திங்கள், ஜூன் 12, 2017

அதிகாரம் 068: வினைசெயல்வகை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை

0671.  சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
           தாழ்ச்சியுள் தங்குதல் தீது

           விழியப்பன் விளக்கம்: செயல்திட்டத்தின் குறிக்கோள், செயலைச் செய்து முடிக்கும்
           துணிவை அடைவதாகும்; அத்துணிவைச் செயல்படுத்த காலதாமதம் ஆகுதல் தீமையாகும்.
(அது போல்...)
           இல்லறத்தின் அடிப்படை, உறவுகளைப் பேணிக் காக்கும் அன்பை வளர்ப்பதாகும்;
           அவ்வன்பைத் தொடரும் முனைப்பைத் தவறுதல் பழியாகும்.
      
0672.  தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
           தூங்காது செய்யும் வினை

           விழியப்பன் விளக்கம்: தாமதித்துச் செய்யவேண்டிய வினைகளை, தாமதித்துச்
           செய்யவேண்டும்! தாமதமின்றி செய்யவேண்டிய வினைகளில், தாமதம் செய்யக்கூடாது!
(அது போல்...)
           விலக்கி வைக்கவேண்டிய உறவுகளை, விலக்கி வைக்கவேண்டும்! விலக்காமல்
           பேணவேண்டிய உறவுகளை, விலக்கி வைக்கக்கூடாது!
           
0673.  ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
           செல்லும்வாய் நோக்கிச் செயல்

           விழியப்பன் விளக்கம்: இயலும் சூழல்களில் எல்லாம், வினைகளைச் செய்வது நல்லது;
           இயலாது போழ்து, சாதகமான வழியைக் கண்டறிந்து செய்யவேண்டும்.
(அது போல்...)
           முடிந்த நிகழ்வுகளில் எல்லாம், சிந்தனைகளைச் செலுத்துவது நல்லது; முடியாத போது,
           சரியான தீர்வைத் தேர்ந்தெடுத்து பழகவேண்டும்.

0674.  வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
           தீயெச்சம் போலத் தெறும்

           விழியப்பன் விளக்கம்: முற்றுப்பெறாத வினை மற்றும் பகை, இவ்விரண்டின் எச்சத்தை
           ஆராய்ந்தால்; தீயின் எச்சத்தைப் போல, அழிவை உருவாக்குவதை அறியலாம்.
(அது போல்...)
           திருப்தியற்ற காமம் மற்றும் உறவு, இவையிரண்டின் விளைவை ஆராய்ந்தால்; பூகம்பத்தின்
           விளைவைப் போல, உறுதியைத் தகர்ப்பதை உணரலாம்.

0675.  பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
           இருள்தீர எண்ணிச் செயல்

           விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினைகளுக்கு முக்கியமான - பொருளாதாரம்/
           ஆயுதம்/காலம்/வினைத்திறம்/இடம் - இவை ஐந்தையும் ஆராய்ந்து, குழப்பங்கள் நீங்க
           செய்யவேண்டும்.
(அது போல்...)
           இருக்கும் உறவுகளுக்கு அடிப்படையான - உண்மை/சந்தேகமின்மை/அரவணைப்பு/
           உரிமை/அன்பு - இவை ஐந்தையும் காத்து, பரஸ்பரம் பகிர்ந்து வாழவேண்டும்.

0676.  முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
           படுபயனும் பார்த்துச் செயல்

           விழியப்பன் விளக்கம்: வினையை துவங்கும் முன், அவ்வினை  - முடியும் விதம்/தரும்
           இடையூறுகள்/முடிந்தபின் அடையும் பெரும்பயன் - இவற்றை ஆராய்ந்து துவங்கவேண்டும்.
(அது போல்...)
           உறவில் இணையும் முன், அவ்வுறவு - தொடரும் விதம்/விதைக்கும் சிக்கல்கள்/மூலம்
           கிடைக்கும் பெருமகிழ்வு - இவற்றை உணர்ந்து இணையவேண்டும்.

0677.  செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
           உள்ளறிவான் உள்ளம் கொளல்

           விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினையைச், செய்யும் செயல்முறை என்பது;
           அவ்வினையில் முன்னனுபவம் உள்ளவரின், அறவுரையை ஏற்றுக் கொள்வதாகும்.
(அது போல்...)
           இணைந்திட்ட இல்லறத்தை, நடத்தும் வழிமுறை என்பது; இல்லறத்தில் ஈடுபட்ட
           முன்னோர்களின், வரலாற்றை அறிந்து வாழ்வதாகும்.

0678.  வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
           யானையால் யானையாத் தற்று

           விழியப்பன் விளக்கம்: ஓர் வினையைச் செய்யும்போது, இன்னுமோர் வினையையும்
           செய்வது; பயிற்சி பெற்ற யானையொன்றால், வேறொரு யானையைப் பிடிப்பதற்கு
           இணையாகும்.
(அது போல்...)
           ஒருவருக்கு உதவி செய்யும்போது, அவரின் வருங்காலத்திற்கும் உதவுவது; ஒரேயொரு
           கல்லை எறிந்து, இரண்டு காய்களைக் கொய்வதற்கு ஒப்பாகும்.

0679.  நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
           ஒட்டாரை ஒட்டிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: உறவில் உள்ளவர்களுக்கு, நல்லவற்றை செய்வதை விட;
           உறவிலிருந்து விலகி இருப்போரை இணைத்துக் கொள்வது, விரைந்து செய்யவேண்டியது
           ஆகும்.
(அது போல்...)
           நாம் அறிந்தவற்றை, பிறருக்கு சொல்வதை விட; நாம் அறியாமல் இருக்கும்
           விடயங்களைக் கேட்பதை, முதன்மையாய் எண்ணிப் பழகவேண்டும்.

0680.  உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
           கொள்வர் பெரியார்ப் பணிந்து

           விழியப்பன் விளக்கம்: அதிகாரமற்ற இடத்தில் இருப்போர், உடனிருப்போரின்
           பாதுகாப்பின்மைக்கு அஞ்சி; தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு,
           வலியோர்களுக்கு பணிவர்.
(அது போல்...)
           வருமானமற்ற நிலையில் இருப்போர், குடும்பத்தாரின் வறுமைக்கு அஞ்சி; இல்லறத்தைத்
           தொடர்ந்து நடத்தும் பொருட்டு, மேலதிகாரிகளுக்கு அடங்குவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக