வியாழன், டிசம்பர் 10, 2015

அதிகாரம் 013: அடக்கமுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 013 - அடக்கமுடைமை

0121.  அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
          ஆரிருள் உய்த்து விடும்

           விழியப்பன் விளக்கம்: அடக்கமுடன் இருத்தல், தேவர்கள் உலகத்தில் சேர்க்கும்;  
           அடக்கமற்று இருத்தல், அரிய இருள் உலகத்தில் கொண்டு சேர்க்கும்.
(அது போல்...)
           அன்புடன் வாழ்தல், மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்; அன்பற்று வாழ்தல், அதீத இன்னல்கள்
           நிறைந்த சூழலைக் கொடுக்கும்.

0122.  காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் 
          அதனினூஉங் கில்லை உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: அடக்கத்தை, செல்வமாக நினைத்து காக்கவேண்டும்; 
           அதைக்காட்டிலும் பெருஞ்செல்வம் ஏதும் மனிதர்க்கு இல்லை.
(அது போல்...)
           கடனில்லாததை, நிம்மதியாய் எண்ணி அடையவேண்டும்; அதைவிட, அதீத-நிம்மதி 
           எதுவும் இவ்வுலகில் இல்லை.

0123.  செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
          ஆற்றின் அடங்கப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: தேவையானவற்றை பகுத்தறிந்து, அடக்கமுடன் இருக்கப் 
           பழகினால்; அவ்வடக்கம் உணரப்பட்டு மேன்மையளிக்கும்.
(அது போல்...)
           முக்கிய-உறவுகளை ஆழ்ந்துணர்ந்து, பிணைப்புடன் வாழ்ந்திட முயன்றால், அவ்வுறவு 
           பலப்பட்டு சிறப்பையளிக்கும்.

0124.  நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
          மலையினும் மாணப் பெரிது

           விழியப்பன் விளக்கம்: நிலைப்பாட்டில் மாறுபடாது, அடங்கியவரின் உருவம்; 
           பெருமலையைக் காட்டிலும் மிகப் பெரியது.
(அது போல்...)
           விதிகளில் முரண்படாது, அரசாண்டவரின் விளைவு; பெருங்கடலைக் காட்டிலும் மிக 
           ஆழமானது.
          
0125.  எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
          செல்வர்க்கே செல்வம் தகைத்து

           விழியப்பன் விளக்கம்: பணிவுடன் இருத்தல், எல்லோர்க்கும் நன்மையாம்; முன்பே          
           செல்வந்தர்களாய் இருப்போருக்கும், மேலும் ஒரு செல்வமாகும்.
(அது போல்...)
           சுயநலமற்று இருத்தல், பொதுநலத்திற்கு நல்லதாகும்; இயல்பாய் பண்பாளர்களாய் 
           இருப்போருக்கும், மேலும் ஒரு பண்பாகும்.

0126.  ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
          எழுமையும் ஏமாப் புடைத்து

           விழியப்பன் விளக்கம்: ஆமையைப்போல் - ஐம்புலன்களையும், ஒரு பிறவியில் அடக்கி 
           வாழ்ந்தால்; அது, ஏழு பிறப்புக்கும் பாதுகாப்பு அரணாகும்.
(அது போல்...)
           கைகவிரல்ளைப்போல் - ஐம்பூதங்களையும், ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்க முடிந்தால்; 
           அது, எல்லாக் காலத்துக்கும் இயற்கையைப் பாதுகாக்கும்.

0127.  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
           சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

           விழியப்பன் விளக்கம்: வேறெதை அடக்காவிட்டாலும், நாவடக்குதல் வேண்டும்; அப்படி
           அடக்காவிட்டால், சொற்பிழைகள் நிகழ்ந்து - துன்பத்தில் உழற்றும்.
(அது போல்...)
           வேறெதைப் பழகாவிட்டாலும், நேர்மையைப் பழகிடல் வேண்டும்; இல்லையேல், தவறான
           வழிசென்று - வாழ்க்கை தடம்புரளும்.

0128.  ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் 
           நன்றாகா தாகி விடும்

           விழியப்பன் விளக்கம்: பேசுகின்ற சொற்களில், ஒரேயொரு கடுஞ்சொல் தீவினையை 
           விதைத்தால்; மற்றெல்லாச் சொற்களும் நன்றாகாதது ஆகிவிடும்.
(அது போல்...)
           முழுமையான வெள்ளைத்தாளில், ஒரேயொரு கரும்புள்ளி பார்வையைச் சிதைத்தால்; 
           மற்றெல்லா வெள்ளைப்பகுதியும் புலப்படாதது ஆகிவிடும்.

0129.  தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
           நாவினாற் சுட்ட வடு

           விழியப்பன் விளக்கம்: தீயால் வெந்த புண்ணால், உடலில் உருவான தழும்பு மாறிவிடும்; 
           ஆனால் - தீச்சொற்களால் பாதித்த மனிதர்களுள், மனதில் உருவான வலி மாறிடாது.
(அது போல்...)
           அடிதடியால் பிரிந்த உறவுகள், எலும்பில் எழுந்த முறிவை மறந்திடும்; ஆனால், 
           வார்த்தைகளால் பிரிந்த உறவுகள்,  மனதில் எழுந்த முறிவை மறந்திடாது.

0130.  கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 
           அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

           விழியப்பன் விளக்கம்: சினத்தை அடக்கி, கல்வியைக் கற்று - அடக்கமுடன்
           இருப்போரைச் சேர்ந்திட; தகுந்த நேரத்திற்காக, அறம் காத்திருக்கும்.

(அது போல்...)
           அன்பை உணர்ந்து, மனிதத்தை வளர்த்து -  வாழ்வியலைத் தொடர்வோரின் வருகைக்கு; 
           அவரின் தன்னிறைவுக்காக, மரணம் காத்திருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக