8 மாதங்களுக்கு முன், நண்பர் ஒருவர் "ஒரே நேரத்தில் 2 காதல்கள் சாத்தியமா?" என்று கேட்டார். சற்றும் யோசிக்காமல்... "என்னளவில், நிச்சயம் சாத்தியம் இல்லை!" என்றேன். வெவ்வேறு காலக்கட்டத்தில், வெவ்வேறு காதல்கள்; வேறு விடயம் - அப்படி இராதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், என்னிடம் வைக்கப்பட்ட கேள்வி "ஒரே நேரத்தில் 2 காதல்கள் சாத்தியமா?" என்பதே. நிச்சயமாய், இரண்டில் ஒன்றிற்கான அடிப்படை "காதலாய் இருக்காது" என்பது என் திண்ணமான எண்ணம். இன்றையக் காலக்கட்டத்தில் "ஆண்/பெண் என்ற பேதமேதுமின்றி" திருமணமான பலருக்கும் வேறொருவருடன் தொடர்பு இருக்கிறது. இதில், பழையக் காதலைப் புதுப்பிப்பதும் ஓர் காரணி. ஏதேனும் ஓர் சூழ்நிலையில், திருமண உறவில் திருப்தி இல்லாத்தால், இவை நடக்கின்றன. ஆனால், இவற்றை "கள்ளத்தொடர்பு அல்லது கள்ளக்காதல்" என்ற பிரிவிலேயே நான் பார்க்கிறேன். உண்மையான காதல்களாய்...
இருந்திருப்பின், வேறொரு திருமணம் சாத்தியப்பட்டிருக்காது. அல்லது திருமணக்-காதல் உண்மையெனில், பழையக் காதல் புதுப்பிக்கப்படாது. எனவே, எப்படிப் பார்ப்பினும், இரண்டில் ஒன்றிற்கு காதல் அடிப்படை அல்ல (அல்லது) இரண்டு காதல்கள் சாத்தியம் இல்லை! ஆனால், இது "இரண்டு பேர் மீதும் காதல்" என்ற "மாயப்"போர்வையில் நடக்கிறது. அவரிடம் சொன்னதையே மீண்டும் இங்கே சொல்கிறேன்: என்னளவில் "இந்த இரண்டு காதல் கோட்பாடு" சாத்தியமிலை. அப்படி சாத்தியம் என்று எவரேனும் சொன்னால் அது உண்மையல்ல! என்பது என் திண்ணமான நம்பிக்கை - நிச்சயம், அதில் ஏதோவொன்று காதல் அல்லாத காரணத்துக்காய் நடக்கிறது. இந்தக் காரணிகளில் "காமம் முதல் காதல் வரை" பல்வேறு அதிருப்தி காரணிகள் அங்கம் வகிக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் "சரியா? தவறா?" என்றால் - நம் பெருந்தகை "
பிறனில் விழையாமை" என்ற அதிகாரத்தில் சொன்னது போல், மிக நிச்சயமாய் தவறு. ஆனால்...
என் நண்பர் கேட்டது "ஒரே நேரத்தில் 2 காதல்கள் சாத்தியமா?" என்பதே. இங்கே, இன்னொன்றையும் தெளிவுபடுத்த வேண்டும்; அவர் கேட்டது "இரண்டு பெண்களில், குறைந்தது ஒரு பெண்ணுக்கு, மற்றோர் உறவைப் பற்றி தெரியாது!" என்ற அடிப்படையில். அதாவது, இரண்டில் ஒன்று "கள்ளத்தொடர்பு". ஓர் காதல் மற்ற உறவுக்கு; அல்லது வேறெவருக்கும் தெரியக்கூடாது என்ற நிபந்தனை எழுந்தாலே "அது காதல் அல்ல!" என்பது என் புரிதல். காதல் என்ற போர்வையில் வேண்டுமானால், அது நடக்கலாம் - இதில் ஆண்/பெண் பாகுபாடு இல்லை. ஆனால், கீழ்வருவது போல், விதிவிலக்கான "ஒன்றுக்கும் மேற்பட்ட காதல்கள்" உண்டு: சில செல்வந்தர்கள் போல்; வெளிப்படையாய் தெரிந்தே "2/3 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ங்கள்" கொண்டவர்கள் பலரை நமக்கு தெரியும். எல்லோருக்கும் இல்லை எனினும், அவர்களில் பலருக்கும் "ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டும் காதல்கள்" இருப்பதை மறுப்பதற்கில்லை. என் எழுத்துகுரு கூட...
இன்றுவரை "ஒரே வீட்டில் 2 மனைவியர்களுடன்" இருப்பதை எல்லோரும் அறிவர். அவரும், அதை மறைக்காமல், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இன்றும் வெளிப்படையாய் சொல்வார். அதுதான் நிதர்சனம்! மறைத்து நிகழ்த்தப்படும் ஒரு உறவில், உண்மையான காதல் இருப்பது சாத்தியமில்லை; அதை காதலென்று, எதைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது/கூடாது. உண்மைக்காதல் எனில், மேற்குறிப்பிட்ட விதிவிலக்குகளைப் போல் அப்பட்டமாய் வெளியே சொல்லப்படும். அதில் சிறிதும் அவமானம் அல்லது தவறென்ற குற்ற-உணர்வு இருக்காது! இருக்கமுடியாது! ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. "வெகு சிலருக்கே" அது சாத்தியம். அதற்கு பெருத்த உண்மை தேவைப்படுகிறது. தகுதி பிரிக்காத; உயர்வு/தாழ்வு இல்லாத "பரஸ்பரக் காதல்" தேவைப்படுகிறது. ஒரு காதலை ஒழுங்காய் வெளிப்படுத்தி, பரஸ்பரம் உண்மையாய் இருப்பதற்கே - இங்கே பற்பல போராட்டங்கள். அதுதான், ஒரு இயல்பான...
மனிதனின் குணம். என்னளவில் "ஒரே நேரத்தில் இரண்டு காதல்கள்" சாத்தியமில்லை. மேற்குறிப்பிட்டது போல், விதிவிலக்குகள் உண்டு. வெகு நிச்சயமாய், மறைத்து வைத்து நிகழ்த்தப்படுவது காதலே இல்லை! என்பது என் பார்வை. இதை, தீர்க்கமாய்/சுருக்கமாய் அவருக்கு வெளிப்படுத்தி இருந்தேன். ஆனால், அது எந்த அளவிற்கு அவருக்குப் புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால், இம்மாதிரியான குழப்பங்கள் பலருக்கும் இருக்கக்கூடும்! இருக்கிறது. அதற்காகத்தான், அதை இப்படியோர் தலையங்கமாய் எழுதுவது அவசியம் என்றுணர்ந்தேன். இப்படி "காதல் என்ற போர்வையில்" தான் பலதரப்பட்ட இன்றைய "ஒன்றுக்கும் மேற்பட்ட உறவுகள்" அரங்கேறுகின்றன. காதலுக்கு பின்னால் "வேறொரு காரணம்" இருப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் தெரியும்; ஆனால், ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அப்படி, உண்மையை ஒப்புக்கொண்டால், அந்த உறவை அவர்களே...
மதிக்கமாட்டார்கள்! மேலுள்ள கருத்துப்படத்தில் சொல்லியிருப்பது போல் "ஒரேநேரத்தில், இரண்டு (அல்லது) அதற்கு மேற்பட்டவர்களை "உண்மையாய்" காதலிக்க முடியாது எனில், அங்கே ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அந்த உறவில் இருப்பவர்களிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் "அப்படி ஏதும் பிரச்சனை இல்லை; வேறு காரணமும் இல்லை!" என்று அவர்களை ஏமாற்றிக் கொள்ளவே; அதைக் காதலென்று அழைக்கின்றனர் என்பதே என் பார்வை. ஏனெனில், உண்மையான காதல் வெளிப்படையாய் நடந்தேறும்! எக்காரணத்துக்காகவும், அதை மறைப்பது சாத்தியமாகாது/தேவைப்படாது. குறைந்தது, இன்னொரு காதலெனும் உறவில் இருப்பவரிடமாவது பகிரப்படும்! ஒரு காதலை, இன்னொரு காதலைக் கொண்டிருப்பவர் இடம் கூட பகிரமுடியாது! என்றால் அதெப்படி காதல் ஆகும்?! இந்த சிந்தனையும்/கேள்வியும் நம்முள் எழுவது முக்கியம். எனவே, நமக்கிருப்பது...
எத்தனைக் காதல்"கள்" என்பதைவிட; இருப்பது ஒரேயொரு காதல் எனினும், அது...
"உண்மையான காதலா?!" என்ற புரிதல் முக்கியம்!!!