வியாழன், ஏப்ரல் 28, 2016

அதிகாரம் 027: தவம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 027 - தவம்

0261.  உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை 
           அற்றே தவத்திற் குரு

           விழியப்பன் விளக்கம்: தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுப்பது மற்றும் பிற உயிர்களுக்கு
           துன்பம் விளைவிக்காதது - போன்ற தன்மைகளே, தவத்தின் காரணிகளாம்.
(அது போல்...)
           நாம் செய்த தவறுகளை ஏற்பது மற்றும் பிறரின் தவறுகளைப் பூதாகரமாக சித்தரிக்காதது -
           போன்ற குணங்களே, மனிதத்தின் கோட்பாடுகளாம்.

0262.  தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை 
           அஃதிலார் மேற்கொள் வது

           விழியப்பன் விளக்கம்: நல்லறம் பழகும் மனத்திடம் உள்ளவர்க்கே, தவம் செய்வது 
           சாத்தியமாகும்; நல்லறம் இல்லாதோர், தவம் பழகுவது  வீண்செயலாகும்.
(அது போல்...)
           சுயம் காக்கும் ஒழுங்கியல் தெரிந்தவர்க்கே, சமூக சேவை கைகூடும்; சுயம் உணராதோர்,
           சமூகசேவை ஆற்றுவது பயனற்றதாகும்.
           
0263.  துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் 
           மற்றை யவர்கள் தவம்

           விழியப்பன் விளக்கம்: அறமல்லவற்றைத் துறந்து, தவம் மேற்கொள்வோர்க்கு; 
           உணவளித்து உதவிடத்தான், மற்றவர்கள் தவம் மேற்கொள்வதை மறந்தனரோ?
(அது போல்...)
           சுயவாழ்வைத் தொலைத்து, அரசியலில் ஈடுபடுவோர்க்கு; ஆதரவுக்கரம் நீட்டத்தான், 
           பொதுமக்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்தனரோ?

0264.  ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் 
           எண்ணின் தவத்தான் வரும்

           விழியப்பன் விளக்கம்: பகைவரை வீழ்த்தவும் மற்றும் சுற்றத்தாரை உயர்த்தவும் 
           எண்ணினால்; அவை தவம் செய்யும் இயல்பினால் நிறைவேறும்.
(அது போல்...)
           தீவினைகளை அழிக்கவும் மற்றும் நல்வினைகளைப் பெருக்கவும் முனைந்தால்; அவை 
           தேடல் விதைக்கும் சிந்தனையால் சாத்தியமாகும்.

0265.  வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் 
           ஈண்டு முயலப் படும்

           விழியப்பன் விளக்கம்: வேண்டியதை வேண்டிய வண்ணமே, பெறமுடியும் என்பதால்; 
           செய்யக்கூடிய தவம் சார்ந்த செயல்களை, உடனடியாய் செய்ய முயலவேண்டும்.
(அது போல்...)
           உணர்வுகளை உணர்வுப் பூர்வமாக, உணரமுடியும் என்தால்; பேணக்கூடிய தாய் சார்ந்த 
           உறவுகளை, விரைவாய் பேணத் துவங்கவேண்டும்.

0266.  தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் 
           அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

           விழியப்பன் விளக்கம்: தவம் சார்ந்த செயல்கள் செய்வோரே, பிறவிக்கடனை செய்வோர் 
           ஆவர்; மற்றவரெல்லாம் ஆசைக்கு அடிமையாகி, வீண்செயல்கள் செய்வராவர்.
(அது போல்...)
           வாய்மை சார்ந்த வாக்குறுதிகள் அளிப்பவையே, மக்களாட்சியை உணர்ந்த
           கட்சிகளாகும்; மற்றவையெல்லாம் பதவிக்கு அடிமையாகி, ஊழல்கள் செய்பவையாகும்.

0267.  சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் 
           சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: நெருப்பில் சுடுவதால், சுடுவதற்கு ஏற்ப ஒளிரும் பொன் போல்; தவம் 
           மேற்கொள்வோரின் பகுத்தறிவு, துன்பங்களின் அளவுக்கேற்ப விரிவடையும்.
(அது போல்...)
           அறச்செயலில் ஈடுபடுவதால், ஈடுபாட்டிற்கு ஏற்ப வளரும் மனிதம் போல்; வாழ்வியலை 
           ஆய்வோரின் தெளிவு, சிந்தனைத் திறனுக்கேற்ப வலுவடையும்.

0268.  தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய 
           மன்னுயி ரெல்லாந் தொழும்

           விழியப்பன் விளக்கம்: தவம் பழகுவதால், தன்னுயிர் மற்றும் தான் எனும் அகந்தையைத் 
           துறந்தவரை; மன்னுலகிலுள்ள மற்ற உயிர்கள் அனைத்தும் வணங்கும்.
(அது போல்...)
           பொதுமை பழகுவதால், சுயகுடும்பம் மற்றும் சுயகட்சி எனும் வளர்ச்சிகளைத்
           தவிர்த்தவரை; சமூகத்திலுள்ள மற்ற தலைவர்கள் அனைவரும் மதிப்பர்.

0269.  கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் 
           ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: தவம் பழகுவதால் விளையும், ஆற்றலைப் பெற்றவர்க்கு; இறப்பைக் 
           கடக்கும் அதிசயமும் சாத்தியமாகும்.
(அது போல்...)
           சுயம் உணர்வதால் விளையும், புரிதலை உடையவர்க்கு; காமத்தை வெல்லும் 
           தனித்திறமும் தன்வயப்படும்.

0270.  இலர்பல ராகிய காரணம் நோற்பார் 
           சிலர்பலர் நோலா தவர்

           விழியப்பன் விளக்கம்: மனவலிமை இல்லாத மக்கள், பலராக இருக்க காரணம்; தவம் 
           செய்வோர் சிலராகவும், தவம் செய்யாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
(அது போல்...)
           நல்லாட்சி செய்யாத தலைவர்கள், பலராக இருக்க காரணம்; பொதுநலம் கருதுவோர் 
           சிலராகவும், பொதுநலம் கருதாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக