வெள்ளி, ஏப்ரல் 15, 2016

பிறிதொன்றன் புண்ணது (குறள் எண்: 0257)



         இதுவரை விளக்கவுரை எழுதிய அதிகாரங்களுள், நான் மிகவும் அனுபவித்து/சிந்தித்து எழுதும் அதிகாரம் "புலால் மறுத்தல்" என்றால் அது மிகையல்ல. மேலும் இந்த அதிகாரம், என்னுள் ஒரு பெருத்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அதிகாரத்தின் மற்ற குறள்களைப் போல் 0257-இற்கான விளக்கவுரையையும் மிகுந்த ஆர்வத்துடன் எழுதினேன். அதில் "பிறிதொன்றன் புண்ணது" என்றோர் சொற்றொடர் வருகிறது. இதற்கு நேரடியான அர்த்தம் "வேறொரு உயிரின் புண்" என்பதே. அதே அடிப்படையில் தான் பின்வரும் அர்த்தங்களைப் பார்க்க முடிந்தது. 
  • பரிமேலழகர்: புலாலாவது பிறிதோர் உடம்பின் புண்
  • மு. வரதராசன்: அப்புலால் வேறோர் உயிரின் புண்
  • மு. கருணாநிதி:  புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண்
  • சாலமன் பாப்பையா: இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்
          மேற்குறிப்பிட்ட சான்றோர்கள் சொல்லி இருக்கும் அர்த்தத்தில் எந்த தவறும் இல்லை; அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதை இன்னும் அழுத்தமாய் சொல்லி இருக்கலாம்! என்று தோன்றியது. மேலும் அழுத்தமாய், எப்படி சொல்லலாம்? என்று ஆழ யோசிக்கலானேன். உடனே, ஒரு விளக்கம் வந்தது. நான் எழுதிய விளக்கம்...

இறைச்சி என்பது வேறோர் உயிரின், புண்ணிலிருந்து உருவான சதை

       ஆம்! புண் என்பது வெட்டப்பட்டு (அல்லது) அறுக்கப்பட்டு உருவாவது. மேலும், புண் என்பது சதையை "பிய்த்தெறிந்தது போன்ற" தோற்றத்தை வெளிப்படுத்தும். இப்படி சதை வெளிப்படும் புண்ணைப் பார்ப்பது, நல்ல உணர்வைக் கொடுக்காது. அதனால் தான், புண்ணை மறைக்க முயல்வது மனித இயல்பாய் இருக்கிறது.  எனவே, இறைச்சி என்ற சொல்லைக் கேட்கும் போது, புண்ணை பார்க்கும்போது வெளிப்படும் "அதே" உணர்வு எழவேண்டும் என்று தோன்றியது. மேலும், அந்த அடிப்படையில் தான் பெருந்தகையும்; இறைச்சியைப் புண்ணுடன் தொடர்பு படுத்தி இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன். இறைச்சி என்பது "புண்ணைப் போல்" ஒரு உயிர் வெட்டப்படும் (அல்லது) அறுக்கும் போது உருவாவது; அந்நிகழ்வு புண்ணையும் தாண்டி ஒரு உயிரின் சதையோடு நேரடி தொடர்புடையது. எனவே தான், என்னுடைய விளக்கவுரையை இவ்வாறு எழுதினேன். என் புரிதல் உங்களுக்கு பரிமாறப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக