெண்ணம், நல்லறம் என்னும் பெருமிதத்தை 
           அளிக்கும்! 
(அது போல்...)
           ஊழல் என்னும் தீயொழுக்கம், குற்றங்கள் அனைத்தையும் நிலைநாட்டும்! சேவை என்னும் 
           நல்லொழுக்கம், மக்களாட்சி என்னும் மகேசன்-தீர்ப்பை நிலைநாட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக