செவ்வாய், நவம்பர் 10, 2015

அதிகாரம் 010: இனியவைகூறல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 010 - இனியவைகூறல்

0091.  இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
           செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

           விழியப்பன் விளக்கம்: அறம் அறிந்தவரின் வாயிலிருந்து, வெளிப்படும் சொற்கள்; அன்பு 
           கலந்த, வஞ்சனையில்லாத - இனிய மொழியாய் இருக்கும்.
(அது போல்...)
           மனிதம் கடைப்பிடிப்போர் மூலமாய், உருவாகும் செயல்கள்; அறம் சேர்ந்து, சுயமற்று - 
           சமூகப் பொறுப்புடன் இருக்கும்.

0092.  அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
          இன்சொலன் ஆகப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: உள்ளம் மலர்ந்து, தானம் செய்வதை விட; முகம் மலர்ந்து, 
           நேயத்துடன் பேசுபவராய் இருப்பது - அதீத நன்றானது.
(அது போல்...)
           ஊழல் செய்து, செல்வந்தர் ஆவதை விட; அறம் உணர்ந்து, நேர்மையுடன் நடப்பவராய் 
           இருப்பது - பெரும் சிறப்பானது.

0093.  முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
          இன்சொ லினதே அறம்

           விழியப்பன் விளக்கம்: முகம் மலர்ந்து, மகிழ்ச்சியுடன் பிறரைப் பார்த்து; உள்ளத்தில் 
           இருந்து நேயத்துடன் பேசுவதே, அறம் எனப்படும்.
(அது போல்...)
           கடமை உணர்ந்து, பொறுப்புடன் மக்களைக் காத்து; வாய்மையில் பயணித்து 
           அறத்துடன் நடப்பதே, அரசாட்சி எனப்படும்.

0094.  துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
           இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: எவரிடமும் இன்பத்தை மிகுவிக்கும் வண்ணம், நேயத்துடன் 
           பேசுபவர்க்கு; துன்பத்தை மிகுவிக்கும், வெறுப்பு இல்லாமல் போகும்.
(அது போல்...)
           பிறரின் வாழ்க்கையை உயர்த்தும் நோக்கில், அறமுடன் நடப்போர்க்கு; நிம்மதியைக் 
           குலைக்கும், பொறாமை இல்லாமல் போகும். 
          
0095.  பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
          அணியல்ல மற்றுப் பிற

           விழியப்பன் விளக்கம்: பணிவுடன் இருப்பதும், நேயத்துடன் பேசுவதுமே - மனிதரை 
           அலங்கரிக்கும் அணிகலன்கள்; மற்றவை அல்ல.
(அது போல்...)
           பொருளை ஈட்டுவதும், குடும்பத்தைப் பேணுதலுமே -  பெற்றோரைத் தரப்படுத்தும் 
           காரணிகள்; மற்றவை அல்ல.

0096.  அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
          நாடி இனிய சொலின்

           விழியப்பன் விளக்கம்: நன்மை பயப்பவற்றைப் பழகி, நேயத்துடன் பேசினால்; நல்வினை 
           அல்லாதவை குறைந்து, நல்வினைகள் பெருகும்.
(அது போல்...)
           வலிமை சேர்ப்பவைகளை உணர்ந்து, உறுதியுடன் கடைப்பிடித்தால்; வலிமை 
           அல்லாதவை விலகி, வலிமை மிகுந்திடும்.

0097.  நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
          பண்பின் தலைப்பிரியாச் சொல்

           விழியப்பன் விளக்கம்: பிறர்க்கு பலனை விளைவிக்கும் எண்ணத்திலிருந்து, மாறுபடாத 
           பேச்சு; நல்வினைகளை விளைவித்து, அறத்தை நிலைநாட்டும்.
(அது போல்...)
           பிறரின் வாழ்வை உயர்விக்கும் வைராக்கியத்திலிருந்து, விலகிடாத முனைப்பு; 
           மனிதத்தைப் பெருக்கி, சமூகத்தைத் திடப்படுத்தும்.

0098.  சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
           இம்மையும் இன்பம் தரும்

           விழியப்பன் விளக்கம்: சிறுமை தன்மையை அகற்றிய, நேயம் நிறைந்த பேச்சு; இப்பிறப்பு 
           மட்டுமல்லாமல், மறுபிறப்புக்கும் நன்மையை வழங்கும்.
(அது போல்...)
           பகைமை உணர்வை நீக்கிய, நேர்மை மிகுந்த ஆட்சி; நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல், 
           எதிர்காலத்திலும் மக்களாட்சியைக் காக்கும்.

0099.  இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
           வன்சொல் வழங்கு வது

           விழியப்பன் விளக்கம்: நேயம்மிக்க சொற்கள் விளைவிக்கும் நற்பயன்களை அனுபவித்தவர்; 
           என்ன பயனுக்காக, கொடிய வார்த்தைகளை உதிர்க்கமுடியும்?
(அது போல்...)
           நேர்மையான ஆட்சி விளைவிக்கும் அழியாப்புகழை உணர்ந்தவர்; என்ன புகழுக்காக, 
           அறமற்ற ஆட்சியை வழங்கமுடியும்?

0100.  இனிய உளவாக இன்னாத கூறல் 
           கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

           விழியப்பன் விளக்கம்: நன்மை விளைவிக்கும் சொற்கள் பலவிருக்க, தீயவற்றைப் பேசுவது; 
           கனிந்தது இருக்க, காயைக் கொய்வது போன்றதாகும்.
(அது போல்...)
           வாழ்வை உயர்வுக்கும் அறவழிகள் பலவிருக்க, தீயவழியில் பயணிப்பது; மனைவி 
           உடனிருக்க, பிற-பெண்களைப் பார்ப்பது போன்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக