புதன், மே 18, 2016

அதிகாரம் 029: கள்ளாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 029 - கள்ளாமை

0281.  எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் 
           கள்ளாமை காக்கதன் நெஞ்சு

           விழியப்பன் விளக்கம்: பிறரால் இகழப்படாத நிலையில் வாழ்ந்திட நினைப்போர்; எந்த 
           பொருளையும், களவாட எண்ணாத நிலையில் தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
(அது போல்...)
           பிறரால் வெல்லமுடியாத நிலையில் இருக்கும் விருப்பமுடையோர்; எவர் ஒருவரையும், 
           வஞ்சிக்க முயலாத வகையில் தன் செயலை நிர்ணயிக்க வேண்டும்.

0282.  உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் 
           கள்ளத்தால் கள்வேம் எனல்

           விழியப்பன் விளக்கம்: களவு எண்ணத்துடன், பிறர் பொருளை அபகரிக்கலாம் என 
           மனதால் 
           நினைப்பதும்; தீயொழுக்கமே ஆகும்.
(அது போல்...)
           பகை உணர்வுடன், பிறர் அந்தரங்கத்தை புறங்கூறலாம் என வாய்மொழியால்
           திட்டமிடுவதும்; அறமற்றதே ஆகும்.
           
0283.  களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 
           ஆவது போலக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: திருட்டினால் விளையும் செல்வம்; அளவுக்கதிகமாய் பெருகுவது 
           போலத் தோன்றி, இறுதியில் மொத்தமாய் அழியும்.
(அது போல்...)
           போதை-வஸ்துகளால் கிடைக்கும் இன்பம்; மென்மேலும் அதிகமாவது போலத் தோன்றி, 
           பின்னர் துன்பமாய் முடியும்.

0284.  களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் 
           வீயா விழுமம் தரும்

           விழியப்பன் விளக்கம்: திருட்டின் மீது அதிகரிக்கும் ஆசையானது; அதன் விளைவாக, 
           என்றும் அழியாத துன்பத்தைக் கொடுக்கும்.
(அது போல்...)
           கள்ளக்காதல் மேல் அதிகரிக்கும் மோகமானது; அதன் விளைவாய், சரிசெய்ய முடியாத 
           சுய-அழிவை அளிக்கும்.

0285.  அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் 
           பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

           விழியப்பன் விளக்கம்: பிறரின் பொருளைத் திருட, அவர்களின் இயலாமைக்காக 
           காத்திருப்போர்;  அருளை உணர்ந்து, அன்புடையவராய் மாறுதல் சாத்தியமில்லை.
(அது போல்...)
           பிறரின் திறமையை விமர்சிக்க, அவர்களின் தவறுக்காக எதிர்பார்ப்போர்; அறத்தை 
           உணர்ந்து, அவர்களின் படைப்புகளைப் பாராட்டமாட்டார்கள்.

0286.  அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் 
           கன்றிய காத லவர்

           விழியப்பன் விளக்கம்: திருட்டின் மேல், மிகுந்த ஆசையைக் கொண்டிருபோர்; 
           தேவையான அளவுடன் வாழும் நெறியைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
(அது போல்...)
           காழ்ப்புணர்வின் மேல், அதீத நாட்டத்தைக் கொண்டிருப்போர்; உண்மையான 
           மனிதத்துடன் நேசிக்கும் உணர்வைக் கொண்டிருக்க மாட்டார்கள்.

0287.  களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் 
           ஆற்றல் புரிந்தார்கண்ட இல்

           விழியப்பன் விளக்கம்: தம் தேவையை உணர்ந்து வாழும் ஆற்றல் கொண்டவரிடம்; களவு 
           எனும் இருண்ட அறிவின் ஆளுமை இருப்பதில்லை.
(அது போல்...)
           தம் கடமையைப் புரிந்து செயல்படும் திறன் உள்ளவரிடம்; விதிமீறல் எனும் தீய 
           எண்ணத்தின் ஆதிக்க இருக்காது.

0288.  அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் 
           களவறிந்தார் நெஞ்சில் கரவு

           விழியப்பன் விளக்கம்: தேவையை அறிந்தவர் நெஞ்சில், அறம் நிலைத்திருப்பது போல்;
           களவை அறிந்தவர் நெஞ்சில், வஞ்சனை நிலைத்திருக்கும்.
(அது போல்...)
           தேடலைத் தொடர்வோர் மனதில், புரிதல் வலுவடைவது போல்; ஊழலைத் தொடர்வோர்
           மனதில், பேராசை வலுவடையும்.

0289.  அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல 
           மற்றைய தேற்றா தவர்

           விழியப்பன் விளக்கம்: களவு தவிர மற்றவற்றை அறியாதோர்; அதையும் வரைமுறை 
           இல்லாமல் செய்து, உடனடியாய் அழிவர்.
(அது போல்...)
           புறங்கூறுதல் தவிர பிறசெயல்களைச் செய்யாதோர்; அதையும் குற்றவுணர்வே இல்லாமல் 
           செய்து, உடனே கெட்டழிவர்.

0290.  கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் 
           தள்ளாது புத்தே ளுளகு

           விழியப்பன் விளக்கம்: திருடுவோர்க்கு, வாழ்வியல் கிடைக்காமல் போகும்; 
           திருடாதோர்க்கு, தேவர்வாழ் உலகம் கூட கிடைக்காமல் போகாது.
(அது போல்...)
           விதிமீறுவோர்க்கு, வெகுமதி கிடைக்காமல் போகும்; விதிமீராதோர்க்கு, என்றுமழியா புகழ் 
           கூட கிடைக்காமல் போகாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக