திங்கள், அக்டோபர் 19, 2015

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை (குறள் எண்: 0078)



     "யோவ் வள்ளுவரே!" என்று தலைப்பிட்ட பதிவில் குறிப்பிடாது போல், மேலும் அதிகமாய் என்னை வியந்து-பேச வைத்துக்கொண்டிருக்கிறார் நம் பெருந்தகை. இதுவரை பல குறள்களும் கொடுக்கும் ஆழ்ந்த கருத்துகளைப் பற்றியே சிலாகித்து இருக்கிறேன். குறள் எண்: 0078-இற்கான விளக்கத்தை எழுதுவதே, மிகப்பெரிய போராட்டமாய் இருந்தது. முடிவில், என்னறிவுக்கு/என்-திருப்திக்கு முடிந்த அளவில் விளக்கவுரையை எழுதி இருப்பதாகவே நம்புகிறேன். இந்த குறளில் "அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை" என்றோர் சொற்றொடர் வருகிறது. மேலோட்டமாய் பார்த்தால் "மனதில் அன்பு இல்லாவரின் வாழ்க்கை" என்பதாகத் தோன்றும். அப்படித்தான்...
  • மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை
  • அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை
  • மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை
  • அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை
  • தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை
      என்ற வகையில், பலரும் விளக்கவுரைகள் எழுதி இருக்கின்றனர். வெகுநிச்சயமாக, இதில் பொருள் குற்றம் ஏதுமில்லை - அடுத்து வரும் உவமையை ஆழ்ந்து கவனிக்காதவரை! ஆம்! அடுத்து "வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று" என்கிறார் பெருந்தகை. இதற்கு மேற்குறிப்பிட்ட விளக்கவுரைகள்...
  • பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது
  • வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது
  • வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்
  • வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும்
  • வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும்
    என்று பொருள்படுத்தி இருக்கின்றன. கண்டிப்பாக, குறளில் வரும் உவமை சரியாய் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எடுத்துக்கொண்ட விசயத்தை விளக்குவதில் தான், தவறாய் படுகிறது எனக்கு. உவமை என்ன சொல்கிறது? முளைப்பது சிரமமாக உள்ள நிலத்தில் (பாறை/பாலை போன்றவை), ஏற்கனவே பட்டுப்போன; அதவாது, இறந்து போன ஒரு மரம் மீண்டும் துளிர்ப்பது சாத்தியம் இல்லை. இங்கே "அன்பகத் தில்லா" என்பது "உயிரற்ற/பட்டுப்போன" என்பதோடு பொருந்துகிறது; அதுபோல் "உயிர்வாழ்க்கை" என்பது "பாறை/பாலை போன்ற நிலத்தோடு" பொருந்துகிறது. ஆனால் "மீண்டும் துளிர்த்தல்" என்ற உவமானத்திற்கு நிகரான பொருள் எடுத்துக்கொண்ட விசயத்தில் எங்கே வருகிறது? இதை நன்கு யோசித்தால், என்னுடைய பார்வை உங்களுக்குப் புரியும். என்னுடைய புரிதல் கீழ்வருவது தான்:
  • அன்பு இல்லாததால் ஒருவரின் வாழ்வில், அறமும் பொய்த்துப் போகும்; எனவே, பொய்த்துப்போன அந்த அறத்தை, மீண்டும் கடைப்பிடிப்பது மிகவும் சிரமம் என்ற வகையில் - எடுத்துக்கொண்ட விசயத்தை நான் பார்க்கிறேன்.
  • அதுபோல் "வன்பாற்கண்" என்பதற்கு நேரடியாக "பாறை (அல்லது) பாலை" என்று வரையறுக்கவில்லை; ஈரப்பதமே இல்லாமல் ஒரு நிலம், மிகவும் இருக்கமாய்(வலிமையாய்) இருந்தால் எப்படி இருக்கும்? அங்கே துளிர்வது/முளைப்பது என்பது எத்தனை கடினமாக இருக்கும்? எனவே, அந்தப் பொருளிலேயே விளக்கவுரையை எழுதி இருக்கிறேன்.
      வழக்கமான - என் நிகர் விளக்கத்தை எழுத பெருத்த சிரமம் இல்லை. இன்று பதிந்த தலையங்கம், இதை ஒத்த விசயம் தான் என்பதால் - "கொள்கைகளைத் தன்னிலிருந்து துவங்காதவர்களின் செயல்பாடுகள்; இறந்து-காய்ந்த மீனுக்கு, நீரூற்றி உயிர்ப்பிக்க நினைப்பது போன்றதாகும்" - என்று எழுதி இருக்கிறேன். என்னுடைய பார்வையில்; குறள் எண் 0078-இற்கான விளக்கவுரை பின்வருவது போல் இருக்கவேண்டும் என்று வரையருத்திருக்கிறேன்.

உளத்தில் அன்பில்லாதவரின் வாழ்கையில் அறமென்பது; 
ஈரமேயில்லாத  வன்மையான நிலத்தில், உலர்ந்துபோன மரம் துளிர்ப்பதைப் போன்றது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக