திங்கள், அக்டோபர் 19, 2015

கொள்கைகள் - நம் செயலில் இருந்து துவங்கவேண்டும்!!!



            சமீபகாலமாய், என் நட்பு வட்டம் ஒன்றில் அரசியல் பற்றி நிறையப் பேசி வருகிறோம். வெறும் வெட்டிப்பேச்சல்ல! நாமும், ஆக்கப்பூர்வமாய் ஏதேனும் செய்யவேண்டும் என்ற வைராக்கியத்துடன் பேசுகிறோம். எதிர்காலத்தில் ஏதாவது ஒரு வகையில் பொது-வாழ்வில் ஈடுபடவேண்டும்! என்ற என் எண்ணத்தை அடிக்கடிக் குறிப்பிடுவதுண்டு. இயக்கத்தின் பெயர் வரை நான் முடிவு செய்திருக்கிறேன் என்பதைக் கூட ஒருநாள் தெரிவித்தேன். பெயர் என்பதில் எனக்கு எப்போதுமே; ஒரு தனித்த எண்ணமும்/புரிதலும் உண்டு. அதைத்தான் "எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை..." என்ற தலையங்கத்தில் விவரித்திருந்தேன். இயக்கத்தின் பெயர் என்ன? என்று கேட்டார்கள்; நான் இப்போதைக்கு சொல்ல விருப்பமில்லை என்று மறுத்துவிட்டேன். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தால், அவர்களிடம் சொல்லாமல் பின் யாரிடம் சொல்லப்போகிறேன்? இந்த சூழலில், இரண்டு நாட்களுக்கு முன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது?!...

            என்ற கேள்வி எழுந்தது. நான் சில முறை சொல்லி இருந்ததை மீண்டும் நினைவு கூர்ந்தேன்: என் சொந்த வாழ்க்கையின் தேவை பூர்த்தியான பின்னர் தான்; பொது-வாழ்வில் என்னை இணைத்துக் கொள்வேன் என்பதே அது. என் மேல் கொண்ட அன்பு மிகுதியால், என் மேல் இருக்கும் நம்பிக்கையால் "இல்லை! சொந்த வாழ்வில் பூர்த்தியாவது சாத்தியம் இல்லை! எனவே, உடனடியாக ஆரம்பிப்பதே நல்லது!" என்றனர். என் தேவையை நானே நிர்ணயித்து இருக்கிறேன்; கண்டிப்பாக என் தேவை ஓர்நாள் பூர்த்தியாகும்! என்று உறுதியாய் கூறினேன். அதனால் தான் "என்னுடைய தேவை எது? எவர் நிர்ணயிப்பது??" என்று என்னால் எழுதமுடிந்தது. சரி "பூர்த்தி ஆகவில்லை என்றால்?!" என்ற கேள்வி வந்தது; அப்படியெனில், பொது-வாழ்வில் ஈடுபடமாட்டேன் என்று கூறினேன். என் பதில் திருப்தியளிக்கவில்லை எனினும், என்மேல் உள்ள அன்பால்; அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது என் நட்பு-வட்டம். பின் "சரி! உன்னுடைய கொள்கை என்ன?"...

        என்றாவது சொல்! என கேட்டது. அதற்கும், நான் எந்த பதிலும் சொல்லவில்லை. நான் எப்போது, பொது-வாழ்வில் என்னை இணைத்துக்கொள்ளப் போகிறேன் என்பதே முடிவாகாத போது; கொள்கையை, எப்படி தீர்க்கமாய் சொல்ல முடியும்?! மேலும், என்னளவில், கொள்கை காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது; மாறவேண்டியது! உதாரணத்திற்கு, ஒரு காலக்கட்டத்தில் "பார்ப்பனியம்" என்ற கோட்பாட்டை; அதைக் கடைப்பிடித்தவர்களை எதிர்க்கவேண்டிய சூழல் இருந்தது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதுபோல், இன்றைய சூழலில் அது தேவையில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், சில கட்சிகள் இன்னமும் அந்த எதிர்ப்பை மாற்றாமல் இருப்பது தவறென்று "பகுத்தறிவுக்கும்"; "பார்ப்பனர்-எதிர்ப்புக்கும் மற்றும் கடவுள்-மறுப்புக்கும்" என்ன தொடர்பு???" என்ற தலையங்கத்தில் பதிந்திருந்தேன். இப்படி விளக்கினால், ஏற்பார்களா?! என்றோர் தயக்கம். பின்னர்...
  • மக்களின் வாழ்வாதார உயர்வு
  • மக்களின் பாதுகாப்பு
  • மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுதல்
         என பொதுவாய் சொல்லலாமா? என்று யோசித்தேன். இவைதான் எல்லா கொள்கைகளுக்கும் அடிப்படை என்பது நிதர்சனமே ஆயினும்; அப்படி சொன்னால், அது அவர்களை கேலி-செய்வது போல் ஆகிவிடக்கூடும்! என்ற அச்சத்தால் "கொள்கைகள்-நம் செயலில் இருந்து துவங்கவேண்டும்!" என்றேன். எந்த அளவிற்கு புரிந்துகொள்ளப்பட்டது?! என்று தெரியவில்லை. அதை இப்படி - விளக்கும் வகையில் நேற்றொரு சம்பவம் நடந்தது: எங்கள் ஊர் பஞ்சாயத்தில் ஒரு பொறுப்பில் இருக்கும் ஒருவர் அரசு கொடுக்கும் 2.2 இலட்சம் உரூபாயை எனக்கு கிடைக்கும் யோசனையை சொன்னார்; அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கையூட்டாய் கொடுத்தால் போதும் என்றார். நான் நினைத்திருந்தால், அதைப் பெற்றிருக்க முடியும். நான் "இல்லையப்பா! அது தேவையான ஒருவருக்கு சென்று சேரவேண்டும்! அதை நான் அபகரிக்க விரும்பவில்லை!!" என்று மறுத்துவிட்டேன். தொடர்ந்து "பயப்படவேண்டாம்! எந்த சிக்கலும் வராது!"...

