வியாழன், ஜனவரி 18, 2018

அதிகாரம் 090: பெரியாரைப் பிழையாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை

0891.  ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
           போற்றலுள் எல்லாம் தலை

           விழியப்பன் விளக்கம்: அனுபவம் வாய்ந்த பெரியோரின், செயலைச் செய்யும் வலிமையை 

           இகழாமல் இருப்பது; ஒருவர், தமக்கு அமைக்கும் காவல்கள் அனைத்திலும் 
           முதன்மையானது ஆகும்.
(அது போல்...)
           நேர்மை மிகுந்த தலைவரின், பொதுநலன் காக்கும் கொள்கையை மறக்காமல் இருப்பது; 
           மக்கள், சந்ததிக்கு கற்பிக்கும் அனுபவங்கள் அனைத்திலும் சிறந்தது ஆகும்.
      
0892.  பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
           பேரா இடும்பை தரும்

           விழியப்பன் விளக்கம்: நம்மிற் பெரியோரைப் பேணாமல் இருப்பின்; அப்பெரியோரின் 

           ஆதரவு இல்லாத நிலைமை, என்றுமழியாத துன்பத்தை அளிக்கும்.
(அது போல்...)
           நம் பெற்றோர்களுடன் இணையாமல் வாழ்ந்தால்; அவர்களின் வாழிகாட்டுதல் இல்லாத 
           நிலைமை, அறமில்லாத சந்ததியை உருவாக்கும்.
           
0893.  கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
           ஆற்று பவர்கண் இழுக்கு

           விழியப்பன் விளக்கம்: கெடுதல் வேண்டுமாயின், பெரியோரின் அறிவுரையைக் கேளாமல் 

           செய்க! அழிவு வேண்டுமாயின், வலிமையாய் செயல்படுவோரிடம் தவறு செய்க!
(அது போல்...)
           துன்பம் வேண்டுமெனில், நற்தலைவரின் ஆட்சியை ஏற்காமல் விடுக! கொடுமை 
           வேண்டுமெனில், கொடுங்கோலாய் ஆள்வோரிடம் அதிகாரம் தருக! 

0894.  கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
           ஆற்றாதார் இன்னா செயல்

           விழியப்பன் விளக்கம்: செயலாற்றும் திறமுடைய பெரியோர்க்கு, செயலாற்ற இயலாதோர் 

           தீமை செய்வது; எமனைக் கைதட்டி அழைப்பதற்கு நிகரானதாகும்!
(அது போல்...)
           வாழ்வளிக்கும் கடவுளான தொழிலுக்கு, வாழ இயலாதோர் உண்மையின்றி இருப்பது; 
           வறுமையை கைகூப்பி வரவேற்பதற்குச் சமமாகும்!

0895.  யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
           வேந்து செறப்பட் டவர்

           விழியப்பன் விளக்கம்: எவ்விதப் பகைவரையும் வெல்லும் அனுபவமுடைய அரசனின், 

           கோபத்துக்கு ஆளானவர்; தப்பிக்க எவ்விடம் புகுந்தாலும், எவ்விடத்திலும் 
           நிம்மதியில்லாமல் போவர்!
(அது போல்...)
           எத்தகைய மனிதரையும் சாகடிக்கும் குணமுடைய போதையின், ஆதிக்கத்திற்கு 
           ஆளானவர்; மீண்டிட எவ்வளவு செலவிட்டாலும், எள்ளளவும் வாழ்வில்லாமல் போவர்!

0896.  எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
           பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

           விழியப்பன் விளக்கம்: காட்டுத்தீ போன்ற நெருப்பால் சுடப்பட்டாலும், பிழைப்பதற்கு 

           வழியுண்டாம்! ஆனால், பெரியோரைப் பிழையாகச் சித்தரித்து வாழ்வோர்; பிழைக்கவே 
           மாட்டார்!
(அது போல்...)
           உயிர்க்கொல்லி போன்ற போதைக்கு ஆட்பட்டவரும், திருந்துவதற்கு வாய்ப்புண்டாம்! 
           ஆனால், மக்களை ஏய்த்து ஊழலாடிப் பழகியோர்; திருந்தவே மாட்டார்!

0897.  வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
           தகைமாண்ட தக்கார் செறின்

           விழியப்பன் விளக்கம்: தகைமைப் பண்புடையப் பெரியோரின் கோபத்திற்கு ஆளாவார் 

           எனின்; ஒருவரின், வசதியான வாழ்க்கையும் வானளாவிய பொருளும் எதற்கு உதவும்?
(அது போல்...)
           பொதுநலன் பேணும் தலைவரின் தோலிவிக்கு காரணமாவர் எனின்; வாக்காளர்களின், 
           உயரிய கல்வியும் உலகளாவிய பொதுவறிவும் எதைச் சாதிக்கும்?

0898.  குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
           நின்றன்னார் மாய்வர் நிலத்து

           விழியப்பன் விளக்கம்: உயர்மலைக்கு நிகரான- பெரியோரின் வலிமையை, குறைவாக 

           மதிப்பிட்டால்; பூமியில் நிலைத்து வாழ்பவர் போல் தோன்றியோரும், குடியோடு சேர்ந்து 
           அழிவர்!
(அது போல்...)
           பெருங்கடலுக்கு இணையான மக்களின் அதிகாரத்தை, இழிவாக எண்ணினால்; ஆட்சியில் 
           நிரந்தரமாய் இருப்பவர் போல் தோன்றியவரும், கட்சியோடு சேர்ந்து வீழ்வர்!

0899.  ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
           வேந்தனும் வேந்து கெடும்

           விழியப்பன் விளக்கம்: சீர்மிகு கொள்கையுடைய பெரியோர் கோபப்பட்டால்; 

           அரசாள்பவரும் கூட, தம் அரசாட்சியை இடையிலேயே இழந்து கெடுவர்!
(அது போல்...)
           பகுத்தறியும் இயல்புடைய மனிதர்கள் மிருகமானால்; துறவிகளும் கூட, தம் துறவறத்தைப் 
           பாதியிலேயே கைவிட்டு விலகுவர்!

0900.  இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
           சிறந்தமைந்த சீரார் செறின்

           விழியப்பன் விளக்கம்: சிறந்த குணங்கள் நிறைந்த, பெரியோர் வெகுண்டால்; மிகுந்த 

           வலிமைகள் நிறைந்த துணைகளை உடையவர் ஆயினும், பிழைக்க மாட்டார்!
(அது போல்...)
           தேர்ந்த திறமைகள் கொண்ட, இளைஞர்கள் திரண்டால்; வலிந்த துறைகள் கொண்ட 
           அரசையே நடத்துவோர் எனினும், உறுதி இழப்பர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக