சனி, மார்ச் 26, 2016

சூப்பர் சிங்கரும் - என் புரிதலும்...


{முன்குறிப்பு: இது எவரையும்/எதையும் நியாயப்படுத்தும்
(அல்லது)
காயப்படுத்தும் முயற்சி அல்ல!!!}


      கடந்த வாரம் நிறைவுற்ற "சூப்பர் சிங்கர்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து, பல கடுமையான விமர்சனகளைப் பார்க்க நேர்ந்தது. நான், அந்த நிகழ்ச்சியை "கிட்டத்திட்ட" முழுமையாய் தொடர்ந்து  பார்த்தேன்.  அதிலும், முக்கியமாய் "சர்ச்சைக்கு உள்ளாகி" இருக்கும் வெற்றி பெற்ற "ஆனந்த் அரவிந்தாக்க்ஷன்" தான், என் விருப்பமும்/தேர்வும் என்பதைக் கூட; என் பதிவுகளில் வெளிப்படுத்தி இருக்கிறேன். முக்கியமான குற்றச்சாட்டு "ஆனந்த், முன்பே திரைப்படங்களில் பாடி இருக்கிறார்; அதை மறைத்து, நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர்!" என்பதே. மறுக்கவில்லை! ஆனந்த், முன்பே திரைப்படங்களில் "குழுவினரில் ஒருவராய்" பாடி இருப்பதை, நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி நிறுவனம் வெளிப்படையாய் சொல்லி இருக்கலாம். ஏன் மறைக்கப்பட்டது?! என்று எனக்கு தெரியவில்ல; என்னளவில், அந்த காரணம் அவசியமும் இல்லை. இந்த பாகத்தை தொடர்ந்து பார்த்தவன் என்ற வகையில்...

         ஆனந்த் திறமையானவர்! என்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. இருப்பினும், ஆனந்தாவது சொல்லி இருக்கலாம், என்று தோன்றியது. நான் என் பதிவுகளில் சொல்லி இருப்பது போல் ஆனந்திடம் ஒரு பணிவு இருக்கும்; ஒரு உண்மை இருக்கும்; ஒரு நேர்மை இருக்கும் - இது நான் உணர்ந்தது. எனவே, ஆனந்த்(ஆவது) சொல்லி இருக்கலாமே?! என்று தோன்றியது. இருப்பினும், அவர் தன்னுடைய முக-நூல் முகப்பில் (அல்லது) பதிவில் சொல்லி இருப்பார் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது. இப்படியோர் பதிவு எழுதும் முன், அதை உறுதி செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், நேற்று இந்தப் பதிவை முதல்-வடிவம் எழதும் முன், நாளிதழில் ஆனந்த் தன் முகப்பில், சுயவிபரத்தின் கீழ் குறிப்பிட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறார் (இணைப்பு: இங்கே சொடுக்க). மேலும், தன்னுடன் போட்டியிட்டவர்களுக்கு(ம்) தான் பாடகன் என்பது தெரியும் என்றிருக்கிறார். மேலும், நான் கீழ்க்காணும் காரணிகளை உற்றுநோக்குகிறேன்:
  • ஒவ்வொரு பாகம் முடிந்ததும் - குறிப்பாய், வெற்றி பெற்றவரை அறிவித்த பின்னர் - ஏதேனும் ஓர் சர்ச்சை எழுவது, அனைவரும் அறிந்ததே. இவை, வியாபார போட்டியால் எழுபவை என்பது எனது நம்பிக்கை. அவர்களின் போட்டியில், நமக்கென்ன வேலை?
  • தொலைக்காட்சி நிறுவனமும், போட்டியாளர்களும் இதை அறிவர் என்ற பின் - இதில் நாம் கொதித்தெழ என்ன இருக்கிறது?
  • இன்னொரு போட்டியாளர் "நிறைய மேடைகளில்" பாடி இருப்பதை அவரே சொல்லி இருக்கிறார். நடுவராய் வந்த ஒருவர் கூட, அவர் மேடையில் பாடும் விதத்தைப் பற்றி புகழ்ந்து சொல்லி இருக்கிறார். அவர் தான் 2-ஆவது இடம். திரைப்பாடலை "ஸ்டுடியோ"வில் பாடுவதை விட; மேடையில் பாடும் சிரமம் குறித்து நான் சொல்லத் தேவையில்லை. ஏன், அவர் பற்றி எந்த விமர்சனமும் இல்லை? ஒருவேளை "அவர் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே" இப்படியோர் சர்ச்சை எழுமா? எனில், இவர்களின் நோக்கம் என்ன?
  • பலரையும் உணர்வால் கட்டிப்போட்ட போட்டியாளர் கூட உண்டு! அவர் பெற்றிருந்தால் "அனுதாபத்தால்" வெற்றி பெற்றார் என்ற சர்ச்சை கிளம்பி இருக்குமோ?
  • இன்னுமோர் போட்டியாளரின் சாதியைப் பற்றி காழ்ப்புணர்ச்சி கொண்டோர் - இன்றும் பலர் உண்டு. இறுதிப்போட்டி முடிந்த உடனே கூட, நடுவர்களின் தீர்ப்பைக் குறிப்பிட்டு, அவரின் "சாதியைப்" பற்றி விமர்சித்தனர். ஒருவேளை, அவர் பெற்றிருந்தால் "சாதியை மையப்படுத்தி" சர்ச்சை கிளம்பி இருக்குமோ?
  • ஏதாவது, ஒரு சர்சை எழுந்தே தீரும் என்றால் (இதுவரை நடந்த அணைந்து போட்டிகளுக்கு பிறகும், அப்படியே நிகழ்ந்துள்ளது) - பின், நாம் ஏன் இப்படி தீவிரமாய் விமர்சிக்க வேண்டும்?
  • அதெப்படி "மகச்சரியாய்" போட்டியின் முடிவு தெரிந்த அடுத்த நாள், இதுபற்றிய சர்ச்சை எழுகிறது? ஏன், அதுநாள் வரை காத்திரு(ந்த/க்கின்ற)னர்? பின், அவர்களின் எதிர்பார்ப்பு வேறென்பதை நாம் உணரவேண்டாமா?
  • இவை எல்லாவற்றையும் விட, வேறோர் கோணத்தில் கூட எனக்கோர் ஐயம் எழுந்தது: ஒருவேளை, புகழுக்காக/விளம்பரத்துக்காக - சம்பந்தப்பட நிறுவனமே; இம்மாதிரியான சர்ச்சைகளை எழுப்பி விடுகிறதா? உண்மை அப்படி இருப்பின், நம் விமர்சனங்கள் அனைத்தும் "மிகுந்த அபத்தம்"ஆய் ஆகிவிடுமே?!
    இப்படி பல காரணிகள் இருக்கிறது. ஒன்று நிச்சயம்! இது, ஏதோவொரு ஆதாயத்தின் அடிப்படையில்; எவரோ ஒருவர் எழுப்பும் சர்ச்சை. இதில், சாமான்யர்கள் நாம் ஏன் இப்படி கொதித்தெழுந்து விமர்சிக்க வேண்டும்? "வெறும் லைக்"குக்காகவா?! அப்படியெனில், அது மிகவும் தவறு. இதில், ஏதும் சமுதாயப் பார்வை இருப்பதாய் எனக்கு தெரியவில்லை! அப்படி எனில், 90 விழுக்காடு நிறுவனங்கள்; நேர்முகத் தேர்வு எனும் பெயரில் நடத்தும் "கண்துடைப்பை" பற்றி நாம் ஏன் கொதித்தெழுவதில்லை?! தமிழகத்தில், பெரும்பான்மையான அரசு பல்கலைக் கழகங்களில் "இலஞ்சப் பணம்" பெற்றுக்கொண்டு பணி-நியமனம் செய்யபப்டுவதை அறியாதோர் எவரும் இல்லை! - நான் இதை பதிவு செய்திருக்கிறேன். இதுதான், ஒரு சமுதாயக் கடமை; "சூப்பர் சிங்கர் அல்ல!" என்பதே என் புரிதல். இதுபோல், எல்லா துறைகளிலும் நடப்பது, நாமனைவரும் அறிந்ததே! "பணம்/பரிந்துரை" என்று பலவிதமான காரணிகள் இதற்கு அடிப்படை.

         ஏன், இதுபற்றி(யெல்லாம்) எவரும் விமர்சிப்பதில்லை? ஒருவேளை, நாமும் அதில் ஏதேனும் ஓர் விதத்தில் உடன்படுகிறோம்! என்பதாலா?! இதுபோன்றவற்றை விடுத்து, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? இதுவா "சமூக வலைத்தளங்கள்" உருவானதன் அடிப்படை? நான் பார்த்த வகையில், இது குறித்த விமர்சனகளை பின்வருமாறு பிரிக்கிறேன்:

உண்மை மறைக்கப்பட்டது: ஒரு குழுவினர், உண்மையை மறைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது தவறு என்கின்றனர். உண்மை எங்கு மறைக்கப்பட்டாலும், அது தவறென்பதில் எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இக்குழுவினரின் "ஏன் இதை சொல்லி இருக்கக்கூடாது?" என்ற கேள்வியில் இருக்கும் நியாயத்தை நான் மறுக்கவில்லை. மேற்குறிப்பிட்டது போல், ஒரு போட்டியாளர் "நிறைய மேடையில்" பாடி இருப்பதை உறுதி செய்தது போல், இதையும் செய்திருக்கலாம் என்று எனக்கும் தோன்றியது/தோன்றுகிறது - ஆனால், இப்படி கடுமையாய் விமர்சிக்கும் அளவுக்கு பெரிதாய் படவில்லை. ஏனெனில், அப்படி சொல்லி இருந்தால் மட்டும் இதுபோன்ற சர்ச்சை எழாமல் இருந்திருக்குமா?! என்றோர் சந்தேகமும் உள்ளது. மேலும், போட்டிக்கான பாடகர்களை தேர்வு செய்வதில் "முன்பே பாடகராய் இருந்திருக்கக்கூடாது" என்ற நியதியும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரும், ஏன் இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டு/விமர்சனம்?

தமிழகத்தின் பிரம்மாண்டக் குரல் தேடல்: இந்த அடிப்படையில் விமர்சிக்கும் குழுவில் இரண்டு உட்பிரிவுகள் உண்டு:
  1. பிரம்மாண்டக் குரல் தேடல் என்பதை "புதிய குரல் தேடல்" என்பதாய் நினைத்து இவர்கள் விமர்சிக்கிறார்கள். அது "பிரம்மாண்டமான" குரல் தேடல்தான்! பாடிய அனுபவம் இல்லாத குரல் என்ற அர்த்தம் இல்லை. மேலும், ஆனந்த் ஒரு "குழு" பாடகர் தான். இந்த நிகழ்ச்சி "பாடக் கற்றுக் கொடுக்கும்" தளமும் அல்ல; மாறாய், இருக்கும் திறமையை வளர்த்து விடும் தளம். பாடத் தெரிந்த/திறமையானவரில் "பிரம்மாண்டக் குரல்" உள்ளவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி. திரைப்படத்தில் பாடுவதை விட, மேடைகளில் பாடுவது சிரமம் என்பது தெரியாதோர் எவரும் இருக்க முடியாது. அதற்கு, மேலும் பன்மடங்கு திறமை தேவை. திரைப்படப் பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும், மீண்டும் மீண்டும் பாடி பதிவு செய்யலாம். ஆனால், மேடையில் பாடுவது அப்படியல்ல. அப்படி மேடையில் பாடிய திறமிருக்கும் ஒரு போட்டியாளரையும் நாம் பார்த்தோம். அது, ஏன் விமர்சிக்கப் படவில்லை? ஏனெனில், திரைப்பட பாடல் பாடுவது தான் சிறந்தது! என்ற நம் மாயை தான், அதற்கு காரணம். அதனால் தான், திரைப்படங்கள் நம்முள் பல "தேவையற்ற" தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த விமர்சனத்தில் எந்த நியதியும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.
  2. தமிழகத்தின் குரல் தேடல் என்றால், தமிழர்கள் தானே தேர்வு செய்யப்படவேண்டும்? என்றோர் அபத்தமான கேள்வியுடன் ஓர் குழு விமர்சிக்கிறது. இது, அபத்தம் மட்டுமல்ல! ஆபத்தானதும் கூட!! - இதை எல்லோரும் ஒருசேர எதிர்க்கவேண்டும். இந்த விசத்தன்மை கொண்ட எண்ணத்தை சில அரசியல் கட்சிகளும் "அரசியல்" ஆதாயத்துக்காக விதைக்கிறது. நாம், மிக கவனமாய் இருக்கவேண்டும். அந்த "தமிழகத்தின்" என்ற சொல், தமிழகத்தில் வாழ்வோர் (அல்லது) தமிழில் பாடுவோர் என்ற பொருள்படுவது. ஆனந்தைப் பொறுத்த வரை அவர் சென்னையில் வசிக்கிறார்; தமிழில் பேசுகிறார்/பாடுகிறார். பின் என்ன வேண்டும்? அப்படியே, அவர் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தான் பிரச்சனை எனில், இத்தனை மாதங்கள் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
ஸ்டையில்-ஸ்டேட்மெண்ட்டுடன் கூடிய விமர்சனம்: இன்னுமோர் குழு இருக்கிறது! நான் இதையெல்லாம் பார்த்து "என் நேரத்தை வீணடிப்பதில்லை!" என்ற "ஸ்டையில்-ஸ்டேட்மெண்ட்டுடன்" விமர்சிப்பவர்களை உள்ளடக்கிய குழு. நகைச்சுவையாய் எனக்கொரு பின்னூட்டம் இடத் தோன்றும்; பின், வேண்டாமென்று தவிர்த்துவிடுவேன். எனக்கென்ன விந்தை என்றால்; இவர்கள் தான் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதே இல்லையே?! பின், எவர் வெற்றி பெற்றால் இவர்களுக்கு என்ன? (அல்லது) எவர் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தால், இவர்களுக்கு என்ன?? என்பதே. இப்படியே, தேவையில்லாத/தெரியாத விசயத்தில் தலையிடுவோர் பலருண்டு. அதிலும், சமூக வலைதளங்களில் இவர்களைப் போன்றவர்களுக்கு பஞ்சமே இல்லை. இவர்களுக்கு "என்ன விசயம்" என்பது முக்கியமில்லை! ஏதாவது புரளி பேசி பதிவிடுவதில், அலாதிப் பிரியம் உள்ளவர்கள். எனவே, இவர்களைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. சமீபத்தில் கூட...

          "கலாபவன்"மணி இறந்தபோது சிலர் "தவறாய்" விமர்சிதத்தைப் பற்றி ஓர் தலையங்கம் எழுதி இருந்தேன். பல விமர்சனங்களும், கலாபவன்-மணி "மதுவால்" இறந்தார் என்ற ஆதாரமற்ற அடிப்படையிலேயே இருந்தது. ஆனால், இப்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான தடயங்கள் கிடைத்ததை அடுத்து; அந்த கோணத்தில்" விசாரணை நடைபெறுகிறது. அவரை விமர்சித்தவர்கள், இதுபற்றி இன்னமும் ஏதும் கருத்திடவில்லை. இதுபோல், உணர்ச்சி வயப்பட்ட எல்லா விசயங்களிலும்; இம்மாதிரியான விமர்சனங்களைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இவர்களில் "பலரும் தான்" பல பத்திரிக்கைகளும் "பத்திரிக்கை தர்மமின்றி" செயல்படுவதாய் குற்றச்சாட்டும் வைக்கின்றனர். என்னவிதமான மனநிலை இது? என்ன விதமான முரண்பாடு இது? பத்திர்க்கைகளை விட மிக வலிமையானதாய், முகநூல்/வாட்ஸ்-ஆப் போன்ற "இணைய வலைத்தளங்கள்" உருமாறிக்கொண்டு இருக்கின்றன. எனவே...

           பத்திரிகைகள் போன்று, நமக்கும் தார்மீகக் கடமை இருப்பதை நாம் உணர்ந்திட வேண்டும். எதைப் பற்றி வேண்டுமானாலும், விமர்சனம் செய்யலாம். ஆனால், அது தார்மீக அடிப்படையில் இருக்கவேண்டும். மேலும், அதைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும். இல்லையேல், பல பத்திரிக்கைகள் போல, இந்த வலிமை மிகுந்த சமூக-வலைதளங்களும் தடம்புரளும். அந்த ஆதங்கத்தில் தான், இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். ஒரு விஷயத்தை விமர்சிக்கும்போது, அதற்கான காரணங்கள் என்னவென்று தெளிவாய் விளக்கவேண்டும். "உண்மையை மறைக்காமல் சொல்லி இருக்கலாம்" என்ற அந்த ஒரு எதிர்பார்ப்பைத் தவிர, மற்றவற்றை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. என்ன விமர்சனங்கள் எழுந்தாலும் "ஆனந்த் அரவிந்தாக்க்ஷன்" திறமையான/தகுதியுள்ள வெற்றியாளர்! என்பதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. 50-க்கும் மேற்பட்ட...

     வாக்குகளை அளித்தவன் என்ற அடிப்படையில் மட்டுமல்ல! அவரை தொடர்ந்து/ஆழ்ந்து கவனித்தவன் என்ற அடிப்படையிலேயே இதை சொல்கிறேன். அதன் பின்னர், எந்த சர்ச்சையும்/விமர்சனமும் எனக்கு அடிப்படை அற்றதாய் தோன்றுகிறது. இந்த சர்ச்சையை "முதன் முதலில்" வெளிப்படுத்தியவருக்கு வேண்டுமானால், ஏதேனும் ஆதாயம் கிடைத்திருக்கலாம். அதைச் சார்ந்து, மற்றவர்கள் தேவையில்லாமல் விமர்சிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. மேலும், விளையாட்டாய் நாம் செய்யும் இந்த விமர்சனங்கள் "இறுதியில்" திறமையான/தகுதியான ஒரு பாடகனின் "இசை வாழ்க்கையயை" பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். முன்பே, பிரபலமான பாடகர் என்றால், அவர் இங்கே போட்டியிட்டு இருக்கத் தேவையே இல்லை. எனவே, அவர் தனக்கான அங்கீகாரத்தைப் பெறவே, இந்த போட்டியில் பங்கேற்றார் என்பது அனைவரும் அறிந்ததே.  அவர் வளர்ந்து வரும் பாடகர் என்ற உண்மையைக் கவனத்தில் கொண்டு...

"ஆனந்த் அரவிந்தாக்க்ஷன்" வளரட்டும் என்று; நாமும், வாழ்த்துவோம்!!!     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக