புதன், அக்டோபர் 14, 2015

அன்புடைமை என்ன சொல்கிறது??? (அதிகாரம் 008)



        இல்வாழ்க்கை எனும் அதிகாரம் 005-இற்கான விளக்கவுரையைத் துவங்கியபோது - அதன் முதற்-குறளே; திருமண வாழ்க்கை எத்தனை சிரமமானது என்பதை உணர்த்துகிறது, என்பதை யோவ் வள்ளுவரே! என்ற தலைப்பில் பதிவாய் எழுதிய அனுபவம் இன்னும் பசுமையான நினைவாய் இருக்கிறது. இல்வாழ்க்கையின் அடிப்படையான "வாழ்க்கைத்துணை நலம்" மற்றும் "புதல்வரைப் பெறுதல்" என்ற அடுத்த இரண்டு அதிகாரங்களும் கூட; பெருத்த சவாலைக் கொடுப்பவை. முதல் நான்கு-அதிகாரங்களும் "வேறு மாற்றேயில்லை! அவை நான்கையும் தவறாமல் கடைபிடிக்கப்பட வேண்டியவை!!" என்பதால் - அதைப் பற்றி பெரிதும் சிந்திக்க மாட்டோம். அதன் விளைவாகவே, அவை நான்கையும் படித்துவிட்டு "அப்படி ஒன்னும் இல்லையேப்பா!" என்று எவரேனும் நினைத்திருந்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நம் பொதுமறையில் இருக்கும் ஒவ்வொரு குறளும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டியது எனினும்...

          முதல் நான்கைத் தாண்டிப் பார்க்கும் போது, அப்படியொரு கண்டிப்பு இல்லாமல் இருப்பது போல் புலப்படும். ஆனால், இதுவரை விளக்கவுரை எழுதிய 5, 6 & 7 எண்ணிட்ட அதிகாரங்களிலும் உள்ள ஒவ்வொரு குறளையும் - ஆழ்ந்து பார்த்தால்; வாழ்க்கை சிறந்திட, அவை ஒவ்வொன்றும் எத்தனை அவசியம் என்பது புரியும். இப்படி - குறள்களைச் சொல்லி இருக்கும் விதத்தில் மட்டுமல்ல! அதிகாரங்களை வரிசைப் படுத்தி இருப்பதிலும்; நம் பெருந்தகையின் மாட்சிமையும்/ஆளுமையும் தெளிவாய் புரிகிறது. மேற்குறிப்பிட்ட மூன்று அதிகாரங்களில் "தனிப்பதிவாய்" எழுதிட, பல விஷயங்கள் உள்ளன. அவைகளில் இருக்கும் ஒவ்வொரு குறளுக்கும் தேவையான கருத்துப்படம் தேர்ந்தெடுக்க பட்ட சிரமங்களைக் கூட; தனிப்பதிவாய் எழுதலாம். என்மகளைக் காண விடுப்பில் சென்றிருந்தமையால், இன்றுவரை அவற்றைச் செய்திட முடியவில்லை! மன்னியுங்கள்; விரைவில் கண்டிப்பாக எழுதிட முனைகிறேன். அப்படி ஒவ்வொரு அதிகாரத்தையும்;

             வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியாய் உணர்த்தியதோடு  - ஒவ்வொரு படியை ஏறுவது எவ்வளவு சிரமம் என்பதையும் "குறளில் பொதிந்திருக்கும்" ஆழ்ந்த கருத்துகள் மூலம் "மறைவாய்" உணர்த்தி இருக்குகிறார் நம் பெருந்தகை. அந்த வகையில், 008-ஆவது அதிகாரமாய் வரும் "அன்புடைமை" என்பதும் சற்றும் குறைவில்லாதது! எவரேனும் "என்ன பெருசா! அன்பு தானே?!" என்று யோசித்தால், உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். நான் அடிக்கடி சொல்வது போல், மேலோட்டமாய் திருக்குறளைப் படிப்பது பெருந்தகையின் சிறப்பை உணர வழிசெய்யாது! அப்படி ஏதும் இல்லாமலா, "பொதுமறை" என்று வரையறை செய்யமுடியும்? அன்பு என்றால் "ஒருவரை நேசிப்பது!" என்ற அளவில் தான் நம்மில் பெரும்பாலோனோருக்கு அன்பைப் பற்றிய வரையறை இருக்கும். இதை விட, அன்பு என்றால் "ஆண்-பெண் இருபாலருக்கு இடையேயான; காமம் சார்ந்த உணர்வு!!" - என்பதான தவறான புரிதலே பலருக்கும் இருக்கிறது.

          அதனால் தான், அன்புக்கு இனையான "Love" என்ற வார்த்தையே, பெரும்பான்மையில், நம் தமிழ்ச் சமூகத்தில் தவறாய் பார்க்கப்படுகிறது என்று தோன்றுகிறது. எனவே, அதுவும் கூட தவறான அன்பல்ல! அல்லது, அது மட்டுமே அன்பல்ல!! என்பதைப் பதியவும் கடமைப் பட்டிருக்கிறேன். அன்பு இல்லாத ஒருவர் எப்படி "பொதுநலம்" இல்லாமல் இருப்பார்? (குறள் எண்: 0072); அன்போடு இணைந்த வாழ்க்கை உடலும்-உயிரும் இணைந்தது போன்றது (குறள் எண்: 0073); மற்றும், அன்பு இருந்தால் தான் உயரிய நட்பெனும் உறவையே அடையமுடியும் (குறள் எண்: 0074) - இப்படி பல்வேறு வகைகளில் அன்பை சொல்கிறார், நம் பெருந்தகை. அன்பை - பல்விதமான அறநெறிகளுடன்/பல்விதமான ஒப்பீடுகளுடன்/பல்விதமான உறவுகளுடன் - விளக்கி சொல்கிறார். அதனால் தான், ஒவ்வொன்றுக்கும் "தனி அதிகாரமாய்; 10 குறள்கள்" எழுதி இருக்கிறார் நம் பெருந்தகை. அதே வகையில் தான், அன்பு என்பதைக் கூட அவர் பல வகையில் விளக்க...

       காரணம்! மேலோட்டமாய் பார்த்தால், ஒவ்வொரு குறளும் வெறும் "எழுசீர்கள் கொண்ட ஈரடியாய் தோன்றலாம்!" ஆனால், ஒவ்வொரு குறளையும் ஆழத் தோண்டிப் பார்த்தால், ஆயிரமாயிரம் கிடைக்கும். எனவேதான், இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். "ஈரடிகளில் எவர் வேண்டுமானாலும்; திருக்குறள் போன்று எழுதலாம்!" ஆனால், திருக்குறளுக்கு இணையாய்; இப்படி ஆழ்ந்த கருத்துக்களோடு எழுத இனி ஏதும் இல்லை! எனவே தான், நான் அப்படி எழுதுவதில்லை; அப்படி எவரேனும் எழுதுவதைப் பார்ப்பினும் ஒரு நிலையாமை கொள்கிறேன். சிலரிடம் "அப்படி எழுதவேண்டாமே?!" என்று வேண்டுகோளாய் சொல்வதுண்டு! சிலரிடம், அதைக்கூட சொல்வதில்லை. நான் சொல்வதை ஏற்பர் என்று நம்புவோர் இடத்தில் சொல்வதுண்டு; இல்லையேல், அதை சொல்லி ஏதும் தேவையற்ற விவாதத்தை; எதிர்கொள்ள விரும்புவதில்லை! எனவே, அப்படி வேறொன்றை எழுதுவதை விட்டுவிட்டு; மற்ற அதிகாரங்களைப் போல்...

அன்புடைமையையும்... ஆழத் தோண்டுவோம் வாருங்கள்!!!    

பின்குறிப்பு: என்னவொரு விந்தை? இந்த பதிவுக்கான கருத்துப்படம் தேடிக்கொண்டு... மேலும் தேடிக்கொண்டே இருக்கும்போது; என்னுடைய கணினியில் "யார் யார் சிவம்?" என்ற பாடல் ஒலிக்கத் துவங்கியது. அந்தப்பாடல்... இதோ! முடியவும் போகிறது. ஆனால், என் கருத்துப்பட தேர்வு...; ம்ம்ம்! ஆனால், பொருத்தமான ஒன்றைக்  கண்டிப்பாகத் தேடிப் பிடித்து வி----!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக