வியாழன், அக்டோபர் 15, 2015

நாட்டுப்பற்று... எல்லோருக்கும்/எல்லாவற்றிலும் இருக்கவேண்டும்!!!


{நமக்கிருக்கும் சுதந்திரம் தான் - நம் முதல் எதிரியோ???!!!}

*******

        நேற்றிரவு வாட்ஸ்-ஆப் குழுவொன்றில் சப்பான் நாட்டுக்காரர்களைப் பற்றிய ஒரு பகிர்வைப் பார்த்துவிட்டு; நட்பொன்று "சப்பான்காரனுக்கு OK. அவன் நெஜமா உழச்சிட்டு சோர்வுக்குக் கொஞ்சம் கண்ணசறுவான். நம்மாளுக உண்ட மயக்கத்துல இல்ல தூங்குவான்" என்று கருத்திட்டது! அது எனக்கு மிகப்பெரிய ஆற்றாமையைத் தந்தது; மிகச்-சுருக்கமாய், அதைத் தவறென்று சுட்டிக்காட்டிவிட்டு - மேற்கொண்டு வாதமேதும் அங்கே செய்யவில்லை! வழக்கமாய், சிறிது வாதம் எழும்; நேற்று, அதைக்கூட தவிர்த்துவிட்டேன். இதுபோல், பலவற்றிற்கும் நான் வாதம் செய்வதால் "என்னுடைய பார்வை; அவர்களுக்கு அறிவுரை கூறுவதாய் பார்க்கப்படுகிறது - அது அ"ற"வுரை என்று பலமுறைக் கூறிய பின்னரும் கூட!". எனவே, இப்போதெல்லாம், எந்த விசயத்திற்காகவும் எந்த குழுவிலும் "பெருத்த அளவில்" வாதம் செய்வதில்லை. எனக்கென ஒரு "வெளி" - இங்கே இருக்கிறது; இங்கே என் பார்வையைப் பகிர்ந்துவிட்டு...

        அவர்களுக்கும் இணைப்பைக் கொடுத்துவிட்டு அமைதியாய் இருக்கப் பழகி வருகிறேன். என் பார்வையை அங்கே வாதம் செய்து - ஒரு அமைதியற்ற சூழலை ஏற்படுத்த விரும்பவில்லை. இப்படியோர் தலையங்கத்தை எழுத; மேற்கூறிய என் நட்பின் கருத்து மட்டும் காரணமல்ல! மேலும், இதுபற்றி முன்னரே கூட சுருக்கமாய் விளக்கி இருக்கிறேன் - ஆம்! விஜயகாந்த் எனும் தனிமனிதரைத் தூற்றுவதைப் பற்றிய என் பார்வையில் "நம் இந்திய சமூகத்தின் ஒரு குறிப்பிட இனத்தவர்" பற்றி நகைச்சுவை என்ற பெயரில் "கீழ்த்தரமாய் பேசுவதைக்" குறிப்பிட்டிருக்கிறேன். அதே தான், இதற்கும் அடிப்படை!
  • தமிழர்கள் என்றால் ஒற்றுமை இல்லாதவர்கள்
  • சிங் என்றால் அறிவில் குறைந்தவர்கள்
  • இந்தியர்கள் என்றாலே முட்டாள் தனமாவர்கள்
  • படித்தவர்கள் அரசியல், என்று எது பேசினாலும் - அது பாமரர்களுக்காகத்தான்
  • வேற்று மொழி பேசும் சிலர் என்றாலே - அவர்கள் ஒருவிதமானவர்கள்
          இப்படி பல தவறான "பொதுப்பார்வைகள்" இருக்கின்றன. ஒருமுறை, விண்வெளிக்கலம் பற்றி "இந்தியர்களை கீழ்த்தரமாய்" விமர்சிக்கும் ஒரு நகைச்சுவையை முகநூலில் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்டவரிடம் "செவ்வாய்க்கே விண்கலம்" அனுப்பியவர் நம்மவர்கள்; அவர்களையா இப்படிக் கேளிக்கை செய்கிறீர்? என்று கேட்டேன். அப்போதும் அதை உணராத 65 வயது மதிக்கத்தக்க அந்த பெரிய-மனிதர் "உங்களுக்கும் என் சுவற்றுக்கும்(wall) சம்பந்தமில்லை; இங்கே வராதீர்கள்!" என்று பதில் சொன்னார். நானும் "என் நட்பொருவரின் கருத்து தான், என்னை இங்கே அழைத்துவந்து விட்டது; இல்லையேல், நான் பின்தொடர, நல்ல சுவர்கள் பலவுள்ளன!" என்று காட்டமாய் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து விலகிவிட்டேன். இப்படி "நம்-இனத்தை/நம் நாட்டை/நம் நாட்டவரை" தவறாய் சித்தரிப்பதே தவறெனும் போது; அதை ஒருவர் தவறென்று சுட்டிக்காட்டும்போது - அதை உணராமல், நியாயப்படுத்தும் போக்கு...

    என்னை மேலும் பாதிக்கிறது. "நம்-இனத்தை/நம் நாட்டை/நம் நாட்டவரை" தவறாய் சித்தரிப்பது, தவறென்றால்... அதை எவர்/எந்த அடிப்படையில் செய்தாலும் தவறுதான்! அதில், நியாயப்படுத்த ஏதுமில்லை! என்பதே என் அணுகுமுறை. மேற்குறிப்பிட்ட கருத்து "அவர்களையும்/என்னையும் உள்ளடக்கியதாகத்தான் நான் பார்க்கிறேன்!" அவர்களிடம் "அப்போ... நீங்க மட்டும் என்னவாம்?! என்று கேளுங்கள் "நான் அப்படியில்லை... அவர்கள் வேறு!" என்று பதில் வரும். அந்த வேறொருவர் எவர் என்பது அவர்களுக்கும் தெரியாது; அப்படியே, இவர்களாகத்தான் இருக்கும் என்றெண்ணி ஒருவரை கேளுங்கள் "நான் அவன் இல்லை!" என்று பதில் வரும். பின், அப்படிப்பட்டவர் எவருமே இல்லை, என்றாகிறதல்லவா?! பின்னெப்படி, அப்படியோர் கூற்று வருகிறது? இதில், இன்னுமோர் வேடிக்கை உண்டு: "ஒரு மதத்தை; கேளி செய்யும் சிலரைப் பார்த்து - பலரும், ஏன், மற்ற மதத்தைக் கேளி செய்யுங்களேன்!" 

         என்று கொக்கரிப்பார்கள்! மதத்தைப் பற்றி ஒருவர் கேளிக்கை செய்யும்போது, கொதிக்கும் நாம்; ஏன், நம் நாட்டைப் பற்றி பலரும் இப்படி தரக்குறைவாய் பேசும்போது மெளனிக்கிறோம்? நாட்டின் மேலே இல்லாத பற்று; மதத்தின் மேல் (மட்டும்)எப்படி வருகிறது?! சில நாடுகளை நேரில் சென்று பார்த்தவன் என்ற அடிப்படையிலும், பல நாட்டவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றதன் அடிப்படையிலும் - கீழ்க்கண்டவைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:
  • பல நாடுகளில் - இப்படி, நம் நாட்டைப் பற்றி நாமே விமர்சித்தாலும்; கடுமையான தண்டனைக்கு ஆளாவோம்! - என்பது தெரியுமா?! நமக்கு கிடைத்திருக்கும் இந்த "பேச்சு சுதந்திரம்" நம் நாட்டைப் பற்றி நல்ல விசயங்களை பேசி; நாட்டின் பெருமையை உ(ண/ய)ர்த்திடவே! நம் நாட்டில் உள்ள தவறைச் சுட்டிக்காட்டவேண்டாம் என்று சொல்லவில்லை! அது தவறான விசயங்களுக்காய் இருக்கவேண்டும்; அதிலும் "சிறிதேனும்" உண்மையும்/ஆக்கப்பூர்வமான சிந்தனையும் கலந்து இருக்கட்டும்!
  • எல்லோரும்/எல்லாவற்றிலும் முன்னேறிய நாடென்று - எந்த நாடும், உலகில் இல்லை! இனி... இருக்கப்போவதும் இல்லை! நம்மை விட பின்தங்கிய நாடுகள் - ஏராளம்! ஏராளம்!! அதனால், அந்த திருப்தியோடு இருப்போம் என்று கூறவில்லை!!! ஆனால், காரணமே இல்லாமல்; நம் நாட்டையும்/நாட்டவரையும் குறை கூறவேண்டாம், என்பதே என் வேண்டுகோள்.
  • "இந்தியாவில் இருக்கும் கலாச்சாரமும்/சுதந்திரமும்/வாழ்க்கை-வளமும்/வாழ்க்கை-முறையும் - இப்படி பலவும் - நமக்கு இல்லையே?!" என்று ஏங்கும் நாடுகள் ஏராளம்! ஏராளம்!! "சாதி/மதம்/இனம்" என்று பலவற்(றி/றா)ல் பிளவுபட்டிருப்பினும்; இன்னமும் நம் நாட்டைப்போல் ஒற்றுமை... உலகில் எங்குமே இல்லை! ஐரோப்பிய நாடுகளுக்கு ஏகப்பட்ட "எல்லைப் பிரச்சனைகள்!"; நமக்கிருப்பது - மிகச் சொற்பம்தான்!
  • இன்னமும்.... நம் நாடுகளில் "அம்மா! தாயே!!" என்று கெஞ்சி தான் பிச்சை எடுக்கின்றனர்! பல நாடுகளில் இருப்பதுபோல் "துப்பாக்கியைக் காட்டி" எனக்கொரு சிகரெட் கொடுக்கிறாயா?! இல்லை கொல்லட்டுமா?! என்று பிடுங்கும் துர்ப்பாக்கிய நிலை நமக்கு இன்னும் வரவில்லை. கொள்ளையடிப்பவன் வேறு; கொள்ளையில்லாத நாடென்று(ம்) உலகில் ஏதுமில்லை! ஆனால் "மிரட்டி பிச்சை எடுக்கும்" மனிதாபிமானம் அற்ற-நிலை - இன்னமும் நம் நாட்டில் வரவில்லை என்பதை நினைத்து; நாம் நெஞ்சுயர்த்த வேண்டாமா??!!
  • வேறொருவரின் காரில் இருக்கும் "ஒற்றை நாணயத்தை" எடுக்க; அந்த காரின் கண்ணாடியையே உடைக்கும் நிலை இன்னமும், நம் நாட்டில் வரவில்லை என்ற கர்வம் வேண்டாமா?! நமக்கு.
  • நாமே, இப்படி நாட்டுப்பற்று என்றால், என்னவென்று உணராமல் இருக்கும்போது; ஒரு அரசியல்வாதியைப் பார்த்து "உனக்கெல்லாம் நாட்டுப்பற்று இருக்கிறதா?!" என்று கேட்கும் தார்மீகத்தை இழக்கிறோம் என்பது என் புரிதல். மேலும், அரசியல்வாதி என்பவர் தனிப் பிறவியல்ல! அவர் நம்மில் ஒருவர்; நம்மிடம் இருக்கும் அதே சிந்தனை தான் அவர்களுக்கும் இருக்கும்! {உடனே, அவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள்! அவர்கள் தான் செய்யவேண்டும் என்ற விதண்டாவாதம் வேண்டாம். அது, அவர்களின் பொறுப்பு என்பதில் எனக்கு(ம்) எந்த மாற்றுக் கருத்தில்லை! ஆனால், நாம் அரசியல்வாதியாய் வருவதை எவரும் தடை செய்யவில்லை; அவர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு; வெறும் அதிர்ஷ்டம்(மட்டும்) அல்ல! சரியானவரோ/தவறானவரோ - அவர்களின் கடின உழைப்பை நாம் மறுப்பதற்கில்லை! எனவே, நாமே பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதை சாதிக்க முடியும்!!!}. இல்லையேல்... நம்மில் ஒருவர் தான் அவர்களும் என்பதை மறக்கவேண்டாம்!!!
  • என் வீட்டுக் குப்பையை அகற்றவேண்டும் என்கிற அறிவும்/அக்கறையும் இருக்கும் எனக்கு; அதைக் கொண்டுபோய் பொதுவிடத்தில் கொட்டக்கூடாது என்ற புரிதல் இல்லையெனில்... "என்னய்யா தேசம் இது?! குப்பையும்-கூளமுமாக இருக்கிறது?!" என்று கேட்கும் தார்மீகத்தை நான் இழக்கிறேன். இது நாம் ஒவ்வொருவரும் இணைந்து செய்யவேண்டிய கடமை.
          *******
  • "நிற-வெறி"யில் ஆரம்பித்து; சகிக்கமுடியாத அளவில் பிரச்சனைகளைக் கொண்ட நாடுகள் ஏராளம்! ஏராளம்! ஆனால், அவையெல்லாம் வெளியே தெரிவதில்லை; ஏனெனில் "Slum-dog Millioner" என்ற படத்தைப் பார்த்து - நம் நாட்டை இப்படி ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு காண்பித்திருக்கிரார்களே?! அதிலும், நம் நாட்டவரே படத்தை எடுத்து இருக்கிறார்களே?! - என்று அவர்கள் கொதித்தெழ தவறமாட்டார்கள்!!! அதனால் தான், அவர்கள் நாட்டில் உள்ள பல பிரச்சனைகளும் வெளியே தெரிவதில்லை. 
  • ஆனால், நம் நாட்டில் பத்திரிகை/பேச்சு சுதந்திரம் "என்ற மாயையில்" -  நம் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை எனினும் - உடனே! ஒரு பதிவிட்டு ஆர்ப்பரிக்கிறோம்! ஒரு ஐரோப்பியனோ/அமெரிக்கனோ - அவன் வீட்டு குழாயை அவனே சரிசெய்வான் - ஏனெனில், ஆட்களுக்கு கூலி என்பது அங்கே "இமாலய உயரம்"! நம் ஊரில், 5-க்கும் 10-க்கும் ஆட்கள் இருக்கிறார்கள்; அவர்கள் இடமும் நாம் பேரம் பேசுவோம்! மேலை நாட்டவர்களுக்கு சம்பளம் மட்டும் அதிகமில்லை; ஒவ்வொரு விசயத்துக்கும் - பணம் அதிகம் செலவாகும். எனவே, அவரவர் வீட்டு வேலையை; அவர்களே செய்து பழகுவர். 
  • ஆனால், நாமோ - கையில், அலைப்பேசியும்/இணையமும் இருந்தால் - எதை வேண்டுமானாலும் எழுதலாம்... என்ற தவறான புரிதலில் இருக்கிறோம். எனக்கு, எல்லாமே என் அரசே செய்யவேண்டும்! என்று ஆர்ப்பரிக்கிறோம். நம்முடைய கடமை என்பதே என்னவென்று; தெரியாத நிலையில் இருக்கிறோம். மேலை நாடுகள் - மேன்மை அடைந்தது; அவர்கள் ஆட்சியாளர்களால் தான் என்ற தவறான-புரிதலை உடைத்தெறிவோம்! அந்த நாடுகளின் வளர்ச்சியில் - ஒவ்வொரு தனி மனிதனின் "பெருத்த"பங்கு இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் என்னுடைய நாடு! என்கிற உண்மையான நாட்டுப்பற்று இருக்கிறது.  
  • எனவே, நம் நாட்டைப் போல், எல்லா நாட்டிலும்; அவர்களுக்கென்று பல பிரச்சனைகள் இருக்கின்றன! அவற்றில் பலவும், நம் நாட்டில் அறவே இல்லை! ஆனால், நம்மைப் போன்று - தம் நாட்டை தாமே தூற்றும் நாட்டவர்கள் பெருமளவில் கொண்ட - ஒரு நாட்டை இதுவரை நான் கண்டதில்லை! இந்த உண்மையை நினைத்து நாம் முதலில் வெட்கப்படவேன்டாமா?
          *******

        - இப்படி பட்டியல் இட எண்ணற்றவை உள்ளன! வெளிநாடுகளில் நாம் கற்கவேண்டிய பல உள்ளன என்பதில், எனக்கு(ம்) எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! நானே, அவற்றை பகிர்ந்தும் இருக்கிறேன். ஆனால், அடிப்படையற்ற வகையில் நம் நாட்டையும்/நாட்டவரையும் குறை கூறவேண்டாம் என்பதே என் வேண்டுகோள். நம்மிடம் இருந்து, மற்ற நாடுகள் கற்கவும்; ஏராளம் உண்டு என்பதை நினைவுகூர்வோம். 

       "தமிழை யார் வளர்ப்பது? என்று எந்த நியதியும் இல்லை! இவர் தான் அல்லது இவர்கள் குடும்பம் தான் செய்ய வேண்டும் என்ற நியதியும் கூட இல்லை!! இது அவர்களின் கடமை மட்டுமல்ல, நம் எல்லோரின் கடமையும் கூட. முடிந்தால், தமிழை வளர்க்க நாமும் நம்மால் முயன்றதை செய்வோம்; அல்லையேல், அவ்வாறு செய்பவர்களை முடிந்தவரை ஊக்குவிப்போம்." என்று  "தமிழை யார் வளர்ப்பது???" என்ற தலையங்கத்தில் சொன்னதை நினைவுகூர்கிறேன். அதே அடிப்படை தான் இங்கும். நாட்டை யார் காப்பது? என்று எந்த நியதியும் இல்லை. நாட்டுப்பற்று இவருக்கு மட்டும்தான் வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை! இவர் தான் அல்லது இவர்கள் குடும்பம்தான் நாட்டையும்/நாட்டுப்பற்றையும் காக்கவேண்டும் என்றும் எந்த நியதியும் இல்லை. அது, குறிப்பிட்ட ஒருசிலரின் கடமையல்ல; 

நம் ஒவ்வொருவரின் கடமை! 
முடிந்தால், நாமும் நம்மால் இயன்றதை செய்வோம்!!
இல்லையேல்... தேவையற்று நம் நாட்டை; நாமே களங்கப்படுத்தாமல் இருப்போம்!!!

2 கருத்துகள்:

  1. நம் ஒவ்வொருவரின் கடமை! 
    முடிந்தால், நாமும் நம்மால் இயன்றதை செய்வோம்!!
    இல்லையேல்... தேவையற்று நம் நாட்டை; நாமே களங்கப்படுத்தாமல் இருப்போம்!!

    பதிலளிநீக்கு