வியாழன், நவம்பர் 24, 2016

அதிகாரம் 048: வலியறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்

0471.  வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
           துணைவலியும் தூக்கிச் செயல்

           விழியப்பன் விளக்கம்: செயல்களின் வலிமை/தன் வலிமை/எதிரியின் வலிமை/
           துணையிருப்போர் வலிமை - இவை நான்கையும் அளவிட்டு, செயல்களைச்
           செய்யவேண்டும்.
(அது போல்...)
           சிந்தனையின் பலம்/மனதின் பலம்/நட்புகள் பலம்/சுற்றத்தின் பலம் - இவை நான்கையும்
           உணர்ந்து, உறவுகளை நிர்ணயிக்கவேண்டும்.
        
0472.  ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
           செல்வார்க்குச் செல்லாதது இல்

           விழியப்பன் விளக்கம்: தம் வலிமையின் இயல்பை அறிந்து, அறிந்தவண்ணம்
           வைராக்கியமுடன் நிலைத்து செயல்படுவோர்க்கு; இயலாதது என்று எதுவுமில்லை.
(அது போல்...)
           சுய ஒழுக்கத்தின் மாண்பை உணர்ந்து, உணர்ந்தவண்ணம் உண்மையுடன் தொடர்ந்து
           வாழ்வோர்க்கு; கடினமானது என்று ஏதுமில்லை.
           
0473.  உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி 
           இடைக்கண் முரிந்தார் பலர்

           விழியப்பன் விளக்கம்: தம் வலிமையைச் சரியாய் கணிக்காது, உணர்வுப் பெருக்கில்
           செயல்களைத் துவங்கி; நிறைவேற்றாமல், இடையிலேயே விட்டொழிந்தோர் பலருண்டு.
(அது போல்...)
           தம் வருமானத்தை சரியாய் திட்டமிடாது, அவசியச் சூழலில் கடன்களைப் பெற்று;
           மீளமுடியாமல், இளமையிலேயே வாழ்விழந்தோர் பலருண்டு.

0474.  அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
           வியந்தான் விரைந்து கெடும்

           விழியப்பன் விளக்கம்: பிறருடன் இணக்கமாய் உறவாடாமல், தன் வலிமையின் அளவை
           அறியாமல்; தன்னைத் தானே வியந்து பேசுவோர், வேகமாய் அழிவர்.
(அது போல்...)
           சக-ஆட்டக்காரருடன் கலந்து ஆலோசிக்காமல், தன் தலைமையின் சுயத்தை
           உணராமல்; தற்பெருமை எண்ணம் கொண்ட அணித்தலைவர்கள், விரைவில் அழிவர்.

0475.  பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
           சால மிகுத்துப் பெயின்

           விழியப்பன் விளக்கம்: இலகுவான மயிலிறகே ஆயினும், ஏற்றப்படும் வண்டியின்
           அச்சாணியின் வலிமையை அறியாமல்; அளவுக்கதிகமாக ஏற்றினால், அச்சு முறிந்துவிடும்.
(அது போல்...)
           குறைவான செலவினமே ஆயினும், கையிலிருக்கும் இருப்பின் அளவைக் கணக்கில்
           கொள்ளாமல்; தொடர்ந்து செலவிட்டால், வறுமை ஆட்கொள்ளும்.

0476.  நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
           உயிர்க்கிறுதி யாகி விடும்

           விழியப்பன் விளக்கம்: மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், மனித வலிமையின் எல்லையை
           உணராமல்; மேலும் ஏறிட முயன்றால், உயிரை மாய்ப்பதற்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
           மக்களின் உரிமையைத் தகர்ப்போர், உரிமை மீறலின் வரையறையை அறியாமல்,
           மென்மேலும் தகர்க்க முனைந்தால், சமுதாயப் புரட்சி உருவாகும்.

0477.  ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
           போற்றி வழங்கு நெறி

           விழியப்பன் விளக்கம்: நம் பொருளீட்டும் வலிமையை உணர்ந்து, பிறர்க்குக் கொடுத்தல்
           வேண்டும்; அதுவே, பொருளைப் பாதுகாத்துக் கொடையளிக்கும் வழிமுறையாகும்.
(அது போல்...)
           நம் புரிதலின் ஆழத்தை ஆராய்ந்து, பிறர்க்குக் கற்பித்தல் வேண்டும்; அதுவே, புரிதலைப்
           பெருக்கிக் கற்பிக்கும் நெறிமுறையாகும்.

0478.  ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை 
           போகாறு அகலாக் கடை

           விழியப்பன் விளக்கம்: செலவினங்கள், எல்லையைக் கடந்து போகாத வரையில்; 
           வருமானத்தின் அளவு குறைந்தாலும், பெரிய அழிவு ஏதும் நேர்வதில்லை.
(அது போல்...)
           தீச்செயல்கள், மனிதத்தை அழித்து பரவாத வரையில்; நற்சிந்தனையின் வீரியம் 
           அழிந்தாலும், பயங்கர தீவிரவாதம் ஏதும் நிகழ்வதில்லை.

0479.  அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 
           இல்லாகித் தோன்றாக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: வருமானத்தைக் கணக்கிட்டு, வாழாதவரின் வாழ்க்கை; வளமாய்
           இருப்பது போன்ற மாயையை உருவாக்கி, பின்னர் வலிமையின்றி கெட்டழியும்.
(அது போல்...)
           உறவுகளை மதித்து, பழகாதவரின் வாழ்க்கை; அதிகாரமாய் இருப்பது போன்ற
           நம்பிக்கையைக் கொடுத்து, பின்னர் அடிமைபோல் முடிவடையும்.

0480.  உளவரை தூக்காத ஒப்புர வாண்மை 
           வளவரை வல்லைக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: தன்னிடம் இருப்பதைக் கணக்கிடாமல், பிறர்க்கு உதவிக்
           கொண்டே இருந்தால்; ஒருவரின் செல்வத்தின் அளவு, விரைவில் அழியும்.
(அது போல்...)
           தன்னுடைய குறையைக் களையாமல், பிறரை விமர்சித்துக் கொண்டே இருந்தால்;
           ஒருவரின் சுயத்தின் தரம், வேகமாய் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக