புதன், செப்டம்பர் 20, 2017

அதிகாரம் 078: படைச்செருக்கு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு

0771.  என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
           முன்நின்று கல்நின் றவர்

           விழியப்பன் விளக்கம்: “எதிரிகளே! எம் தலைவரை எதிர்த்து, அவர்முன் போர்க்களத்தில் 
           நிற்காதீர்! எம் தலைவரின் முன் நின்று, பலரும் கற்சிலைகளாக உள்ளனர்!” - என 
           எச்சரிக்கை செய்வதே, படைச்செருக்கு ஆகும்.
(அது போல்...)
           “துரோகிகளே! என் அப்பனை புறம்பேசி, அவர்முன் புகழ்ச்சி பேசாதீர்! என் அப்பனை 
           புறத்தே பேசி, பலரும் வாழ்விழந்து இருக்கின்றனர்!” - என வீரமுடன் பேசுவதே, 
           மகளதிகாரம் ஆகும்.
      
0772.  கான முயல்எய்த அம்பினில் யானை
           பிழைத்தவேல் ஏந்தல் இனிது

           விழியப்பன் விளக்கம்: கண்டதும் அஞ்சும் காட்டு முயலை, கொன்ற அம்பை விட; பாயும் 
           படையை எதிர்க்கும் யானையைக் கொல்லத் தவறிய, வேலைக் கையிலேந்தி இருப்பது 
           சிறப்பாகும்.
(அது போல்...)
           பார்த்ததும் அஞ்சும் அப்பாவி மனிதரை, வீழ்த்திய காவலரை விட; போக்கிரிக் கும்பலை 
           வளர்க்கும் வீரனை வெல்லத் தவறிய, காவலரை உடன் வைத்திருப்பது உயர்ந்ததாகும்.
           
0773.  பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
           ஊராண்மை மற்றதன் எஃகு

           விழியப்பன் விளக்கம்: எதிரிகளைத் தாக்குவதில், இரக்கமின்றி இருப்பதை; அதீத வலிமை 
           என்பர்! மற்றும், அதே எதிரிகள் இன்னல் படும்போது உதவுவதை; “வலிமையின் கூர்முனை” 
           என்பர்!
(அது போல்...)
           குழந்தைகளை வளர்ப்பதில், மன்னிப்பின்றி இருப்பதை; சிறந்த வளர்ப்புமுறை என்பர்! 
           மற்றும், அதே குழந்தைகள் தோல்வி அடையும்போது அரவணைப்பதை; "வளர்ப்பின் 
           உச்சம்" என்பர்!

0774.  கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
           மெய்வேல் பறியா நகும்

           விழியப்பன் விளக்கம்: கையிலிருந்த வேலை, யானை மீது எறிந்து துரத்திய ஆயுதமில்லா 
           வீரன்; தன் மார்பைத் துளைத்து நிற்கும் வேலை மகிழ்ந்து பறித்து, செருக்குடன் 
           முன்னேறுவான்! 
(அது போல்...)
           வாங்கிய சம்பளத்தில், வீட்டு செலவுகளை நிறைவு செய்த பணமில்லா தலைவன்; தன் 
           சேமிப்பில் இருக்கும் பணத்தை மகிழ்வுடன் எண்ணிப் பார்த்து, அமைதியாய் உறங்குவான்!

0775.  விழித்தகண் வேல்கொண்டி எறிய அழித்துஇமைப்பின்
           ஒட்டுஅன்றோ வன்க ணவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: வெற்றிக்காக விழித்திருக்கும் படைவீரரின் கண், எதிரி வேல் 
           எறியும்போது; ஒருமுறை இமைத்தாலும், செருக்குடைய படைக்கு புறங்காட்டுதல் அன்றோ?
(அது போல்...)
           வாய்ப்புக்காகக் காத்திருக்கும் உறுப்பினரின் நேர்மை, சூழல் அழுத்தம் தரும்போது; 
           ஒருமுறை தவறினாலும்; ஒழுக்கமுடைய குடும்பத்துக்கு தேசக்குற்றம் தானே?

0776.  விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
           வைக்கும்தன் நாளை எடுத்து

           விழியப்பன் விளக்கம்: செருக்குடைய படைவீரர்கள் தம் வாழ்நாட்களைக் கணக்கிட்டு, 
           விழுப்புண் படாத நாட்கள் அனைத்தையும்; இறந்த நாட்களாய் கருதி, அவற்றைக் 
           கழித்திடுவர்!
(அது போல்...)
           சுயமுடைய தலைவர்கள் தம் செயல்களை மதிப்பிட்டு, அறவுணர்வு சேராத செயல்கள் 
           யாவையும்; குற்றச் செயல்களாய் கருதி, அவற்றை நீக்கிடுவர்!

0777.  சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
           கழல்யாப்புக் காரிகை நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: உலகெங்கும் பரவும் புகழுக்காக, தம் உயிரையும் விரும்பாத  
           செருக்கான படைவீரரின் காலில்; வீரக்கழல் கட்டப்படும் போது, அது பேரழகை அடையும்!
(அது போல்...)
           நாடெங்கும் பரவும் நன்மைக்காக, தம் சுயத்தையும் பேணாத ஒழுக்கமான தலைவரின் 
           பார்வையில்; அரசியல்கட்சி வளரும் போது, அது மக்களாட்சிக்கு செய்யும்!

0778.  உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
           செறினும்சீர் குன்றல் இலர்

           விழியப்பன் விளக்கம்: போரில் அழிவு நேரும்போது, அரசாள்பவர் சினந்து தடுத்தாலும்; 
           உயிருக்கு அஞ்சாத செருக்குடைய போர்வீரர், தன் சிறப்பியல்பில் இருந்து விலகமாட்டார்!
(அதுபோல்...)
           குடும்பத்தில் சிக்கல் நேரும்போது, குடும்பத்தினர் குழப்பம் விதைத்தாலும்; சூழலுக்கு 
           பலியாகாத திட்பமுடைய குடும்பத்தலைவர், தன் உயர்குணத்தில் இருந்து மாறமாட்டார்!

0779.  இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
           பிழைத்தது ஒறுக்கிற் பவர்

           விழியப்பன் விளக்கம்: உரைத்த சூளுரையைக் காக்க, போரில் சாகவல்ல செருக்கான 
           வீரரை; ஒரு பிழை செய்ததற்காய், எவரேனும் இகழ்வரோ?
(அது போல்...)
           அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, தேர்தலில் தோற்கவல்ல செறிவான தலைவரை; கால 
           தாமதம் செய்ததற்காய், எவரேனும் விமர்சிப்பரோ?

0780.  புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
           இரந்துகோள் தக்கது உடைத்து

           விழியப்பன் விளக்கம்: செருக்கான ஒரு படைவீரனின் இறப்பு, ஆட்சியாளரின் கண்களில் 
           நீரை நிரப்பினால்; அந்த இறப்பு, யாசகமாய் கேட்டும் பெறும் மகிமை உடையதாகும்!
(அது போல்...)
           திறமையான ஒரு தொழிலாளியின் ஓய்வு, முதலாளியின் கவனத்தை திசை திருப்பினால்; 
           அந்த ஓய்வு, எதனை இழந்தும் அடையும் புகழும் உடையதாகும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக