சனி, அக்டோபர் 31, 2015

அதிகாரம் 009: விருந்தோம்பல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 009 - விருந்தோம்பல்

0081.  இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
           வேளாண்மை செய்தற் பொருட்டு

           விழியப்பன் விளக்கம்: இருப்பவற்றைப் பேணி, இல்வாழ்க்கை வாழ்வதெல்லாம்; 
           விருந்தினர்களைப் பேணி, அவர்களுக்கு தேவையானதைச் செய்வதற்காகவே .
(அது போல்...)
           உடம்பைப் பேணி, உயிர்த்திருக்கும் காலமெல்லாம்; மனிதத்தைப் பேணி,
           மனிதகுலத்தைத் தழைத்திட வைப்பதற்காகவே.

0082.  விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
           மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

           விழியப்பன் விளக்கம்: விருந்தினர்கள் வெளியே காத்திருக்க; சாகா-மருந்தே ஆயினும் - 
           தனித்து உண்பது, விரும்பத்தக்க முறையன்று.
(அது போல்...)
           மக்கள் குடிசையும் இல்லாதிருக்க; வைர-மாளிகையே எனினும் - தனியே அனுபவிப்பது, 
           ஆட்சியாளரின் மாண்பன்று.

0083.  வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
           பருவந்து பாழ்படுதல் இன்று

           விழியப்பன் விளக்கம்: நாள்தோறும் - விருந்தினர்களை, புன்னகையுடன் பேணுவோரின் 
           வாழ்க்கை; ஒருநாளும் துன்பப்பட்டு கெட்டுப்போவதில்லை.
(அது போல்...)
           எந்நிலையிலும் - எல்லாவற்றிலும், சமசரமில்லாத அறநெறிப் பழகுவோரை; 
           தோல்வியெதுவும் நிலைகுலைக்கச் செய்வதில்லை.

0084.  அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
           நல்விருந்து ஓம்புவான் இல்

           விழியப்பன் விளக்கம்: முகம்-மலர்ந்து, சிறப்பாக விருந்தினரைப் பேணுவோரின் வீட்டில்; 
           நெஞ்ச-அகம் மலர்ந்து, திருமகள் வாழ்வாள்.
(அது போல்...)
           தேடல்-வளர்க்கும், சிறந்த சிந்தனைகளைப் பரப்புவோரின் படைப்புகளில்; படைப்பு-திறம் 
           வளர்க்க, பிரம்மா அருள்புரிவார்.
          
0085.  வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
           மிச்சில் மிசைவான் புலம்

           விழியப்பன் விளக்கம்: விருந்தினர்களைப் பேணியபின், எஞ்சியதை உண்பவனின் வயலில்; 
           விதையை விதைக்கவும் வேண்டுமோ?
(அது போல்...)
           குடும்பத்தினர் தேவை பூர்த்தியானபின், சுயத்தேவையைப் பற்றி எண்ணுவோர்க்கு; 
           அறநெறியைப் போதிக்கவும் வேண்டுமோ?

0086.  செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
           நல்வருந்து வானத் தவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: வந்த விருந்தினர்களைப் பேணி அனுப்பிவிட்டு, வரும் 
           விருந்தினர்களுக்கு காத்திருப்பவன்; விண்ணுலகில் உள்ளோர்க்கு நல்ல 
           விருந்தினனாவான்.
(அது போல்...)
           வந்த நோயைக் குணப்படுத்திவிட்டு, வரவிருக்கும் நோய்களைத் தடுக்க முனைபவன்; 
           மண்ணுலகில் உள்ளோர்க்கு நல்ல முன்னோடியாவன்.

0087.  இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
           துணைத்துணை வேள்விப் பயன்

           விழியப்பன் விளக்கம்: விருந்தோம்பல் எனும் வேள்வியின் பயன், இத்தனை அளவு 
           என்றேதுமில்லை; அது, விருந்தினரின் தன்மையைச் சார்ந்தது.
(அது போல்...)
           வாய்மை எனும் அறத்தின் பயன், இவ்வளவுவென்ற வரையறை ஏதுமில்லை; அது, 
           கடைப்பிடிப்பவரின் வைராக்கியத்தைப் பொறுத்தது.

0088.  பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
           வேள்வி தலைப்படா தார்

           விழியப்பன் விளக்கம்: விருந்தினர்களைப் பேணும் வேள்வியைச் செய்யாதவர்கள்; வருந்தி 
           சேர்த்த செல்வத்தின் மீதான பற்றை, இழந்தோம் என்பர்.
(அது போல்...)
           மனிதத்தைப் பேணும் செயல்களைச் செய்யாதவர்கள்; விரும்பி வாழ்ந்த வாழ்க்கையின் 
           மீதான பிணைப்பை, இழந்தோம் என்பர்.

0089.  உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
           மடமை மடவார்கண் உண்டு

           விழியப்பன் விளக்கம்: செல்வமிருந்தும், விருந்தினர்களை உபசரிக்கத் தெரியாத 
           அறிவிலிகளிடம்; அறியாமை எனும் "வறுமை" உண்டு.
(அது போல்...)
           பக்தியிருந்தும், நம்பிக்கைகளைப் பகுத்தறியத் தெரியாத ஆத்திகர்களிடம்; மூட-
           நம்பிக்கை எனும் "அகந்தை" உண்டு.

0090.  மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
           நோக்கக் குழையும் விருந்து

           விழியப்பன் விளக்கம்: முகர்வதால் சுருங்கும் அனிச்சம் பூவைப்போல்; உபசரிப்பவரின் 
           முகமாற்றத்தைக் கண்டு, விருந்தினரின் முகம் சுருங்கும்.
 (அது போல்...)
           பசியினால் வாடும் குழந்தையின் முகம்போல்; பொய்யானவரின் செயல்மாற்றத்தைக்
           கண்டு, உண்மையானவரின் மனம் துன்புறும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக