வெள்ளி, நவம்பர் 20, 2015

அதிகாரம் 011: செய்ந்நன்றி அறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்

0101.  செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
           வானகமும் ஆற்றல் அரிது

           விழியப்பன் விளக்கம்: நாம் உதவிடாத ஒருவர் செய்த உதவிக்கு; இந்த மண்ணுலகும், 
           விண்ணுலகும் சேர்ந்தே கொடுத்தும் - இணையாகாது.
(அது போல்...)
           நம்மிடம் எந்த பிரதிபலனையும் எதிர்பாராத தாய்க்கு; நம் உடலையும், உயிரையும் 
           சேர்ந்தே கொடுத்தும் - பிரதிபலனாகாது.

0102.  காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
          ஞாலத்தின் மாணப் பெரிது

           விழியப்பன் விளக்கம்: வேறுவழியே இல்லாத வேளையில், செய்யப்பட்ட உதவி எத்தனை 
           சிறியதாயினும்; அது மண்ணுலகை விட மிகப்பெரியது.
(அது போல்...)
           வாழ்வே முடிந்ததான சூழலில், மறுவாழ்வளித்த உறவு எவ்வளவு விலகியிருப்பினும்; அது 
           எல்லா உறவுகளிலும் முதன்மையானது.

0103.  பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
           நன்மை கடலின் பெரிது

           விழியப்பன் விளக்கம்: பிரதிபலனை எதிர்பாராதோர் செய்த உதவியின், நேயத்தை 
           ஆராய்ந்தால்; அதன் நன்மை, கடலை விடப் பெரியதாகும்.
(அது போல்...)
           சுயநலத்தை நாடாதோர் ஆண்ட ஆட்சியின், தன்மையைப் பின்பற்றினால்; அதன் 
           விளைவு, வல்லரசை விடச் சிறந்திருக்கும்.

0104.  தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 
           கொள்வர் பயன்தெரி வார்

           விழியப்பன் விளக்கம்: தினையரிசியின் அளவுக்கு செய்யப்பட்ட நன்றியையும்; அதன் 
           பயனை உணர்ந்தவர், பனையின் அளவாய் கருதுவர்.
(அது போல்...)
           பொருளற்ற குழந்தையின் மழலையைக் கூட; குழந்தையை ஈன்றெடுத்த தாய், 
           இதிகாசங்களுக்கு இணையாய்ப் போற்றுவாள்.
          
0105.  உதவி வரைத்தன்று உதவி உதவி 
           செயப்பட்டார் சால்பின் வரைத்து

           விழியப்பன் விளக்கம்: உதவியோருக்கு உதவும் மறு-உதவி, பெறப்பட்ட உதவியைச் 
           சார்ந்ததன்று; மாறாய், உதவியைப் பெற்றவரின் பண்பைச் சார்ந்தது.
(அது போல்...)
           ஈன்றெடுத்தவளுக்கு செய்யும் பரியுபகாரம், சுமக்கப்பட்ட காலத்தைச் சார்ந்ததன்று; 
           மாறாய், உயிரைப் பெற்றவரின் வாழ்நாளைச் சார்ந்தது.

0106.  மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க 
           துன்பத்துள் துப்பாயார் நட்பு

           விழியப்பன் விளக்கம்: மனிதத்தில் குறையற்றோரை மறவாதீர்! அதுபோல், இன்னல்களில் 
           பங்கெடுத்தோரின் நட்பை விலக்கிடாதீர்!!
(அது போல்...)
           ஆட்சியில் குறையுள்ளோரை ஆதரிக்காதீர்! அதுபோல், மக்களில் ஒருவரானவரின் 
           சின்னத்தை மறவாதீர்!!

0107.  எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் 
           விழுமந் துடைத்தவர் நட்பு

           விழியப்பன் விளக்கம்: அறமறிந்தோர் - தம்முடைய துன்பத்தை நீக்கியவரின் நட்பை; 
           பிறக்கமுடிந்த ஏழு பிறப்பிலும் உணர்வர்.
(அது போல்...)
           அன்பறிந்தோர் - தம்முடைய உயிரைத் தாங்கியவளின் உறவை; பிறக்கமுடிந்த எல்லாப் 
           பிறப்புகளிலும் வேண்டுவர்.

0108.  நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
           அன்றே மறப்பது நன்று

           விழியப்பன் விளக்கம்: பிறர் செய்த நன்மையை மறத்தல் நன்மையன்று; ஆனால், அவர் 
           செய்த தீமைகளை அக்கணமே மறப்பது நன்மையானது.
(அது போல்...)
           நல்லாட்சி செய்பவரை தேர்ந்தெடுக்க தவறுதல் அறமன்று; ஆனால், முறையற்ற 
           ஆட்சியர்களை அத்தேர்தலோடு தவிர்த்தல் அறமாகும்.

0109.  கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த 
           ஒன்றுநன்று உள்ளக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் செய்திட்ட நன்மையொன்றை நினைத்தால்; அவர் 
           கொன்றதற்கு இணையான துன்பமே செய்தாலும், அந்த துன்பம் மறையும்.
(அது போல்...)
           ஒரேயொரு நிகழ்வில் கடவுளை உணர்ந்தால், மிகத்தீவிரமான கடவுள் மறுப்புக் 
           கொள்கைகளும்; இருந்த தடமறியாது அழியும்

0110.  எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
           செய்ந்நன்றி கொன்ற மகற்கு

           விழியப்பன் விளக்கம்: எந்த நல்வினைகளை மறந்தார்க்கும் மீள்-வழி உண்டாம்; ஆனால்,
           ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு மீள்-வழியில்லை.
(அது போல்...)
           எந்த உறவை உதறியவர்க்கும் விமோச்சனம் உண்டாம்; ஆனால், தன் பெற்றோரை
           உதறியவர்க்கு விமோச்சனம் ஏதுமில்லை.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக