செவ்வாய், அக்டோபர் 13, 2015

குழந்தைகள் - குழந்தைகளாக வளரட்டும்!!!



             சமீப-காலமாய் அடிக்கடி நிகழ்வது போல், வாட்ஸ்-ஆப்பில் வெளிவந்த ஒரு காணொளியால் என்னுள் நிகழ்ந்த சிந்தனைகளே; இத்தலையங்கம் ஆனது. அந்தக் கானொளியில் 4-வயது மதிக்கத்தக்க "மழலைக் கூட" மாறாத ஒரு பெண்குழந்தை, பல கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தாள். நம் நாட்டின் பிரதமர் யார்? எத்தனை மாநிலங்கள்? அதன் தலைநகரங்கள் போன்ற கேள்விகள் அடங்கியிருந்தன. நட்பொருவரின்  "நான் வெட்கப்படுகிறேன்; அதில் எனக்கு 2/3 கூட எனக்கு தெரியாது!" என்ற பதிவுதான்; என்னை உடனடியாக பார்க்கத் தூண்டியது. பார்த்து முடித்தவுடன், என்னுள் எழுந்த கேள்வி "இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?!" என்பது தான். எவரோ ஒருவர் சொல்லிக்கொடுத்ததை அக்குழந்தை சொல்லி இருக்கிறாள். மறுக்கவேயில்லை! அக்குழந்தையின் மனனம்-செய்யும் திறமையை நான்(உம்) மதிக்கிறேன். மனனம் செய்வதால்; எந்த பலனும் இல்லை என்பதை நாம் நன்கறிவோம்; நானும், கல்வி பற்றிய பல பதிவுகளில்...

      விளக்கியிருப்பதால், அதுபற்றி விவாதிக்க ஏதுமில்லை!  இந்தக் காணொளியைப் பலரும் பார்த்திருப்பீர்கள் என்பதால்; அதைப் பற்றியும் விரிவாய் ஏதும் எழுதப்போவதில்லை. தன் பெயர், இருப்பிடம் போன்ற கேள்விகள் கடந்த பின்; தேசம் பற்றிய கேள்விகள் ஆரம்பித்தது. அதில் ஒரு கேள்வி "What is our national language?" என்பது; அதற்கு "ஹிந்தி" எனப் பதில்! எனக்குப் பெருத்த ஆற்றாமை எழுந்தது; நம் தேசத்துக்கு "தேசிய மொழி"யே கிடையாது, வெறும் அலுவல்-மொழி (Official language) மட்டுமே! எனவே "ஒரு கேள்விக்கு பதில் தெரியாது குற்றமல்ல! ஆனால், தவறான-கேள்விக்கு; தவறான-பதில் தெரிந்து வைத்திருப்பது பெருங்குற்றம்!!" என்று பதில் அளித்துவிட்டு, காணொளியை மேற்கொண்டு பார்க்கத் துவங்கினேன். இது, மொழி மேல் எனக்கிருக்கும் வெறியல்ல! என்னையே, நான் "தமிழ் பேசும் இந்தியன்" என்றுதான் வரையறுப்பேன். தேசிய மொழி என்ற ஒன்றே இல்லாதபோது; ஒரு பிஞ்சின் உள்ளத்தில்...

         நஞ்சு விதைக்கப்படுகிறதே?! என்ற ஆற்றமையே காரணம். மேலும், என்னுடைய கேள்வி "4 வயதான குழந்தைக்கு இப்படிப்பட்ட பதில்கள் தெரிந்திருப்பதால்; எவருக்கு என்ன பயன்??!!" என்பதே. பார்ப்பதற்கு, சில நிமிட-காணொளியாய் தெரியலாம். இதைப் பயிற்றுவிக்க - அதை சரியீடு பார்க்க எத்தனை மணி நேரங்கள் செலவிடப்பட்டு இருக்கும்? எத்தனை முறை இந்த காணொளி மீண்டும்/மீண்டும் எடுக்கப்பட்டு இருக்கும்? - இவை எல்லாவற்றையும் கணக்கிட்டால்; அக்குழந்தை தன் "குழந்தைப்"பருவத்தின் எத்தனை நாட்களை இழந்திருக்கும்?! சரி, அப்படியும்... அந்த குழந்தைக்கு என்ன பலன்? உண்மையில், இதைக் காண்பித்து பெருமைப் பட்டுக்கொள்ளும் - அந்த பெற்றோர்களுக்கு கூட எந்த பலனும் இல்லை; ஒரு வரட்டு-சந்தோசம் மட்டுமே எஞ்சும். நிறைய குழந்தைகள் "அரட்டை அரங்கம்" போன்ற நிகழ்சிகளில் - இதை விட அற்புதமான மனன-திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம், இப்போது குறைந்தது...

      30 வயது இருக்கும்! அவர்களில் எவரேனும் ஒருவரின் "பிற்காலச்" சாதனைப் பற்றி நாம் கேள்விப்பட்டது உண்டா? எல்லோரும் சாதிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை; எவரேனும் ஒருவர்?! இதே அடிப்படையில் தான் "ஒவ்வொரு வருடமும் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று சாதித்தவர்கள் - பிற்காலத்தில் சாதித்தது என்ன?" என்ற கேள்வியும். இவற்றால் என்ன பயன்? இப்படிப்பட்ட மனனம் செய்தலில் எந்தப் பலனும் இல்லை என்பதேன்; பலருக்கும் புரிய மறுக்கிறது?! நம் அடிப்படை கல்வி முறையே "இந்த மனனம் செய்யம்" வழக்கத்தால் தானே சிதைந்து போய் இருக்கிறது? அதை நாமே நேரடியாய் அனுபவித்த பின்னரும்; ஏன் வருங்காலத்தை இப்படி ஒரு "பொய்யான" அணுகுமுறையால் தொடர்ந்து சிதைத்துக் கொண்டிருக்கிறோம்?! மும்பை என்ற பதிலுடைய இரண்டு கேள்விகளுக்கு "மும்பை என்று சொல்லிவிட்டு; I live in Mumbai" என்று இரண்டு இடங்களிலும் சொல்லி சிரிக்கிறாள் அக்குழந்தை. அது...

           தேவையற்ற பதில் என்பது கூட அவளுக்கு தெரியாது; தெரியவேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், அது அந்தக் குழந்தையின் தவறே அல்ல! அசோகச்-சக்கரத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்கு பொருள் சொல்லிவிட்டு "அது அமீர்-கானைப் பற்றிய தொலைக்காட்சித் தொடர்!" என்று சொல்கிறாள் அவள். அதையும், எவரோ தவறாக சொல்லிக் கொடுத்ததே காரணம். அவ்வாறு, தவறென்றே தெரியாமல் சொல்வது தான், ஒரு குழந்தையின் இயல்பான அறிவு; அதை ஏன் மாற்றி மிகுந்த அறிவுள்ள குழந்தை என்பதாய் கற்பிக்கவேண்டும்? இவற்றை விடுங்கள்; இந்த பதில்களைத் தெரிந்து வைத்திருப்பதால் அந்த குழந்தைக்கு என்ன பலன்? இது "அவர்கள் குழந்தை! அவர்கள் என்னவோ செய்துவிட்டு போகட்டும்!!" என்று விதண்டா-வாதமாய் சொல்லலாம். இல்லை! இது அவர்கள் சார்ந்தது மட்டுமல்ல; அப்படியெனில், எதற்கு சமூக வலைதளங்களில் உலவ விடவேண்டும்? சரி... ஹிந்தி தான் தேசிய மொழி எனும்போது, ஹிந்தியிலேயே...

       கேள்வி-கேட்டு அதைப் பகிர்ந்து இருக்கலாமே?! இது பெருமளவில் சென்று சேரவேண்டும் என்பதே அதின் அடிப்படை; எனவே, இது மற்றப் பெற்றோர்களையும் பாதிக்கும் செயல். ஒரு உயரியப் பொறுப்பில் இருக்கும் என் நட்பொன்றே "இதைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன்!" என்று உணர்ச்சி வயப்பட்டு கூறும்போது "சாமான்யர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்?!" ஏற்கனவே "பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைப்" போல்; தம் பிள்ளைகள் இல்லையே?! என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள் தான் இங்கு அதிகம், என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நாமே கூட, அப்படிப்பட்ட ஒப்பீடுகளால் பாதிக்கப் பட்டு இருக்கக் கூடும்! எனவே, இதை அவர்களின் தனிப்பட்ட சுதந்திரமாய் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு குழந்தைக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கும்; அதைக் கண்டறிவது, குழந்தை வளர்ப்பில் மிக முக்கியம். அப்படிப்பட்ட ஒன்றை கண்டறிந்து மற்றவர்களுக்கு பரப்பினால், அது மிகச்சிறந்தாய் இருக்கும். இல்லையேல்...

         அவர்கள் பார்த்துவிட்டு, அவர்கள் சுற்றத்தோடு நிறுத்திகொள்ள வேண்டும்.  எல்லாவற்றையும் மீறி; இது - ஒரு குழந்தை, இந்த வயதில் செய்யவேண்டியதே அல்ல! என்பதையே இங்கு அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறேன். மேலும் "இதுதான் ஒரு குழந்தையின் திறமை என்ற மாயை" மற்ற பிள்ளைகள் மேல் திணிக்கப்படுகிறது; அது, தவிர்க்கப்படவேண்டும் என்பதே என் பார்வை. மனனம் என்பது குழந்தையின் அறிவல்ல! இது புரியாததால் தான், எல்லா பிள்ளைகளும் "மாநிலத்தின் முதலாவதாக" வரவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் விடுப்பில் சென்றபோது "என் குடும்பத்தார்; என் மகளை, அவளின் நண்பியோடு ஒப்பிட்டு பேசினர்!" உடனே, அதை மறுத்து "எந்த குழந்தையோடும், என் மகளை ஒப்பிடாதீர்கள்!" என்றேன். என்மகள் இப்படி இருப்பதால் தான், அவள் என்மகள்! வேறொருவரின் குழந்தை; வேறுமாதிரி இருப்பதால் தான் - அவர்களின் மகள்! "உயர்வோ/தாழ்வோ" என்மகளை, வேறு எவரோடும்...

      நான் ஒப்பிடுவதில்லை; மற்றவர்களையும், அப்படி ஒப்பிட நான் அனும்பதிப்பது இல்லை! என்மகள் - அவளின் இயல்போடு இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் "உண்மை பேசுதல்/அறநெறியுடன் இருத்தல்/பிறருடன் இருப்பவற்றைப் பகிர்தல்/..." இப்படி குழந்தைகளுக்கு கட்டாயம் போதிக்கப்படவேண்டிய விசயங்கள் பல உள்ளன; அவை ஒரு சமுதாயத்தையே உயர்த்தும். நான் அப்படி செய்து வருகிறேன். அதை விடுத்து, மேற்குறிப்பிட்ட காணொளி போன்றவை எந்த முன்னேற்றத்தையும் உருவாக்காது. அது, பல பெற்றோர்களைத் தம் குழந்தைகளை; தவறான முறையில் அணுகவே உதவிடும். குழந்தைகளை - அவர்களின் போக்கில்; அவர்களுக்கே உரித்தான மழலையோடு வளர விடவேண்டும்! அங்கே, நம் அறிவை உட்புகுத்தவோ; அல்லது நம் தற்பெருமைக்காய்; தவறான உதாரணத்தை மற்றவர்களுக்கு பறைசாற்றுவதோ தவறு! அதனால் தான், குழந்தை வளர்க்க என்ற ஒரு புதுக்கவிதையை எழுதினேன். ஆம்...

குழந்தைகள் - தம் இயல்புக்கே உரித்தான; குழந்தைகளாய் வளரவேண்டும்!!!

பின்குறிப்பு: அந்தக் குழந்தையின் புகைப்படத்தை தான் முதலில் இத்தலையங்கத்தின் தலைப்படமாய் வைக்க எண்ணினேன். பின், அவளின் புகைப்படம்-கூட மற்ற பிள்ளைகளின் மேல் எந்த பாதிப்பையும் விளைவிக்கக் கூடாது என்பதால்; அதையும் தவிர்த்துவிட்டேன். 

4 கருத்துகள்:

  1. நான் ஒப்பிடுவதில்லை; மற்றவர்களையும், அப்படி ஒப்பிட நான் அனும்பதிப்பது இல்லை! என்மகள் - அவளின் இயல்போடு இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் "உண்மை பேசுதல்/அறநெறியுடன் இருத்தல்/பிறருடன் இருப்பவற்றைப் பகிர்தல்/..." இப்படி குழந்தைகளுக்கு கட்டாயம் போதிக்கப்படவேண்டிய விசயங்கள் பல உள்ளன; அவை ஒரு சமுதாயத்தையே உயர்த்தும்.

    பதிலளிநீக்கு