        என்று சொன்னார்.  நான் மீண்டும் மறுத்துவிட்டு "இல்லையப்பா! பயம் இல்லை; நான், சுய ஒழுக்கமும்/மனித-நேயமும் முக்கியம்!" என்று தொடர்ந்து எழுதி வருபவன். மேலும், திருக்குறளுக்கும் விளக்கவுரை எழுதும் ஒரு புண்ணிய-வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன். இப்படி கையூட்டு கொடுத்து அடுத்தவர் நலனை, நான் பரித்துக்கொண்டால், எழுதும் அருகதையையே நான் இழபேன்; எனவே, எனக்கு அதில் உடன்பாடில்லை! வேறெவரேனும் பெற்றுக்கொள்ளட்டும்!! என்று தீர்க்கமாய் மறுத்துவிட்டேன். நான் கடைப்பிடிக்காத ஒன்றை இதுவரை என் எழுத்தில் சொல்லியதே இல்லை! இனியும் சொல்லப்போவதில்லை! என் எழுத்துப்பணிக்கென்று சில நியதிகளை வகுத்துள்ளேன். என் நியதிகள் "முதலில், எனக்காக வகுக்கப்பட்டவை!"; எதற்காகவும் அதைத் தளர்த்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதுபோல் தான், பொது-வாழ்வுக்கென நான் சில கொள்கைகள் வகுத்துள்ளேன். அந்த கொள்கைள் என் செயலில்/நடைமுறையில்...

    இருந்து துவங்கியவை; அப்படித்தான், துவங்கவேண்டும்! என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன்.  மேலும், என் பொது-வாழ்வை துவங்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை முதலில் "என் கிராமத்தில் இருந்தே, துவங்குவேன்!". இந்த 2.2 இலட்ச உரூபாய்க்காக என்-கொள்கையை இழந்தால், அதில் என் கிராமத்தின் ஒருவரை பின்தள்ளி, பொது-வாழ்வில் நுழையும் அருகதையை நான் இழந்துவிடுவேன்.  அதே நேரம், இதை மட்டும் நான் என்னுடையத் தகுதியாக நினைத்து; இன்றே பொது-வாழ்வில் ஈடுபடும் எண்ணமும் எனக்கில்லை. இது ஒரேயொரு சம்பவம்; இது போன்று மீண்டும்/மீண்டும் சோதனைகள் வரும். இன்று பெரியதாய் தோன்றாத இந்த பணம் நாளை பெரியதாய் தோன்றலாம். அப்படி ஒரு சூழல் வந்து, நான் என் கொள்கையை இழந்தாலும்; இதே நிலைதான். அல்லது 22 இலட்ச உரூபாய் கிடைத்தால், என் மனம் மாறக் கூடும்; நானும், மனிதன் தானே?! எனவே, அப்படிப்பட்ட சூழலே வரக்கூடாது என்பதற்காகத்தான் என் சொந்த...

    தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு; பொது-வாழ்வில் ஈடுபடவேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறேன்.  என் நண்பர்கள் வாதிட்டது போல், என் சொந்த தேவை பூர்த்தியாகும் போது; என் வாழ்வே முடிந்து விடவும் கூடும். என் இலக்கை அடைந்து பொது வாழ்வில் ஈடுபடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று திடமாய் நம்புகிறேன் (இன்-ஷா அல்லாஹ்). "இத்தலையங்கத்தைப் படிப்போர், எனக்கு உறுதுணையாய் வருவர்!" என்ற எதிர்பார்ப்பு இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அது மட்டும் நோக்கம் அல்ல! நான் பொது-வாழ்விற்கு வராமல் போனாலும், இதுபோன்ற கொள்கைகள் வேறு சிலரையாவது சென்று சேரவேண்டும் என்பதே தலையாய நோக்கம்.   இதை எவரேனும் படித்து - இப்போதே, அந்த வாய்ப்பை பெற்றிருப்போர்க்கு - எடுத்துரைத்தாலும் சந்தோசமே! மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும்! என்பதே உண்மையான விருப்பமாய் இருக்கும் பட்சத்தில், அதை எவர் செய்கிறார்கள் என்பது முக்கியமேயில்லை. செய்வது எவராயினும்...

நம்முடைய கொள்கைகள்; நம் செயலில் இருந்தே துவங்கவேண்டும்!!!

பின்குறிப்பு: அட...அட...அட...! என்னவொரு அதிசயம்?! தலையங்கத்தை எழுதி முடித்துவிட்டு; வழக்கம்போல், "தலைப்பை ஒட்டிய" கருத்துப்-படத்தை தேடிக்கொண்டிருந்த போது; சற்றும் எதிர்பாராத விதமாய் "என்னுடைய நிலைப்பாட்டை ஒட்டிய" ஒரு கருத்துப்படத்தைப் பார்த்து இன்ப-அதிர்ச்சி அடைந்தேன்! என்னுடைய முடிவில் துளியளவும் தவறில்லை!! என்பதை எனக்கே அழுத்தமாய் சொல்வதாக அமைந்தது இந்த கருத்துப்படம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக