புதன், மார்ச் 09, 2016

அதிகாரம் 022: ஒப்புரவறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 022 - ஒப்புரவறிதல்

0211.  கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
           என்ஆற்றுங் கொல்லோ உலகு

           விழியப்பன் விளக்கம்: ஒப்புரவு எனும் கடமைக்கு, பிரதிபலனை எதிர்பார்க்க வேண்டாம். 
           இவ்வுலகம், மழைக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்?
(அது போல்...)
           விருந்தோம்பல் எனும் மேன்மைக்கு, சன்மானம் பெறுதல் வேண்டாம். பிள்ளைகள், 
           தாய்மைக்கு என்ன பரிகாரம் செய்யமுடியும்?

0212.  தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
           வேளாண்மை செய்தற் பொருட்டு

           விழியப்பன் விளக்கம்: முயற்சியை விதைத்து, விளைச்சலாய் ஈட்டிய செல்வங்களின் 
           குறிக்கோள்; ஒப்புரவு பழகி, தேவைப்படுவோர்க்கு உதவிடுவதே ஆகும்.
(அது போல்...)
           மனிதத்தை உணர்ந்து, விருட்சமாய் வளர்ந்த மனிதர்களின் கடமை; பொதுநலம்
           கொண்டு, நலிந்தோரை உயர்த்துவதே ஆகும்.

0213.  புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
           ஒப்புரவின் நல்ல பிற

           விழியப்பன் விளக்கம்: ஒப்புரவெனும் சமத்துவம் உணர்ந்து உதவுவதை விட, சிறந்த 
           நன்மையை; விண்ணுலகம் மற்றும் இவ்வுலகிலும் பெறுவது அரிது.
(அது போல்...)
           கருணையெனும் மனிதம் பழகி வாழ்வதை விட, சிறந்த கடமையை; இல்வாழ்வு மற்றும் 
           புறவாழ்வில் செய்வது அரிது.

0214.  ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் 
           செத்தாருள் வைக்கப் படும்

           விழியப்பன் விளக்கம்: ஒப்புரவு எனும் அறத்தையொத்து வாழ்வோரே, உயிரோடு வாழ்வோர் 
           ஆவர்; மற்றவரெல்லாம் இறந்தவர்களில் ஒருவராய் மதிக்கப்படுவர்.
(அது போல்...)
           நடுநிலை எனும் ஒழுக்கமுடன் பாராட்டுவோரே, உண்மையாய் பாராட்டுவோர் ஆவர்; 
           பிறரெல்லாம் தூற்றுவோரில் ஒருவராய் அறியப்படுவர்.
          
0215.  ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
           பேரறி வாளன் திரு

           விழியப்பன் விளக்கம்: ஒப்பரவு உணர்ந்த பகுத்தறிவாளரின் செல்வம் - பேதங்கள் 
           ஏதுமின்றி, ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்படும் குளத்துநீரைப் போன்று - 
           பொதுவானது.
(அது போல்...)
           தன்னிலை அறிந்த குருவொருவரின் ஞானம் - பகிர்வதில் பேதமின்றி, ஆன்மாக்கள் 
           அனைத்திற்கும் ஒளிர்ந்திடும் கதிரவனைப் போல் - சமமானது.

0216.  பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் 
           நயனுடை யான்கண் படின்

           விழியப்பன் விளக்கம்: ஒப்புரவெனும் சமத்துவம் உனர்ந்து, நன்மை செய்வோர் பெற்ற 
           செல்வம்; ஊரின் நடுவே,  பயன்தரும் மரம் பழுத்திருப்பதைப் போன்றதாம்.
(அது போல்...)
           பொதுநலமெனும் மேன்மை அறிந்து, பொதுச்சேவைச் செய்வோர் வகிக்கும் பதவி; 
           மக்களின் மனதில், இழந்துபோன நம்பிக்கையை வளர்ப்பது போன்றதாம்.

0217.  மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் 
           பெருந்தகை யான்கண் படின்

           விழியப்பன் விளக்கம்: ஒப்புரவோடு உதவிகளைப் பகிரும், பெருந்தகை பெற்ற செல்வம்; 
           எல்லாப் பாகங்களாலும், மருந்தாகத் தவறாத மரத்தைப் போன்றதாகும்.
(அது போல்...)
           அறமுடன் இல்லறத்தை நடத்தும், பெற்றோர்க்குப் பிறக்கும் பிள்ளைகள்; எல்லா 
           வகையிலும், பயனளிக்கத் தவறாதக் கல்வியைப் போன்றவராவர்.

0218.  இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் 
           கடனறி காட்சி யவர்

           விழியப்பன் விளக்கம்: பிறவிக் கடமையறிந்த பகுத்தறிவாளர், வருமானம் குறைந்த 
           காலத்திலும்; ஒப்புரவின் சிறப்புணர்ந்து, உதவி செய்திட சோர்வடையார்.
(அது போல்...)
           அறத்தின் வலிமையறிந்த ஊடகவியலாளர், தரவரிசை தாழ்ந்த நிலையிலும்; ஊடகத்தின் 
           தர்மமுணர்ந்து, வாய்மையைத் தொடர தளர்வடையார்.

0219.  நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர 
           செய்யாது அமைகலா வாறு

           விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய உதவிகளை, செய்யமுடியாத சூழ்நிலை நேர்ந்தால் 
           மட்டுமே; ஒப்புரவை உணர்ந்து உதவும் நற்குணத்தார், வறுமையுடையோர் ஆவர்.
(அது போல்...)
           அளிக்கப்பட்ட கடமைகளை, எவரேனும் ஆற்றவிடாது தடுத்தால் மட்டுமே; நேர்மையைக் 
           கடைப்பிடித்து பணிபுரியும் நல்-அலுவலர்கள், திறமையற்றோர் ஆவர்.

0220.  ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் 
           விற்றுக்கோள் தக்க துடைத்து

           விழியப்பன் விளக்கம்: ஒப்புரவின் அடிப்படையில் உதவி செய்வதால், தீமை 
           விளையுமானால்; அத்தீமை, ஒருவர் தன்னை விற்றேனும் பெறும் தகுதியுடையது.
(அது போல்...)
           பொதுநல நோக்கத்தில் ஆட்சி நடத்துவதால், தோல்வி வருமேயானால், அத்தோல்வி, 
           ஓர்கட்சி செல்வாக்கை இழந்தேனும் ஏற்கும் தகுதியுடையது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக