வெள்ளி, ஜூன் 02, 2017

அதிகாரம் 067: வினைத்திட்பம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்

0661.  வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
           மற்றவை எல்லாம் பிற

           விழியப்பன் விளக்கம்: செயல்களைச் செய்யும் வைராக்கியம் என்பது, ஒருவரின் மனதின்
           வைராக்கியமாகும்; மற்றவை எல்லாம் வேறானவை ஆகும்.
(அது போல்...)
           ஊழல்களை ஒழிக்கும் அடிப்படை என்பது, ஆட்சியாளரின் நேர்மையின் அடிப்படையாகும்;
           மற்றவை எல்லாம் போலியானவை ஆகும்.
      
0662.  ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
           ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

           விழியப்பன் விளக்கம்: வினைகளைத் தடையில்லாமல் செய்வது மற்றும் தடைபட்டாலும்
           மனம் தளராதது - இவ்விரண்டின் வழி நடப்பதே, பகுத்தறிந்தோரின் கோட்பாடு என்பர்.
(அது போல்...)
           உறவுகளைப் பிரியாமல் தொடர்வது மற்றும் பிரிந்தாலும் பகையுணர்வு கொள்ளாதது -
           இவ்விரண்டு உறுதிகளைக் கடைப்பிடிப்பதே, சமுதாயத்தின் அடிப்படை என்பர்.
           
0663.  கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
           எற்றா விழுமந் தரும்

           விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினையை முடித்து, இறுதியில் வெளிப்படுத்துவதே
           ஆளுமை ஆகும்; இடையில் வெளிப்படுத்துவது, சரிசெய்ய முடியாத துன்பத்தை அளிக்கும்.
(அது போல்...)
           பெறப்பட்ட பிறப்பை வாழ்ந்து, செயற்கையாய் மரணிப்பதே பிறவி ஆகும்; செயற்கையாய்
           முடிப்பது, பரிகாரம் இல்லாத பாவத்தை அளிக்கும்.

0664.  சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
           சொல்லிய வண்ணம் செயல்

           விழியப்பன் விளக்கம்: "கொடுக்கப்பட்ட வினையை, எவ்வாறு செய்வதென" வாயால்
           சொல்வது எல்லோர்க்கும் எளிதாகும்; ஆனால், அப்படி சொல்லிய வண்ணம் செய்தல்
           அரிதானது!
(அது போல்...)
           "நிச்சயிக்கப்பட்ட உறவை, எப்படி தொடர்வதென" அறிவுரையாய் சொல்வது எவர்க்கும்
           எளிதாகும்; ஆனால், அப்படி அறிவுறுத்திய வண்ணம் வாழ்வது சிரமமானது!

0665.  வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
           ஊறெய்தி உள்ளப் படும்

           விழியப்பன் விளக்கம்: சிந்தனைத் திறனால், வினைத் திறனை வளர்த்து புகழ்பெற்ற
           அமைச்சர்கள்; அரசாள்பவரின் கவனத்திற்கு உள்ளாகி, எல்லோராலும் பாராட்டப்படுவர்.
(அது போல்...)
           உறவுப் பகிர்வால், உடைமைப் பகிர்வை செய்து வாழ்ந்திடும் அன்பர்கள், சமுதாயத்தின்
           சான்றாக மாறி, அனைவராலும் தொடரப்படுவர்.

0666.  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
           திண்ணியர் ஆகப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்ய நினைப்போர், தேவையான மனவுறுதியை
           அடையப் பெற்றால்; செய்ய நினைத்த வினைகளை, நினைத்தபடியே செய்து முடிப்பர்.
(அது போல்...)
           சமுதாயத்தை மாற்ற எண்ணுவோர், உறுதியான கொள்கையை வகுத்து இருப்பின்;
           செய்ய எண்ணிய மாற்றத்தை, எண்ணியபடியே மாற்றி முடிப்பர்.

0667.  உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 
           அச்சாணி அன்னார் உடைத்து

           விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்வோரின், உருவத்தை இகழாமல்
           இருக்கவேண்டும்; அவர்கள் உருண்டோடும் பெரியத் தேரைத் தாங்கும், அச்சாணிக்கு
           இணையானவர்கள்.
(அது போல்...)
           உறவுகளில் இருப்போரின், ஏழ்மையை அவமதிக்காமல் இருக்கவேண்டும்; அவர்கள்
           சீறிப்பாயும் சொகுசு விமானத்தைத் தரையிறக்கும், சக்கரத்திற்கு ஒப்பாவர்.

0668.  கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
           தூக்கம் கடிந்து செயல்

           விழியப்பன் விளக்கம்: குழப்பம் இல்லாமல், தெளிவான சிந்தனையோடு திட்டமிட்ட
           வினைகளை; மனச்சோர்வும்/உடற்சோர்வும் இல்லாமல், விரைந்து செய்யவேண்டும்.
(அது போல்...)
           அறவழியை மீறாமல், உண்மையான உழைப்பால் பெற்ற வருமானத்தை; பேராசையும்/
           பொறாமையும் இல்லாமல், மனமுவந்து பகிரவேண்டும்.

0669.  துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
           இன்பம் பயக்கும் வினை

           விழியப்பன் விளக்கம்: கேடில்லாமல் இன்பம் பயக்கும் வினைகளை, எத்தனைத் துன்பங்கள்
           தடையாக வந்தாலும்; துணிவைத் துணையாகக் கொண்டு செய்யவேண்டும்.
(அது போல்...)
           தடையில்லாமால் ஊக்கம் அளிக்கும் நட்புகளை, எத்தனை ஊடல்கள் பிரச்சனையாக
           வளர்ந்தாலும்; அன்பை அறமாகக் கருதித் தொடரவேண்டும்.

0670.  எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
           வேண்டாரை வேண்டாது உலகு

           விழியப்பன் விளக்கம்: எவ்வகை வைராக்கியம் இருப்பினும், வினையை முடிக்கும்
           வைராக்கியத்தை விரும்பவில்லை எனில்; அவர்களை இவ்வுலம் விரும்பாது.
(அது போல்...)
           எல்லா உறவுகள் இருப்பினும், பெற்றோரைப் பேணும் உறவை வளர்க்கவில்லை எனில்;
           அவர்களை விண்ணுலகம் போற்றாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக